Published:Updated:

கடையில் வாங்கும் தயிர் குழந்தைகள் உடலுக்கு நல்லதா? - நிபுணர் விளக்கம்! #SummerTips

"குழந்தைகளுடன் கடைக்குச் சென்று பழம் வாங்குவது தொடங்கி, அவற்றைக் கழுவுவது, தோல் நீக்குவது, துண்டுகளாக நறுக்குவது என அனைத்திலும் அவர்களை ஈடுபடச் செய்ய வேண்டும். அப்போதுதான் பழங்களை விரும்பிச் சாப்பிடும் பழக்கம் வரும்."

கடையில் வாங்கும் தயிர் குழந்தைகள் உடலுக்கு நல்லதா? - நிபுணர் விளக்கம்! #SummerTips
கடையில் வாங்கும் தயிர் குழந்தைகள் உடலுக்கு நல்லதா? - நிபுணர் விளக்கம்! #SummerTips

கோடைக்காலத்தில் மிக முக்கியமான பிரச்னை... விதமான உணவுகளைச் சாப்பிடுவது என்பதுதான். அதுவும் குழந்தைகளுக்கு என்றால் இன்னும் கவனம் எடுக்க வேண்டியிருக்கும். சாப்பிடும் உணவு, உடல் சூட்டைச் சீராக வைத்திருக்க வேண்டும். அதேநேரம் குழந்தைகளுக்கும் பிடித்ததாகவும் இருக்க வேண்டும். பெரும்பாலான குழந்தைகள் தயிர்சாதம் சாப்பிடுவதற்குத் தயக்கம் காட்டுவதில்லை. அதனால், பெற்றோர்களும் தினமும் தயிர்சாதம் செய்துகொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது சரிதானா என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு. இதை உள்ளடக்கி, ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணனிடம் பேசினேன். 

``கோடைக்காலத்தில் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டிய பழங்கள் எவை?"

 ``குழந்தைகளுக்கு பிடிக்காத பழங்கள் பல இருந்தாலும், பப்பாளிதான் அந்த லிஸ்ட்டில் முதலில் இருக்கும்.  ஆனால், கோடைக்காலத்தில் அதை நிச்சயம் சாப்பிடவேண்டும். ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களைச் சாப்பிடலாம். மேலும், இந்த சீசனில் இயற்கை தரும் தர்பூசணி, கிர்ணி பழங்களையும் சாப்பிடலாம். பொதுவாக, பழங்களை ஜூஸாகச் சாப்பிடுகிறார்கள். ஆனால், அதை விட நேரடியாகச் சாப்பிடுவதே நல்லது. ஃபேஷன் ப்ரூட்ஸ் பழங்கள் சிலருக்குப் பிடிக்காது. ஆனால், அவற்றையும் சாப்பிடலாம். பொதுவாக, ஆப்பிள், மாதுளம் பழங்களைக் கொடுக்கலாம். ப்ரூட் சாலட் செய்துகொடுக்கலாம். அதில் காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். குழந்தைகளுடன் கடைக்குச் சென்று பழம் வாங்குவது தொடங்கி, அவற்றைக் கழுவுவது, தோல் நீக்குவது, துண்டுகளாக நறுக்குவது என அனைத்திலும் அவர்களை ஈடுபடச் செய்ய வேண்டும். அப்போதுதான் பழங்களை விரும்பிச் சாப்பிடும் பழக்கம் வரும். மதியம் 11 மணியிலிருந்து 1 மணிக்குள் வெப்பம் அதிகமாக இருக்கும்போது பழங்கள், சாலட்டுகளைச் சாப்பிடக் கொடுத்தால், புத்துணர்ச்சியாகவும் உடல் வறட்சியைப் போக்கவும் செய்யும்" 

"கோடை என்றவுடன் குழந்தைகளுக்கு தினமும் மதியம் தயிர் சாதம் கொடுப்பது சரிதானா?"

``நமக்கும் கோடைக்காலத்துக்கும் பிடித்த உணவு தயிர்சாதம்தான். அதை குழந்தைகளுக்குக் கொடுப்பது தவறில்லை. ஆனால், தயிரை நாம் வீட்டில் செய்கிறோமா, கடையில் வாங்கிறமோ என்பதுதான் கேள்வி. காலையில் ஆறு மணிக்கு, சுட வைத்த பாலில் கொஞ்சம் தயிர் சேர்த்தால், பத்து, பதினொரு மணிக்கு தயிர் ரெடியாகி விடும். அது புளிக்காமல் இருப்பதோடு, கெட்டியாகவும் இருக்கும். வெளியில் தயிரை வாங்கும்போது, தயிரின் சுவை மாறாது. ஆனால், அந்தத் தயிரை, பாலில் ஊற்றி, பாலைத் தயிராக்க முடியுமா? பெரும்பாலான தயிர்களில் முடியாது. ஏனென்றால், அதில் இருக்கும் நல்ல கிருமிகள் அழிந்துவிடுகின்றன. இந்தத் தயிரை புரோட்டின், கால்சியம் ஆகியவற்றிற்காகத்தான் சாப்பிடுகிறோம் என்றால் ஓ.கே. ஆனால், தயிரிலுள்ள நல்ல கிருமிகளாகவும் கோடைக்காலத்திற்காகவும் சாப்பிடுகிறோம் என்றால் இதனால் பலன் இருக்காது.

பொதுவாக, குழந்தைகள் வெளியிலிருந்து வாங்கும் தயிரைத்தான் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்று சிலர் சொல்லலாம். இன்னும் சிலர் சரியான பதத்தில் தயிர் வருவதில்லை; ரொம்ப புளிப்பாக இருக்கிறது என்பார்கள். அது நாம் தயிர் தயாரிக்கும் முறையில்தான் இருக்கிறது. ஒரு லிட்டர் பாலுக்கு, கால் டீஸ்பூன் தயிர் ஊற்றினால் போதும். அதுவும் ரொம்பவும் புளித்த தயிராக இருக்க வேண்டியதில்லை. அடுத்து, ஊற்றியதும் திறந்து, திறந்து பார்க்கக்கூடாது. நான்கு மணிநேரமாவது காத்திருக்க வேண்டும். கெட்டியான தயிராக வேண்டும் என்றால், தயிரானதும் அரை மணிநேரம் ஃபிரிட்ஜில் வைத்தால் போதும். இப்படித் தயாரித்த தயிரில் சாதம் செய்ய வேண்டும். மதியம் சாப்பிடுவதற்காக குழந்தைகளுக்குத் தயிர் சாதம் கொடுக்க வேண்டும் என்றால், காலையில் வெதுவெதுப்பான பாலைச் சாதத்தை ஊற்றி, சிறிதளவு தயிரை ஊற்றிக் கிளறிவிடவும். அது மதியம், 12 மணியளவில் நல்ல தயிர் சாதமாகி விடும். முதல் தயிரில், காலையில் தயிர்சாதம் கிளறிக் கொடுத்தால் இந்த வெயிலில் மதியம் சாப்பிடும்போது ரொம்பவும் புளித்துவிடும். அதேநேரம் குழந்தைகள் ஏ.சி ரூமில் இருக்கப் போகிறார்கள் என்றால், பாலில் தயிர் கலந்து செய்யக் கூடாது. கோடையில் குழந்தைகளுக்கு சிறந்த உணவு தயிர்சாதம்தான் என்றாலும், கொஞ்சம் சாம்பார் சாதம் அல்லது ரசம் சாதம் அதோடு தயிர்சாதம் என வைத்துக்கொண்டால் அவர்களுக்கு அலுத்துப்போகாது!"