Published:Updated:

இந்த ஊரடங்கு காலத்தில் நம் குழந்தைகளிடம் கற்றதும் பெற்றதும் - நமக்குள் ஒரு பார்வை

father with sun
father with sun

இது விஷயமாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடந்துள்ளது. இந்த நேரத்தில்தான் கொரோனா பிரச்னை ஏற்பட்டு ஊரடங்கு அமலுக்குவந்தது. தேர்வுகள் தள்ளிப் போடப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு படிக்கும் தன் மகனை நினைத்து அந்த தந்தைக்கு ரொம்பவே கவலை இருந்தது. `எந்நேரமும் கிரிக்கெட், கிரிக்கெட் என்றே சுற்றிக்கொண்டிருக்கிறான். பொதுத்தேர்வு என்ற பயமே கொஞ்சமும் இல்லை. காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளிலும் சுமாரான மதிப்பெண்களே எடுத்திருக்கிறான். ஏதாவது கேட்டால் எதிர்வாதம் செய்கிறான். இவன் எப்படித்தான் உருப்படப்போகிறானோ' என்று நினைத்துகொண்டிருந்தார்.

இது விஷயமாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவதம் நடந்துள்ளது. இந்த நேரத்தில்தான் கொரோனா பிரச்னை ஏற்பட்டு ஊரடங்கு அமலுக்குவந்தது. தேர்வுகள் தள்ளிப் போடப்பட்டுள்ளன.

girl reading
girl reading

``கரெக்ட்டா இவனுக்குன்னு பார்த்து எல்லாமே சாதகமா அமையுது பாரு. ஏற்கெனவே புஸ்தகத்தை ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறைதான் தொட்டுட்டு இருந்தான். இனிமே சுத்தமா தொடப்போறதில்லே. இதெல்லாம் முடிஞ்சு பரீட்சை வைக்கிறப்போ, பாடங்கள் எல்லாத்தையும் சுத்தமா மறந்துட்டு இருப்பான். என்ன மார்க் எடுக்கப்போறானோ'' என்று மகன் எதிரிலேயே தன் மனைவியிடம் எரிச்சல்பட்டார்.

``அதெல்லாம் நான் மார்க் எடுப்பேன். என்னைப் பற்றி நீங்க கவலைப்பட தேவையில்லே'' என்று வழக்கம்போல ரோஷத்துடன் சொன்னான் மகன்.

``உன்னைப் பற்றி நான் கவலைப்படாம, பக்கத்து வீட்டுக்காரங்களா கவலைப்படப்போறாங்க. பார்க்கிறேன், இந்த லீவுல எப்போ புஸ்தகத்தைத் தொடறேன்னு'' என்று முறைத்தார் அப்பா.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் மூன்று நாள்கள் இருவருக்குள்ளும் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. ஒருவரை ஒருவர் பார்த்தும் பார்க்காத மாதிரியே இருந்தார்கள். மகனுக்கு வெளியே சென்று கிரிக்கெட் விளையாட வாய்ப்பு இல்லாததால், ஆரம்பத்தில் தொலைக்காட்சியே கதியாக இருந்தான். பின்னர், தன் தங்கையுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தான்.

குடும்பமாக அமர்ந்து கேரம் போர்டு விளையாட ஆரம்பித்தபோது, மெதுவாக அதில் இணைந்தான். அப்பாவுடன் மெள்ள மெள்ள பேசத் தொடங்கினான். அந்தப் பேச்சு அவன் நண்பர்கள், அவனது விருப்பங்கள் என்று விரிந்தது. பள்ளி, ஆசிரியர்கள், பாடங்கள் பற்றியும் நகைச்சுவையாகப் பேச ஆரம்பித்தார்கள்.

girl with mother
girl with mother

``அப்போதான் ஒரு விஷயம் புரிஞ்சது. இத்தனை நாளா அவன்கிட்ட படிப்பு சம்பந்தமா பேசறப்போ எல்லாம், ரொம்ப சீரியஸாகவே பேசி இருக்கேன். ஒரு நண்பன் மாதிரி உரையாடாமல், வீட்டுல ஓர் ஆசிரியர் -மாணவர் மாதிரி இருந்திருக்கோம். சொல்லப்போனா, கடந்த ஓரிரு வருஷங்களில் அவன்கிட்ட படிப்பு விஷயம் தவிர, வேற சந்தோஷமா என்ன பேசினோம்னு யோசிச்சா, ஞாபகமே வரலை. அந்த அளவுக்கு எங்களுக்குள் இடைவெளி ஏற்பட்டிருக்கு. எனக்கு வெட்கமா போயிடுச்சு. அடுத்தடுத்த நாள்களில் நிறைய பேசினோம். ஜாலியா விளையாடினோம். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் படிக்க ஆரம்பிச்சிருக்கான். பாடங்களை அவன் நல்லாவே புரிஞ்சுட்டிருக்கான். நான்தான் அவனை சரியா புரிஞ்சுக்காம இருந்திருக்கேன். இந்த ஊரடங்கு நேரம் என் மகனை, அவனுடைய திறமையை எனக்கு நல்லா புரியவெச்சிருக்கு'' என்றார்.

இது ஒரு தந்தை, தன் மகனுடன் நடந்த அனுபவத்தை நெகிழ்வுடன் பகிர்ந்தது. இப்படிப் பலருக்கும் தங்கள் குழந்தையைப் பற்றி பல விஷயங்களை இந்த ஊரடங்கு நேரம் புரியவைத்துள்ளன. அவர்களின் பல்வேறு திறமைகளை நின்று கவனிக்கும் அவகாசத்தை அளித்துள்ளது. நிறைய நேரம் உரையாட வாய்ப்பு அளித்து, குழந்தைகளிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் செய்துள்ளது.

`அப்படின்னா இத்தனை நாளா எங்க குழந்தைகளோடு சந்தோஷமா இல்லாமலா இருந்தோம்... அவங்க திறமைகளைக் கவனிக்காமலா இருந்தோம்... அதுபற்றி பெருமையோடு நாலு பேரிடம் சொல்லாமலா இருந்தோம்? இப்போதான் புரிஞ்சுக்கவே ஆரம்பிச்சு இருக்கிற மாதிரி சொல்றது ஓவரா இருக்கே' என்று உங்களுக்கு எரிச்சலும் கோபமும் வரலாம்.

kid activity
kid activity

கொஞ்சம் நிதானமாக யோசித்தால் புரியும். திட்டம் போட்டெல்லாம் அப்படிச் செய்யவில்லை. இன்றைய வாழ்க்கை முறையின் ஓட்டம், நம்மையே அறியாமல் நம் குழந்தைகளிடமிருந்து கொஞ்சம் விலக்கி வைத்திருந்தது.

காலையில் அவசர அவசரமாகப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, நாமும் அலுவலகத்துக்கு ஓடுவோம். மாலையில் திரும்பி வந்து வீட்டு வேலைகளைக் கவனிப்பதற்கு நடுவில்தான் குழந்தைகளிடம் பேசுவோம். பள்ளியில் கொடுத்திருக்கும் திட்டத்தைச் சார்ந்துதான் அவர்களது ஹோம் வொர்க் அல்லது புராஜெக்ட் போன்ற கிரியேட்டிவிட்டி இருக்கும். அதற்கு என்ன தேவை என்று பார்த்து ஓடிப்போய் அதை வாங்கிவந்து கொடுப்பதில்தான் கவனம் இருக்கும். அவர்களுக்கும் நம்மிடம் பேச நேரம் இல்லை. காலையில் பள்ளிக்குச் சென்று, சொன்னதைச் செய்துவிட்டோம் என்று பெயர் எடுத்தால் போதும் என்றிருந்தது. அந்தச் சோர்வை நீக்கிக்கொள்வதே பெரும் விடுதலையாக இருந்தது.

kid playing
kid playing

ஆனால், இந்த ஊரடங்கு நாளில் இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளே தங்கள் மனத்தில் தோன்றிய, தங்களுக்குப் பிடித்த விஷயத்தைச் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். அவர்களுக்குள்ளிருந்து இயல்பாக வெளிப்படும் இந்த கிரியேட்டிவிட்டி, அவர்களின் ஆசைகள், தனித்திறன்களை நமக்கு எடுத்துக்காட்டியுள்ளது. அதுதான், நமக்கு நம் குழந்தைகளையே புதிதாகக் காட்டுகிறது. அவர்களின் அறிவு, நமக்குப் பல விஷயங்களைக் கற்றுத்தருகிறது.

இதோ... ஊரடங்கு இன்னும் நீட்டிக்கப்பட்டுள்ளது. திறந்த மனதுடன் நம் குழந்தைகளிடம் மேலும் உரையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து உரையாடுவோம். அவர்களிடமிருந்து இன்னும் கற்றுக்கொள்வோம்.

அடுத்த கட்டுரைக்கு