Published:Updated:

ஊசி போட்டால் உண்டு வாழ்வு!

கொரோனா தடுப்பூசி
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா தடுப்பூசி

‘தடுப்பூசிகள் வேலை செய்வது உண்மைதான், நமக்கும் அதுதான் தீர்வு’ என்பதற்கு உலகமெங்கும் தென்படும் நேரடி சாட்சியங்களைப் பார்க்கலாம்.

ஊசி போட்டால் உண்டு வாழ்வு!

‘தடுப்பூசிகள் வேலை செய்வது உண்மைதான், நமக்கும் அதுதான் தீர்வு’ என்பதற்கு உலகமெங்கும் தென்படும் நேரடி சாட்சியங்களைப் பார்க்கலாம்.

Published:Updated:
கொரோனா தடுப்பூசி
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா தடுப்பூசி

ஓராண்டுக்கும் மேலாக மொத்த மனிதகுலத்தையும் நிலைகுலையச் செய்துவருகிறது கொரோனாப் பெருந்தொற்று. அதிலும் குறிப்பாக இரண்டாம் அலை பாதிப்புகள் இந்தியாவில் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. அரசு இயந்திரமும், சுகாதாரக் கட்டமைப்பும் திக்கித் திணறி நிற்கின்றன. இதற்கு எப்போது முடிவு என்று மக்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாய்க் காத்திருக்கிறார்கள். கொரோனவை முறியடித்த உலக நாடுகள் பலவும் இதற்குத் தீர்வாக முன்வைப்பது ஒன்றைத்தான். அது தடுப்பூசி.

ஊசி போட்டால் உண்டு வாழ்வு!

மருத்துவர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை அனைவரும் ‘தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்’ என வலியுறுத்தியும் இன்னும் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் காட்டுவதைப் பார்க்க முடிகிறது. ‘பில் கேட்ஸின் சதி, உள்ளே சிப் இருக்கிறது, மரபணுவை மாற்றப்பார்க்கிறார்கள் என அடிப்படை ஆதாரமற்ற வாட்ஸ்அப் பார்வர்டுகளை நம்புவேன்; மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் சொல்வதை நம்பமாட்டேன்’ என அடம்பிடிக்கிறார்கள். இந்த விஷயத்தில் நமது அரசும் முதலில் மெத்தனமாக இருந்துவிட்டதாகவே தோன்றுகிறது. இப்போது பாதிப்புகளைக் கண்டு தடுப்பூசிக்காக மக்கள் குவிய, அத்தனை பேருக்கும் தடுப்பூசி தர முடியாமல் திணறுகிறது.

தடுப்பூசிகள்தான் இந்தப் பெருந்தொற்றுக்கு முதன்மைத் தீர்வு. ‘தடுப்பூசிகள் வேலை செய்வது உண்மைதான், நமக்கும் அதுதான் தீர்வு’ என்பதற்கு உலகமெங்கும் தென்படும் நேரடி சாட்சியங்களைப் பார்க்கலாம்.

ஊசி போட்டால் உண்டு வாழ்வு!

இங்கிலாந்து

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. ஜனவரி மாதத்தில் அங்கே கொரோனா பாதிப்புகள் உச்சம் தொட்டன. B.1.1.7 எனப் பெயரிடப்பட்ட புதிய உருமாறிய கொரோனா வைரஸ்தான் இதற்கு முக்கிய காரணம் எனச் சொல்லப்பட்டது. பிரிட்டனிலிருந்து தங்கள் நாட்டுக்குள் வருவதற்குப் பல கட்டுப்பாடுகள் விதித்தன உலக நாடுகள். அந்தச் சமயத்தில் பிரிட்டனில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 68,000 வரை சென்றது. தினசரி கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,800-ஐத் தாண்டியது. ஒப்பீட்டளவில் பார்த்தாலும்கூட ஏழு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பிரிட்டனுக்கு இது மிக அதிகம். ஜனவரியில் இப்படி கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த பிரிட்டன் இப்போது முழுவதுமாக மீளும் நிலையில் இருக்கிறது. தற்போது, அங்கு தினசரி கொரோனா பாதிப்புகள் 2,000 என்ற அளவில்தான் இருக்கின்றன. தினசரி கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 20-க்கும் கீழேதான் இருக்கிறது. மரணங்களே இல்லாத நாள்களும் அங்கு சமீபத்தில் பதிவாகின. இதெல்லாம் தானாக நடந்துவிடவில்லை. பிரிட்டனின் தடுப்பூசி விநியோகத் திட்டம் இதில் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறது.

குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது மக்களுக்குக் கிடைத்துவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தது பிரிட்டன் அரசு. ஒரு டோஸ், முழுவதுமாக கொரோனாவிலிருந்து பாதுகாக்காது என்றாலும் பலருக்கும் தீவிர நோய் வராமல் தடுக்கும் என்பதால் இந்த முடிவு எட்டப்பட்டது. கோவிஷீல்டு முதல் டோஸிற்குப் பிறகு இரண்டாவது டோஸ் போடும் கால இடைவெளியை 12 வாரங்கள் ஆக்கியது பிரிட்டன். அனைவருக்கும் போதிய டோஸ்கள் உற்பத்தி செய்யும் நேரத்தையும் பிரிட்டனுக்கு இது கொடுத்தது.

பிரிட்டன் மக்கள்தொகையில் 52% பேருக்கு மேல் ஒரு டோஸ் தடுப்பூசியாவது எடுத்துக்கொண்டுள்ளனர். இதுதான் கொரோனா மரணங்கள் இந்த அளவில் குறைந்திருக்கக் காரணம். கொரோனாவிலிருந்து மொத்தமாக மீள்வதற்கும் தடுப்பூசிகளுக்கும் இருக்கும் நேரடித் தொடர்பைப் பளிச்சென அடிக்கோடிட்டு உலகத்திற்குச் சொல்கிறது பிரிட்டனின் இன்றைய நிலை!

ஊசி போட்டால் உண்டு வாழ்வு!

அமெரிக்கா

கொரோனாவால் இருப்பதிலேயே மோசமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். என்னதான் பொருளாதார பலம் இருந்தாலும் கொரோனாவால் அத்தனை ஆயிரம் பேரை தினமும் இழந்துகொண்டிருந்தது அமெரிக்கா. ஆனால், கொரோனா இல்லாத வருங்காலத்திற்கான நம்பிக்கை அங்கும் துளிர்விடத் தொடங்கி யிருக்கிறது. ஜனவரி மாதத்தில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தினசரி கொரோனா பாதிப்புகள், 4,000-க்கும் மேற்பட்ட தினசரி கொரோனா மரணங்கள் எனக் கிட்டத்தட்ட தற்போது இந்தியா இருக்கும் நிலையில் இருந்தது அமெரிக்கா. ஆனால், இன்று தினசரி கொரோனா பாதிப்புகள் 40,000-க்கும் கீழ் குறைந்துள்ளன. தினசரி மரணங்கள் 700 என்ற அளவில் இருக்கின்றன. இவை தொடர்ந்து இறங்குமுகம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவும் தானாக நடந்து விடவில்லை. அமெரிக்கா மீண்டதற்குப் பின்னணியிலும் தடுப்பூசிகளே இருக்கின்றன. பிரிட்டன் போல அல்லாமல் இரண்டு டோஸ் ஊசிகளையும் ஒருவருக்குப் போட்டு முழுவதுமாக அவரைக் கொரோனாவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் திட்டமாக முதலிலேயே இருந்தது. அதனால்தான் இங்கிலாந்தின் வெற்றியைக் கண்டபின்னும் அந்த உத்தியை அமெரிக்காவால் கையிலெடுக்க முடியாமல் போனது. தற்போது மக்கள் தொகையில் 35 சதவிகிதத்துக்கும் அதிகமான பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் போட்டுவிட்டது அமெரிக்கா. ஒரு டோஸ் மட்டும் போட்டவர்கள் சதவிகிதம் 46 ஆக இருக்கிறது. ஜனவரியில் 1% பேருக்கு மட்டுமே அமெரிக்கா தடுப்பூசிகள் போட்டிருந்தது. மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தாலும் அமெரிக்கா மிகப்பெரிய நாடு என்பதால் இந்த வேகம் அளப்பரியது. இன்னும்கூட அமெரிக்காவின் தடுப்பூசித் திட்டங்கள் வேகமெடுக்கும் எனத் தெரிகிறது. சமீபத்தில்தான் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்ட மக்கள் மாஸ்க் போட அவசியமில்லை என்றது அமெரிக்கா. இன்னும் சில நாள்களில் கொரோனாக் கட்டுப்பாடுகளை மறந்து இயல்பு வாழ்க்கைக்கு மொத்தமாகத் திரும்பிவிடும் அமெரிக்கா என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஊசி போட்டால் உண்டு வாழ்வு!

இஸ்ரேல்

தடுப்பூசி விஷயத்தில் உலக முன்னோடி இஸ்ரேல்தான். மக்கள்தொகையில் சுமார் 59% பேர் மொத்தமாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுவிட்டனர். மாஸ்க்குகளை மொத்தமாகத் தூக்கியெறிந்த முதல் நாடு இஸ்ரேல்தான். ஆனால், அதற்காக கொரோனாவின் கோரப்பிடியில் இஸ்ரேல் சிக்கவில்லை எனத் தப்புக்கணக்கு போட்டுவிட வேண்டாம். இதுவரை அங்கே எட்டு லட்சத்திற்கும் அதிகமான பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 90 லட்சம் பேர் வாழும் நாட்டில் இந்த எண்ணிக்கை அதிகம்தான். ஜனவரி தொடக்கத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் 10,000-த்தைத் தாண்டின. இறப்புகள் 100-ஐத் தொட்டன. ஆனால், இன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறது இஸ்ரேல். ஏன், போர் புரியும் தெம்பே வந்துவிட்டது இஸ்ரேலுக்கு.

கிட்டத்தட்ட பிரிட்டனின் உத்தியைத்தான் இந்தியாவும் கையிலெடுத்திருப்பதாகத் தெரிகிறது. இரண்டு தடுப்பூசிகளை 12-16 வார இடைவெளியில் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கிறது. இதன்மூலம் அனைவருக்கும் ஒரு டோஸ் முதலில் கிடைக்கும் என நம்புகிறது. மேற்கண்ட நாடுகளுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு நமக்கு மக்கள்தொகை அதிகம். ஆனால், பெரிய நாடோ, சிறிய நாடோ, தடுப்பூசிகள் வேலை செய்கின்றன என்பது நிஜம். நாமும் அந்தப் பாதையில் பயணித்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.