Published:Updated:

என் டைரி- 354

இரண்டு கல்யாணம்... இருட்டான வாழ்க்கை!

என் டைரி- 354

இரண்டு கல்யாணம்... இருட்டான வாழ்க்கை!

Published:Updated:

நான், என் அண்ணன் என்று எங்கள் வீட்டில் இரண்டு பிள்ளைகள். என் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், எனக்குத் திருமணம் செய்து வைத்தனர். கணவர் ஒரு சைக்கோ என்பது, மணமான சில மாதங்களில் புரிந்தது. கல்யாணமான புதிதில், என் அப்பா, அம்மா என்னைப் பார்க்க வந்தால், என்னை அறைக்குள் அடைத்துவைத்துவிட்டு, ‘அவ கோயிலுக்குப் போயிருக்கா’ என்பது, இரவு ஒரு மணி, இரண்டு மணிக்கு எழுப்பி, ‘அய்யய்யோ... தலை கலைஞ்சிருச்சு பாரு, போய் சீவிட்டு வா’ என்பது, வெளியில் கிளம்பும்போது திடீரென, ‘இந்த டிரெஸ் வேண்டாம், பழைய டிரெஸ் போட்டுட்டு வா’ என்பது என்று... சந்தேகப்புத்தி, சாடிஸ்ட் மனநிலை என்று எல்லாமுமாகச் சேர்ந்து படுத்தியவனிடமிருந்து ஆறே மாதங்களில் பிரிந்தேன். வீட்டில் என் நிலைமையைப் புரிந்துகொண்டதால், ஒன்றரை வருடங்களில் விவாகரத்தும் பெற்றேன்.

என் டைரி- 354

என் மறுமணம் பற்றிப் பேசியபோது, ‘இப்போது வேண்டாம், சில வருடங்கள் கழியட்டும்... மனக்காயங்கள் ஆறட்டும்’ என்றவுடன், அண்ணனின் திருமணத்தை முடித்தார்கள். அண்ணி, என் அத்தை பெண்தான். அதனால் எனக்கு ஆயுளுக்கும் ஆதரவாக இருப்பார் என்பது என் பெற்றோரின் கணக்கு. ஆனால் அவரோ, என்னைஅந்த வீட்டில் ஒரு சுமையாகவே கருதினார். எனவே, என் திருமணத்தை அவசரப்படுத்தினார். ஊர் ஊராகச் சென்று தானே மாப்பிள்ளை பார்த்தார். அப்படி வந்த வெளியூர் வரன்தான் அவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த மாப்பிள்ளைக்கும் இது இரண்டாவது திருமணம். முதல் திருமணத்தில், என் பிரச்னை போலவே சைக்கோ பெண்ணைக் கல்யாணம் பண்ணிப் பிரிந்ததாகச் சொன்னார்கள். ஒரே பிரச்னையால் காயப்பட்டவர்கள் என்பதால், இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள் என்று என் பெற்றோர் நம்பினார்கள். நானும் நம்பினேன். ஆனால், அந்த மாப்பிள்ளை ஆண்மையற்றவர் என்பது, என் வாழ்வின் இரண்டாவது பேரிடி. அதனால்தான் அவரின் முந்தைய திருமணம் முறிந்தது என்ற உண்மையை மறைத்து, என் வாழ்வையும் நாசமாக்கிவிட்டனர்.

இம்முறை எனக்கு என் வீட்டினர் ஆதரவு இல்லை. ‘ஒரு கல்யாணம் பண்றதுக்கே இங்க பலருக்கும் வழியில்லாம இருக்கும்போது, ரெண்டு கல்யாணம் பண்ணி வைக்க செலவு என்ன ஆனது தெரியுமா? அதையும் வாழமாட்டேன்னு வந்து நின்னா, யாரு உன்னைத் தாங்குவானு நினைச்சே? நல்லதோ, கெட்டதோ... இனி அதுதான் உன் வாழ்க்கைனு நினைச்சுக்கோ’ என்று அண்ணி கொடுத்த சாவிக்கு ஆடுகிறான் அண்ணன். ‘ரெண்டு கல்யாணம் பண்ணியும் ஒரு பொண்ணு வாழலைன்னா, ஊரு உலகம் நம்மைத்தான் தப்பா பேசும்’ என்று அந்த அபத்த வாழ்க்கையை என்னை வாழச் சொல்லி அழுகிறார்கள் பெற்றோரும்.

என்ன செய்ய தோழிகளே?! 

- பெயர் வெளியிட விரும்பாத துரதிர்ஷ்டசாலி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு... என் டைரி 353-ன் சுருக்கம்

என் டைரி- 354

‘‘வயோதிகத்தால், மெனோபாஸ், மூட்டுத் தேய்மானப் பிரச்னை என்று ஒத்துழைக்காத உடல்நிலையுடன் போராடிக்கொண்டிருக்கிறோம் நானும் கணவரும். இந்நிலையில், வெளிநாட்டில் இருக்கும் என் மகன், தன் மனைவி அங்கே மேற்படிப்பு படிக்க இருப்பதால், மூன்று வயது ஆண் குழந்தையை எங்களிடம் விடுகிறேன் என்கிறான். பேரனை வளர்க்க ஆசையாக இருந்தாலும், அந்தப் பொறுப்பில் ஒருவேளை எங்கள் உடல்நிலை மேலும் மோசம் அடைந்தால், வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் பார்க்கக்கூட வர மாட்டார்கள் என்பதும் உறுதி. எங்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பையோ, சிரமத்தையோ பிள்ளைகளுக்குக் கொடுக்காத... கை, கால் சுகத்துடன் கூடிய நல்ல சாவை இறைவனிடம் வேண்டுகிறோம். ஆனால், மகனோ, எங்கள் சிரமங்களைப் புரிந்துகொள்ளாமல், எப்போது பேரனை அழைத்து வருவது எனக் கேட்டுக்கொண்டே இருக்கிறான். என்ன பதில் சொல்ல அவனுக்கு?’’

வாசகிகள் ரியாக்‌ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ` 100

நீங்கள் செல்லுங்கள் வெளிநாடு!

நம் உடல்நிலை பற்றிச் சொன்னால் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாத பிள்ளைகளுக்கு நாம் என்ன சொன்னாலும் நம் மேல் கோபம்தான் வரும். எனவே, நீங்களும், கணவரும் வெளிநாட்டில் மகன் வீட்டுக்கே சென்று பேரனைப் பார்த்துக்கொள்வதாகச் சொல்லுங்கள். அது சிறந்த யோசனையும்கூட! நீங்களும் உங்கள் பிள்ளையுடன் இருக்கலாம், உங்கள் பிள்ளையும் அவர் பிள்ளையுடன் இருக்கலாம். குழந்தையை பகலில் நீங்களும் கணவரும் கவனித்துக்கொண்டாலும், மாலையில் பெற்றோரிடம் ஒப்படைத்து சிறிது ஆசுவாசமடையலாம். அங்கே மற்ற வேலைகளுக்கு பணியாள் நியமித்துக்கொள்ளுங்கள்!

- ராஜேஸ்வரி வெங்கட், சென்னை-82, க.கலா, காகிதப்பட்டறை

கடமையைப் புறக்கணிக்காதீர்கள்!

எனக்கு வயது 72, என் மனைவிக்கு 62. பணிஓய்வு பெற்ற நாளில் இருந்து நாங்கள் கோயில், குளம் என்று சுற்றிப் பார்க்கவோ, ஓய்வு எடுக்கவோ விரும்பவில்லை. ஆரம்பத்தில், மேற்படிப்பு, வேலை என்று ஓடிக்கொண்டிருந்த என் மகளின் இரண்டு ஆண் குழந்தைகளையும் வளர்த்துக் கொடுத்தோம். இப்போது மகள் குடும்பம் கனடாவில் வேலை கிடைத்து, வளமாக வாழ்கிறார்கள். என் மகன் திருமணத்தின்போது, மருத்துவப் படிப்பு படித்துக்கொண்டிருந்தார் எங்கள் மருமகள். தொடர்ந்து, அரசு மருத்துவப் பணி, மூன்று வருடங்கள் வெளியூரில் மேற்படிப்பு என்று மருமகள் பரபரப்பாக இருக்க, அவர்களின் இரண்டு பெண் குழந்தைகளையும் நாங்கள் பொறுப்பேற்று வளர்க்கிறோம். மருமகளும் எங்களை அப்பா, அம்மா இடத்தில் வைத்து மகிழ்கிறார்.

என் அம்மா, மனநிலை குறைந்த 74 வயது சகோதரி, கணவரால் கைவிடப்பட்ட 66 வயது சகோதரி... மூவரும்கூட என் அரவணைப்பில்தான் இருக்கிறார்கள். எனக்கு 40 ஆண்டுகளாக சர்க்கரை நோய். ஆகாரக் கட்டுப்பாட்டுடனும் மன உறுதியுடனும் இருப்பதால், ஆரோக்கியத்தைக் காக்க முடிகிறது. சோர்ந்து போனால், சீக்கிரம் வீழ்ந்துவிடுவோம்!

சகோதரி... கடமையைப் புறக்கணிக்காதீர்கள்; நீங்கள் புறக்கணிக்க வேண்டியது... நோயைப் பற்றிய பயத்தை! மேலும், உங்கள் மருமகள் மேற்படிப்புக்காக கேட்கும் உதவி இது. வெளிநாட்டில் பெண்ணுக்கு மேற்படிப்பு என்பது எத்தனை பெரிய வாய்ப்பு! படிப்பை முடித்தால், உங்கள் சந்ததி எவ்வளவு பயன்பெறும்! அதை நினைத்துப் பாருங்கள்; அதற்கு உறுதுணையாக நீங்கள் இருக்கப் போகிறீர்கள் என்ற உற்சாகத்தை மனதில் ஏற்றிப் பாருங்கள். நோய் எல்லாம் தள்ளிப் போகும். பேரனின் வரவுக்காக வீட்டைத் தயார்படுத்துங்கள்!

- என்.கணேஷ், பாண்டிச்சேரி

மறுத்துவிடுங்கள்... தெளிவாக!

வெளிநாட்டில் வளர்ந்த குழந்தை, திடீரென பெற்றோரும் இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட சூழலில் எப்படி தன்னைப் பொருத்திக்கொள்ளும்? எனவே, பேரன் பள்ளிக்குச் செல்லும் வரை, மருமகள் மேற்படிப்பைத் தள்ளிப் போடுவது சிறந்த யோசனையாக இருக்கும். அவனை பள்ளி, டே கேர் என்று அனுப்பும்போது, இவர் கல்லூரி சென்று வந்துவிடலாம். பிள்ளையும் பெற்றோருடன் இருக்கும்; நீங்களும் அளவுக்கு மீறிய சுமை ஏறாமல் இருப்பீர்கள். பாசப் போராட்டத்தில் மறுகாமல், தெளிவாகத் தெரிவியுங்கள் உங்கள் மகனிடம்!

- ர.கிருஷ்ணவேணி, சென்னை-95

உங்களுக்கு நீங்கள்தான் முக்கியம்!

வயதான காலத்தில் பெற்றோருக்கு ஆதரவாக இருப்பதைப் பற்றி யோசிக்காமல், பணம் சம்பாதிப்பதிலேயே விரையும் தலைமுறை இது. உடல் ஓய்வை நாடும் வயதில் ஓடி ஆடி விளையாடும் பிள்ளையைப் பராமரிப்பது இடர்மிகு பணி. மகனைவிட, பேரனைவிட, உங்களுக்கு நீங்கள்தான் முதல் முக்கியம். யோசித்துப் பாருங்கள்... உங்களுக்கான மூன்று வேளை உணவு தயாரிப்பே பெரும்பாடாக இருக்கும். இந்நிலையில், மூன்று வயதுக் குழந்தைக்கு ஆகாரம் கொடுப்பது என்பது, இளம் அம்மாக்களே தள்ளாடும் பொறுப்பு. தேவையற்ற சுமையை ஏற்றிக்கொள்ளாமல், மறுத்துவிடுங்கள் மகனிடம்!

- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை, ஆர்.ராஜேஸ்வரி, ஶ்ரீமுஷ்ணம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism