Published:Updated:

`யானை வேட்டைக்கு ஏலம்; ஓராண்டில் 227 டார்கெட்!' - போட்ஸ்வானா அதிர்ச்சி

ஆப்பிரிக்க யானை
ஆப்பிரிக்க யானை

இந்த ஆண்டு இறுதிக்குள் 272 யானைகளைக் கொல்ல போட்ஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது.

ஆப்பிரிக்கக் காடுகளில் துதிக்கை தனியாகத் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த யானையின் புகைப்படம் ஒன்று கடந்த ஆண்டு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காடுகளின் கம்பீரமாக வலம் வரும் யானைகளுக்கு அழகே அதன் துதிக்கைதான். அந்தத் அழகே அதற்கு பேராபத்தாக முடிந்துவிட்டது. யானைகளின் தந்தங்களுக்கு கள்ளச்சந்தையில் நல்ல மதிப்பு இருக்கிறது. இதன்காரணமாகவே உலகெங்கிலும் யானைகள் கொடூரமாக வேட்டையாடப்படுகின்றன. ஒரு சில நாடுகள் கடுமையான சட்டங்கள் மூலம் இந்த வேட்டைகளைத் தடுக்கின்றன. ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளில் யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

போட்ஸ்வானாவில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட யானை
போட்ஸ்வானாவில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட யானை

வேட்டைக்காரர்களின் அட்டூழியத்தால் ஆப்பிரிக்கா நாடுகளில் யானைகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்து வருகிறது. ஆனால், ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடான போட்ஸ்வானாவில் யானைகளில் எண்ணிக்கை 1990-ம் ஆண்டுகளுக்குப் பிறகு கனிசமாக அதிகரித்துள்ளது. 1990-ம் ஆண்டின் பிற்பகுதியில் 80,000 என்று இருந்த யானைகளின் எண்ணிக்கை தற்போது 1,30,000 என்ற எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.

தந்தத்துக்காக நடந்த கொடூரம்! - உலகை உலுக்கிய ஒற்றைப் புகைப்படம்

யானைகள், காண்டாமிருகங்கள் மற்றும் எருமைகளைக் காக்கும் விதமாக ஆப்பிரிக்க நாடுகளான போட்ஸ்வோனா, நமீபியா, ஜிம்பாப்வே, சாம்பியா, தென்னாப்பிரிக்கா நாடுகளில் 2014-ம் ஆண்டு வேட்டை தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 5 ஆண்டுகள் இந்தச் சட்டம் தொடரும் எனக் கூறப்பட்டது. ஆனால், இந்தச் சட்டத்தைக் கடந்தாண்டு போட்ஸ்வோனா அதிபர் நீக்கினார். வேட்டை தடைச் சட்டம் நீக்கிய சில நாள்களில்தான் போட்ஸ்வோனாவின் காடுகள் துதிக்கை துண்டிக்கப்பட்ட நிலையில் யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

ஆப்பிரிக்க யானை
ஆப்பிரிக்க யானை

இந்நிலையில் யானைகளை வேட்டையாட தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான நடைமுறைகள் சமீபத்தில் தொடங்கியது போட்ஸ்வானா அரசு. ஏலத்தின் அடிப்படையில் யானைகளை வேட்டையாட அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வேட்டைக்கு பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டன. யானை - மனித மோதல்களை தடுப்பதற்காகவே இந்த ஏலம் நடத்தப்படுவதாக அந்நாட்டு அரசு கூறுகிறது.

யானைகளால் மழைவாழ் மக்கள் கொல்லப்படுவதும், விவசாய நிலங்களில் ஏற்படும் சேதத்தை தடுப்பதற்காக இந்த வேட்டையை அனுமதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள்தான் இந்த வேட்டை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. 2020-ம் ஆண்டில் 227 யானைகளை கொல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏலத்தில் 7 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமான 60 யானைகளைக் கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2020 ஏப்ரலில் இந்த வேட்டை தொடங்கும் எனக் கூறப்படுகிறது

யானைகள்
யானைகள்

`போட்ஸ்வானா பகுதியில் யானைகள் அதிக அளவில் இருக்கின்றன என்பதற்கான எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் போட்ஸ்வானாவின் யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். எங்களிடம் அதற்கான தரவுகளும் உள்ளது. இந்த நாட்டின் சுற்றுச்சூழலுக்கு யானைகள் மிகவும் முக்கியமானவை. மனித - யானை மோதலை தடுப்பதற்கு வேட்டைதான் தீர்வு என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்கின்றனர் விலங்குகள் நல ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு