Published:Updated:

என் டைரி - 359

என் டைரி - 359

என் டைரி - 359

என் டைரி - 359

Published:Updated:

கனின் துயர் துடைக்க வழி தேடும் அம்மா நான்! கணவர் இறந்துவிட... நானும், என் மகனும்தான் எங்கள் வீட்டில். பையனுக்குப் பெண் தேடியபோது, பக்கத்து ஊரில் இருந்து வந்தது அந்த ஜாதகம். மகனுக்குப் பெண்ணைப் பிடித்துப்போக, பெண் வீட்டிலும் திருமணத்துக்கு சம்மதிக்க... எனக்கும் மகிழ்ச்சி!

என் டைரி - 359

ஆனால், திருமணத்துக்குப் பின், மகனுடன் அவள் சந்தோஷமாக வாழவில்லை. ஏற்கெனவே தூரத்து அத்தைப் பையனை விரும்பியிருக்கிறாள். ஆனால், இவளை நிராகரித்து வேறு பெண்ணை பையனுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறார் அந்த அத்தை. அவனின் திருமணத்தன்று, தற்கொலை முயற்சி மேற்கொள்ளும் அளவுக்கு மூர்க்கமாக இருந்திருக்கிறாள். பிறகுதான் என் மகனுக்குத் திருமணம் செய்துள்ளனர். இந்த விஷயங்கள் தெரியவந்தபோது... நானோ, என் மகனோ அதைக் குற்றமாக எடுத்துக்கொள்ளவில்லை. இனி சந்தோஷமாக வாழ்வதுதான் முக்கியம் என்றே நினைத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், என் மருமகளுக்கோ மனது இன்னும் சீர்படவில்லை. படிப்பு, வேலை, வசதி, அழகு என்று ஒவ்வொரு விஷயத்திலும், அத்தைப் பையனுடனேயே என் மகனை ஒப்பிடுகிறாள். கொடுமை என்னவென்றால், அதை வெளிப்படையாக என் மகனிடமும், என்னிடமும் பேசுவதுதான். ‘இப்படி டிரெஸ் பண்ணுறாரே? இவரோட நாளைக்கு நான் ஒரு விசேஷத்துக்குப் போகும்போது எங்க உறவுக்காரங்க எல்லாம், கேலி பேச மாட்டாங்களா?’ என்று அரற்றுகிறாள்.

என் பையனுக்கு அவள் விருப்பத்துக்கு ஏற்ப தேவையில்லாமல் நிறைய உடைகள் எடுக்கிறாள்; அஞ்சல் வழியில் மேற்படிப்பு படிக்கச் சொல்கிறாள்; நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அவனுக்கு வெளிநாட்டு வேலைக்கு ஏற்பாடு செய்கிறாள். இதெல்லாமே அத்தை பையனைவிட என் மகனை ரேஸில் முந்தவைக்கும் உந்துதலில் மட்டுமே செய்கிறாள் என்பதுதான் உறுத்துகிறது. இதையே கொஞ்சம் பாசம் கலந்து செய்தால்கூட, எங்கள் மனம் குளிர்ந்துவிடும்.

தான் நிராகரிக்கப்பட்ட இடத்தில், தன் நிலையை உயர்த்திக் காட்ட வேண்டும் என்கிற ஆக்ரோஷம் இருக்கிறது. இதற்காக என் மகனை ஒரு கருவியாகப் பயன்படுத்த நினைக்கிறாளே தவிர, குடும்பப் பிடிப்பில்லை.

மணமாகி ஒரு வருடம் ஆகியும்கூட, ``எங்க வீட்டு மரியாதைக்கு கட்டுப்பட்டுத்தான் உன்னோட இருக்கேன்னு அவ அடிக்கடி சொல்லும்போது, அவமானமா, தாழ்வு மனப்பான்மையா இருக்கும்மா!’’ என்று மறுகும் மகனின் நிலை, என்னை நிலைகுலையச் செய்கிறது!

வெளியில் சொல்ல முடியாத வேதனையில் இருக்கிறோம். என்ன செய்து திருத்துவது எங்கள் மருமகளை?

- பெயர் வெளியிட
விரும்பாத அவள் வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 358-ன் சுருக்கம்

என் டைரி - 359

``சின்னதாக ஒரு தொழில் செய்யும் நான், ஒருமுறை பயணத்தின்போது பிசினஸ் நிமித்தமாக ஒருவருக்கு கொடுக்க வேண்டிய பணம் இரண்டு லட்ச ரூபாயைத் தொலைத்துவிட்டேன். வீட்டில் சொன்னால், பிசினஸ் செய்யவிடாமல் என்னை முடக்கிவிடுவார்கள் என்ற பயத்தில் நடந்ததை மறைத்துவிட்டேன். சூழ்நிலையைச் சமாளிக்க சொத்துப் பத்திரம் மற்றும் மாமியாரின் நகையை யாருக்கும் தெரியாமல் அடகு வைத்து, கொடுக்க வேண்டியவருக்கு பணத்தைக் கொடுத்தேன். சில மாதங்களில் மீட்கலாம் என்றிருந்தேன். விதி... என் கணவர் விபத்தில் சிக்க, மருத்துவச் செலவுக்கு அடகு வைப்பதற்காக நகைகள் மற்றும் வங்கி லாக்கரில் வைத்திருந்த பத்திரங்களைக் கேட்க, நான் மாட்டிக் கொண்டேன். உண்மையைச் சொன்னதும் புகுந்தவீட்டினர் மிகவும் கோபம் கொண்டனர். கணவர் குணமடைந்துவிட்டாலும், புகுந்த வீட்டில் யாரும் மன்னிக்கத் தயாராக இல்லை. இப்போது பேரிடியாக, விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் கணவர். நான் விட்டுக்கொடுத்தால் அவர் வாழ்க்கையாவது நன்றாக இருக்கும் என்று தோன்றினாலும், வாழ்க்கை முழுக்கத் தனிமரமாக நிற்கும் பெரிய தண்டனைக்கான தப்பை நான் செய்யவில்லையே என்று மனம் அழுகிறது.

நான் என்ன செய்வது?''

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ` 100

நம்பிக்கை நலம் தரும்!

‘குழந்தை இல்லை’ என்பதைக்கூட அனுசரித்து நடந்த கணவருக்கு தெரியாமல் நீங்கள் செய்த காரியம் மிகப்பெரிய தவறுதான். எனினும், நடந்ததைப் பேசி பயனில்லை. விவாகரத்துதான் இறுதி முடிவு என்று வந்துவிட்டால், அதையே நினைத்து கலங்கி நிற்காமல் ‘அடுத்து செய்ய வேண்டியது என்ன?’ என்பதை திட்டமிட்டு, செயல்படத் துவங்குங்கள். கணவனைப் பிரிந்த எத்தனை பெண்கள் வாழ்க்கையில் ஏற்றம் கண்டுள்ளனர் என்பதை நினைவில் கொண்டு நம்பிக்கைகொள்ள வாழ்த்துகிறேன்.

- ஜெயலட்சுமி குருசாமி, மதுரை

புதுவாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள்!

தங்கையே... மனித வாழ்க்கை ஒரு முறை; அதை மகிழ்ச்சியோடு வாழ வேண்டாமா? சூழ்நிலை காரணமாக செய்த தவற்றை மன்னிக்கத் தயாராக இல்லாதபோது விவாகரத்து கொடுத்துவிடுங்கள். ஆண்கள் யாருமே தவறு செய்வது இல்லையா? பெண்கள் அனுசரித்து வாழும்போது ஒரு சிலர் ஆணவத்தோடு இருக்கிறார்கள். எனவே, வேறு ஒரு  நல்ல கணவரைத் தேர்ந்தெடுத்து புதிய வாழ்க்கையைத் துவக்குங்கள்.

- கே.வடிவு, வேலூர்

வசந்தம் வரும்!

தொலைத்த பணத்தை ஈடுகட்டவே நீ நகை, பத்திரத்தை அடமானம் வைத்திருக்கிறாய். குடும்பத்தாரிடம் கலந்தாலோசிக்காமல் நீ செய்தது தவறுதான். அதற்காக விவாகரத்து என்பது உச்சகட்ட கொடுமை. உன் கணவரின் நெருங்கிய உறவினர்கள் மூலம் உன் தரப்பு நியாயத்தை கூறச் சொல். நீயும் உன் கணவரிடம் பேசு. நிச்சயம் மனம் மாறுவார். வாழ்வில் வசந்தம் வரும்.

- ஒய்.ஜேனட், கோயம்புத்தூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism