Published:Updated:

`இனி பார்பி பொம்மைகள் இப்படித்தான் இருக்கும்!' - மேட்டல் நிறுவனத்தின் முக்கிய முடிவு!

பாலினம் அறுதியிடாத (Gender neutral) ரக பொம்மைகளைத் தற்போது அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Barbie
Barbie

பொம்மைகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற வரையறையைத் தொடங்கிவைத்தது பார்பி பொம்மைகள்தான். குழந்தைகள் விளையாடுவதற்காக உருவாக்கப்பட்டதுதான் பார்பி பொம்மைகள் என்றாலும் எடுப்பான மூக்கு, மெலிந்த இடை மற்றும் உடல்வாகு, வெள்ளைச் சருமம் என வடிவமைக்கப்பட்ட பார்பிக்கள் நாளடைவில் அப்படி இருப்பதுதான் அழகு என்கிற எண்ணத்தையும் பெண் குழந்தைகள் மனதில் விதைக்கத் தொடங்கிவிட்டன.

Barbie
Barbie

1959-ல் தன் மகளுக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ரூத் ஹேண்ட்லர் என்பவர் உருவாக்கிய பொம்மைகள்தான் நாளடைவில் `பார்பி' எனப் பெயர்பெற்றது. பார்பி பொம்மைகளுக்கு ஜோடியாக உருவாக்கப்பட்டதுதான் `கென்’ மாடல் ஆண் பொம்மைகள். இன்றளவும் ஹேண்ட்லர் மேட்டல் நிறுவனம்தான் பார்பி மற்றும் கென் பொம்மைகளை உற்பத்தி செய்து சர்வதேச அளவில் விற்பனை செய்துவருகிறது. உலக அளவில் பார்பி பொம்மைச் சேகரிப்பாளர்கள் மொத்தம் ஒரு லட்சம் பேர் இருக்கின்றனர். அவர்களில் 90 சதவிகிதம் பேர் பெண்கள்.

காலமாற்றத்துக்கு ஏற்ப தனது பொம்மைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது மேட்டல் நிறுவனம். அந்த வகையில் 2016-ல் அழகென்பது, நிறத்திலும் வடிவத்திலும் இல்லை என்கிற செய்தியை சிறுமிகளிடம் எடுத்துச்செல்லும் வகையில் உடல் பருமனாகவும் கறுப்புச் சருமமும் கொண்ட பொம்மை ரகங்களை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அடுத்தகட்டமாக பாலினம் அறுதியிடாத (Gender neutral) ரக பொம்மைகளைத் தற்போது அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ``எங்கள் நிறுவனத்தின் பொம்மைகள் எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என்பதே கொள்கை. அந்த அடிப்படையிலேயே இந்த ரக பொம்மைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன" என அண்மையில் வெளியிடப்பட்ட அந்நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆண், பெண் என்று அடையாளம் இடப்படாத பொம்மைகளை அந்த நிறுவனம் இனி உற்பத்தி செய்யும். இதற்காக அந்த நிறுவனம் 18 மாதங்கள் 250 குடும்பங்களில் தனது ஆய்வை மேற்கொண்டிருக்கிறது.

Barbie
Barbie

ஆண் குழந்தை என்றால் கார்பொம்மை வைத்துக்கொண்டு விளையாட வேண்டும், பெண் குழந்தை என்றால் பொம்மை வைத்துக்கொண்டு விளையாட வேண்டும் என்று தன் அம்மா-அப்பா கட்டளையிடுவதைக் குழந்தைகள் விரும்புவதில்லை என்பது ஆய்வின் இறுதியில் தெரியவந்துள்ளது. `குறிப்பிட்ட ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவுசெய்ய அந்தக் குழந்தையைத் தவிர வேறு யாருக்குமே உரிமை இல்லை. அதன் தாக்கமே இந்த ரக பொம்மைகள் உருவாக்கம்' என்று மேட்டல் நிறுவனம் கூறியுள்ளது.