Published:Updated:

ஆண் யானைகள் பிறந்த மந்தையிலிருந்து விரட்டப்படுவது ஏன்? `சிங்கிள்ஸ்’ காரணம்

பொதிகை மலை
பொதிகை மலை ( Photo: Subagunam Kannan / Vikatan )

ஒற்றையாக உலவும் யானைகளைப் பொறுத்தவரை, அவற்றுக்கு இரண்டு விதமான மனநிலை இருக்கும். பிறந்ததிலிருந்து தாயுடனேயே, தன்னைச் சுற்றித் தாய்மார்களுடனேயே பாதுகாப்பாக வளர்ந்துவிட்டுத் திடீரென்று தனித்துவிடப்படும் போது ஏற்படும் பயம். இன்னொன்று, அதைத்தொடர்ந்து வருகின்ற தைரியம்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொதிகை மலைத்தொடரில், பொதிகை மலை உச்சிக்கு அருகிலுள்ள நாக பொதிகை என்ற மலையில் நின்றுகொண்டிருந்தோம். நாக பொதிகையில் அன்று பார்த்த அந்த இளவட்ட யானையையும் அது எங்களைத் துரத்திய நினைவுகளையும் இன்று நினைத்தாலும் மனம் மீண்டும் அங்கு சென்று வருகின்றது.

புலிகள் கணக்கெடுப்புக்காக, முண்டந்துறை வனச்சரகத்திற்குள் நுழைந்து மூன்று இரவுகள், நான்கு பகல்கள் கடந்துவிட்டன. அடர்ந்த காட்டிற்குள் தொடர்பு கிடைக்காத கைபேசியை வைத்துக்கொண்டு பயனேதும் இல்லாததால், அதற்கு ஓய்வு கொடுத்துவிட எண்ணி, பைக்குள்ளே வைத்து மூன்று நாள்களாகிவிட்டன. கைக்கடிகாரமும் இல்லாததால் நேரம் உறுதியாகத் தெரியவில்லை. சூரியன், கிழக்கிலிருந்து மேலேறி கிட்டத்தட்ட உச்சியைத் தொட்டுவிடும் நிலையிலிருந்தது. நிழல் மொத்தமாகச் சுருங்கியும் விடாமல், நீண்டும் கிடக்காமல், சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்தது. இந்த நிழல் முற்றிலும் சுருங்கி, சூரியன் உச்சியைத் தொட, அதிகபட்சம் இன்னும் ஒரு மணி நேரம்தான் எடுக்கும்.

புலிகள் எல்லை வகுத்து வாழக்கூடியவை. இனப்பெருக்கக் காலத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஒன்றின் எல்லைக்குள் இன்னொன்று உலவாது.

கேரள-தமிழக எல்லையை உச்சியில் சுமந்து நிற்கும் பொதிகை மலை ஒருபக்கம். ஐந்து தலைகளைக் கொண்ட பாம்புபோல நிற்கின்ற ஐந்தலை பொதிகை ஒருபுறம். இரண்டுக்கும் நடுவே, ஒற்றையாகப் படமெடுத்து நிற்கும் ராஜ நாகம் போலக் கருங்கல் பாறைகளால் சூழ்ந்திருக்கும் நாக பொதிகையில் நின்றிருந்தோம். நாங்கள் தங்கல் போட்டிருக்கும் பாலத்தடிப் புடவு (குகை), இந்த மூன்று மலைகளுக்கும் கீழேதான் அமைந்துள்ளது. இந்த மூன்று மலையில் எதன்மீது ஏறவேண்டுமென்றாலும் குகைக்கு வடக்குப் பக்கமாகத் தொடங்கும் ஈத்தல் காட்டின் வழியேதான் பயணத்தைத் தொடங்கவேண்டும்.

ஈத்தல் என்பது ஒருவகை மூங்கில் வகை. அந்த மலை உச்சிகளில் சூரிய ஒளி ஊடுருவாத அளவுக்கு அடர்த்தியாக வளர்ந்திருக்கும் அவற்றின் வழியே செல்லும்போது, கூர்ந்து கவனித்தவாறும் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டும் செல்லவேண்டும். ஏனென்றால், பொதிகை மலைவாழ் யானைகளின் விருப்ப உணவுப் பட்டியலில் ஈத்தலுக்குப் பெரும் பங்குண்டு. அதைக் கடந்து நாக பொதிகையின் உச்சியை அடைந்தோம். சுற்றுப்பகுதியில், தான் வேட்டையாடுகின்ற இரையை இங்கு கொண்டுவந்து சாவகாசமாக ருசித்துச் சாப்பிடுவதில் இங்கு வாழும் புலிக்கு அலாதிப் பிரியமாம். வேட்டைத்தடுப்புக் காவலர்களாக இருக்கும் காணிக்காரர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பிடம்
களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பிடம்
Subagunam Kannan

நாங்கள் உச்சியைச் சென்றடைந்தபோது, அங்கு ஓடிக்கொண்டிருந்த ஓடைக்கு அருகே புலி சாப்பிட்டு முடித்த காட்டு மாட்டின் மிச்சங்களும் எலும்புகளும் கிடந்தன. அங்கிருந்து கொஞ்சம் மேலே அமைந்திருந்த மொட்டைப் பாறையில் இன்னொரு காட்டு மாட்டின் மண்டை ஓடும் கிடந்தது. வேட்டைத்தடுப்புக் காவலர் சொன்னதுபோல், புலி எவ்வளவு சாவகாசமாக உட்கார்ந்து தன் விருப்ப உணவை ருசித்துச் சாப்பிட்டிருக்கிறது என்பது புரிந்தது. சுற்றியும் ஈத்தல்கள் மூடியிருக்க, நடுவில் ஓடை ஓடிக்கொண்டிருந்தது. அந்த இடத்தை வெளியிலிருந்து பார்த்தால் அங்கு அப்படியோர் ஓடை இருப்பது யாருக்குமே தெரியாது. தாமிரபரணி ஆற்றுக்குக் கிடைக்கும் நீர் இங்கிருந்துதான் உற்பத்தியாகின்றது. இந்தச் சிற்றோடை மூன்று மலைகளுக்கும் நடுவே அமைந்துள்ள பூங்குளம் என்ற பகுதியில் இருக்கும் ஓடைக்குச் சென்று அங்கிருந்து மற்ற ஓடைகளோடு கலந்து தாமிரபரணியைச் சென்றடைகின்றது. நதி உற்பத்தியாகும் இடத்தில் கிடைக்கும் நீரை முதலில் பருகும் பாக்கியம் இந்தப் பொதிகை மலை உச்சியில் வாழும் காட்டுமாடுகள், யானைகள் மற்றும் இந்தப் புலிக்கும் கிடைக்கின்றது.

மற்றவற்றைப் பன்மையில் சொல்லிவிட்டுப் புலியை ஒருமையில் சொல்வதால், ஒரு புலி மட்டும்தான் அந்தக் காட்டில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழலாம். புலிகள் எல்லை வகுத்து வாழக்கூடியவை. இனப்பெருக்கக் காலத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஒன்றின் எல்லைக்குள் இன்னொன்று உலவாது. ஒரு புலியின் வாழ்விட எல்லை, குறைந்தபட்சம் ஐந்து சதுர கிலோமீட்டர் இருக்கும். நாக பொதிகை உச்சியில், அந்தப் பரப்பளவுக்குள் இன்னோர் புலி இணைந்து வாழ்வது சாத்தியமில்லை என்பதால்தான் அப்படிக் குறிப்பிட்டேன்.

காட்டு மாட்டின் மண்டையோடு
காட்டு மாட்டின் மண்டையோடு
Subagunam Kannan

புலி வேட்டையாடிச் சாப்பிட்ட தடங்களைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கி வந்துகொண்டிருந்தோம். நாகமலைப் பொதிகையின் நடுப்பகுதியிலிருந்த ஒரு வெட்ட வெளியை நோக்கி ஈத்தல் காட்டிற்குள்ளிருந்து யானை ஒன்று நடந்து வந்துகொண்டிருப்பது அசைவுகளினூடே தெரிந்தது. யானைகள் குடும்பமாக வாழக்கூடியவை என்றே தொடர்ந்து சொல்லப்படும்போது, சில யானைகள் இப்படி ஒற்றையாகச் சுற்றுவது ஏன், அவை முரட்டுத்தனம் கொண்டவையாக இருப்பது ஏன் போன்ற கேள்விகள் பலரின் மனதை அரித்துக்கொண்டேயிருக்கும். அதற்குக் காரணம் உண்டு.

யானைகள் தாய்வழிச் சமூக அமைப்பு கொண்டவை. ஒவ்வொரு மந்தையையும் அக்கூட்டத்தின் மூத்த, அனுபவம் மிக்கத் தாய் யானைதான் வழிநடத்திச் செல்லும். அந்தக் கூட்டத்தின் பாதுகாப்பு மற்றும் உணவுக்கு அதுவே அதிகப் பொறுப்பு எடுத்துக்கொள்ளும். அந்த மந்தையில் பிறக்கும் குட்டிகளை அதிலுள்ள அனைத்துப் பெண் யானைகளுமே ஒன்றிணைந்து பார்த்துக்கொள்ளும். பிறப்பது பெண் யானையாக இருந்தால், அது அந்தக் கூட்டத்தில் ஒருத்தியாகிக் கடைசி வரை அவர்களுடனே பயணிக்கும். ஒருவேளை ஆண் யானை பிறந்தால், அது குறிப்பிட்ட ஆண்டுகள் வரை மட்டுமே அந்தக் கூட்டத்திலிருக்கும்.

யானை
யானை
Samson Kirubakaran

சராசரியாக ஆண் யானைகள் 10 வயது முதல் 13 வயதுக்குள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய தகுதியைப் பெறுகின்றன. யானைகளின் இந்த வயதைப் பதின் பருவமாகக் கணக்கில் எடுக்கலாம். இந்த இளவட்ட யானைகளை அவை பிறந்த கூட்டத்திலேயே வைத்திருந்தால், அங்கிருக்கும் மற்றவற்றோடே இனப்பெருக்கத்தில் ஈடுபடும். அது பிறந்த கூட்டத்திலிருக்கும் அனைத்துமே அதோடு உறவுமுறை கொண்டவை. பாட்டி, தாய், அக்கா, தங்கை தொடங்கி, அத்தை, பெரியம்மா, சித்தி என்று அனைத்து யானைகளும் அவற்றுக்கு ஏதாவதொரு வகையில் உறவுமுறை கொண்டவையாகவே இருக்கும். இப்படி ரத்த உறவுகளுக்கு உள்ளேயே இனப்பெருக்கத்தில் ஈடுபட்டால், அடுத்து பிறக்கும் யானைக் கன்றுகள் மரபணுக் குறைபாட்டோடு பிறக்கும். அப்படிப் பிறக்கும் சந்ததி, பலவீனமாக இருக்கும்.

பரிணாமவியல் தத்துவத்தின்படி, பலவீனமாகப் பிறக்கும் உயிரினத்தால் அடுத்தடுத்துத் தொடர்ச்சியாகத் தகவமைத்து உயிர்த்திருக்க முடியாது. அவற்றுடைய தலைமுறைகளும் அப்படியே இருக்கும். அந்த ஆபத்து நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக, கூட்டத்தில் பிறந்து வளரும் ஆண் யானைக் கன்றுகள் இளவட்ட வயதை அடைந்தவுடன் அவற்றை மூத்த தாய் யானைகள் தன் மந்தையிலிருந்து துரத்திவிட்டுவிடும். அதன் பிறகு அது தனியாகச் சுற்றி, பக்குவமடைந்து, தனக்கான இடத்தை வேறு கூட்டத்தில் சம்பாதித்துக்கொள்ளவேண்டும். அதாவது அதற்கான வாழ்வை, அதன் சுய முயற்சியில் போராடி அமைத்துக்கொள்ள வேண்டும்.

சராசரியாக, 13 வயதில் இனப்பெருக்கத் தகுதியை அடைந்துவிடும் ஆண் யானைகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடக் குறைந்தது 20 வயதை எட்டவேண்டும். மூத்த யானைகளின் இருப்பு காரணமாக இளவட்ட யானைகள் அவற்றுக்கான இடத்தைப் பெறுவது தாமதாகும். அதுவரை, கூட்டத்திலிருந்து துரத்தப்படும் இந்த இளவட்ட யானைகள் காட்டில் தனியாகவே சுற்றுகின்றன. கூட்டமாக இருக்கையில், தன் மொத்தக் கூட்டத்தின் பாதுகாப்பு கருதி மூத்த தாய் யானை அவர்களை வழிநடத்திச் சென்றுவிடும். ஆனால், இளவட்ட யானைக்கு அந்தக் கவலையில்லை. ஆனது பார்க்கலாம் என்று அவை துணிந்து முன்னேறி வரும். அப்படிச் செல்பவற்றிடம் போக்கு காட்டினால், விளைவுகள் விபரீதமாக இருக்கும்.

அன்று, எங்களுக்கு எதிர் மலையில் ஈத்தல் காட்டிற்குள்ளிருந்து வெளியேறிய ஒற்றை யானையும் அப்படிப்பட்ட இளவட்ட யானைதான். வாயில் கவ்வியிருந்த ஈத்தல் மரத்தைக் கடித்து விழுங்கியபடி வெளியே வந்த, அதன் தந்தங்களைப் பார்க்கும் போதே இளவட்ட யானைதான் என்று புரிந்தது. அப்போதுதான் காலை உணவைச் சாப்பிட்டு முடித்திருந்தது.

யானை
யானை
Samson Kirubakaran

அநேகமாகப் பதினைந்து வயது இருக்கலாம். யானையைப் பார்த்த ஆர்வத்தில் அனைவரும், ஒளிப்படக்கருவியை எடுத்துப் படமெடுக்கத் தொடங்கிவிட்டோம். அது வெளியே வரும்போதே எங்களையும் பார்த்துவிட்டது. எதிர் மலையில் நின்று அது எங்களைப் பார்க்க, நாங்கள் அதைக் கவனிக்க, இப்படியே சுமார் 20 நிமிடங்கள் சென்றிருக்கும். நீண்டநேரமாகத் தம்மையே மனிதர்கள் கவனித்துக்கொண்டிருந்ததைக் கண்டு எரிச்சலடைந்திருக்கும் என்று நினைக்கிறேன். நாக பொதிகையிலிருந்து வேகமாக இறங்கத் தொடங்கிய யானை, அடுத்த மலையில் அதாவது நாங்கள் நின்றுகொண்டிருந்த மலைமீது ஏறத்தொடங்கியது. அது இறங்கவும் இந்த மலை மீது ஏறவும் எடுத்துக்கொண்ட நேரம் பத்து நிமிடங்களுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு வேகமாக அது இறங்கி ஏறிய பின்னர்தான், அதன் கவனம் எங்கள் மீது இருப்பது புரிந்தது. நாங்களும் ஓட்டமெடுக்கத் தொடங்கினோம்.

``ஒற்றையாக உலவும் யானைகளைப் பொறுத்தவரை, அவற்றுக்கு இரண்டு விதமான மனநிலை இருக்கும். பிறந்ததிலிருந்து தாயுடனேயே, தன்னைச் சுற்றித் தாய்மார்களுடனேயே பாதுகாப்பாக வளர்ந்துவிட்டுத் திடீரென்று தனித்துவிடப்படும் போது ஏற்படும் பயம். இன்னொன்று, அதைத்தொடர்ந்து வருகின்ற தைரியம்.

இனி, யாரும் நம்மைக் காப்பாற்ற மாட்டார்கள். நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்ற நிலையில் சுயப் பாதுகாப்பு கருதி வருகின்ற தைரியம். இவை இரண்டும் கலப்பதால், தனக்கு ஏற்படும் எரிச்சல், பயம், கோபம் அனைத்தையும் தாக்குதலின் மூலம் வெளிப்படுத்தும். குறிப்பாக மனிதர்களிடம். ஏனென்றால், பல நூற்றாண்டுகளாக யானைகளுக்கு மனிதர்கள் ஆபத்தானவர்களாகவே இருந்து வந்துள்ளார்கள். அந்த உள்ளுணர்வு, காட்டிற்குச் சம்பந்தமே இல்லாத மனித இனத்தைக் காட்டிற்குள் பார்க்கும்போது அவற்றுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். ஆபத்து வந்துவிடுமோ என்ற பயமும் சுயப் பாதுகாப்பு உணர்வும் அவற்றை முதலில் தாக்கத் தூண்டும்" என்று விளக்கினார் காணிப் பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்த வேட்டைத்தடுப்புக் காவலர்.

ஐந்தலைப் பொதிகை
ஐந்தலைப் பொதிகை
Samson Kirubakaran

இந்த உணர்வுகளைக் கடந்து துணிவு, பக்குவம், முதிர்ச்சி அனைத்தையும் எய்தும்போது, பக்குவம் நிறைந்த இளைஞராக உருவெடுக்கின்றன அந்த இளவட்ட யானைகள். அவை தனக்கான இடத்தைப் பெற யானை மந்தைகளை அணுகி முயன்று, ஏதாவதொரு கூட்டத்தில் அதற்கான இடத்தைப் பெறுகின்றன.

அதுவரையிலான காலகட்டம் வரை, இப்படி ஒற்றையாக உலவும் யானைகள் இப்படியேதான் முரட்டுத் தனமாக, தனியாகச் சுற்றுமா!

இல்லை. தனிமையும் சுய தேடுதலும் அவற்றிடம் பக்குவத்தை வளர்த்தெடுக்கின்றன. இப்படி ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் விரட்டியடிக்கப்படும் இளவட்ட யானைகள் மற்றவையோடு நட்பு பாராட்டி, அவற்றோடு கூட்டு சேர்ந்து உலவுகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், சின்னத்தம்பி என்ற யானையின் பெயர் தமிழகம் முழுவதும் பிரபலமாகிக்கொண்டிருந்தது. அந்தச் சின்னத்தம்பியும் ஒருகட்டத்திற்கு மேல், தனக்கென ஒரு நண்பர்கள் குழுவைச் சேர்த்திருந்ததைச் சில யானை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

பொதிகை மலை
பொதிகை மலை
Subagunam Kannan
சின்னத்தம்பி யானை இப்போது எப்படி இருக்கிறது? #DoubtOfCommonman

இளவட்ட யானைகள் இப்படி நட்பு பாராட்டச் சேர்க்கும் கூட்டம் முழுவதும் இளம் யானைகளால் மட்டுமே நிரம்பியிருக்காது. பெண்கள் நிறைந்த மந்தையுடனேயே சுற்றும் முதிர்ந்த ஆண் யானைகளும்கூட சில வேளைகளில் தன் கூட்டத்தைவிட்டுப் பிரிந்து வந்து, இதுபோன்ற இளவட்டக் கூட்டங்களில் இணைந்துகொள்ளும் பழக்கம் உண்டு. இதுகுறித்து கர்நாடகாவின் பன்னேர்கட்டா தேசியப் பூங்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வுமுடிவு, இளவட்ட யானைகளின் கூட்டு சேரும் பழக்கம் மனித-யானை எதிர்கொள்ளலிலிருந்து தப்பிக்க அவற்றுக்கு உதவுவதால், இதை ஒருவகைப் பரிணாம வளர்ச்சியாகக் குறிப்பிடுகிறது. பல நூற்றாண்டுகளாக யானைகள் மனிதர்களிடமிருந்து அவை சந்திக்கும் பிரச்னைகளால் இப்படியொரு முடிவுக்கு அவை வந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், இதைப் பரிணாம வளர்ச்சி என்று குறிப்பிடுவதைவிட ஒருவகைப் பாதுகாப்பு யுக்தி என்று சொல்லலாம்.

குட்டியாக இருக்கையில், ஏதேனும் ஆபத்து நேரும்போது தன்னை நடுவில் விட்டுச் சுற்றி பாட்டி, அம்மா, அத்தை அனைவரும் அரண் போல் நிற்பதைப் பார்த்து வளரும் யானை, கூட்டமாக இருப்பது பாதுகாப்பைக் கொடுக்கும் என்று புரிந்துகொண்டிருக்கும். அந்தப் புரிதல்தான், பாதுகாப்பு யுக்தியாக வெளிப்படுகின்றது. ஆனால், இளவட்ட யானைகள் கூட்டுச் சேர்வது மனிதர்களை எதிர்கொள்வதற்காக மட்டுமே இல்லை. பல்வேறு காரணங்களில் அதுவும் ஒன்றுதான். இந்தப் பழக்கம், அடுத்தடுத்து இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு நீடிக்கிறது, அவை குறிப்பாக மனிதர்களை எதிர்கொள்ளவே இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனவா என்பன போன்ற தரவுகளைச் சேகரிப்பதன் மூலமே இது பரிணாம வளர்ச்சியா என்பதை உறுதிப்படுத்த முடியும்.

மலையை விட்டுக் கீழிறங்கும் யானை
மலையை விட்டுக் கீழிறங்கும் யானை
Samson Kirubakaran
Vikatan

எது எப்படியிருந்தாலும் சரி, யானைகளைக் காட்டுக்குள் கண்டாலே, அவற்றைச் சூடேற்றிப் பார்க்கும் மனநிலை பெருவாரியானவர்களிடம் உண்டு. அதிலும் ஒற்றை யானை என்றால், அதை வெறுப்பேற்றி வாகனத்தின் பின்னால் ஓடி வர வைத்து, ஒளிப்படம் எடுத்துக்கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் போன்றவர்கள் நிலைமையை உணர்ந்து, இளவட்ட யானைகள்மீது அத்தகைய மனோவியல் தாக்குதலைத் தொடுக்காமல் அமைதியாக விடவேண்டும், அவர்களும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

இளவட்ட யானைகள் தம் வாழ்வைச் செழுமைப்படுத்திக்கொள்ள மேற்கொள்கிற பயிற்சிக்காலம்தான் இந்தத் தனிமை. அதை மதித்து அவற்றைத் தொந்தரவு செய்யாமல் விலகிச் செல்லவேண்டும். அந்த மதிப்புமிக்க தனிமைக்குரிய மரியாதையை நாம் வழங்கவேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு