Published:Updated:

Magawa Rat: கண்ணிவெடிகளில் இருந்து மனிதர்களைக் காப்பாற்றிய எலி மரணம்!

 மகாவா எலி | Magawa Rat
News
மகாவா எலி | Magawa Rat

கொரோனா சூழ் உலகில் எலி இறந்தது எல்லாம் ஒரு செய்தியா பாஸ் என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள். இந்த எலி மனிதர்களின் பூமிச்சாமி...

தன் வாழ்நாளின் பெரும்பகுதியினை கம்போடியாவில் இருக்கும் கண்ணிவெடிகளைக் கண்டுபிடிப்பதில் செலவு செய்த மகாவா எலி, நேற்று மரணமடைந்திருக்கிறது. ஒரு மனிதர் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் நான்கு நாள்கள் தேடினால் கிடைக்ககூடிய கண்ணிவெடிகளை, பயிற்சி கொடுக்கப்பட்ட எலிகளால் 30 நிமிடங்களில் கண்டுபிடிக்க முடியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
மகாவா எலி
மகாவா எலி

சர்வாதிகாரிகளை எதிர்த்தும், விடுதலை வேண்டியும் உலகெங்கும் பல குழுக்கள் ஆயுதம் ஏந்திப் போரிட்டுவருகின்றன. வலுவான படையை எதிர்க்கும் சிறு குழுக்கள், தந்திரங்களையே போர்நெறியாகக் கையாளும். அந்தத் தந்திரங்களில், கண்ணிவெடியை பூமியில் புதைத்து வைப்பதும் உண்டு. எதிரிப் படைகளைச் சிதறடிப்பதற்காக இப்படிப் புதைப்பார்கள். ஆனால், இவை வீரர்களை மட்டுமே கொல்வதில்லை. ஒரு வெடிபொருளுக்குத் தன்மீது கால் வைப்பது போர்வீரரா, அப்பாவியா என்று பிரித்தறியத் தெரியாது. நிறைய பேர் கால்களை இழந்துவிடுவார்கள்; பலருக்கு உயிரே போயிருக்கிறது.

போர் முடிந்தபிறகும், புதைத்தவர்களே இறந்துபோனபிறகும் இந்தக் கண்ணிவெடிகள் நிலமெங்கும் உயிர்ப்புடன், யாரோ ஒருவர் தன்னை மிதிப்பதற்காகக் காத்திருக்கும். நிலத்தில் உழைப்பதற்காக இறங்கும் விவசாயி, கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கூட்டிப் போகும் உழைப்பாளி, நண்பர்களுடன் ஓடியாடி விளையாடும் குழந்தைகள் என யாரோ ஒருவர் இதன் இலக்காகிவிடுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகெங்கும் 59 நாடுகளில் சுமார் ஆறு கோடி மக்கள், கண்ணிவெடி அபாயத்துக்கு மத்தியில் வாழ்கிறார்கள். ஆண்டுக்கு சுமார் மூன்றாயிரம் பேரைக் கண்ணிவெடிகள் காவு வாங்குகின்றன. அதைவிட அதிகம் பேர் காயமடைகிறார்கள். உலகிலேயே கண்ணிவெடி ஆபத்து அதிகம் நிறைந்த நாடு கம்போடியா. இங்கு இன்னமும் ஆயிரம் கிலோமீட்டர் சதுரப் பரப்பளவு ஆபத்தான பிரதேசமாக இருக்கிறது. சுமார் 40,000 பேர் கண்ணிவெடிகளால் கால்களை இழந்திருக்கிறார்கள்.

மகாவா எலி
மகாவா எலி
YouTube Screenshot

கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளைச் சில தொண்டுநிறுவனங்கள் சேவையாகச் செய்துவருகின்றன. வெடிபொருள்களால் சேதமடையாத கவச உடை அணிந்துகொண்டு, மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு நிலத்தை அங்குலம் அங்குலமாக ஆராய வேண்டும். நேரமும் உழைப்பும் அதிகம் தேவைப்படும். இதற்குத்தான் ஒரு புதுமை ஐடியாவைச் செய்திருக்கிறது APOPO என்ற பெல்ஜியம் நாட்டுத் தொண்டு நிறுவனம். விலங்குகளை வைத்துக் கண்ணிவெடிகளைக் கண்டறியும் முயற்சிதான் அது. இதில் ஆபத்தும் செலவும் குறைவு. இதில் African giant pouched rat என்ற வகை எலி நன்கு தேறியது. எட்டு ஆண்டுகள் வரை வாழும் இவை, ஒன்றே கால் கிலோ எடையில் இருக்கும். எடை குறைவாக இருப்பதால், இது மிதித்தாலும் கண்ணிவெடி வெடிப்பதில்லை என்பது கூடுதல் பலன். வெடிகளில் கலந்திருக்கும் ரசாயனங்களுக்கு ஒருவித வாசனை உண்டு. அந்த வாசனையை வைத்தே இவை அவற்றைக் கண்டறிகின்றன.

'ஹீரோ ரேட்’ எனப்படும் இவற்றுக்கு பிறந்த நான்காவது வாரத்திலிருந்து பயிற்சிகள் ஆரம்பிக்கும். வெடிமருந்து கலந்த உலோகப் பொருள்களை மண்ணில் புதைத்து வைத்து, எலிக்குட்டியை நடமாட விடுவார்கள். அது மோந்துபார்த்து மிகச் சரியாக உலோகத்தை உணர்ந்ததும், அதற்குப் பரிசாக உணவு தரப்படும். ‘நாம் இதைக் கண்டுபிடித்தால் நல்ல உணவு கிடைக்கும்’ என்று அதன் ஆழ்மனதில் உணர்வை ஏற்படுத்துவார்கள். ஒன்பது மாதப் பயிற்சிக்குப் பிறகு ஓர் எலி நன்கு தேறிவிடும்.

அதன்பின் அதைக் களத்தில் இறக்குவார்கள். ஒரு வழிகாட்டி கயிறு கட்டி எலியைப் பிடித்துக்கொள்ள, அது மண்ணில் மோப்பம் பிடித்தபடி முன்னேறும். எங்காவது கண்ணிவெடி இருப்பதை உணர்ந்தால், அங்கு மண்ணைத் தோண்ட ஆரம்பிக்கும். உடனே அந்த இடத்தில் கவனமாகத் தோண்டி, கண்ணிவெடியை எடுத்துச் செயலிழக்கச் செய்வார்கள். இதுவரை சுமார் ஒரு லட்சம் கண்ணிவெடிகளை எலிகள் கண்டுபிடித்துள்ளன.

தற்போது இறந்து போன மகாவா இந்த விஷயத்தில் ரொம்பவே ஸ்பெஷல். கடந்த ஐந்து ஆண்டுகளாக கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டறியும் பணியைச் செய்துவந்தது இது. வெறும் 20 நிமிடங்களில் ஒரு டென்னிஸ் மைதானம் அளவுக்கான பரப்பை அலசி, வெடிகளைக் கண்டறிந்துவிடும். மகாவா இதுவரை 71 கண்ணிவெடிகளையும், 38 வெடிபொருள்களையும் கண்டறிந்துள்ளது. இதற்காக மகாவா, தீரச்செயல் புரிந்த விலங்குக்கான பிரிட்டிஷ் விருதை கடந்த ஆண்டு பெற்றது. நாய்களும் குதிரைகளும் மட்டுமே 77 ஆண்டுகளாகப் பெற்றுவந்த இந்த விருதை அடைந்த முதல் எலி, மகாவா.

‘‘மகாவா ரொம்பவே வேகம். சமீபகாலமாக அதன் செயல்பாடு மந்தமாகிவிட்டது. ஓய்வுப் பருவத்தை அடைந்துவிட்டதன் அறிகுறி இது. அதற்கு ஓய்வுக்கால நிம்மதியைத் தர வேண்டும்’’ என்கிறார், மகாவாவுக்குக் கண்ணிவெடிகளைக் கண்டறியும் பணியில் வழிகாட்டியாக இருந்த பெண்மணி மாலென்.

கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்ற மகாவா, இருபத்துக்கும் மேற்பட்ட எலிகளுக்கு பயிற்சி கொடுத்துவந்தது குறிப்பிடத்தக்கது.

இவை அற்ப எலிகள் அல்ல, நம் காப்பான்.