Published:Updated:

ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த 7 வயது மதுரைச் சிறுவன்!

ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த 7 வயது மதுரைச் சிறுவன்!
ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த 7 வயது மதுரைச் சிறுவன்!

5 நிமிஷம் தொடர்ந்து எதையாவது செய்யச் சொன்னால் நாம் என்னவெல்லாம் செய்வோம்... சிலர் பேசிப் பேசியே மிரட்டுவோம், ஷின்சான் மாதிரி சிரிக்க வைத்து கலக்குவோம். `இந்த விளையாட்டுக்கே வரல'னு ரெடி ஜூட் விட்டு எஸ்கேப் ஆகிவிடுவோர்களும் உண்டு. ஆனால், மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த சாந்தகுமார், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சிலம்பம் சுற்றி காண்போரை `வாவ்' போட வைத்து வருகிறார். `நோபல் வேர்ல்ட் ரிக்கார்ட்'ஸில் உலக சாதனை படைத்து சிலம்பாட்டத்தில் சிகரம் தொட்டுள்ள இந்தச் சுட்டியின் வயது 7 தான்.

``எல்லாரும் உலக சாதனை பண்ணிட்டேன்னு சொல்றாங்க. ஆனா, எனக்கு சிலம்பம் சுத்துறதுன்னா ரொம்ப பிடிக்கும்க்கா. அதைத்தான் செஞ்சேன். தினமும் ரெண்டு மணி நேரம் பழகுவேன். என்னைவிட பெரிய அண்ணனுங்க கூட சிலம்பம் விளையாடி ஜெயிக்கிறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கும். சிலம்பத்துல மேல்வீச்சு, கீழ்வீச்சு, ஹெலிகாப்டர், 1234, மேஜிக்ன்னு பலவகை இருக்கு. உங்களுக்கும் பண்ணி காட்டுறேன் வாங்கக்கா!" என்று சாந்தகுமார் அழைக்கவும் மொத்த ஏரியா குழந்தைகளும் அங்கே ஆஜார் ஆகிவிட்டார்கள்.

ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த 7 வயது மதுரைச் சிறுவன்!

`சால்னா பாக்கெட்', `கமர்கட்', `குச்சி மிட்டாய்' என்று தனக்கென ஒரு செல்லமான பட்டாளத்தையே சேர்த்து வைத்திருக்கிறார் சாந்தகுமார். தினமும் சிலம்பம் பழகும்போது அவர்கள்தான் பார்வையாளர்களாம். ஓர் ஆளுயரம் இருக்கும் சிலம்பத்தினை அசராமல் மின்னல் வேகத்தில் வீசி முடிக்கவும், ஆடியன்ஸ் கண்களை விரித்து 'ஹேய்ய்ய்ய்' என்றபடி உற்சாகத்தில் கைத்தட்டி ஆர்ப்பரிக்கவும் சரியாக இருந்தது. 

``எங்க பையன் அஞ்சு வயசுலேருந்தே சிலம்பம் கத்துகிட்டு இருக்கான். அவனோட ஆர்வத்தைப் புரிஞ்சுகிட்டு  சின்ன வயசுலயே சிலம்பம் கத்துக்கிறதுக்காக பல ஸ்கூல் மற்றும் அகாடமிகளுக்குக் கூட்டிட்டுப் போனோம். ஆனா எல்லாரும் `இவன் ரொம்ப சின்னப் பையன்... கம்பு உயரம் கூட இல்லை. இந்த வயசுல சொல்லிக்கொடுக்க முடியாது'ன்னு நிராகரிச்சிட்டாங்க. அப்போவே கவனிச்சு ஊக்கப்படுத்தியிருந்தா இன்னும் பெரிய அளவுல சாதிக்க வாய்ப்பு அமைஞ்சிருக்கும். விளையாட அனுப்பினா பிள்ளைங்க படிக்கமாட்டாங்கன்னுதான் பெரும்பாலான பெற்றோர்கள் பயப்படுறாங்க. ஆனா ஞாபக சக்தியை அதிகரிக்கிறதுல விளையாட்டுக்கு முக்கியமான பங்கு இருக்கு. இப்போவும் அவன் சிலம்பம் விளையாடுறதுக்கு ரொம்பவே ஸ்பெஷலான பயிற்சி ஏதும் கிடையாது. எங்க தெருவுல எல்லாரும் இரவில் சீரியல் பார்க்கப் போன பிறகு இரண்டு மணி நேரம் கடுமையான பயிற்சி எடுத்துப்பான். அந்த விடாமுயற்சிதான் அவனை இந்த உயரத்துக்கு கொண்டு போயிருக்கு." என்று புன்னகைக்கிறார் அப்பா கார்த்திக்.

சிலம்பம் பயிற்சியாளர் கதிரவன், ``பெரியவங்ககிட்ட கூட இவ்ளோ எனர்ஜி நான் பார்த்ததில்லை. பயிற்சி ஆரம்பிச்ச நாள்களிலிருந்தே ரொம்ப ஆர்வமா கத்துக்கிட்டு இருக்கிறான், சாந்தகுமார். ஏழு வயசுல ரெண்டு கையிலேயும் ரெண்டு சிலம்பம் எடுத்து இவ்ளோ வேகமா இடைவிடாம சுத்துறதப் பார்த்து நிறைய வி.ஐ.பி-க்கள் அசந்து போயிருக்காங்க. அரவக்குறிச்சியில ஒரு தடவை சிலம்பம் சுத்தும்போது கம்பு, தாடையில இடிச்சு ரத்தம் கொட்டிருச்சு. எல்லாரும் பதறிப்போய் நிறுத்தச் சொன்னாங்க. ஆனா இவன் நிறுத்தவே இல்ல. கையில எடுத்த சிலம்பத்தை ஆடி முடிச்சிட்டுதான் கீழ வைக்கணும்னு மன உறுதியோட அன்னிக்கு இவர் இருந்ததை எங்களால் மறக்கவே முடியாது. இவனின் திறமையைப் பார்த்துட்டு ஒரு சில ஆல்பம் சாங்ஸ்லகூட கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தாங்க." என்கிறார் பெருமையாக.

ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த 7 வயது மதுரைச் சிறுவன்!

``எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசைக்கா'' என்றபடியே சிலம்பம் சுத்த ஆரம்பித்தார் சிலம்ப சாம்பியன் சாந்தகுமார். ``என்ன ஆசை?' என்றோம்.

``எனக்கும் டி.வி-யில வரணும்ன்னு ரொம்ப நாள் ஆசை. என் கனவு, லட்சியம் எல்லாம் அதான்கா..!! ஏற்கெனவே ஒரு சேனல்ல முயற்சி பண்ணப்போ, `பாட்டு பாடுறவங்கதான் நிகழ்ச்சிக்கு வரமுடியும்' ன்னு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இப்போதான் இந்த ரிக்கார்ட் பண்ணி சர்டிபிகேட் வாங்கிட்டேன்ல. எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தா ரொம்ப ஹாப்பி தான்." என்று கண்களில் கனவுகள் மின்ன கூறுகிறார் சாந்தகுமார்.

சிலம்பம் மட்டுமின்றி, படிப்பிலும் படுசுட்டியான இவர்தான் கிளாஸ்லயும் ஸ்ட்ரிக்ட் லீடராம்.இதைச் சொல்லிவிட்டு நண்பர்கள் பட்டாளம் பயந்தது போல் ரியாக்சன் கொடுக்க, இடமே கலகலப்பானது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு