Published:Updated:

என் டைரி - 356

கல்யாணமா... கடமையா?

என் டைரி - 356

கல்யாணமா... கடமையா?

Published:Updated:

நான், அப்பா, அம்மா, தம்பி... இதுதான் என் குடும்பம். தனியார் நிறுவனம் ஒன்றில் கிளார்க்காக இருக்கும் அப்பாவின் மாதச் சம்பளம் ஏழாயிரம் ரூபாய். என்னையும் தம்பியையும் பொருளாதாரச் சிரமங்களுக்கு இடையில் கடன் வாங்கிப் படிக்க வைத்தார் அப்பா. நான் கல்லூரிப் படிப்பை முடித்து இரண்டு வருடங்களுக்கு முன் வேலையில் சேர, பொருளாதார நிலையில் என் குடும்பம் முன்னேற்றம் கொண்டுள்ளது. தம்பி, கல்லூரி இரண்டாம் ஆண்டில் இருக்கிறான்.

என் டைரி - 356

சிறு வயது முதல் பிள்ளைகளுக்காக உழைத்து, பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து, கடனாளியாகி, சிரமப்பட்டுப் படிக்க வைத்து, பணியில் சேர்ந்த பின், சரியாக வருமானம் வரும் நேரத்தில், ‘பொண்ணுக்கு கல்யாண வயசு வந்துடுச்சு’ என்று திருமணப் பேச்செடுக்கும் பெற்றோர்களில் என் பெற்றோரும் சேர்ந்துவிட்டார்கள். இதுவரை பட்ட கடன் போதாதென்று, திருமணச் செலவு, நகை என்று மேலும் கடன் பெறத் துணிகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படிக்கும் காலத்திலேயே, ‘நல்ல வேலைக்குப் போய் சம்பாதிச்சு, ஆயுளுக்கும் உழைச்ச அப்பாவுக்கு ஓய்வு கொடுக்கணும்’ என்பதுதான் என் ஆசை. அதனால் அவர்களின் இந்தக் கல்யாண ஏற்பாடு சந்தோஷத்தைவிட, `பெற்றோர்களிடமிருந்து அவர்களது உழைப்பை எல்லாம் பிடுங்கிக்கொண்டு வளர்ந்து, இன்று சுலபமாக விடைபெறப் போகிறோம்’ என்ற குற்றஉணர்ச்சியையே எனக்குத் தந்தது. எனவே, திருமணத்துக்கு முன்பே பெற்றோரின் பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த
நினைத்தேன்.

பெற்றோருக்கு என்று குறிப்பிட்ட தொகையை அவர்கள் பெயரில் டெபாஸிட் செய்து வைக்க வேண்டும், தம்பியைப் படிக்க வைக்க வேண்டும். இதற்கெல்லாம் இன்னும் கொஞ்சநாள் நான் வேலைக்குச் செல்ல வேண்டும். இதை வீட்டில் சொன்னபோது, `இன்னும் ரெண்டு வருஷம்தான்... தம்பி படிப்பை முடிச்சிடுவான். அதுவரை நாங்க எப்படியோ சமாளிச்சுப்போம். ஆனா, வயசோட உனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கலைன்னா, அதுதான் எங்களுக்கு பெரிய துயரம்’ என்றனர். ஆனாலும், இதுவரை என்னைப் பெண் பார்க்க வந்த மூன்று வரன்களிடமும் என் இந்த விருப்பத்தைச் சொல்ல, பின்வாங்கிவிட்டனர். பெற்றோரோ, ‘நீ எங்களை அவமானப்படுத்துகிறாய்... பொண்ணு சம்பாத்தியத்துக்காக அவ கல்யாணத்தைத் தள்ளிப்போடுறது, மாப்பிள்ளைகிட்ட கல்யாணத்துக்கு அப்புறமும் பெற்றோருக்குப் பணம் கொடுக்க உறுதி வாங்கறதுனு, எங்க சுயகௌரவத்தையே நீ கெடுக்கிறாய்’ என்று கோபப்படுகிறார்கள்.

என்னைச் சிரமங்களுக்கு இடையில் சீராட்டி வளர்த்து ஆளாக்கியிருக்கும் பெற்றோருக்கு, திருமணத்துக்குப் பின் என் சம்பாத்தியத்தில் இருந்து பொருளாதார ரீதியாக உதவ நினைப்பது தவறா? தவறென்றால், அந்தத் திருமணமே வேண்டாம் என்று விரக்தியாக இருக்கிறது. ஆலோசனை கூறுங்கள் எனக்கு!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 355-ன் சுருக்கம்

என் டைரி - 356

``விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உயிர்த் தோழியின் இறுதி மூச்சு நின்றபோது, அருகே இருந்த எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி, இன்னும் விலகவேயில்லை. ஜோதிடர் ஒருவர் எனக்கு ஜாதகம் சரியில்லை என்றதோடு, என்னைத் துரத்திய சாவுதான் உடன் இருந்த உயிரைப் பறித்துவிட்டதாக கூறினார். போதாக்குறைக்கு, ‘கண்டம் இருக்கிறது என்பதால் குடும்பத்தைப் பிரிந்திருக்க வேண்டும்’ என்றும் அவர் சொல்ல, ஹாஸ்டலில் சேர்க்கப்பட்டேன். என் நட்பு, உறவுகளில் யாராவது இறந்தால், ஏதோ கொலை செய்தது போல என் மனம் நடுங்கியது. என் பெற்றோரோ, ‘கல்யாணமானா சரியாகிடும்’ என்று எனக்கு மணமுடித்து வைத்தனர். ஆனால், இறப்புச் செய்திகளைக் கேட்டால், வியர்த்து விறுவிறுத்து, கை, கால்கள் நடுங்கியபடி சுருண்டு படுத்துக்கிடக்கும் என்னைப் பார்த்த என் புகுந்த வீட்டினர், ஏதோ பிரச்னை என்பதை புரிந்துகொண்டனர். கணவரிடம் கடந்த காலம் அனைத்தையும் சொன்னதும், சைக்காலஜிக்கல் ட்ரீட்மென்ட்டுக்கு அழைக்கிறார். வெளியே தெரிந்தால், `மனநிலை சரியில்லாதவள்’ என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்று தவிக்கிறேன். மேலும் `இது குணப்படுத்த முடியாதது’ என்று மருத்துவர் சொல்லிவிட்டால், கணவர் கைவிட்டுவிடுவாரோ என்ற நினைக்கத் தோன்றுகிறது. என்ன செய்யட்டும் நான்?''

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ` 100

நம்பிக்கை நலம் தரும்!

குணப்படுத்த முடியாதது என்று உலகில் எதுவுமேயில்லை என்பதை முதலில் நீங்கள் நம்ப வேண்டும். அடுத்ததாக மருத்துவரின் ஆலோசனைகளுக்கும் திடமான முறையில் ஒத்துழைப்பு கொடுங்கள். தன்னம்பிக்கையும், மனக்கட்டுப்பாடும் துணையிருந்தால், நீங்கள் விரைவில் விடுவிக்கப்படுவீர்கள். அதன் பிறகு பெரியவர்களின் ஆலோசனைப்படி ஏதாவது கோயிலுக்குச் சென்று பரிகாரம் செய்யுங்கள்.

- ஜி.எலிஸபெத் ராணி, பழைய விளாங்குடி

ட்ரீட்மென்டுக்குப் போ!

நீ தேவையில்லாமல் தவிக்கிறாய். உன் கணவர் சொல்படி சைக்கலாஜிக்கல் ட்ரீட்மென்டுக்குப் போ! விஞ்ஞானம் வளர்ந்த நிலையில் மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோயே கிடையாது. நீயாக வீணாக ஏதேதோ கற்பனை செய்து உன் வாழ்க்கையை பாழடிக்காதே! நீ சீக்கிரமே பழைய நிலையை அடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

- ஆர்.பிருந்தா, திருவான்மியூர்

போனது போகட்டும்... இல்லறம் சிறக்கட்டும்!

உன் தோழி இறந்ததற்கு காரணம் விதி. அதை யாராலும் மாற்ற முடியாது. பிறப்பு என்று இருக்கும்போது இறப்பு என்பதும் எல்லாருக்கும் உண்டு என்பது நாம் அறிந்ததே. ஜாதகம், ஜோதிடம் என்பது முழுவதுமாக பலிக்கும் என்பது நிச்சயம் கிடையாது. உனக்கென ஒரு வாழ்க்கை அமைந்த பிறகு பழைய விஷயங்களை ஏன் நினைத்துக்கொண்டிருக்கிறாய். நடந்ததை மறந்து, கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்து. இல்லறம் நல்லறமாகும்.

- ஆர்.ராமாத்தாள், வேளச்சேரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism