Published:Updated:

பூமியை நாடி வரும் பிரபஞ்ச அகதிகள்... #District9 படம் பார்த்திருக்கிறீர்களா?

பொதுவாக ஏலியன்கள் பூமிக்கு வந்தால் மனிதர்களை அடிமைப்படுத்துவார்கள் என்றே நாம் படித்திருப்போம் பார்த்திருப்போம். அதே ஏலியன்கள் உதவி கேட்டு பூமிக்கு வந்தால் எப்படி நடத்தப்படுவார்கள் என்று சிந்தித்து உள்ளீர்களா?

பூமியை நாடி வரும் பிரபஞ்ச அகதிகள்... #District9 படம் பார்த்திருக்கிறீர்களா?
பூமியை நாடி வரும் பிரபஞ்ச அகதிகள்... #District9 படம் பார்த்திருக்கிறீர்களா?

பூமி. பல லட்சம் உயிரினங்களின் வீடு. இங்கு அனைத்து உயிர்களுக்குமே ஓர் இடமும் முக்கியப் பங்கும் உண்டு. இங்கு எதுவும் எதற்கும் அடிமையில்லை. ஆனால், ஒரே ஒரு உயிரினம் மற்ற அனைத்து லட்சக்கணக்கான உயிர்களுக்கும் ஆபத்தான ஆதிக்க உயிரினமாக இருக்கிறது. அந்த உயிரினம் மனிதன். மிகவும் கொடிய உயிரினம். அறிவுத்திறன் தான் அதன் ஆயுதம். அதை வைத்துக்கொண்டு அது செலுத்தும் ஆதிக்கம் பூமியில் மற்ற உயிரினங்களைப் புறந்தள்ளி அதற்கு மட்டுமே என்று மாற்றிக்கொண்டிருக்கிறது. தன்னோடு வாழும் உயிர்களையே அது விட்டுவைக்காத நிலையில் ஒருவேளை வேற்றுக்கிரகத்தில் இருந்து பிரபஞ்ச அகதிகள் அவர்கள் உலகத்தைத் தொலைத்துவிட்டுத் தஞ்சம் தேடி நமது பூமிக்குள் வந்தால் அவர்கள் எப்படி நடத்தப்படுவார்கள்?

பொதுவாக ஏலியன்கள் பூமிக்கு வந்தால் மனிதர்களை அடிமைப்படுத்துவார்கள் என்றே நாம் படித்திருப்போம்; பார்த்திருப்போம். பிரபஞ்சத்தில் மனிதனின் அறிவுக்கு நிகரான ஆயுதம் எதுவுமே இல்லை என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ். அழிக்க வரும் ஏலியன்களை அடித்துத் துவம்சம் செய்யும் படங்கள் உலகளவில் பேசப்படுகிறது. அதே ஏலியன்கள் உதவி கேட்டு பூமிக்கு வந்தால் எப்படி நடத்தப்படுவார்கள் என்று சிந்தித்து உள்ளீர்களா? அப்படியொரு சிந்தனையில் உளவியல் ரீதியாகப் பேசும் படம் தான் டிஸ்ட்ரிக்ட் 9 ( District 9). 2009-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் மற்ற ஏலியன் படங்களைப் போல் இல்லை. இதைப் பார்த்தபோது ஏற்பட்ட தாக்கமே தற்போது எழுதத் தூண்டியது.

அவர்களின் கிரகம் அதீத நுகர்வாலும், காலநிலை மாற்றங்களாலும் அழிவுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றது. அதனால் வேறு வாழிடம் தேடி சில குழுக்களாகப் பிரிந்து அலைந்துகொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு குழு பூமிக்கு அருகே வரும்போது அவர்களின் விண்வெளிக் கப்பல் சேதமடைவதால் அதில் வந்த குழுவால் திரும்பிச் செல்ல முடியாமல் போகிறது. இங்கு வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருப்பதால் நம்மிடம் அனுமதி கேட்கிறார்கள். அப்போது நாம் எப்படி நடந்துகொள்வோம்?

முதலில் ஐ.நா சபை கூடும். அவர்களை அனுமதிப்பதில் இருக்கும் நன்மை தீமைகளைப் பற்றி ஆராயும். அவர்கள் நம்மைத் தாக்க வரவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின் அனுமதிக்கும். அடைக்கலம் தேடி வரும் அவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் சிற்சில ஆயுதங்களைக் கூடப் பயன்படுத்தத் தயங்குகிறார்கள். ஒருவர் பயன்படுத்தினால் கூட அதற்கான தாக்கமாக மற்றவர்களும் மனிதர்களால் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்களுக்குத் தெரிகிறது. தனக்குச் சொந்தமான ஒரு கிரகத்தையே இழந்துவிட்டு வரும் அவர்கள் மிகவும் பலவீனமாக இருப்பார்கள். நாம் அவர்களைத் தாக்கினால் திருப்பிக்கூடத் தாக்க முடியாத நிலை. அவர்களுக்கான உணவு பற்றிய அக்கறையைக் கூட காட்டாத உலக அமைப்புகள் அவை பூமியில் எந்த வகை உணவுகளை உண்ணுகின்றன என்பதைக் கண்டறிந்த பின்னர் அவற்றை அநியாய விலைக்கு விற்கிறார்கள். பணம் என்ற ஒன்றையே அறியாத போதிலும் கூடப் பணமில்லாத காரணத்தால் பட்டினியாகப் பல ஏலியன்கள் உயிரை விடுகிறார்கள்.

அகதிகள் என்றாலே அடிமைகள் என்றொரு பதிவு செய்யப்படாத அர்த்தம் உண்டு. அப்படித்தான் பெரும்பான்மையான இடங்களில் நடத்தப் படுவார்கள். போர் அகதிகள், பொருளாதார அகதிகள், சூழலியல் அகதிகள் என்று பல வகை உண்டு. அகதிகள் முகாம் என்ற பெயரில் அவர்களை கூண்டுகளாகக் கட்டப்பட்ட வீடு "போன்ற"வற்றில் இரும்பு வேலிகளுக்கு உள்ளே அடைத்து வைக்கப்படும் கொடுமைகளும் உலகின் பெரும் பகுதிகளில் நடந்துகொண்டுதானிருக்கின்றன. கேட்பதற்கு யாருமில்லை என்ற நிலையில் வாழும் அவர்கள் உள்ளூர் மனிதர்களால் அடிமைகளாக நடத்தப்படும் கொடுமைகளும் உண்டு. அந்த வகையில் இந்தப் பிரபஞ்ச அகதிகள் இவற்றோடு மேலும் சிலப் பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள்.

அனைத்தையும் இழந்து புகழிடம் தேடி வந்தவர்களின் உணர்ச்சிகளையும் வலிகளையும் புரிந்துகொள்ளாமல் நடத்தும் மனிதர்கள் மீது வெறுப்பையும் பயத்தையும் தவிர எந்த உணர்வும் ஏற்படவில்லை.விலங்குகளைப் போல் நடத்தப்படும்  அவர்கள் உடற்கூறு ஆராய்ச்சிகளுக்காக ஆராய்ச்சிக் கிடங்குகளில் உயிரோடு அறுக்கப்படுகிறார்கள். ஏலியன் ஆயுதங்களைப் பிடுங்கி ஆராய்ந்து அவற்றைப் போல் தயாரிப்பதில் முனைந்திருந்த அரசாங்க ஆயுத உற்பத்தியாளர்களால் பரிசோதனைக்காகச் சுடப்படுகிறார்கள். அவர்களின் மாமிசங்களைச் சாப்பிட்டால் அளவில்லா சக்தி பெருகும் என்ற மூட நம்பிக்கைகள் பரவுகிறது. அதை நம்பிய ஆப்பிரிக்கர்கள் அவர்களை வேட்டையாடி உண்பதும், ஏலியன் இறைச்சிக் கடைகள் துவங்குவதுமாக நீள்கின்றன கொடுமைகள்.

தம்மை நம்பித் தஞ்சம் புகுந்தவர்கள் எங்கோ ஒரு கிரகத்தில் நம்மைப் போல் நாகரிகமாக வாழ்ந்தவர்கள் தான் என்ற சிந்தனை இல்லை. விஞ்ஞானம், வளர்ச்சி போன்ற நமது நாகரிகங்களாலும் மூட நம்பிக்கைகளாலும் அருவருப்பாகப் பார்க்கும் மக்களாலும் என அனைத்து வகையிலும் பூமியில் அந்தப் பிரபஞ்ச அகதிகள் அனுபவித்த வேதனைகள் எங்கோ ஒரு மூலையில் தற்போதும் இதுபோன்ற இன்னல்களைச் சந்தித்துக்கொண்டு இருக்கும் மனித அகதிகளைப் பற்றிய சிந்தனையை முடுக்கிவிட்டது. ஐ.நா.வில் அதிகாரபூர்வ இணையத்தில் ஆராய்ந்தபோது உலகளவில் தற்போது 6.5 கோடி அகதிகள் முகாம்களில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரங்கள். அதில் 4.2 கோடி மக்கள் தத்தம் உள்நாடுகளிலேயே உள்நாட்டு அகதிகள் என்ற பெயரில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அகதிகள். அனைத்தையும் இழந்து உயிரை மட்டும் நம்பிக்கை என்ற ஒற்றை நூலில் இழுத்துக் கட்டிக்கொண்டு அடைக்கலம் தேடி ஓடி வருபவர்கள். ஒன்றும் அற்றவர்களாக அடைக்கலம் புகும் அவர்கள் அனுபவிக்கும் சிரமங்கள் சிறிதல்ல. அதில் ஒவ்வொரு அகதிக்குப் பின்னும் தீராத வேதனைகள் ஆறாத வடுக்களாக நிரம்பியிருக்கும். குற்றங்கள் நடந்தால் அவர்களைக் குற்றவாளிகளாகப் பிடித்துப் போவதில் தொடங்கித் தன்வீட்டுப் பெண்டு பிள்ளைகளைக் காமப் பசி மிகுந்த மனித அரக்கர்களிடம் இருந்து காப்பாற்றுவது வரை போராட்டங்களின் பிடியில் இருந்து மீண்டு வருபவர்களின் அன்றாடம் வாழ்க்கை போராட்டக் களமாகவே இருப்பது வேதனைக்குரியது.
தன் இனத்தினரிடமே பச்சாதாபமின்றி நடந்துகொள்ளும் மனிதர்கள் பிரபஞ்ச அகதிகளாக யாரேனும் வந்தால் அவர்களிடம் வேறு எப்படி நடந்துகொள்வார்கள்?