மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 342

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி..!

ன் கதையைக் கேட்டால், சினிமா கதைபோல இருக்கலாம். அதுதான் என் துரதிர்ஷ்டம்!

கல்லூரியில் படித்தபோது, ஒருமுறை சுதந்திர தினத்தன்று நடந்த மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற என் புகைப்படமும், கல்லூரியின் பெயரும் ஒரு முன்னணி வார இதழில் வெளியானது. அதைப் பார்த்து என் கல்லூரி முகவரிக்கு எனக்கு அனுப்பப்பட்ட பாராட்டுக் கடிதங்களில், ஒரு கடிதம் மட்டும் என் மனதுக்குள் அலையடித்தது.  அழகான கையெழுத்து, வரிக்கு வரி  சமூக அக்கறை கொண்டிருந்த அந்தக் கடிதம், மெழுகுவத்தியின் வெளிச்சத்தில் இந்திய எல்லையிலிருந்து எழுதப்பட்ட ஒரு ராணுவ வீரரின் கடிதம்!

என் டைரி - 342

எங்களுக்குள் ஏற்பட்ட கடித நட்பு, ஒரு கட்டத்தில் காதலானது. அவராவது என்னை வார இதழின் புகைப்படத்தில் பார்த்திருக்கிறார். நான் அவரைப் பார்த்ததே இல்லை. அவர் எழுத்துக்களே என் காதலன். இப்படியே ஒரு வருடம் கடந்த நிலையில், வந்தது அவரின் கடைசிக் கடிதம். 'போருக்குப் போகிறேன். காதலைவிட நமக்கு சமூக சேவைதான் முக்கியம். ஒருவேளை நான் திரும்பி வந்தால் உன்னை மணப்பேன். இல்லை என்றாலும் எனக்குமாய் சேர்த்து நீ சேவைகளைத் தொடர்வாய் என நம்புகிறேன்!’ என்று எழுதி எனக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

பிரார்த்தனைகளாய் என் பொழுதுகள் கழிய, அதன் பிறகு அவரிடமிருந்து கடிதம் எதுவும் வரவில்லை. அது செல்போன், இமெயில் முகவரி போன்ற தொடர்பு வசதிகளில் இருவருக்குமே அத்தனை பரிச்சயம் இல்லாத காலம். அவரின் ராணுவ முகவரி தவிர வேறொன்றும் இல்லை என்னிடம். நான் என் கவனத்தை சமூக சேவையில் திருப்பினேன். 15 வருடங்கள் உருண்டோடிய நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் அவர் கடிதங்களை அடைகாத்துக் கொண்டிருக்கிறேன்.

'என்ன முட்டாள்தனம் இது? ஒண்ணு, அவர் செத்துட்டார்னு நினைச்சு உன் வாழ்க்கையைத் தேடிக்கோ. இல்ல, அவர தேடிப் போற வழியைப் பாரு!’ என்று திட்டிக்கொண்டே இருக்கும் என் தோழியின் வார்த்தை, இந்த 35 வயதில்தான் மூளைக்குள் இறங்குகிறது. ஆனால், அவரைத் தேடிப் போய், அவர் உயிருடன் இல்லை என்ற செய்தியையோ, வேறு திருமணம் செய்துகொண்டார் என்ற செய்தியையோ கேட்கத் திராணியில்லை எனக்கு. மேலும், அவர் வாழ்க்கையில் என்னால் புதுக்குழப்பம் விளைந்துவிடக் கூடாது என்றும் நினைக்கிறேன். ஆனால், ’அவர் உயிரோடு இருந்து, என்னைப் போல் எனக்காக திருமணமாகாமல் இருந்தால்?' என்ற தவிப்பும் கொல்கிறது.

என்ன செய்யட்டும் தோழிகளே?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 342

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 341ன் சுருக்கம்

''பல்கலைக்கழகத் தேர்வில் 'கோல்டு மெடலிஸ்ட்’ என்ற பெருமையுடன் கிராமத்தில் நுழைந்த என்னை, ஊரே பாராட்டியது. மேல்படிப்புக்கு அனுமதி கேட்டபோது, 'அப்பாவுக்கு வயசாயிடுச்சு... கல்யாணத்துக்குப் பிறகு படி’ என்றார் அம்மா. வீட்டுக்கு மூத்தவள் என்பதால் நானும் சம்மதித்தேன். ஆனால், படிப்புக்குத் தடை விதித்ததோடு, வரதட்சணை கேட்டும் சித்ரவதை செய்தார் கணவர். குழந்தை பிறந்து, வருடங்கள் உருண்டோடின. தினமும் குடித்துவிட்டு வந்து என்னையும், 15 வயது மகளையும் கொடுமை செய்தார். விவாகரத்து பெற்ற நிலையில், அப்பாவுக்கு பாரமாக இருக்க விரும்பாமல், பிறந்த வீட்டிலிருந்து வெளியேறிவிட்டேன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து, மகளைப் படிக்க வைக்கிறேன். யார் ஆதரவும் இன்றி சிரமங்களை அனுபவிக்கும் என்னை, 'மறுமணம் செய்துகொள்’ என்று தோழிகள் அறிவுறுத்துகிறார்கள். வயது வந்த மகளை வைத்துக்கொண்டு மறுமணம் செய்துகொள்ள மனம் இடம் தரவில்லை. 'மகள் திருமணத்துக்குப் பின், நமக்குத் துணை தேவையாக இருக்குமோ?’ என்று யோசிக்கத் தோன்றுகிறது. எனக்கான வாழ்க்கையை நான் வாழவே இல்லை என்ற ஏக்கமும் ஒருபுறம் உள்ளது. என்ன செய்வது?''

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி - 342

 100

அவசியம் தேவை... ஆதரவு, பாதுகாப்பு!

உன் உள்ளத்தில் எழுந்துள்ள கேள்விகள் நியாயமானதே! இதில் மாற்று எண்ணத்துக்கே இடம் தராதே! ஒரு பெண்ணுக்கு எப்போதுமே ஆதரவு, பாதுகாப்பு தேவைதான். அதேபோல வாழ்க்கையை முழுமையாக வாழவில்லையே என்ற ஏக்கம் தோன்றுவதும் நியாயம்தான். உன் மகளுக்கு நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டு, வயதானாலும்... யார் தடுத்தாலும்... 'சமுதாயம் என்ன சொல்லுமோ என்ற தயக்கம் வந்தாலும் புறந்தள்ளிவிட்டு, உன் மனம் விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடு!

- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை

வசந்த காலம் தொடங்கட்டும்!

யோசனை என்ற கேள்விக்கு இடம் கொடுக்காமல், தீர விசாரித்து மறுமணம் செய்துகொள். கண்டிப்பாக உன் மனதைப் புரிந்துகொண்ட ஒருவர் கிடைப்பார். உனக்கான வாழ்க்கையைத் தொடங்கு. மேலும், உன் மகளுக்கு நல்ல படிப்பை கொடு. வளர்ந்த உன் மகள் கண்டிப்பாக நீ எடுக்கும் முடிவுக்கு உறுதுணையாக இருப்பாள். வெகு சீக்கிரம் உனக்கு மறுமணம் நடந்து, உன் வாழ்வில் வசந்தம் தொடங்க என்னுடைய வாழ்த்துக்கள்!

- எஸ்.பாரதி, அரும்பாக்கம்

மறுமணத்தை  மறந்துவிடு!

நீ மறுமணம் செய்துகொண்டால்... அதுவும், அடுத்த நரக வாழ்க்கையாக அமையத்தான் வாய்ப்பு இருக்கிறது. பதினைந்து வயதுப் பெண் உனக்கு இருக்க ஏன் கவலை? உனக்கு அவள் துணை; அவளுக்கு நீ துணை என இனி வரும் வாழ்க்கையை வாழலாமே! கணவன்  மனைவி வாழ்க்கை தான் வாழ்க்கையா? ஆபீஸ் வேலை, வீட்டு வேலை, பெண்ணை வளர்த்தல் என நாட்கள், வருடங்கள் ஓடுவதே தெரியாது. மேலும், உன் பெண்ணுக்கு மணவாழ்க்கை அமைக்கும்போது, உன்னையும் தாயாக நினைத்து தன் வீட்டு உறுப்பினராக சேர்த்துக்கொள்ளும் ஒருவரை மருமகனாக தேர்ந்தெடு. வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

- கமலா, சென்னை-78