Published:Updated:

அமைதியான யானைக் கூட்டத்தை அட்டகாசம் செய்யத் தூண்டும் மனிதர்கள்... ஊட்டியில் ஒரு துயரக்கதை!

6 யானைகளைக் கொண்ட இந்தச் சிறிய கூட்டத்தில், 2 ஆண்டுகளுக்கு முன்பு பாறைச்சரிவில் தவறி விழுந்து ஒரு யானை பரிதாபமாக உயிரிழந்தது. தற்போது, 5 யானைகள் மட்டுமே உலவிவருகின்றன. இவற்றுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அட்டகாசம் செய்யும் சில மனிதர்கள்
அட்டகாசம் செய்யும் சில மனிதர்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, கெத்தை வனப்பகுதி. கேரள வனப்பகுதியோடு இணைந்துள்ள இந்தப் பகுதி, மழை மறைவுப் பகுதியாக இருந்தாலும் வனவளம் நிறைந்து காணப்படுகின்றது. கெத்தை முதல் கல்லார் வரை நீண்டு பரவிக்கிடந்த இந்த யானை வழித்தடத்தில், மிக முக்கியப் பகுதியாக கெத்தை வனப்பகுதி இருந்துவருகிறது.

கெத்தை மலை பாதை
கெத்தை மலை பாதை

நீர்மின் உற்பத்திக்காகக் கட்டப்பட்ட அணைக்கட்டுகள் மற்றும் கட்டமைப்புகள், மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சாலைகள் போன்றவற்றால், இந்த வனத்தில் இருந்த யானைக் கூட்டம் கேரள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துவிட்டன. கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தப் பகுதிக்கு மீண்டும் சில யானைகள் மெல்ல வரத் துவங்கின. அப்படி வந்த யானைகள், இதே பகுதியில் முகாமிட்டன. மீண்டும் தங்களுக்கென ஒரு எல்லையை வகுத்து வாழிடத்தைத் தேர்வுசெய்துகொண்டன.

இந்த நிலையில், நீலகிரியின் மூன்றாவது மாற்றுப்பாதை என்ற பெயரில் கெத்தை வனப்பகுதியில் உள்ள சாலையில், சுமார் 50 கோடி செலவில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சாலை விரிவாக்கப் பணி
சாலை விரிவாக்கப் பணி
569 யானைகளைக் காப்பாற்றிய வடக்கிழக்கு ரயில்வே... செயலில் இறங்குமா தென்னக ரயில்வே?

இதனால் யானைகளுக்கு மட்டுமல்லாது இதர வன விலங்குகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தொடர் தொந்தரவுகளால், இந்தப் பகுதியில் உலவிவரும் யானைகளின் நடத்தைகளில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டு, யானைகளும் மனிதர்களும் எதிர்கொள்ளல்கள் உருவாக வழிசெய்யும் என காட்டுயிர் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது மட்டுமல்லாது, இந்த சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் சிலர், யானைகளைத் துன்புறுத்தும் செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதுவும் யானைகளின் இயல்பு நடத்தைகளிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கின்றனர்.

கெத்தை மலை பாதையில் யானை
கெத்தை மலை பாதையில் யானை

கெத்தை முதல் மஞ்சூர் வரை வாழிடமாக வகுத்துக்கொண்டு இந்தப் பகுதியில் 6 யானைகள் கொண்ட சிறிய கூட்டம் ஒன்று கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உலவிவந்தது. இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த யானை ஒன்று, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாறைச் சரிவில் தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. தற்போது 5 யானைகள் மட்டுமே இங்கு உலவி வருகின்றன.

சுதந்திரமாக நடமாடுவதில் பல்வேறு இடர்பாடுகள் இருந்தபோதிலும், எந்தத் தொந்தரவும் செய்யாமல் தன் உணவுத் தேடலுக்கான பாதைகளை அமைத்துக்கொண்டு வனப்பகுதியிலும் வனப்பகுதியை ஒட்டிய சாலைகளிலும் உலவிவரும் இந்தக் கூட்டம், இவ்வழியாகப் பயணிக்கும் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான ஒன்று.

கெத்தை மலை பாதை
கெத்தை மலை பாதை
காட்டு ராஜா டு அரிசி ராஜா... நடந்தது என்ன..?  ஒரு டீடெயில் டைம்லைன்!

48 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, 18 கிலோ மீட்டர் வனப்பகுதியின் ஊடாகப் பயணிக்கும் இந்தச் சாலையில் உலவி வரும் யானைகளைக் கண்டு, இருசக்கர வாகன ஓட்டிகள் முதல் புதிதாக வரும் சுற்றுலாப் பயணிகள் வரை எந்த அச்சமும் இல்லாமல் பயணித்துவந்தனர். வாகனங்கள் வந்தால் தானாக ஒதுங்கிக்கொள்ளும் மிகவும் சாந்தமான யானைகளாக பார்க்கப்பட்டுவந்த இந்த யானைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டு, ஆக்ரோஷமாக மாறிவருகின்றன.

சமீபத்தில், கெத்தை பகுதியில் மின் வாரியக் கட்டுப்பாட்டிலுள்ள கட்டடத்தின் ஜன்னல் கதவுகளை உடைத்துச் சேதப்படுத்தியது. இதே பகுதியில் இருந்த சிறிய கடை ஒன்றையும் இந்த யானைக் கூட்டம் தாக்கியது. வனத்துறையின் ஓய்வு விடுதியையும் தாக்கி சேதப்படுத்தியது. தற்போது, வாகனங்களையும் விரட்டி வருகிறது‌.

கெத்தை மலை பாதையில் யானை
கெத்தை மலை பாதையில் யானை

இந்த யானைகள் குறித்து மஞ்சூர் பகுதியைச் சேர்ந்த குமார் கூறுகையில், "இந்தப் பகுதியில் சுற்றித்திரியும் 5 யானைகளைக் கொண்ட இந்த சிறிய கூட்டம், இங்குள்ள மக்கள் அனைவருக்கும் நல்ல பரிச்சயம். இதுவரை எந்தத் தாக்குதல் சம்பவங்களும் நடை பெற்றதில்லை. தற்போது, கெத்தை மலைப்பாதையில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஜேசிபி, டிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் கொண்டுவரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் யானைகளுக்குத் தொந்தரவு ஏற்பட்டு வருகிறது. மேலும், இந்தச் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளில் சிலர் யானையின் அருகில் வாகனங்களை நிறுத்தி ஹாரன் அடிப்பது, கூச்சலிட்டுத் தொந்தரவு செய்வது, கற்களை எறிவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். இதனாலேயே, இந்த யானைகள் தற்போது இயல்பு நிலையிலிருந்து மாறியுள்ளன" என்றார்.

கெத்தை மலைப்பாதையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோவைக்கு அரசுப் பேருந்தை இயக்கிவரும் ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், "ஒரு குட்டியுடன் 5 யானைகள் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் சாலையோரங்களில் நிற்கும்.

கெத்தை மலை பாதையில் யானை
கெத்தை மலை பாதையில் யானை
கையைக் கடித்த குட்டியானை; வாசனை `கில்லி’ சத்தியன் யானை – 25 ஆண்டுகால அனுபவம் பகிரும் டாக்டர் அசோகன்!

பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் வரும்போது, இந்த யானைகள் தாமாக ஒதுங்கிக்கொள்ளும். அல்லது சற்றுதூரம் நடந்து வனத்துக்குள் இறங்கிவிடும். வாகனங்கள் சென்றபின், சாலையோரங்களில் மேய்ச்சலில் ஈடுபடும். ஆனால், கடந்த சில மாதங்களாகப் பேருந்தை விரட்டும் அளவுக்கு அவற்றின் குணாதிசயங்கள் மாறியுள்ளன" என்றார்.

இதுகுறித்து காட்டுயிர் ஆர்வலர்கள் கூறுகையில், "மக்களிடம் நன்கு பரிச்சயமான இந்த ஐந்து யானைகளும் குந்தா, ஓணிக்கண்டி, மஞ்சூர், குந்தா பாலம், தூதூர் மட்டம், பில்லூர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை ஒட்டிய பகுதிகளிலும், சாலையோரப் பகுதிகளிலும் உலவிவந்தாலும் இதுவரை எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால், சிலரது தவறான செயல்களால் அமைதியான இந்த யானைக் கூட்டம் தற்போது ஆக்ரோஷமாக மாறிவருகிறது. இது, இந்தப் பகுதி மக்களுக்கும் யானைகளுக்கும் ஆரோக்கியமானது அல்ல" என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

கெத்தை மலை பாதையில் யானை
கெத்தை மலை பாதையில் யானை
6 ஆண்டுகளில் 2,330 யானைகள் பலி... யார் காரணம்!- விரிவான அலசல்! #ExtricateElephants

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "எந்தவித தொந்தரவும் செய்யாத இந்த யானைகளிடம் அத்துமீறி தொந்தரவு செய்யும் நபர்களைக் கண்காணித்து வருகிறோம். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்தால், அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.