Published:Updated:

569 யானைகளைக் காப்பாற்றிய வடக்கிழக்கு ரயில்வே... செயலில் இறங்குமா தென்னக ரயில்வே?

யானை-மனித மோதல்களைவிட, யானைகள் சந்திக்கும் விபத்துகளே அதிகம். அதிலிருந்து அவற்றைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் அதிக ஆர்வமும் அக்கறையுடனும் செயல்படுகிறது வடகிழக்கு ஃப்ரான்டியர் ரயில்வே கோட்டம்.

Elephant
Elephant

யானைகள் அதிகளவில் கொல்லப்படுவதற்கான மிக முக்கியமான நான்கு காரணங்களில் ஒன்று ரயில் விபத்து. வேட்டையாடுதல் மூலம் கொல்லப்படும் யானைகளைவிட ரயில் விபத்துகளால் கொல்லப்படும் யானைகள்தான் அதிகம். யானைகள் கொல்லப்படுவதற்கு முதல் காரணம் மின்சாரம். இரண்டாவது ரயில் விபத்து. அதற்கு அடுத்த இடங்களில் இருப்பவை வேட்டையாடுதல், விஷம் வைத்தல். ஆனால், வடகிழக்கு ஃப்ரான்டியர் ரயில்வே கோட்டம் எடுத்த தொடர் நடவடிக்கைகளால், அஸ்ஸாமில் ஏற்பட்ட யானைகள் உயிரிழப்பு அதிகளவில் தடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் 140 யானைகள் விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன.

Elephant
Elephant
யானைகள் அதிகளவில் கொல்லப்படுவதற்கான மிக முக்கியமான நான்கு காரணங்களில் ஒன்று ரயில் விபத்து.

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் 6,000 யானைகளின் வாழ்விடம். இவை நாட்டின் மொத்த யானைகளின் எண்ணிக்கையில் 20 சதவிகிதம். யானைகள் அதிகளவில் கொல்லப்படுவதும் இங்குதான். அதற்கு முக்கிய காரணம், யானைகளின் வாழ்விடங்கள் மற்றும் வலசைப்பாதைகளை ஊடுருவிச் செல்லும் வடகிழக்கு ஃப்ரான்டியர் ரயில் பாதை.

Elephant
Elephant

பீகாரில் தொடங்கி, வடக்கு வங்கம், அஸ்ஸாம் வழியாக நாட்டின் வடகிழக்கு எல்லைவரை செல்லும் இப்பாதையில் 67 யானை வழித்தடங்கள் இருக்கின்றன. பீகாரின் கடிஹாரில் ஒன்று, வங்கத்தின் அலிபூர்தாரில் 22, அஸ்ஸாமின் ராங்கியாவில் 23, லும்டிங்கில் 16 மற்றும் டின்சுகியாவில் ஐந்தும் உள்ளன. இப்பகுதியில் மட்டும் 2013 முதல் 2018 வரை 70 யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளன. (இதே காலகட்டத்தில் நாட்டில் 120 யானைகள் ரயில் மோதி இறந்துள்ளன)

ரயிலின் வேகம், வேகக்கட்டுப்பாட்டை மீறும் ரயில் பைலட்டுகளைக் கண்காணிக்க வலசைப்பாதைக்கு அருகில் 'லேசர் ஸ்பீட் ராடார் கன்' என்ற கருவிகள் பொருத்தப்பட்டன.

அலிபூர்தார் வனப்பகுதியில்தான் யானைகள் ரயில் பாதையை அடிக்கடி கடக்கின்றன. அடுத்ததாக லும்டிங், ராங்கியா பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம். பகலைவிட இரவில்தான் அதிகளவில் யானைகள் கொல்லப்படுகின்றன. ரயிலின் வேகம்தான் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம். ஆனால், திடீரென யானைகள் குறுக்கே வந்துவிட்டால், வேகமாகச் செல்லும் ரயிலை உடனடியாக நிறுத்துவது என்பது மிகவும் கடினம். முதலில் வலசைப்பாதைகளைக் கடக்கும்போது வேகத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு யானை வழித்தடத்தைக் கடக்கும்போதும் மிகவும் குறைவான அல்லது குறிப்பிட்ட வேகத்தில் ரயிலைச் செலுத்த ரயில் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்காக அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

ரயிலின் வேகம், வேகக்கட்டுப்பாட்டை மீறும் ரயில் பைலட்டுகளைக் கண்காணிக்க, வலசைப்பாதைக்கருகில் 'லேசர் ஸ்பீட் ராடார் கன்' என்ற கருவிகள் பொருத்தப்பட்டன. குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் சென்றால் இந்தக் கருவி வேகத்தைப் பதிவு செய்யும். ஓட்டுநர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை பாயும். உணவுப்பண்டங்கள் விற்பவர்கள், பயணிகள் மிச்சமான உணவுப்பொருள்களை வெளியில் வீச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. சமுதாய மக்களும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கிராம அளவில் அமைக்கப்பட்ட தன்னார்வ குழுக்கள் யானைகள் ரயில் பாதைக்கு வரும்போது விரட்டுவதிலும், இரவு ரோந்து பணியிலும் ஈடுபட்டன. யானைகள் பாதைக்கு மிக அருகில் வந்துவிட்டால். இந்தக் குழு அருகிலிருக்கும் ரயில் நிலையங்களை உஷார் படுத்தின. உடனே நிலைய அதிகாரிகள் ரயில் ஓட்டுநர்களை எச்சரித்து வேகத்தைக் கட்டுப்படுத்தினர்.

அடர்ந்த காட்டுப்பகுதிகளில் ரயில் பாதையைக் கடக்கும் யானைகளை மனிதனால் 24 மணி நேரமும் கண்காணிப்பது கடினம். அவற்றைத் தடுக்க வடகிழக்கு ரயில்வே ஒரு புதுமையான நடவடிக்கை எடுத்தது. வண்டுகள், தேனீக்களைக் கண்டால் யானைகளுக்கு அச்சம். அதனால், தேனீக்களின் ரீங்காரம் போன்ற ஒலி எழுப்பும் ஒலிபெருக்கி கருவிகள், ஆள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதிகளில் ரயில் பாதைக்கு அருகில் பொருத்தப்பட்டன.

Elephant accident
Elephant accident

ரயில் யானையின் வலசைப்பதையை நெருங்கும்போது ஒலிபெருக்கிகள் ஒலிக்கத்தொடங்கும். இதன் ஒலி சுமார் அரை மைல் தூரம்வரை கேட்கும். முதலில் இந்தக் கருவிகள் பழக்கப்பட்ட யானைகளிடம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டு பிறகு, பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. யானைகள் ரயில் பாதை அருகே வரும்போது இந்த ஒலிபெருக்கிகள் ரீங்கார சத்தம் எழுப்பும். அதனால் யானைகள் விலகி ஓடும். தற்போது அஸ்ஸாம் காடுகளில் மட்டும் 50 ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் புதிய முயற்சிக்காக வடக்கு ஃப்ரான்டியர் ரயில்வேக்கு விருது வழங்கப்பட்டது.

கேரளாவின் பல கிராமங்களில் தேனீப்பெட்டிகள் வேலிகளில் வரிசையாகக் கட்டி வைக்கப்பட்டிருக்கும். யானைகள் வேலியை அசைத்தால், பெட்டியிலிருக்கும் தேனீக்கள் ஆக்ரோஷமாக வெளிவரும். அதனால் யானைகள் பின்வாங்கும். இந்த இயற்கையான தடுப்பு முறை அஸ்ஸாமில் தொழில்நுட்பம் மூலமாகச் செயற்கையாகச் செயல்படுத்தப்பட்டு, யானைகள் கடப்பது தடுக்கப்பட்டது. வடகிழக்கு ரயில்வேயின் இத்தகைய தொடர் நடவடிக்கைகள் மகத்தான பலனைக் கொடுத்துள்ளன. இந்த வருடம் 140 யானைகள் விபத்திலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டு 145 யானைகளும், 2017-ம் ஆண்டு 119 யானைகளும்,, 2018-ம் ஆண்டு 165 யானைகளும் விபத்திலிருந்து தப்பியுள்ளன. இன்றும், யானைகள் வடகிழக்கு ஃப்ரான்டியர் ரயில் பாதையை அதிகளவில் கடக்கின்றன. ஆனால் விபத்துகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. யானைகளைப் பாதுகாப்பதில் வடகிழக்கு ரயில்வே ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

Elephant Accident
Elephant Accident

அஸ்ஸாமில் மட்டும் யானைகள் ரயில் மோதி இறக்கவில்லை. தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரப்பிரதேச மாநிலங்களிலும் யானைகள் ரயில் மோதி இறக்கின்றன. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் 2010-ம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் யானையைத் தேசிய பாரம்பர்ய விலங்காக அறிவித்த பின்தான் யானை இறப்புகள் அதிகரித்துள்ளன. அதைத் தடுக்க புதுப்புது முயற்சிகளும் தடுப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

செங்குத்தான பகுதியில் அமைக்கப்படும் ரயில் பாதைகளும் யானைகளுக்கு எமன். அந்த இடங்களை யானைகளால் வேகமாகக் கடக்க முடியாது. அதனால். விபத்துகளைச் சந்திக்கின்றன. இந்தச் சிக்கலைச் சரிசெய்ய, தமிழகத்தின் கோவை மண்டலத்தில் ஆய்வுக்காக ஒரு புதிய முயற்சி செயல்படுத்தப்பட்டது. யானை வலசைப்பதையின் குறுக்கே செல்லும் ரயில் பாதைக்கு இருபுறமும் சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டன. ரயில் வரும் சத்தம் கேட்டவுடன் யானைகள் சாய்வு தளம்மூலம் சுலபமாகக் கடந்தன. இது தவிர, கோவை வனத்துறை, ரயில் பாதைக்கு இருபுறமும் இன்ஃப்ரா ரெட் சென்சார்களை நிறுவியுள்ளது.

Elephant
Elephant

யானைகள் ரயில் பாதைக்கு அருகில் வந்தால், இந்தச் சென்சார்களுடன் இணைக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை மணி ஒலிக்கும். உடனடியாக வன அலுவலர்கள் சென்று யானைகளை விரட்டுவார்கள். மேலும், இது தொடர்பான குறுஞ்செய்தி ஒன்றும் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக அனுப்பப்படும். அதை ரயில் ஓட்டுநருக்கு அனுப்பி வேகத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உத்தரகாண்ட் மாநில வனத்துறை, யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க ட்ரோன்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

Elephant
Elephant

காடுகளை நிர்மாணிப்பதில் யானைகளின் பங்கு முக்கியம். இயற்கையின் தோட்டக்காரனான யானைகளைப் பாதுகாத்தால் மட்டுமே பூமியைக் காக்க முடியும். காக்கத் தவறினால், மனிதனின் வாழ்வும் வாழ்விடமும் நிலைக்காது.

70 வனத்துறை ஊழியர்கள், 2 கும்கிகள்... அரிசி ராஜா யானை பிடிக்கப்பட்ட திக்திக் நிமிடங்கள்! #PhotoAlbum