Published:Updated:

காதலர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் தேவை, `ஹக் டே' #HugDay

குழந்தை ( pixabay )

பிறந்த குழந்தையை ஒருநாளில் பலமுறை அணைக்கிறோம். வளர வளர அந்த அணைப்பை குறைத்துக்கொண்டே போகிறோம். ஒரு கட்டத்தில், அணைப்பு என்பதே இல்லாமல் போய்விடுகிறது. ஆயிரம் வார்த்தைகள் தராத ஆறுதலையும் மகிழ்ச்சியையும் சிறிய தொடுதல் தரும்.

காதலர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் தேவை, `ஹக் டே' #HugDay

பிறந்த குழந்தையை ஒருநாளில் பலமுறை அணைக்கிறோம். வளர வளர அந்த அணைப்பை குறைத்துக்கொண்டே போகிறோம். ஒரு கட்டத்தில், அணைப்பு என்பதே இல்லாமல் போய்விடுகிறது. ஆயிரம் வார்த்தைகள் தராத ஆறுதலையும் மகிழ்ச்சியையும் சிறிய தொடுதல் தரும்.

Published:Updated:
குழந்தை ( pixabay )

இன்றைக்குக் காதலர்களுக்கான `ஹக் டே' (Hug Day) என்று சமூக வலைதளத்தில் ஒரு குரூப் சுத்திட்டிருக்காங்க. நம்ம சமூகத்தில், அணைப்பு என்ற வார்த்தை, காதலர்கள் மற்றும் தம்பதிகளுக்கு இடையிலான விஷயமாகவே பெரும்பாலும் இருக்கு. அதனாலதான் அவ்வளவு கிளர்ச்சியாகப் பேசப்படுகிறது. உண்மையில், அன்பை வெளிப்படுத்த இருவர் அணைத்துக்கொள்வது உறவு மற்றும் நட்பு பேதமின்றி பயன்படுத்த வேண்டியது.

பாராட்டு, ஆறுதல் என ஒவ்வொரு செயலுக்கும் அணைப்பு மிகச் சிறந்த வழி. ஆனால், நம் கலாசார சூழல், அவ்வளவு எளிதாக இல்லை. இது பெரிதாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். பெரியவர்களை விடுங்கள், உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கடைசியாக எப்போது `ஹக் டே' அளித்தீர்கள் என்று கொஞ்சம் யோசியுங்கள்.

குழந்தை
குழந்தை
pixabay

பிறந்த குழந்தையை ஒருநாளில் பலமுறை அணைக்கிறோம். வளர வளர அந்த அணைப்பை குறைத்துக்கொண்டே போகிறோம். ஒரு கட்டத்தில், அணைப்பு என்பதே இல்லாமல் போய்விடுகிறது.

ஆயிரம் வார்த்தைகள் தராத ஆறுதலையும் மகிழ்ச்சியையும் சிறிய தொடுதல் தரும். தொடுதல் வழியே மனிதர்களுக்குள் மிகப்பெரிய ஆற்றலைக் கடத்தமுடியும். உறுதியையும் தன்னம்பிக்கையையும் அளிக்கமுடியும். ஆனால், நம் குழந்தைகளுக்கு அத்தகைய ஆற்றலைச் சரியாக அளித்துவருகிறோமா?

வெளியேதான் கலாசாரம், பண்பாடு போன்ற காரணிகளால் அணைப்பை வெளிப்படுத்த முடிவதில்லை. வீட்டிலும் அந்த அணைப்பைக் கொடுப்பதில் ஏன் தயக்கம்? அன்பை வெளிப்படுத்த அணைப்பது இயல்பானது, அனைத்து உறவுகளுக்கும் பொதுவானது என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்ல கிடைக்கும் ஒரே இடம் அதுதானே. அங்கேயும் கதவை அடைப்பது சரியா?

குறிப்பாக, ஒரு தந்தை தன் மகளையும், ஒரு தாய் தன் மகனையும் அணைப்பது வளரிளம் பருவத்தில் முற்றிலும் நின்றுவிடுகிறது. இந்த இடத்தில்தான் எதிர்பாலினத்தின் தொடுதல் குறித்த பெரும் குழப்பமும் தடுமாற்றமும் ஏற்பட ஆரம்பிக்கிறது. ஆண்-பெண் நட்புக்குள் சிக்கல் ஏற்படுகிறது. ஒப்பீட்டளவில் பார்த்தால், ஆண் குழந்தைக்குத் தாயிடம் கிடைக்கும் அணைப்புகூட, ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையிடம் கிடைப்பதில்லை.

உங்கள் வீட்டில் 10 வயதுக்கு மேல் இருக்கும் மகளை அல்லது மகனை நீங்கள் கடைசியாக எப்போது அணைத்து அன்பை வெளிப்படுத்தினீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். பலருக்கும் பல மாதங்கள்... ஏன் ஆண்டுகூட ஆகியிருக்கும் அதிர்ச்சியான உண்மை தெரியவரும்.

kids
kids
pixabay

அணைப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டுமே என்று யோசிக்காதீர்கள். ஏதாவது சாதனை செய்தால்தான் அணைத்துப் பாராட்ட வேண்டும் என்றில்லை. வேதனையில் இருந்தால்தான் ஆறுதல் சொல்ல அணைக்க வேண்டும் என்றில்லை.

அன்றாட நிகழ்வுகளிலேயே அதைச் செய்யலாம். தூங்கி எழுந்ததும் வெறுமனே காலை வணக்கம் சொல்வதற்குப் பதிலாக, அணைப்பு வழியே அதை வெளிப்படுத்துங்கள்.

உங்கள் பிள்ளை பள்ளிக்குக் கிளம்பும்போதோ, நீங்கள் அலுவலகத்துக்குக் கிளம்பும்போதோ, `பை... பை...' என்று அணைப்பின் மூலம் வழியனுப்புங்கள்.

பள்ளிவிட்டு வரும் உங்கள் பிள்ளையை வந்ததும் அல்லது வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்ததும் வரவேற்கும் விதமாக அணைப்பை அளியுங்கள்.

நீங்கள் கொடுத்த ஒரு சிறிய வேலையைச் செய்துமுடித்தால், அதற்கு ஒரு புன்னகையுடன் அணைப்பையும் பரிசாகக் கொடுங்கள்.

அன்றைய வீட்டுப் பாடத்தை எழுதிவிட்டதாகச் சொன்னால், பாராட்டாக ஓர் அணைப்பை அளியுங்கள். அவ்வளவு ஏன்? இரண்டு குழந்தைகளுக்குள் சண்டை வந்துவிட்டால், தடுக்கவும் அணைப்பையே ஆயுதமாக்கலாம். முதலில் இருவரையும் அணைத்துவிட்டு, பிறகு பிரச்னையை என்னவென்று கேளுங்கள். அந்த அணைப்பிலேயே அவர்களுக்குள் கொஞ்சம் கோபம் தணிந்துவிடும்.

kids
kids
pixabay

உங்களுக்கும் குழந்தைக்கும் சண்டை ஏற்பட்டுவிட்டால்கூட, உங்கள் கோபத்தையும் அணைப்பால் வெளிப்படுத்துங்களேன். முதலில் அணைத்துவிட்டு, பிறகு உங்கள் நியாயத்தைச் சொல்லுங்கள்.

ஒரு நாளில் நான்கு முறையாவது உங்கள் பிள்ளையை அணைப்பது என்று இன்று முதல் ஒரு முடிவெடுங்கள். இந்த அணைப்பு, உங்கள் குழந்தைக்கும் உங்களுக்கும் அசைக்க முடியாத பிணைப்பை உண்டாக்கும். வெளியே சமூகத்துடன் பழகுவதில் இருக்கும் தடைகளையும் உடைக்கும்.