Published:Updated:

நியூஸ் எம்பஸி

Yoshihide Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Yoshihide Suga

இந்த வில்லாவில் நான் பணயக் கைதியாக, என் விருப்பத்துக்கு மாறாக வைக்கப்பட்டிருக்கிறேன். இந்த வில்லா சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

ஜப்பானில் 2020-ம் ஆண்டு மட்டும் 20,919 பேர் தற்கொலையில் இறந்திருக்கிறார்கள். இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 3.7% அதிகம். தவிரவும் கடந்த 11 வருடங்களை ஒப்பிடும்போது, இதுதான் அதிக விகிதாசாரம் என்பதால் ஜப்பான் அரசு அதிர்ச்சியடைந்துள்ளது. கொரோனாவின் தாக்கம்தான் இதற்குக் காரணம் என்றும், உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தற்கொலைகள் தொடர்கதையாகும் என்றும் விவாதங்களும் விமர்சனங்களும் பலமாக எழுந்துள்ளன. உடனே ஜப்பான் பிரதமர் Yoshihide Suga, இதற்கென தனியாக ஒரு கேபினெட் அமைத்து Tetsushi Sakamoto என்பவரை ‘Minister of Loneliness’ ஆக அறிவித்திருக்கிறார்.

நியூஸ் எம்பஸி

`தனிமையில் இருக்கும் முதியவர்கள், கல்வியில் பின்தங்கிய மாணவர்கள், குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட தற்கொலை எண்ணம் தாக்கும் விளிம்பில் இருப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தகுந்த ஆலோசனை வழங்குவதன் மூலம் இந்தப் பிரச்னை தீர்க்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார் Tetsushi Sakamoto! #தனிமை தீர்க்க ஓர் அமைச்சர்!

நியூஸ் எம்பஸி

துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் (Sheikh Mohammed bin Rashid al-Maktoum) மகளான ஷேய்கா லத்தீஃபாவின் (Sheikha Latifa) வீடியோ ஒன்று சர்வதேச கவனம் பெற்றிருக்கிறது. பிபிசி நிறுவனத்தின் புலனாய்வு நிகழ்ச்சியொன்றில், லத்தீஃபா பேசும் வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில், ``இந்த வில்லாவில் நான் பணயக் கைதியாக, என் விருப்பத்துக்கு மாறாக வைக்கப்பட்டிருக்கிறேன். இந்த வில்லா சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அனைத்து ஜன்னல்களும் வெளியிலிருந்து மூடப்பட்டுள்ளன. நான் பாத்ரூமிலிருந்து இந்த வீடியோவை எடுக்கிறேன். நான் பூட்டுவதற்கு அதிகாரமுள்ள ஒரே அறை இது மட்டும்தான்” என்கிறார் 35 வயதான லத்தீஃபா. கடந்த 2018-ம் ஆண்டில் சுதந்திரமாக வாழ, துபாயைவிட்டு வெளியேற முயன்றார் லத்தீஃபா. அப்போது தடுத்து நிறுத்தப்பட்ட அவர், அதன் பின்னர் பொதுவெளியில் காணாமல்போனார். அவரை விடுவிக்க வேண்டும் எனப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் பலனாகவே அவருக்கு போன் கிடைத்ததாகச் சொல்லப்பட்டது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்கவில்லை. எனினும், இந்த வீடியோவைத் தற்போது லத்தீஃபாவின் நண்பர்கள் சிலர் ஐ.நா சபைக்கும் அனுப்பியிருப்பதாகத் தகவல். #உண்மையை ரொம்ப நாள் பூட்டிவைக்க முடியாது!

நியூஸ் எம்பஸி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைப் பனிப்புயல் தாக்கியுள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக, அங்கு வசிக்கும் மக்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்துவருகிறார்கள். அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். மேலும், மாகாணத்தின் பெரும்பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகக் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளும் இயங்கவில்லை. தற்போதைய தேவைகளுக்கு மக்கள் தண்ணீரை நன்கு காய்ச்சிப் பயன்படுத்த வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் இல்லாத சூழல் நிலவுகிறது. அமெரிக்காவின் இரண்டாவது பெரிய மாகாணமான டெக்சாஸில் உறையவைக்கும் குளிர் காரணமாக கொரோனா தடுப்பூசிப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. #பேரழிவுக்குள் பேரழிவு!