Published:Updated:

என் டைரி - 357

ஏன் கொலை செய்தாய் என் நட்பை?!

என் டைரி - 357

ஏன் கொலை செய்தாய் என் நட்பை?!

Published:Updated:

மூன்றாம் வகுப்பில் இருந்து எனக்குத் தோழன் அவன். பள்ளி, கல்லூரி என்று இணைபிரியாமல் வளர்ந்தோம், அன்பு பகிர்ந்தோம். எனக்கு வரன் பார்க்க ஆரம்பித்தபோது, மாப்பிள்ளை குறித்த என் ஒரே எதிர்பார்ப்பு... எங்கள் நட்பை அவர் புரிந்துகொண்டவராக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால், அதற்கு எதிர் செய்தது விதி!

என் டைரி - 357

கணவரிடம் என் தோழனைப் பற்றிச் சொன்னபோது, `‘இதுவரை சரி. இனிமே `ஃப்ரெண்ட், ஃப்ரெண்ட்ஷிப்'னு எல்லாம் சொல்லிக்கிட்டு அவன்கிட்ட பேசாதே’' என்று அதிர்ச்சி அளித்தார். அவனுடன் நான் பேசுவதைத் தடுப்பதற்காகவே, நான் செல்போன் வைத்துக்கொள்ளக் கூடாது என்றார். வீட்டு லேண்ட்லைனிலேயே பேச வேண்டும் என்றார். இதை எல்லாம் தோழனிடம் சொல்லாமல், ‘என் கணவர் ரொம்ப நல்லவர்’ என்று சமாளித்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் தோழன் என்றாவது ஒருநாள் என்னுடன் லேண்ட்லைனில் பேசுவான். அதற்கு அவரும் அனுமதி அளித்திருந்தார். ஆனாலும்கூட, அவர் போனை எடுக்க நேரிட்டால், அவர் எதிரில் நான் இருக்கும்போதே, ``அவ வீட்டில் இல்லையே’' என்று சொல்லி போனை வைத்துவிடுவார். என் நண்பனுடனான என் உரையாடல்களும், பரஸ்பர பகிர்தல், அன்பு, ஆறுதல் என்ற நிலையில் இருந்தெல்லாம் இறங்கி, சம்பிரதாய விசாரிப்பாகவே மாறியிருந்தன. இருந்தாலும், ஏதோ ஒரு புள்ளியில் அந்த நட்பு விடுபடாமல் தொடர்கிறது என்பதே எனக்கு ஆறுதலாக இருந்தது.

இந்நிலையில் அவனுக்குத் திருமணம் முடிவாகியிருந்தது. வெளியூரில் இருக்கும் அவன், நான் வீட்டில் இருப்பதை உறுதிசெய்துகொண்டு, அழைப்பிதழ் வைக்க வருவதாகக் கூறினான். இதை கணவரிடம் கூறி, அவரையும் அந்த நேரத்தில் வீட்டில் இருக்குமாறு கூறினேன். உடனே அவர், `‘எனக்கு ரெண்டு நாள் லீவ் கிடைச்சிருக்கு. நாம இன்னிக்கு நைட் ஊருக்குப் போறோம். அவனை பக்கத்து வீட்டுல பத்திரிகையை கொடுத்துட்டுப் போகச் சொல்லு’' என்றபோது, வெறுத்துவிட்டது எனக்கு! 20 வருடத் தோழனுக்கு என்னால் கொடுக்கக் கூடிய மரியாதை இதுதானா? இறுதியில் எல்லா பெண்களையும் போல, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்றெண்ணி, மேற்கொண்டு பிரச்னை வேண்டாம் என்று திருமணத்துக்கும் செல்ல வில்லை. அவனுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டேன்.

நான் இவ்வளவு அனுசரித்தும், இப்போதும் எங்களுக்குள் ஏதாவது வாக்குவாதம் என்றால், அவனை இழுத்து அசிங்கமாகப் பேசுகிறார். ஒரு நல்ல நட்பை கொடூரமாகக் கொல்கிறார். இதனாலேயே எனக்கு அவரிடமிருந்த அன்பு, பிரியம் எல்லாம் வறண்டுகொண்டே வருகிறது. மணமான ஒரு வருடத்துக்குள் வாழ்க்கையையே வெறுக்கச் செய்துவிட்டார்.

என் மனபாரத்துக்கு மருந்தென்ன தோழிகளே?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 356-ன் சுருக்கம்

``என்னையும், தம்பியையும் சிரமங்களுக்கிடையே கடன் வாங்கிப் படிக்க வைத்தார் தனியார் நிறுவன கிளார்க்காக இருக்கும் அப்பா. கல்லூரிப் படிப்பு முடித்ததும் நான் வேலையில் சேர, பொருளாதார நிலையில் என் குடும்பம் முன்னேறியுள்ளது. எனக்குத் திருமணம் முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள் பெற்றோர். ‘பெற்றோருக்கு குறிப்பிட்ட தொகையை டெபாஸிட் செய்ய வேண்டும்; தம்பியைப் படிக்க வைக்க வேண்டும். இதற்கு இன்னும் கொஞ்சநாள் வேலைக்குச் செல்ல வேண்டும்’ என்ற என் எண்ணத்தை சொன்னபோது, `வயசோட உனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கலைன்னா, அது எங்களுக்கு பெரிய துயரம்’ என்கின்றனர்.

என் டைரி - 357

இதற்கிடையே, என்னைப் பெண் பார்க்க வந்த மூன்று வரன்களிடமும் பெற்றோருக்கு உதவ நினைக்கும் என் விருப்பத்தைச் சொல்ல... அவர்கள் பின்வாங்கிவிட்டனர்.  `வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு, திருமணத்துக்குப் பின்னும் நான் சம்பாதித்து பொருளாதார ரீதியாக உதவ நினைப்பது தவறா? அப்படியானால் திருமணமே வேண்டாம்’ என்று விரக்தியாக இருக்கிறது. ஆலோசனை கூறுங்கள்!’’

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 100

காலம் கைகொடுக்கும்!

கல்வித்தகுதியில் கரையேற்றிய பெற்றோர் மீது நீங்கள் வைத்திருக்கும் கரிசனம் அபரிமிதமானது. ‘இருக்கும் கடனுக்கு மேல் இனியும் கடனா!’ என்ற வருத்தமும் நியாயமானதே! ஆனால் தோழியே, ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கும் பெற்றோரின் தவத்தை முதலில் நிறைவேற்றுங்கள். காலப்போக்கில் கடனெல்லாம் கரைந்துவிடும்.

- ராணி மகாலிங்கம், ஞானஒளிவுபுரம்

திருமணத்தை தள்ளிப் போடாதே! 

நீ சொல்வதெல்லாம் உண்மைதான். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் இப்படி நினைப்பது மிகவும் வரவேற்கக்கூடிய விஷயம். ஆனால், திருமணமான பின்பு இதைச் செயல்படுத்தலாம். இன்றைய இளைஞர்கள் தன் குடும்பம் போல் மனைவி குடும்பத்தையும் நேசிக்கிறார்கள். உன் வருங்கால கணவரின் ஆதரவோடு உன் கடமையை தாராளமாக செய். இதற்கிடையே திருமண விஷயத்தை தள்ளிப் போட வேண்டாம். காலத்தே பயிர் செய்து அறுவடை செய்வதே சாலச் சிறந்தது.

- ராஜேஸ்வரி வெங்கட், சென்னை-82

பெற்றோர் கௌரவத்தைக் காப்பாற்று!

சுயநல சிந்தனையுடன் இருக்கும் பெற்றோர் அதிக அளவில் உள்ள இக்காலத்தில், பெற்ற பெண்ணுக்கு உயர் படிப்பும், வேலையும் கிடைக்கச் செய்து, உரிய நேரத்தில் திருமணத்தை நடத்திவிடத் துடிக்கும் உன் பெற்றோர் மிக மிக உயர்ந்தவர்கள், போற்றுதற்குரியவர்கள்! அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்து அவர்களின் கௌரவத்தை காப்பாற்று. அதுவே அவர்களுக்கு நீ செய்யக்கூடிய மரியாதையும் நன்றிக் கடனுமாகும். உன் தந்தையும், தம்பியும் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வார்கள். கவலையை விட்டு கல்யாணத்துக்கு தயாராகு!

- ஜெயா மகாதேவன், பாலவாக்கம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism