Published:Updated:

ஒற்றைத் தலைவலி, நீர் கோத்தல் பிரச்னைக்குத் தீர்வாகும் சாலையோர மூலிகை ’நல்வேளை’!

ஒற்றைத் தலைவலி, நீர் கோத்தல் பிரச்னைக்குத் தீர்வாகும் சாலையோர மூலிகை ’நல்வேளை’!
ஒற்றைத் தலைவலி, நீர் கோத்தல் பிரச்னைக்குத் தீர்வாகும் சாலையோர மூலிகை ’நல்வேளை’!

Cleome gynandra என்ற தாவரவியல் பெயர்கொண்ட நல்வேளை, சாலையோரங்களில் சர்வசாதாரணமாக பார்க்கலாம். சென்னை போன்ற பெருநகரங்களில் கூட இந்த மூலிகைகள் முளைத்துக் கிடக்கின்றன.

உணவே மருந்து, மருந்தே உணவு என்ற நமது வாழ்வியல் முறையைக் கைவிட்டதன் விளைவாக, மருத்துவமனை வாசல்களில் கால்கடுக்க நின்றுகொண்டிருக்கிறோம். ஆனால், நாம் அன்றாடம் கடந்து செல்லும் சாலையோரங்களில், தெருக்களில், குப்பைமேடுகளில் இலவசமாக விளைந்து கிடக்கின்றன பெரும்பாலான நோய்களுக்கான தீர்வுகள். "காலடியில் கிடக்கும் காயகற்பங்கள் அய்யா நம் மூலிகைகள்" என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். உண்மைதான், நம் காலடியில் இலவசமாகக் கிடப்பதால் நாம் அவற்றை மதிப்பதேயில்லை. ஆனால், அந்த சின்னஞ்சிறிய செடிகளுக்கும்தான் அத்தனை மருத்துவ குணங்களும் மிகுந்து கிடக்கின்றன. அப்படிப்பட்ட அற்புதமான மூலிகைகளுள் ஒன்றுதான் நல்வேளை. இந்த மூலிகையைப் பற்றி தெரிந்துகொண்டாலே இனி உங்களுக்கு நல்லவேளைதான். 

Cleome gynandra என்ற தாவரவியல் பெயர்கொண்ட நல்வேளை, சாலையோரங்களில் சர்வசாதாரணமாக பார்க்கலாம். சென்னை போன்ற பெருநகரங்களில்கூட இந்த மூலிகைகள் முளைத்துக் கிடக்கின்றன. நாய்க் கடுகு செடியைப் போலவே இருக்கும், இந்த மூலிகையைப் பலரும் நாய்க்கடுகு என்றே நினைத்துக்கொள்வார்கள். நாய்க்கடுகு காய்களும் இதன் காய்களும் ஒரே தோற்றத்தில் இருந்தாலும், பூக்கள், இலைகளை வைத்து வித்தியாசம் தெரிந்துகொள்ளலாம். நாய்க்கடுகு பூக்கள், மஞ்சள் நிறத்தில் ஒற்றைப் பூவாக இருக்கும். நல்வேளை பூக்கள் வெண்மை நிறத்தில் சிறிய சூல்களுடன் இருக்கும். நல்வேளை இலைகள் சிறியதாக இருக்கும். நாய்க்கடுகு இலைகள் சற்று பெரியதாக இருக்கும். இதை வைத்து அடையாளம் கண்டுகொள்ளலாம். 

நல்வேளை செடியில், இலை, விதை அனைத்துமே பயன்பாட்டுக்கு உரியவை. இதன் இலைகளைச் சமைத்து உண்ணலாம். பண்டைய காலங்களில் இது முக்கிய மருந்துப் பொருளாக இருந்திருக்கிறது. அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டவர்களுக்கு, இதன் இலைகளைச் சமைத்து உணவுடன் சேர்த்து உண்ணக்கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்வு கிடைக்கும். அதனால் தான் பண்டைய காலத்தில் பிரசவமான பெண்களுக்கும், போரில் தாக்குதலுக்கு உள்ளாகி, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டவர்களும் இந்தக் கீரையை உணவாக கொடுத்திருக்கிறார்கள். 

இதன் இலையை அரைத்து சாற்றை பிழிந்துவிட்டு, சக்கையை மட்டும் தலையில் வைத்து துணியால் இறுக்கிக் கட்டி வைத்தால், தலையில் கோத்துள்ள நீர் வெளியேறும். 

காயங்கள், புண்கள் மீது இதன் இலையை அரைத்துப் பற்றுப் போட்டால், சீழ் பிடிக்காது, விரைவில் குணமாகும். காதுகளில் சீழ் வடிந்தால் இதன் இலை சாறு இரண்டு சொட்டு விட்டால் போதும். சீழ் வடிதல் நின்று குணமாகிவிடும். கட்டிகள், வீக்கங்கள், அரிப்புகள், பூஞ்சான் நோய்கள் ஆகியவற்றுக்கு அருமருந்தாக இருக்கிறது நல்வேளை. இதில்,  Sitosterol, Amyrin, Lupeol, Kaempferol, Beta carotene, Ascorbic acid போன்ற வேதிப்பொருள்கள் அதிகளவில் உள்ளன.

'வினையான வினையது அதிகமானால் பொல்லா சூது வரும்
விட்டொழியும் பொய்யும் பிரட்டும் உலகில் வலம் வரும்
பூஞ்சையும் நஞ்சும் இடமறியாமல் உடலில் பொங்கி வரும்
பூவுலகில் மருந்தில்லை என்று ஒடுவான் பொய் வைத்தியன்
நோயறிந்த பின் வழி தெரியாமல் அழியும் மக்கள் கோடா கோடி
நல்வேளையும் நாகதாளியும் முறைப்படி எடுத்து உப்பாக்கினால்
உனக்கு நிகர் வைத்தியன் பூமியில் இல்லை என்பார்கள் சான்றோர்
பூஞ்சையும் நஞ்சும் பூண்டோடு விட்டு விலகும் தானே!'
                                                                     –  அகத்தியர் ஏட்டுகுறிப்பு 17

‘சிரநோய் வலிகுடைச்சல் தீராச் சயித்தியம்
உரநோய் இவைக ளொழியும் - உரமேவும்
வில்வேளைக் காயும் விழியாய்! பசிகொடுக்கும்
நல்வேளை தன்னை நவில்’
- அகத்தியர் குணபாடம்

என்பதும் அகத்தியர் பாடல்தான். இத்தனை சிறப்பு வாய்ந்த நல்வேளையை இனி சாலையோரங்களில் பார்த்தால், எடுத்து பயன்படுத்துங்கள். அதன் மூலம் உங்கள் நோய்கள் தீர்ந்தால் அடுத்த முறை நல்வேளையைப் பார்த்தால் நன்றி சொல்லுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு