கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

காத்திருக்கும் களம்... இது வைரஸுக்கு எதிரான வார் ரூம்!

வார் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
News
வார் ரூம்

நோய்த் தடுப்பு, நோய்ப் பரவல் கட்டுப்பாடு ஆகிய கட்டங்களையெல்லாம் தாண்டி, நோய் தாக்கியவர்களைப் பாதுகாக்கும் அவசியத்தில் இருக்கிறது இந்தியா.

நெருக்கடி காலங்களில் அடிக்கடி நாம் சொல்லும், எதிர்கொள்ளும் ஒரு வாக்கியம் ‘போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.’ அதன் முழுமையான அர்த்தம் இந்தக் கொரோனா நாள்களில் நமக்குப் புரிகிறது. ஒரு சின்னத் தகவலோ உதவியோகூட உயிரைக் காப்பாற்றும் சூழல் நிலவுகிறது. இதை சாமர்த்தியமாகக் கையாள அரசும், முன்களப் பணியாளர்களும் போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டியிருக்கிறது. அதைத்தான் தமிழக அரசு இப்போது ஓர் அறையிலிருந்து செய்துகொண்டிருக்கிறது. அதற்குப் பெயர் ‘வார் ரூம்.’ கோவிட்-19 பெருந்தொற்று கட்டளை மையம். சென்ற வாரம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திடீரென அடித்த விசிட் மூலம் இந்த ‘வார் ரூம்’ வைரலானது. அது என்ன வார் ரூம்? அங்கே என்ன நடக்கிறது?

மே 5-ம் தேதி தமிழக அரசின் உத்தரவுப்படி செயல்படத் தொடங்கியது வார் ரூம். தரேஸ் அஹமது ஐ.ஏ.எஸ் தலைமையில் எட்டு அதிகாரிகளை இதற்காகச் சிறப்பு நியமனம் செய்திருக்கிறது தமிழக அரசு. தமிழக சுகாதாரத் துறை கடந்த ஏப்ரல் 30-ம் தேதி, கோவிட் சூழலை சமாளிக்க ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை உருவாக்கியது. ஆக்சிஜன் தேவை, மருத்துவமனை படுக்கை வசதிகள் போன்ற எல்லாத் தேவைகளுக்காகவும் செயல்படும் அனைத்துத் துறைகளையும் ஒன்றிணைக்கும் மையம் இது. அந்த மையத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி ‘வார் ரூம்’ ஆக மாற்றியுள்ளனர்.

காத்திருக்கும் களம்... இது வைரஸுக்கு எதிரான வார் ரூம்!

நோய்த் தடுப்பு, நோய்ப் பரவல் கட்டுப்பாடு ஆகிய கட்டங்களையெல்லாம் தாண்டி, நோய் தாக்கியவர்களைப் பாதுகாக்கும் அவசியத்தில் இருக்கிறது இந்தியா. உயிரிழப்புகளைத் தவிர்க்கச் செய்யவேண்டிய நடவடிக்கைகள்தான் இப்போது முதன்மையானவை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை நிர்வகித்தல், ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்தல் இவை இரண்டும் அதி முக்கியமானவை. அதற்கான ‘ஒற்றைத் தொடர்பு மையம்’தான் இந்த ‘வார் ரூம்.’ ஒருபுறம், பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாகப் பேசி, அவர்களின் பாதிப்பின் அளவைப் பொறுத்து, சிகிச்சையை முடிவு செய்கிறார்கள். மறுபுறம், எந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கை வசதி உள்ளது எனத் தொடர்ந்து தரவுகளைச் சேகரிக்கிறார்கள். இப்படி நோயுற்ற மக்களுக்கும், சிகிச்சை வசதிகளுக்கும் இடைப்பட்ட பாலமாகச் செயல்படுகிறது வார் ரூம். மேலும், மாநில அளவில் கொரோனா குறித்த தரவுகளை ஆராய்ந்து, அதை அரசுக்குக் கொடுக்கிறது வார் ரூம். இது அவசியமான முடிவுகளை அரசு துரிதமாக எடுக்க உதவுகின்றது.

சென்னைத் தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் அலுவலகத்தில் இரண்டு தளங்களில் செயல்படுகிறது வார் ரூம். ஒரு தளத்தில் 104 தொலைபேசி எண்ணின் கால் சென்டர். அழைப்பு மணிகள் ஒலித்துக்கொண்டே இருக்க, ஐம்பதிற்கும் மேற்பட்ட டெலி காலர்கள் மக்களிடம் பேசி அவர்களின் குறையைக் கேட்டு அறிகிறார்கள். ‘பயப்படாதீங்க, அவரோட ஆக்சிஜன் லெவல் என்னன்னு சொல்லுங்க?’, ‘அழாதீங்க, ஒண்ணும் ஆகாது. சி.டி. ஸ்கேன்ல ஸ்கோர் என்ன போட்டிருக்கு?’ என்பது போன்ற குரல்கள் அவர்களிடமிருந்து கேட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்த எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லையெனில் கூகிள் ஃபார்ம், ட்விட்டர் மூலமாகவும் உதவி தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட வாரியாக மக்கள் தொடர்புகொள்ள கட்டுப்பாட்டு அறைகளும் 38 மாவட்டங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளன.

காத்திருக்கும் களம்... இது வைரஸுக்கு எதிரான வார் ரூம்!

உதவி கேட்டுத் தொடர்புகொள்ளும் நபருக்கு ஒரு ரெஃபெரென்ஸ் எண் வழங்கப்படுகிறது. அந்த எண் மற்றும் அழைத்தவரின் தகவல்கள் அடுத்த தளத்தில் இருக்கும் குழுவிடம் பகிரப்படுகிறது. இது 15 மருத்துவர்கள் அடங்கிய குழு. இந்த மருத்துவர்கள் நோயுற்ற நபரிடமோ அல்லது அவர்களின் உறவினரிடமோ பேசி, பாதிக்கப்பட்டவரின் விவரங்களைக் கேட்டு அறிகிறார்கள். அவர்களின் அறிகுறிகள், பல்ஸ், ஆக்சிஜன் அளவு ஆகியவை குறித்து அறிகிறார்கள். இது முதல்நிலை. இந்த மருத்துவர்களின் அறிவுரைப்படி பாதிக்கப்பட்டவர்கள் சமயங்களில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்கிறார்கள். தேவைப்படுவோர் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கோ அல்லது அரசு ஏற்படுத்தியிருக்கும் முகாமுக்கோ சென்று அடுத்த கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். சில சமயங்களில் தேவைப்படுவோர் இல்லங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் அனுப்பிப் பரிசோதிப்பதோ, வீடியோ கால் மூலம் அவர்களின் நோய் நிலைமையை ஆராய்வதோ நடக்கிறது.

இந்த இரண்டாம் நிலையில் மக்கள் மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றனர். முதல் வகை, ‘கோட் ரெட்’ - உடனடியாக அவசர சிகிச்சை தேவைப்படுவோர்(ICU). இவர்களுக்கு அவசரமாக மருத்துவமனையில் படுக்கை ஏற்பாடு செய்யப்படுகிறது. இரண்டாவது வகை, ‘பிரியாரிட்டி’ - ஆக்சிஜன் படுக்கைகள் தேவைப்படுவோர். மூன்றாவது, ‘இன் க்யூ’ - இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வது போதுமானது. இப்படி வகைப்படுத்திய பிறகு, தேவைப்படுவோருக்கு எங்கெல்லாம் படுக்கை வசதி இருக்கிறதோ அங்கு பரிந்துரைக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், முதலமைச்சர் காப்பீட்டு உதவி பெற்ற மருத்துவமனைகள், இரண்டாம் நிலை மருத்துவ மையங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என எங்கு படுக்கை காலியாக உள்ளதோ, அங்கு அவர்கள் கொண்டு செல்லப்படுகிறார்கள்.

காத்திருக்கும் களம்... இது வைரஸுக்கு எதிரான வார் ரூம்!

108 ஆம்புலன்ஸின் சேவையையும் இந்த மையம் கண்காணிக்கிறது. பெருந்திரையில் ஆம்புலன்ஸ்களின் ஜிபிஎஸ் லொகேஷன் காட்டப்படுகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதிகமான ஆம்புலன்ஸ்கள் காத்திருப்பில் இருந்தால், கூட்டம் குறைவாக இருக்கும் ஸ்டான்லி மருத்துவமனைக்கோ, ஓமந்தூரார் மருத்துவமனைக்கோ அவை மாற்றப்படுகின்றன.

உதவிக்கு அழைத்த ஒவ்வொரு நபரையும் சுமார் ஏழு மணி நேரத்துக்குள் மறுஅழைப்பு செய்து அவர்களின் ‘ஸ்டேட்டஸ்’ அறியப்படுகிறது. இந்த வார் ரூம் தேவைப்படுவோருக்கு எந்தப் பாகுபாடும் இன்றி, இருக்கும் வசதிகளைப் பகிர்ந்து கொடுக்கும் வேலையைத்தான் செய்கிறது. ஒரு மருத்துவமனைப் படுக்கையிலிருந்து ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அந்தப் படுக்கை காலியாவதைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கேட்டு அறிந்துகொண்டு, காத்திருப்பில் இருக்கும் ஒரு நோயாளியை அங்கு பரிந்துரைக்கிறது. எந்த மருத்துவமனையில் எத்தனை காலியிடங்கள் இருக்கின்றன என்ற தகவலையும் இந்தக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு குழு சேகரிக்கிறது.

காத்திருக்கும் களம்... இது வைரஸுக்கு எதிரான வார் ரூம்!

‘வார் ரூம்’ செயல்பாடுகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த சுகாதார அலுவலர் விடுதலை, கட்டுப்பாட்டு மையம் சந்திக்கும் சவால்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ‘‘பெரும்பாலும் மக்கள் நேரடியாக அவர்களுக்கு இருக்கும் தொடர்புகள், தகவல்களைக் கொண்டு மருத்துவ மனையில் அனுமதி பெற்றுக்கொள்கிறார்கள். எவ்வகையில் போராடியும் இடம் கிடைக்கா தவர்கள்தான் அதிகம் நம்மைத் தொடர்பு கொள்கிறார்கள். பதற்றத்துடன் அழைப்பவர்களிடம் துல்லியமாக விவரங்களைக் கேட்டறிவது கடினம். ஆக்சிஜன் அளவு 90 இருக்கிறதா அல்லது குறைவா என்பதைப் பொறுத்து அவருக்குத் தேவைப்படும் உதவி மாறும் என்பதால், இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மை முக்கியமானது. அப்படிப் பெறப்பட்ட தகவல்களைச் சரிபார்ப்பது அடுத்த சவால். வீடியோ கால் முதல் நேரில் 108 செல்வது வரை பலவகைகளில் இதைச் செய்கிறோம். அதே போல ஒரே நபருக்காக பலர் அழைப்பார்கள், அதைச் சரிபார்க்கும் வேலையும் சற்றுக் கடினமானது. இயன்றவரை அனைத்து மக்களுக்கும் சமமான சேவையை வழங்குவதே எங்களின் நோக்கம்’’ என்றார்.

வார் ரூமுக்கு என சமூக வலைதள நிர்வாகக் குழு ஒன்று இருக்கிறது. இந்தக் குழுவின் பொறுப்பாளரான ரூபிதாவிடம் பேசினோம். ‘‘சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொள்பவர்கள் முழுமையான தகவல்களைத் தருவதில்லை. அதற்காகத்தான் புதிதாக கூகுள் ஃபார்ம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறோம். இதன் மூலம் வேண்டிய அனைத்துத் தகவல்களையும் பெற முடிகிறது. எங்கள் கோரிக்கை ஒன்றுதான். முடிந்தவரை நிறைய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள் அப்போதுதான் விரைவாகவும் தேவையான உதவிகளையும் எங்களால் செய்ய முடியும்’’ என்றார்.

வார் ரூமின் தலைமை நிர்வாகியான தாரேஸ் அகமது, ‘‘இந்த வார் ரூம் கோவிட் கால பிரச்னைகளைக் குறைக்க எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு முயற்சிதான். இதுவே தீர்வாகாது. மக்கள் மாஸ்க், சானிட்டைசர், தனிமனித இடைவெளி ஆகியவற்றைப் பின்பற்றுவதுதான் இதற்கான தீர்வாகும். நோய்த் தொற்று ஏற்பட்டவரின் உறவினர் தொடங்கி அவருக்கு மருத்துவம் செய்ய மருத்து வர் வரை அனைவரும் மனிதாபிமானத்தோடும் பதற்றம் இல்லாமலும் இருப்பதுதான் முக்கியம்’’ என்றார்.

தாரேஸ் அகமது
தாரேஸ் அகமது

நோய்த்தொற்று ஏற்பட்டவருக்கும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியையும் உதவி கிடைக்க ஆகும் காலத்தையும் குறைப்பதுதான் இந்த வார் ரூமின் நோக்கம். அதன்மூலம் மக்களிடையே நம்பிக்கையை வளர்க்க முயற்சி செய்கிறது இந்தக் குழு. இந்த அசாதாரண சூழலில் அந்த நம்பிக்கைதான் எல்லாருக்குமான முக்கியத் தேவை.

இங்கு போன் மணி ஒலிக்கும் ஒவ்வொரு முறையும், உயிர் குறித்த அச்சத்துடன் யாரோ எழுப்பும் அபயக் குரலைக் கேட்கிறோம் என்ற உணர்வுடன் அதை எடுத்துப் பேசுகிறார்கள் பணியாளர்கள்.

எப்படி அழைப்பது?

சென்னையில் வார் ரூமைத் தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள்:

104

044-4612 2300, 2538 4520

ட்விட்டரில்: @104_GoTN