Published:Updated:

`இது எங்கள் கடமை!'- ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளிக்கும் இந்திய தம்பதி

உணவளிக்கும் இந்திய உணவகத்தினர்!
உணவளிக்கும் இந்திய உணவகத்தினர்!

கிழக்கு கிப்ஸ்லேண்ட் பகுதியில் குடிபெயர்ந்திருக்கும் மக்களுக்கு இலவசமாகத் தங்களின் உணவகத்திலிருந்து உணவு வழங்கி வருகின்றனர் கன்வால்ஜித் தம்பதி. இவர்களுக்கு, மெல்போர்னைச் சேர்ந்த சீக்கிய தன்னார்வலர்கள் உதவுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் பொங்கி எழும் காட்டுத் தீயின் காணொலிகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன. வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயின் காரணமாகத் தென்கிழக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து ஆயிரக்கணக்கானோர் தங்களின் இருப்பிடத்தைவிட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில், இப்பகுதியில் இயங்கி வரும் இந்திய உணவகத்தின் உரிமையாளர் ஒருவர், சில சமூக ஆர்வலர்களோடு இணைந்து வீடில்லாமல் தவித்து வரும் மக்களுக்கும் தீயணைப்பு பணியாளர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.

Volunteers
Volunteers

கன்வால்ஜித் சிங் மற்றும் அவரின் மனைவி கமல்ஜித் கவுர், ஆஸ்திரேலியாவிலுள்ள பைர்ன்ஸ்டேல் நகரில் இந்திய உணவகம் நடத்திவருகிறார்கள். கன்வால்ஜித் குடும்பம் இப்பகுதியில் ஆறு ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். திடீர் காட்டுத்தீயினால், சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல நேரிட்டது. இந்நிலையில், கிழக்கு கிப்ஸ்லேண்ட் பகுதியில் குடிபெயர்ந்திருக்கும் மக்களுக்கு இலவசமாக தங்களின் உணவகத்திலிருந்து உணவு வழங்கி வருகின்றனர் கன்வால்ஜித் தம்பதி. இவர்களுக்கு, மெல்போர்னைச் சேர்ந்த சீக்கிய தன்னார்வலர்கள் உதவுகின்றனர்.

``இங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஏராளமான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் தேவை. எங்களின் பணி அவர்களுக்குத் தேவை. இதுபோன்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது எங்கள் எல்லோருடைய கடமை.

கன்வால்ஜித் சிங் மற்றும் அவரின் மனைவி கமல்ஜித் கவுர்
கன்வால்ஜித் சிங் மற்றும் அவரின் மனைவி கமல்ஜித் கவுர்

நேற்று இரவு வேலை பளு அதிகமாக இருந்தது. அரிசி, குழம்பு மற்றும் பாஸ்தா சமைப்பதற்கு நாங்களும் தன்னார்வலர்களுக்கு உதவினோம். குறைந்தது 500 உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இங்கு மற்ற ஆஸ்திரேலியர்கள் என்ன செய்கிறார்களோ அதைத்தான் நாங்களும் செய்கிறோம்” என்று கன்வால்ஜித் அந்நாட்டுப் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

மேலும், ஒரு நாளைக்கு 1,000 பேருக்குச் சமைக்க முடியும் என்றும் போதுமான அரிசி, மாவு மற்றும் பயறு வகைகளைச் சேமித்து வைத்திருக்கிறோம் என்றும் உணவகத் தரப்பு கூறியுள்ளது. அவை அடுத்த வாரம் அல்லது அதற்கு மேல் வரும் நாள்களுக்கும் நீடித்து உதவும் என்று இவர்கள் நம்புகின்றனர்.

Bushfire in Australia
Bushfire in Australia
ஆஸ்திரேலிய காட்டுத்தீ... கோலா கரடிகளைக் காப்பாற்றப் போராடும் தம்பதி!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சீக்கிய தன்னார்வலர்கள் விக்டோரியா நகரின் பல்வேறு பகுதிகளுக்கு உணவு லாரிகளை எடுத்துச் சென்று முகாம்களில் உணவு வழங்கி வருகின்றனர். பிபிசி தரவுகளில், கடந்த வாரம் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதில் குறைந்தது 17 பேரைக் காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரைப் பகுதியில், சமீபத்திய இடப்பெயர்வுகளில் அதிக மக்கள் வெளியேறியது இந்தக் காட்டுத் தீயினால்தான் என்றும் பதிவிடப்பட்டிருக்கிறது.

சாலைகள் மூடப்பட்ட நகரங்களில் மக்கள் வெளியேற்றம் கடினமாக இருப்பதாகவும், தீ விபத்து காரணமாகத் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் CNN அறிக்கை தெரிவித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு