Published:Updated:

நியூஸ் எம்பஸி

பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பதவியேற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவருகிறார்.

பிரீமியம் ஸ்டோரி

ஒரு லிட்டர் பால் 1,195 ரூபாய்!

இலங்கையில் கடந்த ஆண்டு, கொரோனா தொற்று பரவத் தொடங்கியபோது, அந்நியச் செலாவணியைக் குறைக்க அத்தியாவசியப் பொருள்கள் இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து பால் பவுடர், கோதுமை, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால், அந்தப் பொருள்களின் விலையும் உயர்ந்தது. விலை உயர்வைக் கட்டுப்படுத்த, ‘அத்தியாவசியப் பொருள்களுக்கு விலைக் கட்டுப்பாடு’ விதித்தது இலங்கை அரசு. இந்த நிலையில் கடந்த வாரம், ``அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக, விலைக் கட்டுப்பாட்டை நீக்கிக்கொள்கிறோம். இனி அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் அதிகரிக்கும்’’ என்று அறிவித்தது இலங்கை அரசு. ஆனால், விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகு, அத்தியாவசியப் பொருள்களின் விலை எக்கச்சக்கமாக உயர்ந்துவிட்டது. கடந்த வாரம் வரை 14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு விலை இலங்கை மதிப்பில் 1,400 ரூபாய். தற்போது 90 சதவிகிதம் அதிகரித்து, 2,657 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பால், ரூ.250 விலை உயர்வைச் சந்தித்து 1,195 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோதுமை மாவு, பால் பவுடர் உள்ளிட்ட பொருள்களின் விலையும் 10 சதவிகிதம் வரை உயர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், இலங்கை மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். அரசின் மீதான அதிருப்தியையும் வெளிப்படுத்திவருகின்றனர்.

நியூஸ் எம்பஸி

“எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்!”

பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பதவியேற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். `கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ஆண்கள் முதலைகளாக மாறிவிடுவார்கள், பெண்களுக்கு தாடி வளரும்’ என்றெல்லாம் கொளுத்திப்போட்டு, உலக நாடுகளின் விமர்சனத்துக்குள்ளானார் போல்சனாரோ. ``கொரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல், மாஸ்க் அணியாமல் மக்கள் வெளியே வர வேண்டும்’’ என்று சொல்லிவந்த போல்சனாரோ, இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. இந்த நிலையில், பிரேசிலின் சாவோ பாலோ நகரில் நடந்த உள்ளூர் கால்பந்துப் போட்டியைக் காண, குடும்பத்தோடு சென்றிருக்கிறார் போல்சனாரோ. ஆனால், தடுப்பூசி செலுத்தாத காரணத்தால், மைதானத்திலிருந்த அதிகாரிகள் போல்சனாரோவை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால், கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினார். ``கால்பந்து ஆட்டத்தைப் பார்க்க விரும்பினேன். மைதானத்துக்குள் செல்ல, தடுப்பூசிச் சான்றிதழ் வேண்டுமென்கிறார்கள். கால்பந்து விளையாட்டு பார்க்க தடுப்பூசிச் சான்றிதழ் எதற்கு? தடுப்பூசி செலுத்தியவர்களைவிட எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்’’ என்றிருக்கிறார் போல்சனாரோ.

நியூஸ் எம்பஸி

பலூனை உடைத்த புலி!

சில நாடுகளில், தம்பதிகள் கருவிலிருக்கும் தங்களுடைய குழந்தையின் பாலினத்தை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்துவதற்காக விழா எடுப்பது வழக்கம். அந்தவகையில், துபாயைச் சேர்ந்த தம்பதியர், பிறக்கப்போகும் தங்கள் குழந்தையின் பாலினத்தை அறிவிப்பதற்காக ஹோட்டல் ஒன்றில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த விருந்தின்போது, ஹோட்டலில் வளர்க்கப்பட்டுவரும் புலி ஒன்று பறக்கவிடப்படும் பலூனைத் தாவி உடைப்பது ஒரு சம்பிரதாயம். இந்த முறை அந்த பலூனிலிருந்து பிங்க் நிறப் பொடி வெளியில் கொட்டியது. பிங்க் நிறப் பொடி என்பது பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்பதைக் குறிக்கிறது. புலி பலூனை உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, சமூக ஆர்வலர்கள் பலரும், `வளர்ப்புப் புலி என்றாலும், அதை இது போன்ற காரியங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது’ என விமர்சனங்களைப் பதிவுசெய்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு