Published:Updated:

"படிக்கணும்னு ஆசைதான்... ஆனா, வழி தெரியலை!" - ஒரு சிறுவனின் கண்ணீர்க் கதை

"இப்படியான சூழல்ல அவங்க வீட்ல இருந்துகிட்டு, நான் சும்மா சோறு திங்கமுடியுமா? அதான், எனக்குப் படிக்க விருப்பமில்லை. வேலைக்குப் போறே’னு சொல்லிட்டேன்."

"படிக்கணும்னு ஆசைதான்... ஆனா, வழி தெரியலை!" - ஒரு சிறுவனின் கண்ணீர்க் கதை
"படிக்கணும்னு ஆசைதான்... ஆனா, வழி தெரியலை!" - ஒரு சிறுவனின் கண்ணீர்க் கதை

``அந்தப் பக்கம்... எங்க ஊர் ஆளுங்க கைப்பட முருகனுக்குப் பஞ்சாமிர்தம் செஞ்சிட்டு இருக்காங்க, வாங்கண்ணே... காட்டுறேன்... இதே இங்கதா’ண்ணே... காவடியெல்லாம் அடுக்கி வெச்சிருக்காங்க, வந்து பாருங்க... அதோ... அந்தச் செவப்பு கலர் சேலை...  அவங்ககிட்ட கேட்டீங்கன்னா இன்னும்  டீட்டெய்லா சொல்லுவாங்க. இந்தச் செய்தி எப்போண்ணா விகடன்ல வரும்? தமிழ்நாடு முழுக்க வருமாண்ணே..?" பட்டாம் பூச்சியைப் போல இடைவிடாமல் வார்த்தைகளால் படபடத்தார், சிறுவன் சக்திவேல். 

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, எடப்பாடியில் உள்ள பருவத ராஜ குலமக்களுக்கு மட்டும் பழனி மலையில் ஒருநாள் இரவு தங்குவதற்காகப் பட்டயம் எழுதிக் கொடுக்கப்பட்டிருப்பது குறித்த செய்திக்காக பழனி மலைக்குச் சென்றிருந்தபோது, எடப்பாடியிலிருந்து வந்திருந்த மக்கள் கூட்டத்துக்குள் நாம் தற்செயலாகச் சந்தித்த சிறுவன்தான் சக்திவேல். துள்ளும் துடிப்பு, கொஞ்சும் பேச்சு... என எவரையும் சிறுபொழுதில் தன் வசப்படுத்திக்கொள்ளும் சக்தி; சக்திவேலுக்கு இருந்தது. எடப்பாடியைச் சேர்ந்த பெரியவர்களே தங்கள் ஊருக்கும் பழனி மலைக்கும் இருக்கும் தொடர்பைத் தெளிவாகச் சொல்லத் திணறியபோது, சிறு வயதிலிருந்துதான் அதுதொடர்பாகக் கேட்ட கதைகளை அத்தனை தெளிவோடு சொன்னார், சக்திவேல். வேறு யாரையெல்லாம் கேட்டால் தெரியும் என்று சொல்லி அவர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகமும் செய்துவைத்தார். அவருக்கு,  அவர்கள் ஊரைப் பற்றிய செய்தி வரவேண்டும் என்ற ஆர்வம்.

சக்திவேலுக்கு  எடப்பாடிதான் சொந்த ஊர்.  அவரைப் பார்க்கவும்,  அவர் பேசுவதைக் கேட்கவும்  அவ்வளவு ஆசையாக இருந்தது. அவர் படிப்பில் கெட்டிக்காரராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனிச்சையாகத் தோன்றியது. ``தம்பி என்ன படிக்கிறே?" எனக் கேட்டேன். ``நான் படிக்கலை’ண்ணே... ஒம்பதாவதோட நிறுத்திட்டேண்ணே..." எனச் சோகமாகப் பதில் சொன்னார்.  அத்தனை நேரம் அவர் குரலில் குடியிருந்த ஆரவாரம் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டது. மகிழ்ச்சி பரவியிருந்த அவர் முகம் சட்டென்று வாடத் தொடங்கியது.  ``என்ன தம்பி சொல்ற?  ஏன் படிக்கலை. படிப்பு ஏறலையா, படிக்கப் பிடிக்கலையா?" என்றேன். ``இல்லைண்ணே.. பேக்கரில வேலைக்குப் போறேன். ஒருநாளைக்கு 300 ரூபாய் சம்பளம்" அதுவரை தீர்க்கமாகப் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென்று சம்பந்தமில்லாத பதில் சொன்னார்.

``உங்க அப்பா என்ன பண்றார்?" என்றேன். "அப்பா செத்துட்டார்ணே" எனச் சொல்லிய அவர் குரல் மேலும் இறுகியது. ``உங்க அம்மா?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டோம். ``அவங்க வேற கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போய்ட்டாங்கண்ணே.." என்று மேலும் இடியை இறக்கினார். அப்போது அவரது கண்கள் லேசாகக் கலங்கத் தொடங்கின. ஆனால், அதை அவர் வெளிக்காட்ட விரும்பவில்லை. கோயில் விஷயத்தைப் பற்றிப் பேச எத்தனித்தார். நான் விடவில்லை, ``அப்போ நீ யார்கூட இருக்க?" என்றேன். ``எங்க அக்கா, மாமாகூட’ண்ணே... அக்கா லவ் மேரேஜ் பண்ணிக்கிருச்சு. அவங்க வீட்லதான் நான் இருக்கேன்" என்றார், ஒருவித கவலையுடனேயே. ``ஏன் உங்க அக்காவோ, மாமாவோ உன்னைப் படிக்க வைக்கலையா?" என்றேன். ``படிக்கத்தான் சொன்னாங்க... நான்தான் போகலை!" என்று கஷ்டப்பட்டுப் புன்னகையை வரவழைத்தபடிச் சொன்னார். அதைக் கேட்டதும் சற்றே அவர்மீது எனக்கு லேசான கோபம் வந்தது.

இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், ``அவங்களே...  `படிக்க வைக்கிறே’னு சொல்லும்போது, நீ ஏன் போகலை" எனக் கேட்டேன்" `இல்லைண்ணே... எனக்கு ஸ்கூல் போகணும்’னு ஆசை. 9-வது வரைக்கும் படிச்சேன். அப்போதான் திடீர்னு எங்க அம்மா என்னை விட்டுட்டு எங்கேயோ போயிட்டாங்க. எனக்கு என்ன செய்யுறதுனு தெரியலை. அக்கா வீட்டுக்கு வந்துட்டேன். அக்கா வீட்லயும் பெரிய வசதி கிடையாதுண்ணே... மாமா மட்டும்தான் சம்பாதிக்கிறார். வாடகை வீடுதான். அவுங்களுக்கே ரொம்ப கஷ்டம்ண்ணே.. இப்படியான சூழல்ல அவங்க வீட்ல இருந்துகிட்டு, நான் சும்மா சோறு திங்கமுடியுமா? அதான், எனக்குப் படிக்க விருப்பமில்லை. வேலைக்குப் போறே’னு சொல்லிட்டேன். எடப்பாடியில் உள்ள ஒரு பேக்கரிலதான் வேலை செய்யுறேன். ஒருநாளைக்கு 300 ரூபா சம்பளம். என் ஃப்ரெண்ட்ஸ்லாம் ஸ்கூல் போறத பார்க்கும்போது, எனக்கும் ஏக்கமாத்தான் இருக்கும்" என்றவருக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை.

சக்திவேலைச் சந்திப்பதற்கு இரு தினங்களுக்கு முன் அற்புதம் அம்மாளின் மக்கள் சந்திப்புக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். 71 வயதில் ஒத்துழைக்காத உடல்நிலையிலும் தன் மகன் விடுதலைக்காகப் போராடும் அந்தத் தாயின் கண்ணீர்ப் பேச்சுகளின் ஈரம்கூடக் காயாத நிலையில், சக்திவேலுடனான சந்திப்பு நிகழ்ந்தது. எத்தனையோ விடை தெரியாத கேள்விகள் எழுந்து நின்றன. 28 ஆண்டுகளாகத் தன் மகனை மீட்கப் போராடும் அற்புதம் அம்மாள் வாழும் இதே பிரபஞ்சத்தில்தான் தன் மகனை விட்டுச் சென்ற சக்திவேலுடைய அம்மாவும் வாழ்கிறார்?! நல்லதும், கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கையென இதைத்தான் சொல்வார்களோ? `ஆயிரம் உறவு உன்னத் தேடி வந்து நின்னாலும் தாய்போல ஆக முடியுமா?' என்ற பாடலை சக்திவேல் எப்படியான உணர்வில் கேட்பார்? `அம்மா என்று அழைக்காத உயிரில்லையே..’ என்ற பாடல் சக்திவேல் காதுகளில் ஒலித்தால், அதை அவர் எப்படிக் கடப்பார்? தன்நிகரற்ற தாய்ப் பாசமும் சிலருக்குத் தண்ணீரின் எழுத்தாய்ப் போய்விடுவதைவிடப் பெருங்கொடுமை இந்த உலகில் என்ன இருக்கிறது?

சக்திவேலிடம் இறுதியாகக் கேட்டேன். ``உன் அம்மா இன்னொருவரை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க என்கிற கோபம் உனக்கு இருக்கா தம்பி?"

``அதெல்லாம் இல்லண்ணே.! என்னை விட்டுட்டுப் போய்ட்டாங்களேங்கிற கோபம் மட்டும்தான். பிறகு  சந்திப்போம்ண்ணே..." என்றபடி கொஞ்சம் புன்னகைத்தபடி அங்கிருந்து நகர்ந்தார். 

இதுகுறித்து எடப்பாடிக்கு நேரில் சென்று சக்திவேலுடைய மாமா செளந்தரராஜனிடம் பேசினோம், ``அவன் சொல்ற மாதிரி அவங்க அப்பா செத்துப் போகலை. சக்திவேல் சின்னதா இருக்கும்போதே, அவரும் வேற ஒரு பொண்ணோட போயிட்டார். அப்பா செத்துப் போயிட்டார்னு சக்திவேல்கிட்ட  பொய் சொல்லி வெச்சுருந்துருக்காங்க. இப்போ... சக்திவேலுடைய அம்மாவும், கல்யாணமாகி மனைவி குழந்தைகள் இருக்கிற ஒருத்தருகூடப் போயிட்டாங்க. எனக்கு அவர்தான் முக்கியம்'னு சொல்லிட்டுப் போய்ட்டாங்க. அவங்களை நாம என்ன பண்ண முடியும்? சக்திவேலுடைய அக்காவை ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி நான் கல்யாணம் பண்ணிணேன். இவனை, தனியாவா விட முடியும்? இவனையும் நான்தான் வளர்க்கிறேன். நல்லா படிக்கிற பையன்தான். ஆனால், டிகிரி படிச்சுட்டு நான் மளிகை கடையிலதான் வேலை பாக்குறேன். குடும்பத்தை நடத்துற அளவுக்கு வருமானம் வருது. அதான் படிச்சு என்ன ஆகப் போகுதுன்னு பேக்கரில வேலைக்குச் சேர்த்துவிட்டுட்டேன். அவன், சம்பாதிச்சு கொண்டுவந்து கொடுக்கிற காசுல, சாப்பாட்டுக்குப் போக மீதியை அவன் பேருல சீட்டுப் போட்டு வெச்சுருக்கேன். அவனுக்குக் கல்யாணம் பண்ணி வாழ்க்கை அமைச்சுக்கொடுக்கணும்ல" என்றார்.

ஆனால், சக்திவேலுவின் மனதிலோ, ``நானும் படிக்கணும்ண்ணே... ஆனால், எப்டின்னுதான்னு தெரியலை" என்கிற கனவு மட்டும் நிலைகொண்டிருந்ததை நம்மால் பார்க்க முடிந்தது.