Published:Updated:

என் டைரி - 351

என் டைரி - 351

கதை திரைக்கதை வசனம் இயக்கம்

ன் அப்பா, எங்கள் ஊரில் தியேட்டர் ஆபரேட்டராகப் பணிபுரிந்தவர். அதனால் சிறு வயது முதலே அவருடன் சேர்ந்து சினிமாவைப் பார்த்தும், பேசியும், ரசித்தும், விவாதித்தும் வளர்ந்ததால், எனக்குத் திரைத்துறையில் அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. கேமராவுக்குப் பின், கிரியேட்டராக ஏதாவது வேலை பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டேன். பள்ளி இறுதி நாட்களின்போது அதுவே என் கனவு, லட்சியம் ஆனது.

கல்லூரியில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பு படிக்க ஆர்வம்கொண்ட என்னை, 'பொம்பளப் புள்ளைக்கு அதெல்லாம் ஆகவே ஆகாது’ என்று சொல்லி பொறியியல் கல்லூரியில் சேர்த்தனர். அப்பா மறைந்துவிட்டதால், எனக்கு ஆதரவுக்கும் ஆளில்லாமல் போனது. என்றாலும், பி.இ படித்துக்கொண்டே போட்டோகிராஃபி, எடிட்டிங், அனிமேஷன் போன்றவற்றை டிப்ளோமா கோர்ஸ்களாக படித்து முடித்தேன். திரைத்துறைக்குத் தேவையான கற்பனை வளத்துடன், தொழில்நுட்பத்திலும் என்னை மெருகேற்றிக் கொண்டேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என் டைரி - 351

பி.இ முடித்தபோது, சாஃப்ட்வேர் நிறுவனத்தில்தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று மீண்டும் வீட்டில் நிர்பந்திக்க, நேர்காணலுக்குச் சென்றபோது, நான்கு வருடங்களாக விருப்பமில்லாமல் நான் படித்த படிப்பில் அடிப்படை அறிவுகூட எனக்கில்லை என்பது புரிந்தது. 'பிடிச்சதைப் படிக்கவிட்டிருந்தா, இந்நேரம் மீடியாவில் நிச்சயம் ஒரு வேலையில் சேர்ந்திருப்பேன். இதுக்கு நீங்கதான் காரணம்’ என்று வீட்டில் அழுதபோதும், 'வேலைக்கே போகலைனாலும் பரவாயில்ல, சினிமா வேண்டாம்’ என்றனர். அப்படியே என்னை வீட்டில் இருக்க வைத்துவிடுவார்கள் என்ற பயத்தில், என் ஆங்கில அறிவால், ஒரு பி.பீ.ஓ நிறுவனத்தில் வேலை கிடைக்கப்பெற்று, மூன்று வருடங்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

இப்போதும் என் சினிமா லட்சியம் அணைந்துவிடவில்லை. திரைத்துறை அறிவுத் தேடலைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறேன். இந்நிலையில், தனது உடல்நிலை, திருமண வயதில் இருக்கும் தங்கை என காரணம் காட்டி, என்னைத் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்துகிறார் அம்மா. இப்படி பிறருக்காக ஏற்கெனவே ஒருமுறை என் பாதையை மாற்றியதால்தான், மனசுக்குப் பிடிக்காத வேலையில் இருக்கிறேன். இனி அவர்கள் சொல்படி திருமணமும் செய்துகொண்டால், என் கனவு கனவாகவே கரைந்துவிடும். விருப்பப்பட்ட துறையில் பணியாற்ற முடியாத ஏக்கம், வாழ்க்கை முழுக்க நிம்மதியாக இருக்க விடாது.

’விதி இதுதான்’ என்று, என் லட்சியத்தை தூக்கி வீசிவிட்டு தாலி கட்டிக்கொண்டு சிறைப்பட்டுக்கொள்ளவா? என் மன உறுதியால் என் அம்மாவின் பிடிவாதத்தைக் குலைத்து, இலக்கை நோக்கி நடை போடவா?

வழிகாட்டுங்கள் தோழிகளே!

பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 350-ன் சுருக்கம்

என் டைரி - 351

”கல்லூரிக் காலத்தில் ஒருவரைக் காதலித்தேன். ஜாதியைக் காரணம் காட்டி இருவீட்டாரும் சம்மதிக்காததால், பிரிவது என்று முடிவு செய்தோம். காதலர் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில், வற்புறுத்தி தாங்கள் பார்த்த மாப்பிள்ளைக்கு என்னை மணம் முடித்து வைத்தனர் என் வீட்டார். முன்னாள் காதலர் பற்றி யாரோ என் கணவரிடம் சொல்ல, அன்று முதல் என் வாழ்வு நரகமானது. இதற்கிடையே பெண் குழந்தை பிறந்தது. என்னையும், குழந்தையையும் கணவர் புறக்கணித்ததால், அம்மா வீட்டிலேயே தங்கும்படியானது. இந்நிலையில், குடித்துவிட்டு வண்டி ஓட்டி விபத்தில் உயிரை இழந்தார் கணவர். மாமியார் வீட்டார், என் மீது குறை கூறி என்னையும், என் பிள்ளையையும் தள்ளி வைத்தனர். பெற்றோர் அரவணைப்பில், வேலை பார்த்துக் கொண்டே என் குழந்தையை வளர்த்து வருகிறேன். இந்நிலையில், நான் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு 'விசிட்டிங்’ என்ற பெயரில் என் முன்னாள் காதலர் வெளிநாட்டிலிருந்து வந்தார். அப்போது அவருக்குத் திருமணமாகவில்லை என்று தெரிவித்தார். என் வாழ்க்கை பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்ட அவர், என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறினார். ’பழைய காதலரை ஏற்றுக்கொள்வதா? பின்னாளில் இவரும் குத்திக்காட்டி பேசினால் என்ன செய்வது?’ என்று குழப்பத்தில் தவிக்கிறேன். தெளிவு கூறுங்கள் தோழிகளே!''

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ’100

இது தெய்வச் செயல்!

உங்கள் வாழ்க்கையில் நடந்திருப்பவற்றை பார்க்கும்போது உங்களது துயரங்களுக்கிடையிலும் இறைவன் நல்லதொரு வழியை உங்கள் முன்னாள் காதலர் மூலம் காட்டுவதுபோல் தெரிகிறது. இதுநாள் வரை அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதும், அதிர்ஷ்டவசமாக உங்களைச் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவித்திருப்பதையும் தெய்வச் செயல் என்றே எண்ணுகிறேன். நல்லுள்ளத்துடன் உங்களைத் திருமணம் செய்ய முன் வந்திருப்பவரை துணிவுடன் கரம்பற்றுங்கள்.

- ஷாலினி ஜெரால்டு, விருகம்பாக்கம்

புது வாழ்க்கை தொடங்கு!

உன் வாழ்வில் பழைய காதலரைச் சந்தித்ததும், அவர் உன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறுவதும் தற்செயலாக நடந்தவை. திட்டமிட்டு நடத்தியதல்ல. மேலும் உன் காதலரைப் பற்றி உனக்கு ஏற்கெனவே ஓரளவாவது தெரியும்! அவரது  நம்பகத்தன்மையும் புரியும். எனவே, உன் காதலரிடம் உனக்கு நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், உன் குழந்தையின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, இரண்டாவது முறையும் ஏமாறாமல் அவரை மணந்து புது வாழ்க்கையைத் தொடரலாம்!

- லக்ஷ்மி வாசன், சென்னை-33

நல்ல வாய்ப்பை நழுவவிடாதே!

மண வாழ்க்கையில் சோகத்தை அனுபவித்த நீ மறுமணம் செய்துகொள்வது நல்லதே! முதலில் அவருக்குத் திருமணம் ஆகிவிட்டதா என்பதை உறுதி செய். மேலும் அவர் உன் குழந்தையைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வாரா அல்லது உன் பெற்றோரிடம் விட வேண்டுமா என்பதையெல்லாம் தெளிவாகப் பேசு. உன்னைப் புரிந்து கொண்டவரையே ஏற்று நலம் பெற முயற்சிப்பதில் தவறில்லை. உன் முதல் திருமணத்துக்குப்பின் உன்னைத் தொடர்புகொள்ள முயற்சிக்காத, தொந்தரவு தராத உன் காதலர் நல்லவரென்றே நம்பலாம். அச்சத்தினால் வாய்ப்பை நழுவ விடாமல் அவரையே மணப்பதுதான் புத்திசாலித்தனம். வாழ்த்துகள்.

- ராஜேஸ்வரி கிட்டு, புதுச்சேரி