Published:Updated:

முடிவுறாத போர்... வெளியேறும் அமெரிக்கா.. முன்னேறும் தாலிபன்கள்... என்னவாகும் ஆப்கானிஸ்தான்?

ஆப்கானிஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
ஆப்கானிஸ்தான்

- தாக்‌ஷாயிணி

முடிவுறாத போர்... வெளியேறும் அமெரிக்கா.. முன்னேறும் தாலிபன்கள்... என்னவாகும் ஆப்கானிஸ்தான்?

- தாக்‌ஷாயிணி

Published:Updated:
ஆப்கானிஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
ஆப்கானிஸ்தான்

‘தீவிரவாதத்துக்கு எதிரான போர்’ எனப் பிரகடனப்படுத்தப்பட்டு, கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் நடத்திவந்த போர், தன் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறது. இதை வெளிப்படுத்தும்விதமாக, ஜூலை 2-ம் தேதி அதிகாலையில் ஆப்கனின் பக்ராம் விமானப்படைத் தளத்திலிருந்து, அமெரிக்காவின் கடைசி ராணுவ விமானம் வெளியேறியிருக்கிறது. இனி, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை அந்த நாட்டின் தலைவர்களும் ராணுவமும்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற முற்றுப்புள்ளி விழுந்திருப்பதால், ஆப்கனைக் கபளீகரம் செய்யத் துடிக்கும் தாலிபன்கள் கொண்டாட்டத்தின் உச்சத்திலிருக்கிறார்கள். அமெரிக்காவின் இந்த வெளியேற்றத்தால், தெற்காசிய அரசியல் தகிக்க ஆரம்பித்திருக்கிறது!

முடிவுறாத போர்... வெளியேறும் அமெரிக்கா.. முன்னேறும் தாலிபன்கள்... என்னவாகும் ஆப்கானிஸ்தான்?

முடிவுறாத 20 வருட போர்!

செப்டம்பர் 11, 2001-ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரக் கட்டடங்கள் தீவிரவாதத் தாக்குதலுக்குள்ளாகி தரைமட்டமாக்கப்பட்டன. சுமார் 3,000 பேரைப் பலிவாங்கிய இந்தக் கோரத் தாக்குதல், உலகத்தின் போக்கையே மாற்றியமைத்தது. தாக்குதலை நடத்திய அல்கொய்தா தீவிரவாத இயக்கமும், அவர்களோடு தொடர்பிலிருந்தவர்களும் உலகம் முழுவதும் வேட்டையாடப்பட்டனர். அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடன், அய்மன் அல் ஜவாஹிரிக்கு அடைக்கலம் அளிப்பதாக, ஆப்கனை அப்போது ஆட்சிசெய்த தாலிபன்கள்மீது குற்றம்சாட்டப்பட்டது. பின்லேடனைப் பிடிப்பதற்கும் அல்கொய்தாவை ஒழிப்பதற்கும் ‘தீவிரவாதத்துக்கு எதிரான போர்’ என்ற பேனரில் ஆப்கானிஸ்தானில் போரைத் தொடங்கியது அமெரிக்கா. பாமியான் குன்றுகளிலிருந்த புத்தர் சிலைகளை வெடிவைத்து தகர்ப்பது, பெண்களைக் கொத்தடிமைகள்போல நடத்துவது, ‘இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான்’ என்ற பெயரில் தாங்கள் நடத்தும் ஆட்சியை எதிர்த்து பேசுபவர்களைச் சுட்டுக்கொல்வது எனத் தாலிபான்கள் கொட்டமடித்த நேரமது என்பதால், நேட்டோ கூட்டமைப்பு உட்பட பல உலக நாடுகளும் அமெரிக்காவின் போரில் கைகோத்தன.

முடிவுறாத போர்... வெளியேறும் அமெரிக்கா.. முன்னேறும் தாலிபன்கள்... என்னவாகும் ஆப்கானிஸ்தான்?

ஆண்டுகள் செல்லச் செல்லத்தான், புதைகுழியில் வந்து சிக்கிக்கொண்டதை அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் உணர்ந்தன. ஆப்கனின் அரசியல் வித்தியாசமானது. அந்த நாட்டின் ராணுவத்தையும் தாண்டி, நாட்டிலுள்ள ஒவ்வோர் இனக்குழுவுக்கும் பிரத்யேகப் போர் வீரர்களும், ராணுவத் தலைவர்களும் இருப்பார்கள். இவர்களில் யார் நண்பர்கள், யார் எதிரிகள் என்பதை அமெரிக்கா புரிந்துகொள்வதற்குள் இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன. நட்பாக உள்ள இனக்குழுத் தலைவர்களை ஒருங்கிணைத்து, ஆப்கானிஸ்தானின் அரசியலுக்குள் அவர்களை ஐக்கியப்படுத்தும் வேலையை அமெரிக்கா முயன்றும், அது சரியாகப் பலனளிக்கவில்லை. தாலிபன்களின் தாக்குதல் ஒருபக்கம் இருந்தாலும், இனக்குழுக்களுக்கு இடையேயான ஈகோ சண்டையால் அமெரிக்கப் படைகள் திண்டாடின. நிலையான அமைதியை அமெரிக்காவால் ஆப்கனில் ஒருபோதும் நிலைநாட்டவே முடியவில்லை.

அமெரிக்காவின் பிரௌன் பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டிருக்கும் ஆய்வுகளின்படி, கடந்த 20 வருடங்களில் ஆப்கானிஸ்தானில் மட்டும் சுமார் 1,74,000 பேர் போரால் உயிரிழந்திருக்கிறார்கள். இவர்களில் சுமார் 2,300 அமெரிக்க ராணுவ வீரர்களும் அடக்கம். ஆப்கன் போருக்காக மட்டும் சுமார் 2 லட்சம் கோடி அமெரிக்க டாலரை அமெரிக்கா அழித்திருக்கிறது. இவ்வளவு பணம் செலவாகியும், உயிரிழப்புகள் ஏற்பட்டும், போரில் அமெரிக்கா வெற்றிபெறவில்லை என்பதே நிதர்சனம். ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி, ஆப்கானிஸ்தானிலுள்ள 407 மாவட்டங்களில் 142 மாவட்டங்களை தாலிபன்கள் கட்டுப்படுத்திவைத்திருக்கின்றனர். ‘‘வரும் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிடும்’’ என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஏப்ரலில் அறிவித்த பிறகு, 69 மாவட்டங்களை அசுர வேகத்தில் தாலிபன்கள் பிடித்துள்ளனர். இந்த வேகம்தான் உலக நாடுகளை கவலைகொள்ளச் செய்திருக்கிறது.

முடிவுறாத போர்... வெளியேறும் அமெரிக்கா.. முன்னேறும் தாலிபன்கள்... என்னவாகும் ஆப்கானிஸ்தான்?

தங்கப்பிறை அபின் சாம்ராஜ்ஜியம்!

உலகின் மொத்த அபின் உற்பத்தியில் 80% ஆப்கனிலிருந்து செல்வதால், அதில் கிடைக்கும் வருவாயை உள்நாட்டுப் போருக்குப் பயன்படுத்திக்கொள்கிறது தாலிபன். பாகிஸ்தான், இரான் வழியாக மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்த அபின் கடத்தல் சாம்ராஜ்ஜியம் ‘தங்கப்பிறை’ என்றழைக்கப்படுகிறது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., இரான் ராணுவ அதிகாரிகள் எனப் பலருக்கும் இந்தக் கடத்தல் லாபத்தில் பங்கு செல்வதால், இந்தப் பிறையைக் கடைசிவரை அமெரிக்காவால் உடைக்க முடியவில்லை.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த அபின் சாம்ராஜ்யம் மேலும் விரிவடையும் என்கிறது ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை. ஐ.நா-வுக்கான போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தடுப்பு அலுவலகத்தின் இயக்குநர் காடா வாலி, ‘‘2020-ம் ஆண்டு மட்டும் ஆப்கானிஸ்தானில் 37% அபின் உற்பத்தி அதிகரித்திருக்கிறது. ஆப்கானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அபினின் வர்த்தகம் மட்டும் 11% அளவுக்கு உயர்ந்திருப்பதை எச்சரிக்கையாக நாம் பார்க்க வேண்டும்’’ என்றிருக்கிறார்.

சமீபத்தில் தன்னை வாஷிங்டனில் சந்தித்த ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது அஸ்ரப் கானியிடம், ஆப்கனின் பாதுகாப்புக்குத் தன்னாலான எல்லா ஒத்துழைப்புகளையும் தருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாக்குறுதி அளித்திருக்கிறார். ‘இனி ஆப்கனின் பாதுகாப்பை அந்த நாடே பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்பதுதான் இதில் மறைந்திருக்கும் பொருள். பைடனின் இந்த முடிவுக்கு சி.ஐ.ஏ முன்னாள் இயக்குநர் டேவிட் பெட்ரேயஸ், ஆப்கனுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ரியான் க்ரோச்சர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ‘‘போரை நாம் முடிவுக்குக் கொண்டுவரவில்லை. களத்தை நம் எதிரிகளிடம் விட்டுக்கொடுத்துவிட்டு வெளியேறியிருக்கிறோம்’’ என்று க்ரோச்சர் கொதித்திருக்கிறார். அமெரிக்கப் படைகள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்றிருக்கிற, ஆப்கனிலிருக்கும் அமெரிக்க ராணுவத் தளபதி ஸ்காட் மில்லர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘தாலிபான்கள் முன்னேறும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் ஆறு மாதங்களில் ஆப்கன் தலைநகர் அவர்கள் வசம் சென்றுவிடும்’’ என்றார். ராணுவத் தலைமைகளின் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இப்படியொரு முடிவை எடுத்ததற்கு, தேர்தல் வாக்குறுதியும், போரால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலும்தான் காரணம் என்கிறார்கள்.

ஸ்காட் மில்லர்
ஸ்காட் மில்லர்

குஷியில் பாகிஸ்தான்... இந்தியாவுக்கு செக்!

இந்தக் களேபரங்களில் குஷியாகியிருப்பது பாகிஸ்தான்தான். ஆப்கானிஸ்தானின் பொருளாதாரக் கட்டமைப்பு வளர்ச்சிக்குப் பல நூறு கோடி ரூபாயை இந்தியா தந்திருக்கிறது. ஆப்கனின் நாடாளுமன்றக் கட்டடம், சல்மா அணைக்கட்டு ஆகியவற்றை இந்தியா இலவசமாகக் கட்டிக்கொடுத்திருக்கிறது. ஆப்கானிஸ்தானை நட்பின் அடிப்படையில் தன் வசமாக்கிக்கொண்டால், ராணுவரீதியாக ஒருபக்கம் சீனாவையும், மறுபக்கம் பாகிஸ்தானையும் எளிதாகச் சமாளிக்க முடியும் என்பது இந்தியாவின் கணக்கு. தவிர, துருக்மெனிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு எரிவாயு எடுத்துவர ‘டபி பைப்லைன் திட்டம்’ 2015-ல் தொடங்கப்பட்டது. பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் பைப்லைன் பதிக்கும் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. இந்தச் சூழலில், தாலிபன்களின் அதிகாரம் ஆப்கனில் ஓங்குவது இந்தியாவுக்குப் பிரச்னைதான். தாலிபன்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியத் தரப்பில் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், பாகிஸ்தானின் அழுத்தம் காரணமாக இந்திய சமாதான அழைப்பை தாலிபன்கள் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

ஜூன் 24-ம் தேதி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம்வகிக்கும் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆப்கானிஸ்தானிலுள்ள இந்தியச் சொத்துகளுக்கும் இந்தியர்களுக்கும், பாகிஸ்தான் தொடர்ந்து அச்சுறுத்தல் தருவதை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எடுத்துக் கூறியிருக்கிறார். தோஹா நாட்டில் நாடு கடந்த அரசாங்கம் அமைத்திருக்கும் தாலிபன்களுடன் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தொடர்ச்சியாக மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்துவதும் இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது. ‘தாலிபன்களுடன் கரம் கோத்துக்கொண்டு ஆப்கன் அரசியலை பாகிஸ்தான் தன் சுண்டுவிரல் அசைவில் வைத்துக்கொள்ளும். இது மொத்த தெற்காசியாவுக்கும் ஆபத்து’ என்றிருக்கிறது இந்தியத் தரப்பு. ஒருவேளை தாலிபன்கள் ஆப்கனைப் பிடித்துவிட்டால், அதன் தாக்கம் ஜம்மு காஷ்மீரையும் தாண்டி டெல்லி வரை பாயும் என்பது இந்தியாவின் கவலை. ஆப்கனிலிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கையும் வெளியிட்டிருக்கிறது இந்திய வெளியுறவுத்துறை.

எந்தக் காரணத்தைச் சொல்லி ஆப்கானிஸ்தான்மீது அமெரிக்கா படையெடுத்ததோ, இன்று அதே காரணம் மீண்டும் வலுப்பெற அடித்தளம் அமைத்துக்கொடுத்துவிட்டு வெளியேறியிருக்கிறது அமெரிக்கா. ஒருவேளை, தாலிபன்களின் கைகளில் ஆப்கன் முழுவதுமாக விழுந்துவிட்டால், தெற்காசிய அரசியலின் தட்பவெப்பம் முற்றிலும் மாறிவிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism