Published:Updated:

உங்களுக்காகவும் உங்க குழந்தைகளுக்காகவும் ஒரு ஃபேமிலி ரஃப் நோட்! #Parenting

ரஃப் நோட்
ரஃப் நோட் ( pixabay )

ஒரு ரஃப் நோட்டை நம் வீட்டிலும் குடும்ப ரஃப் நோட்டாகப் பயன்படுத்தலாமே...

நாம் எல்லோருமே பள்ளியில் படிக்கும்போது ரஃப் நோட் பயன்படுத்தியிருப்போம். இப்போது நம் குழந்தைகளும் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். அதுபோன்ற ஒரு ரஃப் நோட்டை நம் வீட்டிலும் குடும்ப ரஃப் நோட்டாகப் பயன்படுத்தலாமே...

பெரிய பெரிய திட்டங்களுக்கான செயல்களைச் சின்னச் சின்ன குறிப்புகளால் நினைவில் வைத்துக்கொள்ளவும், தவறுகள் நடந்துவிடாமல் இருக்கவும் பயன்படுத்துவதுதான் ரஃப் நோட். ஏட்டுப் படிப்பில் மட்டும் அதைப் பயன்படுத்தினால் போதுமா? அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்தினால் பல தவறுகளைத் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம்.

குறிப்பாக, இந்த ரஃப் நோட் உங்கள் குழந்தைகளின் அன்றாட திட்டமிடல், செயல்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். இன்று பயன்படுத்தும் அந்த ரஃப் நோட், நல்ல குணங்களை உருவாக்கி அவர்களின் வருங்கால வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அப்படியான ஃபேமிலி ரஃப் நோட் ஒன்றை உங்கள் வீட்டு வரவேற்பறை மேஜை மீது வையுங்கள்.

note
note
pixabay

முக்கியமாக, அந்த நோட்டுப் புத்தகத்தில் குழந்தைகளுடன் நீங்களும் பங்கெடுக்க வேண்டும். உங்களின் அன்றாடத் திட்டங்களை, சாதித்ததை, சொதப்பியதை என ஒளிவுமறைவின்றி எழுத வேண்டும். அப்படி என்னவெல்லாம் எழுதலாம்?

இன்று சமைக்க நினைத்திருந்தது ஒன்று. ஆனால், தாமதமாக எழுந்ததால் நேரமில்லாமல் போய் அவசர அவசரமாக வேறு ஒன்றை சமைக்கும்படி ஆகிவிட்டதா? அதை எழுதுங்கள். அப்படி தாமதமாக எழுந்ததற்கான காரணம் என்ன? இரவு நீண்ட நேரம் போன் பார்த்துக்கொண்டிருந்ததோ, டிவி பார்த்துக் கொண்டிருந்ததோ என்றால், அதையும் மறைக்காமல் எழுதுங்கள்.

இதையெல்லாம் ஓரிரு வரிகளில் ரொம்ப சீரியஸாக இல்லாமல், கொஞ்சம் கிண்டலாக எழுதுங்கள். அதாவது, சொதப்பும்போதெல்லாம் உங்களை நீங்களே கிண்டல் செய்துகொள்ளுங்கள். இனி, அதைச் சரிசெய்துகொள்வதாக எழுதுங்கள். இதைப் படிக்கும் குழந்தைகளும் தங்களின் சொதப்பல்களை ஒப்புக்கொள்வார்கள். சரிசெய்துகொள்ள முயல்வார்கள்.

தாமதமாக எழுந்ததற்குக் காரணம், உடல்நலமில்லாமல் போனது அல்லது நீண்ட நேரம் முக்கிய வேலை பார்த்தது போன்ற நேர்மறை காரணம் இருந்தாலும் அதையும் எழுதுங்கள். அதில், உங்களுக்கு உதவியவர்கள் இருந்தால், அவர்களுக்கு மறக்காமல் நன்றி சொல்லுங்கள். இந்தப் பழக்கம் உங்கள் குழந்தைகளுக்கும் ஏற்படும்.

உங்கள் அலுவலகத்தில் நடந்த முக்கிய நிகழ்வு, சக நண்பர்கள் சொன்ன ஜோக், கேள்விபட்ட வித்தியாசமான விஷயம், நண்பர்களுடன் ஏற்பட்ட பிணக்கு, பிரச்னையைச் சமாளித்த விதம் என எதுவாக இருந்தாலும் அதுபற்றி நான்கைந்து வரிகளில் எழுதுங்கள். இதுபோல உங்கள் குழந்தைகளும் பள்ளி அனுபவங்களை எழுதச் சொல்லுங்கள். அதன்மூலம், அவர்களின் பள்ளி விஷயங்கள், பிரச்னைகள், நண்பர்கள் பற்றி அறிந்துகொள்ள முடியும்.

kids
kids
pixabay

வெளியே நீங்கள் யாருக்காவது உதவி செய்திருந்தால் அல்லது உதவி பெற்றிருந்தால் அதையும் குறிப்பிடுங்கள். வழியில் நீங்கள் சந்தித்த சுவாரஸ்யமான விஷயம், அதுபற்றி தங்கள் கருத்தையும் குறிப்பிடுங்கள். இதுபோல, உங்கள் குழந்தைகளும் எழுத ஆரம்பித்தால், அவர்களுக்கும் சமுதாய நிகழ்வுகள் மீது ஆர்வம் உண்டாகும்.

தாத்தா, பாட்டிகள் தங்களின் அனுபவங்களை எழுதலாம். தங்கள் ஆலோசனைகளைச் சொல்லலாம். குழந்தைகளும் தாத்தா, பாட்டியிடம் கற்றது, அவர்கள் மீதான் அன்பு ஆகியவற்றைப் பகிரட்டும்.

பார்த்த சினிமா, கேட்ட பாடல், ரசித்த ஓவியம் என்று கலை சார்ந்த விஷயங்கள் பற்றிய அனுபவம் மற்றும் கருத்துகளையும் உங்கள் ஃபேமிலி ரஃப் நோட்டில் படைப்பாக்குங்கள். உங்கள் குழந்தைகளும் அப்படி எழுதும்போது அவர்களின் ரசனை, எழுத்தாற்றலையும் அறியலாம்.

எல்லா நாளும் நடந்த எல்லாவற்றையும் வளவள என்று எழுத வேண்டாம். இதனால், எழுதவும் மற்றவர்களுக்குப் படிக்கவும் சீக்கிரமே சலித்துவிடும். அதனால், அன்றைய நாளில் எது முக்கியம் என்று தோன்றுகிறதோ, அது மட்டும் நான்கைந்து வரிகளில் இருந்தல் போதும்.

குழந்தை பெற்றோரிடம் கதை  கேட்பதும், வீடியோ பார்ப்பதும் ஒன்றா?! ஓர் அலசல்

இதுமட்டுமன்றி, குடும்பத்துக்குள் ஒருவருக்கு ஒருவர் பாராட்டிக்கொள்ளும் விஷயங்களை எழுதுங்கள். உங்கள் குழந்தை வீட்டு வேலையிலோ, வேறு வகையிலோ உதவி செய்திருந்தால் அதைக் குறிப்பிடுங்கள். திடீரென பரிசு கொடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் பரிசு வைத்திருக்கும் இடம் பற்றி சுவாரஸ்யமான புதிர் போடுங்கள்.

இப்படி உங்கள் ஃபேமிலி ரஃப் நோட், குடும்பத்தின் பொது டைரியாக மாறி உங்கள் குழந்தைகளைப் பல விஷயங்களில் உயர்த்தட்டும். நீங்களும் உங்களை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு