Published:Updated:

தடுப்பூசி தட்டுப்பாடு... காரணம் மோடி!

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கும் நம் நாட்டுக்கு வெறும் ஒரு கோடியே 10 லட்சம் தடுப்பூசிகளை மட்டுமே அந்தக் காலத்தில் நாம் வாங்கியிருந்தோம்.

தடுப்பூசி தட்டுப்பாடு... காரணம் மோடி!

130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கும் நம் நாட்டுக்கு வெறும் ஒரு கோடியே 10 லட்சம் தடுப்பூசிகளை மட்டுமே அந்தக் காலத்தில் நாம் வாங்கியிருந்தோம்.

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

உலகத்தின் ஒட்டுமொத்த தடுப்பூசி தேவையில் 60 சதவிகிதம் தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிற நாடு இந்தியா. ‘உலகின் தடுப்பூசி தலைநகரம்’ என்று பெயர் வாங்கியிருக்கும் இந்தியா இன்று கொரோனா தடுப்பூசிக்காக உலகின் பல நாடுகளிடம் கையேந்தி நிற்கிறது. இந்தத் துயரநிலைக்குக் காரணம், முறையாகத் திட்டமிடத் தவறிய மோடி அரசு.

கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் உச்சத்திலிருந்த கொரோனா பரவல், அதன் பிறகு படிப்படியாகக் குறைந்தது. ‘எல்லோருக்கும் தடுப்பூசி கிடைத்தால் மட்டுமே கொரோனா அச்சம் விலகும்’ என உலக நாடுகள் வலியுறுத்தி வந்த நேரத்தில், நாம் கொரோனாவை வென்றுவிட்டதாகக் கொண்டாட்டங்களில் இருந்தோம். பல நிறுவனங்களும் தங்கள் தடுப்பூசிகளின் வெற்றிகளை அறிவிக்கும்போதே, பல நாடுகளும் அவற்றிடம் போய் ஒப்பந்தங்கள் செய்துகொண்டன. இந்த ஆண்டு முழுக்கத் தயாராகும் தடுப்பூசிகளில் சுமார் 85 சதவிகிதத்தைப் பணக்கார நாடுகள் அட்வான்ஸ் புக்கிங் செய்துவிட்டன. உலகின் வெறும் 14 சதவிகித மக்கள் மட்டுமே வாழும் இந்தப் பணக்கார நாடுகளுக்கு இவ்வளவு தடுப்பூசிகள் போய்ச் சேரவிருக்கின்றன. இதில் அமெரிக்கா ரொம்பவே உஷாராக, தடுப்பூசிகளின் பரிசோதனை வெற்றி பெறும் முன்பே வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துகொண்டது. கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை அமெரிக்கா, 60 கோடி தடுப்பூசிகளுக்குப் பணம் செலுத்தி ஒப்பந்தம் செய்திருந்தது. 30 கோடி மக்கள் இருக்கும் தேசத்தில், எல்லோருக்குமான தடுப்பூசியை அது அப்போதே உறுதி செய்துவிட்டது.

தடுப்பூசி தட்டுப்பாடு... காரணம் மோடி!

இந்த நேரத்தில் நம் மத்திய அரசு என்ன செய்தது? 130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கும் நம் நாட்டுக்கு வெறும் ஒரு கோடியே 10 லட்சம் தடுப்பூசிகளை மட்டுமே அந்தக் காலத்தில் நாம் வாங்கியிருந்தோம். இறப்பு விகிதம் குறைவாக இருந்ததாலும், தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்ததாலும், நாம் தடுப்பூசியின் அவசியத்தை அலட்சியம் செய்தோம். ‘உலகின் பல நாடுகளுக்கும் தடுப்பூசி தானம் செய்யும் வல்லமை நமக்கு இருக்கிறது’ என்றார் பிரதமர். பல ஏழை நாடுகளுக்கு இலவசமாகவும், பணக்கார நாடுகளுக்கு விலைக்கும் தடுப்பூசிகளை அனுப்பினோம். ‘மோடியின் உதவியால் நாங்கள் கொரோனாவை வெல்கிறோம்’ என அந்த நாடுகளின் தலைவர்கள் நன்றி சொன்னார்கள். எல்லாமே பெருமிதமான தருணங்கள்தான்!

மார்ச் 24-ம் தேதி ஏற்றுமதியைத் தடை செய்யும் வரை நாம் சுமார் 6.4 கோடி டோஸ் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பினோம். ஆனால், இந்தியாவில் போடப்பட்டது 5.2 கோடி டோஸ்கள் மட்டுமே! அந்தத் தேதியில் இந்தியா முழுக்க 50 ஆயிரம் புதிய நோயாளிகள் நாள்தோறும் கண்டுபிடிக்கப்பட்டனர்.

25 நாள்களுக்குள் இந்த எண்ணிக்கை இரண்டே முக்கால் லட்சமாக அதிகரித்துவிட்டது. இதன் உச்சம் எதுவரை போகும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை.

கொரோனா இரண்டாவது அலை மிகக் கொடூரமாக இந்தியாவைத் தாக்கிவருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. கொரோனா தீவிரத்தைக் குறைக்கும் ரெம்டெசிவிர் ஊசிக்குக் கடும் தட்டுப்பாடு. தீவிர சுவாசத்தொற்று ஏற்பட்டவர்களுக்கு நிவாரணம் தருவதற்கு ஆக்ஸிஜன் போதுமான அளவு இல்லை. குஜராத் போன்ற பல மாநில அரசுகள் மரணங்களைக் குறைத்துக் காட்டி ஏமாற்றுகின்றன. ஆனால், மயானங்கள் ஓயாமல் எரிந்துகொண்டிருக்கின்றன. ‘நிலைமை கையை மீறிப்போய்விட்டது’ என்ற நிஜத்தை மறைப்பதற்கு அரசுகள் பிரம்மப் பிரயத்தனம் செய்கின்றன.

தடுப்பூசி தட்டுப்பாடு... காரணம் மோடி!

நாடு முழுக்க ஜனவரி மத்தியிலேயே கொரோனா தடுப்பூசி போட ஆரம்பித்து விட்டார்கள். சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரிப்பான கோவிஷீல்டு, பாரத் பயோடெக் தயாரிப்பான கோவாக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள்தான் இந்தியாவில் போடப்படுகின்றன. இவற்றில் கோவாக்ஸின் தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகள் முழுமையாக வருவதற்கு முன்பே அதற்கு அனுமதி அளித்தது மத்திய அரசு. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியதால், தடுப்பூசி மீதான மக்கள் ஆர்வம் குறைந்தது. பரிசோதனை முடிவுகள் சாதகமாக வந்த பிறகும், தடுப்பூசி பயன்பாடு அதிகரிக்கவில்லை. இப்படி அரசு எடுத்த அவசர நடவடிக்கையே இந்தியாவில் தடுப்பூசி ஆர்வம் குறைந்ததற்கு முதல் காரணம்.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமானதும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவோரின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்தது. ஆனால், இப்போது பல இடங்களில் ‘ஸ்டாக் இல்லை’ என்ற போர்டே தொங்குகிறது. எல்லா மாநிலங்களும் தடுப்பூசி அனுப்புமாறு மத்திய அரசிடம் கதறுகின்றன. இந்தநிலை வருவதற்கும் மத்திய அரசே காரணம்.

தடுப்பூசி தட்டுப்பாடு... காரணம் மோடி!
தடுப்பூசி தட்டுப்பாடு... காரணம் மோடி!

இந்தியாவில் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பதாக அறிவிப்பு வெளியானதும், சீரம் இன்ஸ்டிட்யூட், பாரத் பயோடெக் மற்றும் ஃபைஸர் ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அப்போது அரசு ‘சுயசார்பு பாரதம்’ என்ற மனநிலையில் இருந்தது. அதனால், ஃபைஸர் நிறுவனத்தைக் கண்டுகொள்ளவில்லை. மற்ற இரு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த நவம்பரில் சீரம் இன்ஸ்டிட்யூட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். அந்த நேரத்தில் சீரம் இன்ஸ்டிட்யூட் ஏராளமாகத் தடுப்பூசி உற்பத்தி செய்துவிட்டு, அவற்றை வைப்பதற்கு இடம் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தது. பிரதமர் எப்படியும் ஒப்பந்தம் போட்டு அவற்றை வாங்கிக்கொள்வார் என எதிர்பார்த்தது. அதேபோல, தங்கள் நிறுவனத்தின் கட்டமைப்பை விரிவாக்க 3,000 கோடி ரூபாய் நிதியுதவி கேட்டிருந்தது. அந்த நிறுவனம். அது கிடைத்தால், தங்களால் பல மடங்கு உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றது. இரண்டையுமே பிரதமர் செய்யவில்லை. புகைப்படங்களுக்கு மட்டும் போஸ் கொடுத்துவிட்டு வந்தார். இப்போதுவரை நீண்டகால ஒப்பந்தம் எதுவும் போடாமல், அவ்வப்போது தேவைப்படும் தடுப்பூசிகளை மட்டுமே வாங்கிக்கொள்கிறது மத்திய அரசு.

இதனால்தான் நம் அரசின் தேவையை உணர்ந்து அவர்களால் உற்பத்தி செய்ய முடியவில்லை. பிஎம் கேர்ஸ் நிதி இருக்கிறது; பட்ஜெட்டில் தடுப்பூசிக்காக 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. என்றாலும், அரசு இப்படித்தான் வாங்குகிறது.

இந்தச் சூழலில், தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயங்குகிறார்கள் என நினைத்துக்கொண்டு ஏப்ரல் 11 முதல் 14 வரை தடுப்பூசி திருவிழா நடத்துவதாக அறிவித்தார் பிரதமர் மோடி. மற்ற நாள்களில் போடுவதைவிட குறைவாகவே இந்தத் திருவிழா நாள் களில் தடுப்பூசி போட்டனர். காரணம், பல இடங்களில் ஸ்டாக் இல்லை. இந்த உண்மையை மிகத் தாமதமாகவே மத்திய அரசு புரிந்து கொண்டிருக்கிறது.

அதேநேரத்தில் ராகுல் காந்தி, ‘இந்தியாவைத் தடுப்பூசி தட்டுப்பாடு கடுமையான நெருக்கடியில் தள்ளியிருக்கிறது. வெளிநாட்டுத் தடுப்பூசிகளை ஏன் வாங்கவில்லை?’ என்று அரசைக் கேள்வி கேட்டார். மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ‘இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை’ என முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘வெளிநாட்டு மருந்து கம்பெனிகளுக்காக ராகுல் பரிந்து பேசுகிறார்’ என பதிலடி கொடுத்தார்.

அடுத்த இரண்டு நாள்களிலேயே ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. ஃபைஸர், மாடெர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளையும் விரைவில் அனுமதிக்கப் போகிறது. ‘ஒரு தடுப்பூசியை இந்தியாவில் போட வேண்டுமென்றால், அது இந்திய மக்களிடம் பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும்’ என்ற நிபந்தனையையும் தளர்த்திவிட்டது. அவ்வளவு தட்டுப்பாடு. என்றாலும், உலகமே போட்டி போட்டு தடுப்பூசிகளை வாங்கும் இப்போதைய சூழலில் எவ்வளவு தடுப்பூசியை நாம் வாங்க முடியும் என்பது தெரியவில்லை.

கொரோனா தினம் தினம் உச்சத்துக்குப் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், ‘ஸ்டாக் இல்லை’ என்ற போர்டு இன்னும் நிறைய தடுப்பூசி மையங்களில் தொங்கக்கூடும். ‘45 வயதுக்குக் கீழே இருக்கும் பலர்தான் பணிக்காக வெளியில் செல்கிறார்கள். அவர்களுக்கும் தடுப்பூசி அளிக்க வேண்டும்’ என்கிறது மகாராஷ்டிரா. “25 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் கொடுங்கள்” என்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். ‘தடுப்பூசி கட்டுப்பாட்டை உங்களிடம் வைத்திருக்காமல், மாநில அரசுகளே நேரடியாக வாங்கிக்கொள்ள அனுமதியுங்கள்’ என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் ஸ்டாலின். இந்தநிலையில், மே 1-ம் தேதிக்குப் பிறகு, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், மாநிலங்களே நேரடியாகத் தடுப்பூசி வாங்கிக்கொள்ளவும் அனுமதி வழங்கியிருக்கிறது மத்திய அரசு.

அடுத்தடுத்த சவால்களை எதிர்கொள்ள என்ன செய்யப்போகிறார் மோடி?

அபகரிக்கும் பணக்கார தேசங்கள்!

தடுப்பூசி பற்றாக்குறை ஒரு பக்கம் என்றால், தேவைக்கும் அதிகமாகவே சில நாடுகள் தடுப்பூசிகளை வாங்குகின்றன. ‘தடுப்பூசி போடுவதால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும்’ என்பது தெரியாத நிலையில், முன்னெச்சரிக்கையாக வாங்கிக் குவிக்கின்றன. கனடா தன் நாட்டின் மக்கள்தொகையைவிட எட்டு மடங்கு அதிக தடுப்பூசிக்குப் பணம் கொடுத்திருக்கிறது. இதைவைத்து அங்கு எல்லோருக்கும் நான்கு முறை தடுப்பூசி போடலாம். பிரிட்டன் ஏழு மடங்கு அதிகமாகவும், நியூசிலாந்து ஆறரை மடங்கு அதிகமாகவும் வாங்கியிருக்கின்றன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளும் இப்படி தேவைக்கு அதிகமாகக் குவித்துள்ளன. ஜனவரி மத்தியில் உலக சுகாதார நிறுவனம் செய்த ஆய்வின்படி, நூறுக்கும் மேற்பட்ட ஏழை நாடுகளுக்கு ஒரு டோஸ் தடுப்பூசிகூட போய்ச் சேரவில்லை.

தடுப்பூசி தட்டுப்பாடு... காரணம் மோடி!

புது நிறுவனங்களுக்கு நிதி!

இந்தியாவில் 91 சதவிகிதம் கோவிஷீல்டு தடுப்பூசியே போடப்படுகிறது. பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் தயாரிப்பு மிகவும் குறைவு. மாதத்துக்கு ஒரு கோடி டோஸ்களே தயாராகின்றன. ‘எங்களுக்கு அடிப்படை வசதிகளை உருவாக்க நிதி கொடுத்தால், இன்னும் அதிகமாகத் தயாரிக்க முடியும்’ என அந்நிறுவனம் நீண்டகாலமாகக் கேட்டது. இப்போதுதான் 265 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறது மத்திய அரசு. என்றாலும், அவர்கள் உற்பத்தியை அதிகரிக்க ஆகஸ்ட் மாதம் ஆகிவிடும். இதேபோல மும்பை, ஹைதராபாத், புலந்த்சாஹர் ஆகிய இடங்களில் இருக்கும் மூன்று பொதுத்துறை மருந்து நிறுவனங்களுக்கும் நிதியளித்து, கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்துகிறது மத்திய அரசு. இவை எல்லாமே ஆகஸ்ட் மாதத்தில்தான் உற்பத்தியைத் தொடங்கும்.

தடுப்பூசி தட்டுப்பாடு... காரணம் மோடி!

எல்லோருக்கும் கிடைக்க எவ்வளவு நாள் ஆகும்?

இஸ்ரேல் 62 சதவிகித மக்களுக்குத் தடுப்பூசி அளித்துவிட்டது. தடுப்பூசி போட்டதில் உலகில் முன்னணியிலிருக்கும் நாடு இதுதான். பிரிட்டன் 47.6 சதவிகிதமும், அமெரிக்கா 37 சதவிகிதமும் போட்டிருக்கின்றன. அதனால்தான் அங்கு இயல்பு வாழ்க்கை நிலவுகிறது.

இந்தியாவில் ஏழு சதவிகிதம் பேரே ஒரு டோஸ் போட்டு முடித்துள்ளனர். எல்லோருக்கும் தடுப்பூசி கிடைக்க 2023 வரை ஆகலாம் என்கிறார்கள். “கேட்கும் எல்லோருக்கும் தடுப்பூசி போட முடியாது. யாருக்கு அவசியமோ, அவர்களுக்கு மட்டுமே போடப்படும்’’ எனச் சில நாள்களுக்கு முன்பு மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷண் சொன்னார். இந்தியாவில் கொரோனா பரவலை ஆய்வுசெய்த டி.சி.எஸ் நிறுவனம், “குறிப்பிட்ட 130 மாவட்டங்களில்தான் கடந்த முறை கொரோனா அச்சுறுத்தியது. இரண்டாவது அலையிலும் இவையே பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் முழுமையாகத் தடுப்பூசி போட்டால், கொரோனா கட்டுக்குள் வரும்’’ எனத் தெரிவித்துள்ளது.

தடைபோடும் அமெரிக்கா!

ஒரு தடுப்பூசியைக் கண்டறியும் நிறுவனம், அதற்குக் காப்புரிமை பெறும். அதை மற்றவர்கள் வேறு வழிமுறைகளைப் பயன்படுத்திக்கூட உருவாக்க முடியாது. ‘உலகின் சூழலைக் கருத்தில்கொண்டு, கொரோனா தடுப்பூசிகளுக்கு இதிலிருந்து விதிவிலக்கு தர வேண்டும்’ என உலக வர்த்தக அமைப்பில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தன. அதை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தடுத்துவிட்டன.

இதேபோல, இன்னொரு தடையையும் அமெரிக்கா செய்துள்ளது. இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிக்குச் சில முக்கியமான மூலப்பொருள்கள் அமெரிக்காவிலிருந்து வர வேண்டும். அவை அமெரிக்காவுக்கும் தடுப்பூசி தயாரிக்கத் தேவை. எனவே, அவை இந்தியாவுக்கு வர விடாமல் தடுக்கிறது அமெரிக்கா. இதற்காக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது இந்தியா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism