Published:Updated:

ராணுவ பாதுகாப்பு, கேமரா கண்காணிப்பு... இதெல்லாம் இரண்டு காண்டாமிருகங்களுக்கு... ஏன் தெரியுமா?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நஜின் (Najin), ஃபடூ (Fatu) காண்டாமிருகங்கள்
நஜின் (Najin), ஃபடூ (Fatu) காண்டாமிருகங்கள் ( bizarreglobehopper.com )

தாவர உண்ணிகளான இவை, பொதுவான எதிரிகளே இல்லாமல் தாமும் தம் பாடும் என வாழும் ஓர் அப்பாவி ஜீவன். எப்போதும்போலவே இவற்றிற்கும் எமனாக வந்த மனிதன் இன்று அதற்கு முற்றுப்புள்ளியே வைத்துவிட்டான்.

பல மில்லியன் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த பரிணாம வளர்ச்சியின் கயிறு, அதன் கடைசி முடிச்சில் தொங்கிக்கொண்டு இருக்கிறது. அரிய பல உயிரினங்கள் அழிந்து, அடுத்து வரும் தலைமுறைக்கு ஜுராசிக் பார்க், ஐஸ் ஏஜ் என கார்ட்டூன் வழி மட்டுமே சென்று சேர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இன்னுமொரு அப்பாவி உயிரினம் அதன் வம்சத்தின் கடைசி வாழ்வை வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

பொதுவாக அரசியல்வாதிகளுக்கும், பிரபலங்களுக்கும் மட்டுமே வழங்கப்படும் அதி உயர் ராணுவ பாதுகாப்பு ஒரு வன விலங்குக்கு வழங்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது என்று சொன்னால் நம்புவீர்களா?
White Rhinos | Nakuru National Park, Kenya
White Rhinos | Nakuru National Park, Kenya
Karl Stromayer/USFWS

மத்திய கென்யாவின் Ol Pejeta Conservancyயில், அதி உயர் ராணுவ பாதுகாப்பு வளையத்துக்குள் வலய வருகிறது தாய் நஜின்னும் சேய் ஃபடூவும். உலகின் கடைசியாக எஞ்சி இருக்கும் ஆப்பிரிக்காவின் இரு வடக்கு வெள்ளை காண்டாமிருக்கங்கள் (Northern White Rhinos). வேட்டைக்காரர்களின் பார்வையும், சூழலியலாளர்களின் பதற்றமும் இந்த இரண்டு ஆப்பிரிக்க வடக்கு வெள்ளை காண்டாமிருக்கங்களின் மேல் ஒருங்கே குவிந்திருக்கின்றன.

பல மில்லியன் ஆண்டுகள் பூமியில் பரவியிருந்த இந்த வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களின் பூர்வீக வாழ்விடம், மத்திய ஆப்பிரிக்காவில் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உள்நாட்டுப் போர்களால் அழிக்கப்பட்டது. அதன் பிறகு அவற்றின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறி ஆனது. 1970-களில், ஆயிரக்கணக்காக இருந்த இவற்றின் எண்ணிக்கை வெறும் 700 ஆகக் குறைக்கப்பட்டது. 1980-களின் நடுப்பகுதியில், 15 வடக்கு வெள்ளை காண்டாமிருக்கங்கள் மட்டுமே எஞ்சி இருந்தன. மனிதனின் வேட்டை இரைக்கு ஆளாகி, 2006-ம் வருடம் அதன் எண்ணிக்கை வெறும் நாலகி அருகி நின்றது. இன்று அது இரண்டாகி, இன்னும் சில காலங்களில் வாழ்ந்த சுவடே தெரியாமல் மறைந்து போகும் அபாய கட்டத்தை வந்தடைந்திருக்கிறது.

2018-ல் கடைசியாக இறந்த சூடான் எனும் ஆண் வடக்கு வெள்ளை காண்டாமிருகத்தின் பின், மிஞ்சி இருக்கும் 30 வயதான அதன் பேத்தி நஜின் (Najin) 20 வயதான அதன் கொள்ளுப்பேத்தி ஃபடூ (Fatu) என இந்த இரண்டும் இனத்தின் கடைசி வாரிசாகி விடுமா, இல்லை இதன் உடம்பிலிருந்து எடுக்கப்பட்ட முட்டைகளில் இருந்து செயற்கை கருவை உருவாக்கி, மேற்கொண்டு இதன் வம்சம் இப்பூமியில் தொடருமா என்பது இன்று வரை மிகப்பெரிய சஸ்பென்ஸாகவே இருக்கிறது.
சூடான் | Sudan
சூடான் | Sudan
AP Photo/Joe Mwihia, File

காதலும் அன்பும் பாசமும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் பொதுவானதே. ஆனால் நாம் இவற்றின் அர்த்தம் புரியாத ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சக மனிதனையே சந்தேகத்தோடு பார்க்கும் மனிதர்கள் மத்தியில் நஜினும் ஃபாத்தும் ஒருவருக்கொருவர் நேசத்தையும் பாசத்தையும் பகிர்ந்து கொள்கின்றன. தாயின் அரவணைப்பையும், மகளின் அன்பையும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி வழங்கி, மீதி வாழ்க்கையை கென்யாவின் பரந்த சவன்னா புல்வெளியில், ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்களின் பலத்த பாதுகாப்பிலும், 24 மணி நேரமும் சுற்றிச் சுழலும் கேமராக்களின் கழுகுக் கண்காணிப்பிலும் கழிக்கின்றன.

இனவிருத்தியை விட, இனஅழிவை நோக்கி இவை மிக விரைவாக சென்றதற்கு ஒரு முக்கிய காரணம் வேட்டையர்களே. ஆசிய மற்றும் மத்திய கிழக்கு சந்தையில் உச்ச விலை போகும் இவற்றின் கொம்புகள் ரத்தத்தை குளிர்விக்கும், தலைவலியைக் குறைக்கும், கேன்சர், வலிப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து என நம்பப்பட்டது. இவற்றுள் முக்கியமானது இவை ஆண்மை குறைபாட்டை தீர்க்கும் அதிமருந்து என அவிழ்த்து விடப்பட்ட புரளிதான். விடுவார்களா பணக்கார மைனர்கள்?! இவற்றின் கொம்புகளுக்கான மதிப்பு கறுப்பு சந்தையில் கூட்டக் கூட்ட, வேட்டைக்காரர்கள் வளைத்து வளைத்து வேட்டை ஆடியதில், இன்று இந்த இனமே எப்போது வேண்டுமானாலும் அறுந்து விடக்கூடிய நூலாக, ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடைசியாக எஞ்சி இருந்த இரு ஆண் வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களில் முதல் ஆண் Suni, 2014-ல் இறந்தது. அதன் பின் 2018, மார்ச் 19-ல் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகமான Sudan மிகுந்த நோய் வாய்ப்பட்டதனால், அதை பாராமரித்த மருத்துவர்களால் கருணைக் கொலை செய்யப்பட்டது. இவை இறப்பதற்கு முன்னர் அவற்றின் உடலில் இருந்து விந்தணுக்கள் எடுக்கப்பட்டன. இவ்வாறு மொத்தம் ஐந்து ஆண் வெள்ளை காண்டாமிருகங்களின் விந்தணுக்கள் இதுவரை சேமிக்கப்பட்டு இத்தாலியில் உள்ள ஆய்வகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இவை தற்போது எஞ்சி இருக்கும் இரு பெண் வெள்ளை காண்டாமிருகங்களின் முட்டைகளோடு சேர்த்து கரு உருவாக்கம் செய்யப்பட்டு, பின்னர் தெற்கு பெண் வெள்ளைக் காண்டாமிருக வாடகைத்தாய் ஒன்றின் வயிற்றில் பதிக்கப்பட உள்ளது. இந்த முயற்சி வெற்றி அடைந்தால், அழிவின் விளிம்பு வரை சென்ற இந்த அரிய உயிரினம் மீண்டும் உயிர்பெற்று வரும். தோல்வியுற்றால், ஓர் இனத்தையே தன் சுயநலத்திற்காக இல்லாதொழித்த குற்ற உணர்ச்சியை ஒட்டு மொத்த மனித இனமுமே சுமக்க வேண்டியிருக்கும்.

Sudan
Sudan
AP

கடந்த ஆண்டு நஜின் மற்றும் ஃபாட்டுவின் முட்டைகளில் இருந்து மூன்று சாத்தியமான கருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தெற்கு வெள்ளை காண்டாமிருக வாடகைத்தாயின் இனப்பெருக்க சுழற்சியின் தொடக்கத்திற்காக விஞ்ஞானிகள் தற்போது காத்திருக்கிறார்கள். ஆனால் அவை எப்போது தயாராகும் எனச் சொல்ல முடியாது என்பதால் அடுத்த கட்டமாக, ஒரு தெற்கு ஆண் காண்டாமிருகத்தை Najin மற்றும் Fatu-விற்கு அறிமுகப்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

காண்டாமிருகத்தின் பரிணாமக் கதை சுமார் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பா வெப்பமண்டல தீவுகளாக இருந்தபோது வரை நீண்டு செல்கிறது. ஓநாய் போன்ற பாலூட்டிகள் கடலுக்குள் சென்று திமிங்கலங்களாக மாறத்தொடங்கியபோது, காண்டாமிருகங்கள் ஒரு நீண்ட கழுத்தை கொண்ட விலங்காக காணப்பட்டது. இவை `ஒட்டகச்சிவிங்கி காண்டாமிருகம்' என்று அழைக்கப்பட்டன. அதன் பிறகான பரிணாம வளர்ச்சியில் காண்டாமிருகம் இன்று நமக்குத் தெரிந்த அடிப்படை வடிவத்தில் உருமாறியது.

இவற்றின் வாழ்க்கை பாணி எப்போதும் அமைதியானது. தாவர உண்ணிகளான இவை, பொதுவான எதிரிகளே இல்லாமல் தாமும் தம் பாடும் என வாழும் ஓர் அப்பாவி ஜீவன். எப்போதும்போலவே இவற்றிற்கும் எமனாக வந்த மனிதன் இன்று அதற்கு முற்றுப்புள்ளியே வைத்துவிட்டான்.
White Rhinos
White Rhinos

சாம்பல் நிறத்தில் காணப்படும் இந்த காண்டாமிருகத்திற்கு வெள்ளை காண்டாமிருகம் என பெயர் வந்தது ஒரு சுவாரஸ்யமான கதை. ஆரம்பகால டச்சு குடியேறிகள், இந்த காண்டாமிருகத்தை 'விஜ்டே லிப்' (wijde lip) அதாவது பரந்த உதடு கொண்டவை என்று குறிப்பிட்டார்கள். ஆங்கிலேயர்கள் 'விஜ்டே' என்ற வார்த்தையை White என தவறாகப் புரிந்து கொண்டனர். இவ்வாறுதான் இவற்றிற்கு வெள்ளை காண்டாமிருகங்கள் என்று பெயர் வந்ததாக நம்பப்படுகிறது.

Sudan இறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு, மே 2019-ல் ஐக்கிய நாடுகள் சபை வெகுஜன அழிவு (apocalyptic) குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஒரு மில்லியன் தாவர மற்றும் விலங்கு இனங்கள், நிர்மூலமாகும் அபாயத்தில் இருப்பதாக எச்சரித்தது.

இது சூழலியலுக்கும் மனித குலத்துக்குமே ஊதப்பட்ட ஒரு பகிரங்கமான அபாய சங்கு. வெகுஜன அழிவு என்பது இவ்வுலக்கின் இறுதி நெருக்கடி. நம்மைச் சுற்றியுள்ள ஒரு மில்லியன் இனங்கள் நமது செயற்பாடுகள் காரணமாகவே அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்பது நமக்கு நாமே வெட்டிக்கொள்ளும் படுகுழி. நம்மை சுற்றும் ஒரு புகை மூட்டம். பேரழிவு!

இதற்கு மேலும் நாம் விழித்துக்கொள்ளவில்லை எனில் நாம் வளர்க்கும் கிளியும், குருவியும், நாயும் பூனையும் கூட ஒரு நாள் அழிவின் அந்தத்திற்கு வந்து நிற்கும். ஏன், நீங்களோ நானோ, நாம் சந்ததியில் ஒருவரோ கூட உலகின் கடைசி மனிதனாக, ஒரு நாள் இந்தப் பூமியில் தனித்து நிற்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு