Published:Updated:

வாட்ச்மேன் முதல் அம்மா வரை... உழைப்பாளர் தினத்தில் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யவேண்டிய 10 பேர்

வெறிச்சோடி காணப்படும் உழைப்பாளர் சிலை.
வெறிச்சோடி காணப்படும் உழைப்பாளர் சிலை.

அன்றாட வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நம் குழந்தைகளும் கேள்வியுடன் பார்க்கிறார்கள். எனவே, அவர்களுக்கு விடைசொல்லும், உழைப்பாளர்கள் சிலரைப் பற்றி எடுத்துச்சொல்லும் நேரம் இது.

இன்றைய மே தினம், முன்னெப்போதையும்விட முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்பெல்லாம், பலருக்கும் இந்த நாள் ஒரு விடுமுறை நாள். மெதுவாக எழுந்து, நிதானமாகத் தயாராகி, வெளியே சென்று உற்சாகமாகப் பொழுதுபோக்கும் நாள். அடுத்த நாளில் அவரவர் வேலையைப் பார்த்துகொண்டு ஓடுவார்கள். ஆனால், உலகமே முடங்கியிருக்கும் இன்றைய சூழ்நிலையில், ஒவ்வொருவரும் எப்படி இன்னொருவரைச் சார்ந்திருக்கிறோம் என்றும், இதுவரை நாம் அதிகம் கவனத்தில்கொள்ளாத எளிய உழைப்பாளர்களின் அவசியத்தையும் உணர்த்தியிருக்கிறது. நமக்கு மட்டுமல்ல, அன்றாட வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நம் குழந்தைகளும் கேள்வியுடன் பார்க்கிறார்கள். எனவே, அவர்களுக்கு விடைசொல்லும், உழைப்பாளர்கள் சிலரைப் பற்றி எளிமையான முறையில் எடுத்துச்சொல்லும் நேரம் இது. (இங்கே கொடுத்திருக்கும் கவுன்டவுண் ஓர் உதாரணத்துக்குத்தானே தவிர, இதில் யாரும் இவருக்கு அடுத்து இவர் என்றில்லை. இதில் இல்லாதவர்கள் பற்றியும் உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்லலாம்.)

வாட்ச்மேன்
வாட்ச்மேன்

10. வாட்ச்மேன்/செக்யூரிட்டி

`என்னது... ஒரே இடத்தில் கதவைத் திறந்துட்டு இருக்கிறவங்க உழைப்பாளிகளா?' என உங்கள் குழந்தை ஆச்சர்யப்படலாம். ஆனால்...

``இந்த கொரோனா பிரச்னையில் நாம எல்லாம் ஆபீஸ், ஸ்கூல் பக்கம் போகாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கோம். ஆனா, மூடியிருக்கிற பல இடங்களைப் பாதுகாப்பாகவும் சுத்தமாவும் வெச்சுட்டு இருக்கிறது வாட்ச்மேன், செக்யூரிட்டிகள்தான். பஸ், சாப்பாடு வசதி எனப் பல பிரச்னைகளைச் சமாளிச்சு வேலைக்குப் போய், நம் ஆபீஸையோ, ஸ்கூலையோ பாதுகாத்துட்டு இருக்காங்க. இந்த மாதிரி வேலையில் இருக்கிறவங்க பெரும்பாலும் வயதானவங்களா இருப்பாங்க. முன்னாள் காவலர்கள், ராணுவ வீரர்கள், விவசாயம் இல்லாமல் கிராமத்தைவிட்டு வந்தவங்கன்னு இதுக்கு முன்னாடியும் இந்த நாட்டுக்காக, நமக்காக ஏதோ ஒரு வகையில் உழைச்சவங்களா இருப்பாங்க. நாம கொஞ்ச நாளா வீட்டுக்குள்ளே இருக்கிறதே இவ்வளவு கஷ்டமா இருக்கே. இவங்க பெரிய பெரிய கட்டடங்களையும் அலுவலகங்களையும் மணிக்கணக்குல தனியா கவனிச்சுட்டு இருக்கிறது எவ்வளவு கஷ்டமா இருக்கும்...'' சொல்லுங்கள்.

9. ஓட்டுநர்கள்

``வீட்டுக்குள்ளே இருக்கிற நமக்கு, இப்பவும் மூணு வேளை சாப்பாடு கிடைச்சுட்டு இருக்கக் காரணம், நமக்காக காய்கறிகள், உணவுப் பொருள்களை மாநிலங்கள் கடந்து, ஊர்களைக் கடந்து ராத்திரி பகல் பார்க்காமல் லாரி மற்றும் பல்வேறு வாகனங்களில் எடுத்துவரும் டிரைவர்கள்தான். நாம எல்லாம் ஒரு மணி நேரம் ஒரே இடத்துல உட்கார்ந்துட்டு இருந்தாலே வெறுப்பாகி எழுந்து நடக்க ஆரம்பிச்சுடுவோம். வேற ஏதாவது செய்யலாமான்னு பார்ப்போம். ஆனா, இவங்க நாள் கணக்குல வண்டியை ஓட்டிட்டு வருவாங்க. இப்படித் தொடர்ந்து ஓட்டிட்டு வர்றதால இவங்களுக்கு முதுகுவலியில் ஆரம்பிச்சு பல பிரச்னைகள் ஏற்படும். சாப்பாடு, தண்ணீர், தங்கும் இடம்னு பல பிரச்னைகள் இருக்கும். அதையெல்லாம் தாண்டித்தான் நமக்கு காய்கறியில் ஆரம்பிச்சு எல்லாத்தையும் கொண்டுவந்து சேர்க்கிறாங்க. இவங்களை நாம எப்பவும் மறக்கக் கூடாது. ரொம்ப முக்கியமா, இந்த நேரத்துல அவங்களுக்கு நன்றி சொல்வோம்'' என உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள்.

லாரி
லாரி

லாரி ஓட்டுநர்கள் என்றில்லை. பலமுறை பேருந்துகளிலும் ரயிலிலும் சுற்றுலா மற்றும் வெவ்வேறு விஷயமாக நீண்ட பயணம் சென்றிருப்போம். அப்போது நாம் எல்லாம் தூங்கிக்கொண்டும் வேடிக்கைபார்த்துகொண்டும் வர, ஓட்டுநர்கள் தங்கள் வேலையில் முழுக் கவனமாக இருந்து நம்மை பத்திரமாக ஊருக்குக் கொண்டுசேர்த்திருப்பார்கள். அந்த உழைப்பாளர்களின் அருமையைப் புரியவையுங்கள். இப்போது, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களில் ஆரம்பித்து யாரெல்லாம் ஓடி ஓடி உழைத்துகொண்டிருக்கிறார்கள் என்று எடுத்துச்சொல்லுங்கள்.

8. காய்கறி விற்பனையாளர்கள்

இன்று, எல்லா வணிக விற்பனைகளும் நிறுத்தப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்கள்தான். மற்ற பொருள்களை எல்லாம் வாங்கும்போது அடைந்த பெருமையை, பகிர்ந்த மகிழ்ச்சியைக் காய்கறிகள் வாங்கும்போது நினைத்திருக்க மாட்டோம். காய்கறி விற்பவர்களின் பிரச்னைகள், இழப்புகள் பற்றியும் அதிகம் யோசித்திருக்க மாட்டோம். இன்று, அவர்களின் அவசியத்தை குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்வோம். மொத்த விற்பனையாளர்கள், அவர்களிடம் வாங்கி வீதி வீதியாக விற்பவர்கள், அவர்களுக்குக் கிடைக்கும் குறைந்த வருமானம் எனப் பலவற்றைப் பற்றியும் இந்த உழைப்பாளர் தினத்தில் குழந்தைகளிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

காய்கறிகள்
காய்கறிகள்

7. டெலிவரி பாய்ஸ்

போன் செய்தால், இருக்கும் இடத்துக்கே உணவை டெலிவரி செய்யும் நடைமுறை சமீபத்தில் பிரபலமாகி வந்தது. இன்றைய சூழ்நிலையில், அவர்களின் முக்கியத்துவம் அதிகமாகி இருக்கிறது. அவர்களும் ஒரு போர் வீரராக மாறியிருக்கிறார்கள். உணவு டெலிவரி செய்பவர்கள் மட்டுமின்றி, இதற்கு முன்பு பல்வேறு பொருள்களை டெலிவரி செய்பவர்களை நாம் சந்தித்திருக்கிறோம். தண்ணீர் கேன் போடுபவர்கள், சிலிண்டர் டெலிவரி செய்பவர்கள் என்று மழை, வெயில் பார்க்காமல் நம்முடைய பொருளை பத்திரமாகக் கொண்டுவந்து கொடுத்த உடல் உழைப்பாளர்கள் அத்தனை பேர் பற்றியும் குழந்தைகளுடன் பேசுங்கள். அவர்களை நம்மில் எத்தனை பேர் ஏறிட்டு முழுமையாக முகத்தைப் பார்த்திருப்போம். தொடர்ந்து வாகனத்தை ஓட்டுவது, போக்குவரத்து நெரிசல்களைக் கடந்து சரியான நேரத்துக்கு வருவது என அவர்களின் உழைப்புக்கு சல்யூட் வைக்கச் சொல்லுங்கள்.

6. விவசாயிகள்

காய்கறிகளைக் கொண்டுவரும் ஓட்டுநர்கள், விற்பவர்கள், ஹோட்டல் நடத்துபவர்கள், அதை நம்மிடம் கொண்டுவந்து சேர்ப்பவர்கள் என அத்தனை பேருக்கும் மூலகாரணமாக இருப்பவர்கள் விவசாயிகள். புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களில் தொடங்கி, இதுபோன்ற தொற்றுநோய் சமயங்களிலும் நம் உணவுத் தேவையை நிறைவேற்ற கடுமையாக உழைக்கும் விவசாயிகளைப் பற்றி குழந்தைகளிடம் நிறையப் பகிருங்கள். மாதக்கணக்கில் நிலத்தில் பாடுபட்டும், அவர்களுக்குக் கிடைக்கும் சொற்பமான வருமானம், இயற்கையின் பாதிப்பால் ஏற்படும் இழப்புகள், மண்ணை நேசிக்கும் அவர்களின் குணம் ஆகியவற்றை குழந்தைகளிடம் சொல்லி நன்றி தெரிவியுங்கள்.

விவசாயம்
விவசாயம்

5. தூய்மைப் பணியாளர்கள்

இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை பலராலும் மனிதர்களாகவே பொருட்படுத்தப்படாமல் இருந்த தூய்மைப் பணியாளர்களை, சமீபத்தில் பாதபூஜை செய்யும் அளவுக்குக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தத் தூய்மைப் பணியாளர்களின் உழைப்பை நம் குழந்தைளின் மனதில் இன்னும் அழுத்தமாகப் பதிக்கும் நாளாக இந்த உழைப்பாளர் நாளை எடுத்துகொள்ளுங்கள்.

``நாம் இருக்கும் இடத்தில் திடீர்னு ஒரு சின்ன நாற்றம் ஏற்பட்டாலே முகத்தைப் பொத்திட்டு விலகுவோம். அதை யார் சரிசெய்யறதுன்னு போட்டி போடுவோம். ஆனா, இவங்க தெருத் தெருவா வந்து நம்ம வீட்டுக் கழிவுகளை வாங்கி வண்டியில் சுமந்துட்டுப் போறாங்க. அந்தக் கழிவுகள் நிறைந்த வண்டியை அவங்க பலம் முழுக்க செலுத்தி இழுத்துட்டுப் போறாங்க. இதனால, அவங்க சந்திக்கும் உடல் பிரச்னைகள் நிறைய. அவங்களுக்குக் கொடுக்கும் பாதுகாப்பு உபகரணங்களும் குறைவு. இதே மாதிரிதான் ஆஸ்பிட்டலில் ஆரம்பிச்சு எல்லா இடங்களிலும் சுத்தம் செய்யும் வேலையில் இருக்கிறவங்க கடுமையாக உழைக்கிறாங்க'' என்பதைச் சொல்லி, அவர்களின் சேவையைக் குழந்தைகள் மனதில் விதையுங்கள்.

4. சலூன் கடைக்காரர்கள்

உங்க குழந்தையிடம் சின்னதா ஒரு விஷயத்தை செய்யச் சொல்லுங்க. இரண்டு கைகளிலும் தலா ஒரு பொருளைக் கொடுத்துட்டு, நின்ற நிலையில் கைகளை முன்னாடி நீட்டிக்கிட்டே அப்படியே இருக்கணும். அதிகபட்சம் எவ்வளவு நேரம் இருக்க முடியுதுன்னு பார்க்கச்சொல்லுங்க. கை வலிக்க ஆரம்பிக்கும்.

``ஆனா நம்மை அழகுப்படுத்த, நம்மை உட்காரவெச்சுட்டு நின்னுட்டே வேலை செய்ற சலூன் கடைக்காரரின் கைகள் எப்படி வலிச்சிருக்கும். இந்த ஊரடங்கு முடிஞ்சதும், நிறைய பேர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது சலூன் கடைக்காரரை. இப்போ பல பேர், தங்களுக்குத் தாங்களே முடி வெட்டிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, எத்தனை பேருக்கு அது சரியா, அழகா அமைஞ்சது? முடி வெட்டறதை இத்தனை நாளா ஒரு பெரிய விஷயமாவே நினைச்சு இருக்க மாட்டோம். நமக்கு நாமே வெட்டிக்கும்போதுதான் இதிலும் எவ்வளவு நுணுக்கம் இருக்குன்னு புரிஞ்சிருக்கு. அவங்களும் முக்கியமான உழைப்பாளிகள்தான்'' என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள்.

துப்புரவுப் பணியாளர்
துப்புரவுப் பணியாளர்

3. அரசுப் பணியாளர்கள்

காவலர்கள், மின்சார ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், மருத்துவர்கள் என அரசுப் பணியில் இருக்கும் பலரையும் இவ்வளவு நாளா பெரிய உழைப்பாளர்களாக நினைச்சிருக்க மாட்டோம். வசதியான முறையில் வேலை செய்யறதாவே எடுத்துப்போம். ஆனால், இந்த மாதிரி எதிர்பாராம சோதனை வரும்போது, அவங்களோட வேலை பல மடங்கு அதிகரிக்குது. விடுமுறை எடுக்கவும் வாய்ப்பில்லாமல் உழைக்கிறாங்க. இவங்க தேவைகள் பற்றியும் குழந்தைகளுடன் பேசுங்கள்.

அதகளம் செய்யும் பிள்ளைகளை அமைதியாக உட்காரவைக்க சில ஜாலி ஐடியாக்கள்!

2. தினக்கூலிகள்

நம்முடன் நேரடியாகத் தொடர்பு இல்லாவிட்டாலும், கட்டடப் பணி செய்பவர்களில் ஆரம்பித்து பல்வேறு வேலைகளில் இருக்கும் தினக்கூலிகள் மூலம் நமக்குக் கிடைக்கும் ஆதாயங்களை குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். அத்துடன், வீட்டில் ஒரு பொருள் ரிப்பேர் ஆகிவிட்டால், அதைச் சரிசெய்து தருபவர்களில் தொடங்கி வீட்டுப் பணியாளர் வரை நம்முடன் நேரடியாகத் தொடர்பில் இருப்பவர்கள் யாரெல்லாம் என்பதை குழந்தைகளுடன் சேர்ந்து கலந்துரையாடுங்கள். அவர்களை எல்லாம் இந்த உழைப்பாளர் தினத்தில் நினைத்து நன்றி சொல்லுங்கள்.

காவலர்கள்
காவலர்கள்

1. அம்மா

``மேலே சொன்னவர்களில், சற்றும் உழைப்பில் குறையாதவர்கள் யார் தெரியுமா? அது, நமக்காக பார்த்துப் பார்த்து சமைத்துக் கொடுக்கும், வீட்டு வேலைகள் செய்யும் அம்மா மாதிரியான பெண்கள். இப்பவும் பலர், வீட்டு வேலைகளை உழைப்பாகவே நினைக்கிறதில்லை. இதுவரைக்கும் சரியாகத் தெரியாமல் இருந்திருந்தாலும், வீட்டிலேயே இருந்த இந்த நாள்களில் அவங்க கஷ்டம் நல்லா தெரிஞ்சிருக்கு. துணி துவைக்கிறது, பாத்திரம் துலக்கறது, வீட்டை சுத்தம் செய்யறதுனு ஒவ்வொரு வேலையிலும் எவ்வளவு கஷ்டம் இருக்குன்னு தெரியுது. அதனால், நம்ம அம்மாவும் பெரிய உழைப்பாளி. இந்த நாளில் அவங்களுக்கு நன்றியும் வாழ்த்தும் சொல்வோம். இந்தப் பிரச்னைகள் எல்லாம் சரியான பின்னாடியும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்துட்டு, அவங்கவங்க வேலைக்கு, ஸ்கூலுக்குப் போவோம்'' என்பதை குழந்தைகளுக்குச் சொல்லி, வீட்டில் இருக்கும் அம்மா மற்றும் பெண்களைக் கொண்டாட வையுங்கள்.

இந்த உழைப்பாளர் தினத்தில், வீட்டுக்குள் இருந்தவாறு நாம் செய்யும் மிக முக்கியமான வாழ்த்தாக இது இருக்கட்டும்!

அடுத்த கட்டுரைக்கு