Published:Updated:

என் டைரி- 348

"சங்கடப்படுத்தும் சண்டக்கோழி பிள்ளைகள்!”

என் டைரி- 348

"சங்கடப்படுத்தும் சண்டக்கோழி பிள்ளைகள்!”

Published:Updated:

’முதுமை என்றாலே, மனநிம்மதி இருக்காதோ’ என்று மறுகும் தம்பதி நாங்கள்!

எங்களுக்கு ஓர் ஆண், ஒரு பெண் என்று இரண்டு பிள்ளைகள். இருவருக்கும் திருமணம் முடித்தாயிற்று. மகள் வெளிநாட்டில் வசிக்க, மகன் ஒரு பெரிய நகரத்தில் வசிக்கிறான். நாங்கள் எங்களின் பூர்விகமான இரண்டாம் கட்ட நகரத்தில் வசிக்கிறோம். ஓய்வுபெற்ற அரசு ஊழியரான என் கணவரின் பென்ஷன் பணம், எங்களின் தேவைக்குப் போதுமானதாக இருக்கிறது.

என் டைரி- 348

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த எழுபது ப்ளஸ் வயதில், நானும் அவரும் எங்கள் வேலைகளை நாங்களே செய்துகொண்டு நாட்களை நகர்த்துவது, சிரமமாக இருக்கிறது. அவருடன் நானும், என்னுடன் அவரும் பேசுவதைத் தவிர, உறவுகள், நண்பர்கள் என்று யாரும் எங்களைத் தேடி வருவது கிடையாது. பொங்கல், தீபாவளிக்குக்கூட வருவதில்லை பிள்ளைகள். அவ்வப்போது தொலைபேசியில் தொடர்புகொள்வதோடு சரி.

இந்நிலையில், எங்களைப் போன்ற வயதானவர்கள் சங்கமிக்கும் முதியோர் இல்லம் ஒன்றில் நாங்களும் சேர முடிவெடுத்தோம். அங்கே எங்களுடன் பேசிச் சிரிக்க, அனுபவங்கள் பகிர, சேர்ந்து பூஜையில் அமர, கம்பு ஊன்றி வாக்கிங் செல்ல என எங்களைப் போன்ற ஜீவன்கள் இருப்பார்களே என்று ஆசையுற்றோம்.

இந்த முடிவு, எங்கள் பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லை. என் மகனை தொலை பேசியில் அழைத்து, ''நீ அப்பா, அம்மாவை ஒழுங்கா பார்த்துக்காததாலதான் அவங்க ஹோமுக்கு போறேன்னு சொல்றாங்க...'' என்று சண்டை போட்டிருக்கிறாள் என் மகள். இந்தப் பிரச்னையாலேயே என் மகனும் மகளும் கடந்த ஆறு மாதங்களாகப் பேசிக்கொள்வதில்லை. ''எங்களுக்குப் பின் நீங்கள் ஒற்றுமையாக இருப்பதுதான் நாங்கள் கடவுளிடம் வேண்டுவது'' என்று சமரசத்துக்கு முயன்றும், பலனில்லை.

இந்நிலையில் திடீரென, ''நீங்க ரெண்டு பேரும் கிளம்பி என் வீட்டுக்கு வாங்க. நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போறதால, பிள்ளைகளைப் பார்த்துக்கிட்ட மாதிரியும் இருக்கும்'' என்று அழைத்தான் மகன். ஆனால், அதற்குப் பின் பாசமில்லை, எங்களை வீட்டு வேலைகளுக்கும், குழந்தை வளர்ப்புக்கும் பயன்படுத்திக்கொள்ளும் அவன் கணக்கீடே உள்ளது என்பது எங்களுக்குப் புரிகிறது. இத்தனை வருடங்களாக உழைத்துக் களைத்தாயிற்று என்பதால், இனி நாங்கள் வேண்டுவது ஓய்வே! எனவே, அவன் அழைப்பை எங்களால் ஏற்கமுடியவில்லை.

''நீங்க வீம்பு பண்றீங்க. ஆனா, உங்க பொண்ணு என்னமோ எங்களை குற்றம் சொல்றா...'' என்று மகன் கோபமாக, ''நீங்க பாசத்தோட கூப்பிடாம, உங்க சுயநலத்துக்காகக் கூப்பிட்டீங்கனா எப்படி வருவாங்க?'' என்று மகள் திருப்பிப் பேச, எங்களாலேயே அவர்களின் பிரிவு வலுப்படுகிறது என்பது, பெரிய வேதனையாக இருக்கிறது.

என் மகனையும் மகளையும் சமரசம் செய்யவும், நாங்கள் விருப்பம்போல் முதியோர் இல்லத்தில் சேரவும் வழிகாட்டுங்களேன்!

பெயர் வெளியிட விரும்பாத முதிய தம்பதி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 347-ன் சுருக்கம்

என் டைரி- 348

''இருவீட்டாரின் எதிர்ப்புகளை மீறி காதல் திருமணம் செய்துகொண்டவள் நான். குழந்தை பிறந்ததும் உலகத்திலேயே மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்ந்தேன். சாஃப்ட்வேர் நிறுவனத்தில் மேலாளர் பணியிலிருக்கும் என் கணவர், குழந்தை பிறந்து 6 மாதம் ஆன நிலையில், புராஜெக்ட் விஷயமாக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார். 3 மாத புராஜெக்ட் என்றவர், மகளுக்கு ஐந்து வயதாகியும் திரும்பவில்லை. ஆனால், தினமும் எங்களிடம் போனில் பேசுவதோடு செலவுக்குப் பணம் அனுப்பிவைக்கிறார். இரு வீட்டிலும் எங்களை ஏற்காத நிலையில்... குழந்தையுடன் தனித்தே இருக்கிறேன். அக்கம்பக்கத்தினர், 'அஞ்சு வருஷமாவா புராஜெக்ட்... அப்ப ஏன் மூணு மாசத்துல வந்துடுவேன்னு சொல்லணும்?’, 'அவர் ஏமாத்தறார்னு தோணுது’, 'அவரை நம்பி உன் வாழ்க்கையை வீணாக்காதே...’ என்று ஏகப்பட்ட அறிவுரைகள் கூறுகிறார்கள். இதுபற்றி கணவரிடம் சொன்னால், 'அவங்ககிட்ட நம்ம குடும்பத்தைப் பத்தி ஏன் சொல்ற? அவங்களுக்கு எல்லாம் விளக்கத் தேவையில்ல. நான் சீக்கிரம் வந்துடறேன்’ என்று சொல்கிறார். கொஞ்சம் வலியுறுத்திக் கேட்டால்... சண்டையில் முடிகிறது போன் பேச்சு! ’ஊரார் பேச்சைக் கேட்பதால் ஏதாவது வினை வருமோ?’ என்று அச்சமாக இருக்கிறது. மறுபக்கம்... கணவர் மீது சந்தேகமும் வருகிறது.

தெளிவது எப்படி தோழிகளே?''

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி- 348

 100

பி கேர்ஃபுல்!

என்னதான் பிஸியான புராஜெக்டாக இருந்தாலும் ஐந்து வருடத்தில் ஒருமுறைகூட வராமல் இருப்பது நெருடலை ஏற்படுத்துகிறது. 'உங்களைப் பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு... இப்பவே நானும் நம்ம மகளும் கிளம்பி அங்கே வருகிறோம்’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு அவரோட ரியாக்‌ஷனை கவனியுங்கள். முள் மேல் போட்ட துணியை எடுக்கற மாதிரி கவனமா டீல் பண்ண வேண்டிய விஷயம் இது. பி கேர் ஃபுல்.

- எஸ்.ராஜம், சேலம்

நல்லதே நடக்கும்!

பிறந்தவீடு, புகுந்தவீடு ஆதரவின்றி ஒரு குழந்தையை முதல் ஐந்து வருடங்கள் வளர்ப்பது என்பது லேசான காரியமல்ல. குழந்தை வளர்ப்பில் உனக்கு மட்டுமே கடமை உள்ளதாக எண்ணி, உன் கணவனை நீ டிஸ்டர்ப் செய்யவில்லை. மற்றவர்கள் விமர்சித்த பிறகே உனக்கு உறைக்கிறது. நீயே அழைக்காததால், அவருக்கு 'குளிர்விட்டு’ போயிருக்கிறது. அவரை வரவழை. இல்லையேல் ராமனிருக்குமிடமே அயோத்தி என்று அவருடனே போய் வாழ். நல்லதே நடக்கும்.

- தவமணி கோவிந்தராசன், ராயபுரம்

தன்னம்பிக்கையை கைவிடாதே!

காதலித்து திருமணம் செய்ததிலும் தப்பில்லை; இருவீட்டாரை எதிர்த்து திருமணம் செய்ததிலும் தப்பில்லை. கணவர்மீது சந்தேகம் கொள்ளாதே. நீ படித்திருந்தால், மேலும் படி. வேலைக்குச் செல்ல இருப்பதாக அவரிடம் கூறு. உங்கள் இருவீட்டாருக்கும் நிலைமை தெரிவதுபோல் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறு. அப்புறம் நிலைமை சரியாகிவிடும். தன்னம்பிக்கையை கைவிடாதே.

- எஸ்.ராகிணிசுதா, சென்னை-37

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism