Published:Updated:

என் டைரி - 358

தனிமரமாக்கிய விதி... தலைதூக்க என்ன வழி?

என் டைரி - 358

தனிமரமாக்கிய விதி... தலைதூக்க என்ன வழி?

Published:Updated:

சின்னதாக ஒரு தொழில் செய்துகொண்டிருக் கிறேன். ஒருமுறை பயணத்தில் என் கைப்பையைத் தவறவிட, அதிலிருந்த பிசினஸ் பணம் இரண்டு லட்சம் பறிபோனது. வீட்டில் விஷயத்தைச் சொன்னால், என்னைத் திட்டுவதோடு, என் தொழிலில் இருந்து என்னை முற்றிலுமாக முடக்கிவிடுவார்கள் என்பதால் மறைத்துவிட்டேன்.

என் டைரி - 358

நடந்த ஒரு சம்பவத்தை மறைக்க, நான் செய்த அடுத்தடுத்த வேலைகள்தான் என் வாழ்வின் பெரிய தவறாகிப்போனது. தொழில் நிமித்தமாக ஒருவருக்குக் கொடுக்க வேண்டிய பணம் அந்த இரண்டு லட்சம். சூழ்நிலையைச் சமாளிக்க முடியாமல், சொத்துப் பத்திரத்தையும், மாமியாரின் நகையையும் மாமனார், மாமியார் இருவருக்கும் தெரியாமலே அடகு வைத்து பணத்தை கொடுக்க வேண்டியவருக்குக் கொடுத்துவிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீட்டில் யாரும் நகையையோ, சொத்துப் பத்திரத்தையோ பற்றி கவனிக்காமல் இருக்க, சில மாதங்களில் எப்படியாவது பணத்தைப் புரட்டி நகை, பத்திரத்தை மீட்டுவிடலாம் என்றிருந்தேன். விதி... என் கணவர் விபத்தொன்றில் சிக்கிவிட்டார். உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்ல, நான் திக்கற்று நின்றேன். என் மாமியார் மருத்துவச் செலவுக்கு அடகு வைக்க தன் நகையைத் தேட, அதைக் காணவில்லை என்றதும்  புகுந்த வீட்டினர் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அதைப் பற்றி யோசிக்க நேரமில்லாததால், அடுத்ததாக என் சொந்த வங்கி லாக்கரில் வைத்திருந்த பத்திரத்தைக் கேட்க, ஒரு மிக சிக்கலான தருணத்தில் நான் உண்மையைச் சொன்னேன். அவர்களுக்கு என் மேல் வந்த கோபத்தை விவரிக்க வார்த்தையில்லை.

உறவுகளின் உதவியோடு இப்போது என் கணவர் குணமடைந்துவிட்டாலும், புகுந்த வீட்டில் யாரும் என்னை மன்னிக்கத் தயாராக இல்லை. தாய் வீட்டில் இருக்கும் என்னை, செய்த தவற்றைச் சுட்டிக்காட்டி பெற்றோரும் தினம் தினம் ஏசுகிறார்கள். தொடர்ந்து, விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கும் கணவருக்கு, என் சூழ்நிலையைப் புரிய வைக்கும் நம்பிக்கையை நடந்த சில சம்பவங்களால் அடியோடு இழந்துவிட்டேன்.

மணமான ஐந்து வருடங்களில், குழந்தை இல்லை என்பதைக்கூட அனுசரித்து நடந்த கணவர், இப்போது என் நம்பிக்கை துரோகத்தால் என்னைப் பிரிவதில் உறுதியாக இருக்கிறார். நான் விட்டுக்கொடுத்தால் அவர் வாழ்க்கையாவது நன்றாக இருக்கும் என்று தோன்றி னாலும், வாழ்க்கை முழுக்கத் தனிமரமாக நிற்கும் பெரிய தண்டனைக்கான தப்பை நான் செய்துவிடவில்லையே என்று மனம் அழுகிறது.

நான் என்ன செய்யட்டும் தோழிகளே?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 357-ன் சுருக்கம்

``மூன்றாம் வகுப்பில் நண்பனாக ஆனவ னுடன், கல்லூரி காலத்திலும் இணைபிரியாமல் வளர்ந்தேன். எனக்குத் திருமணமானபோது என் ஒரே எதிர்பார்ப்பு... எங்கள் நட்பை கணவர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். ‘இதுவரை நட்பு ஓ.கே... இனிமே வேண்டாம்’ என்று அதிர்ச்சி அளித்தார் கணவர். நண்பனுடன் நான் எப்போதாவது வீட்டு லேண்ட்லைனில் பேச மட்டுமே அவர் அனுமதி அளித்தார். அதேசமயம் அவர் போனை எடுக்க நேரிட்டால், நான் இருக்கும்போதே, ‘இல்லை’ என்று சொல்லிவிடுவார்.

என் டைரி - 358

நண்பனுக்குத் திருமணம் முடிவாக, அழைப்பிதழ் வைக்க வருவதாகக் கூறினான். கணவரோ, `எனக்கு லீவ் கிடைச்சிருக்கு. இன்னிக்கு ஊருக்குப் போறோம். பக்கத்து வீட்டுல பத்திரிகையைக் கொடுத்துட்டுப் போகச் சொல்லு’ என்றபோது, வெறுத்துவிட்டது எனக்கு! திருமணத்துக்கும் செல்லவில்லை... நண்பனுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டேன்.

இப்போது எங்களுக்குள் ஏதாவது வாக்குவாதம் என்றால், அவனை வைத்து அசிங்கமாகப் பேசுகிறார். நல்ல நட்பை கொடூரமாகக் கொல்வதால், கணவர் மேலிருந்த பிரியம் வறண்டுகொண்டே வருகிறது. மனபாரத்துக்கு மருந்தென்ன தோழிகளே?!’’

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ` 100

`ஆண் நட்பு’... அவசியம் இல்லை!

திருமணத்துக்குப் பிறகு வேறு எந்த ஆடவனுடனும் தன் மனைவி நட்புகொள்வது, பழகுவது கணவனுக்குப் பிடிக்காது என்பதுதான் உலக வழக்கு. உன் நண்பனுக்கு திருமணமானதும் அவர் மனைவி வேறு ஒரு ஆடவனுடன் நட்புகொள்ள விரும்பினால், அவரே சம்மதிக்க மாட்டார். திருமணம் ஆனபின் `ஆண் நட்பு’ தேவையில்லை... அதனால் பாதிப்புதான் ஏற்படும் என்பதை உணர்க! இதுவே, கணவர்கள், தம் கல்லூரி கால தோழிகளுடன் நட்பைத் தொடர்ந்தால், எத்தனை மனைவிகள் ஏற்றுக்கொள்வார்கள்?

- இந்திராணி சண்முகம், திருவண்ணாமலை

கடந்ததை மறந்து, நடப்பதை நினை!

திருமணத்துக்கு முன் தோழனாக இருந்தான் என்பதற்காக திருமணத்துக்குப் பின்னரும் தோழமை கொண்டாடுவது நியாயமாகப்படவில்லை சகோதரி! கணவனுக்குப் பிடிக்காத விஷயத்தை செய்வதை விட்டுவிடு. பழைய நட்பை கனவாக நினைத்து மறந்துவிட்டு  கணவரிடம் பிரியத்தை, பாசத்தை செலுத்து. நாளை குழந்தைகள் பிறந்து அவர்களை வளர்க்கும் பொறுப்பு உன்னுடையது. அதில் உன் கணவரின் பங்கும் 50% இருக்கிறது என்பதை கவனத்தில் கொள். 

- புவனா சாமா, சீர்காழி

பொறுமை தேவை!

திருமண உறவின் அச்சாணியே ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்தலும் நம்பிக்கையும்தான். அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும். உங்கள் நட்பு பரிசுத்தமானது என்பதை நிரூபிக்க சில காலம் தேவைப்படும். அதுவரைக்கும் பொறுமை அவசியம். உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். ஆண் - பெண் நட்பை ஏற்றுக்கொள்ள எல்லோருக்கும் மனம் வருவதில்லை. அதனால், உங்கள் நட்புக்காக வாழ்க்கையைத் தொலைத்துவிடாதீர்கள். மனதைப் பக்குவப்படுத்திக்கொண்டு யதார்த்த வாழ்க்கையை வாழ பழகுங்கள்.

- ரேவதி வாசுதேவன், கும்பகோணம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism