Published:Updated:

என் டைரி - 361

என் டைரி - 361

என் டைரி - 361

என் டைரி - 361

Published:Updated:

அடிமைத்தனம்தான் ஆயுள்கால விதியா?!

ணாதிக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் அடிமையாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் பேதைப் பெண்களில் நானும் ஒருத்தி. 45 வயதைக் கடந்துவிட்ட எனக்கு, பதின்ம வயதில் ஒரு பெண் இருக்கிறாள். எனக்கு வாய்த்தது... ஆணாதிக்கம் மற்றும் சந்தேகபுத்தி இரண்டும் சமஅளவில் கலந்து உருவான கணவர்!

என் டைரி - 361

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமணமான புதிதில் வீட்டுக்கு வரும் விருந்தினரில் இருந்து மளிகைக் கடை அண்ணன் வரை எந்த ஆணிடமும் சம்பிரதாயமாகப் பேசினால்கூட, இருவரையும் இணைத்துப் பேசுவார், உரத்த குரலில். `அக்கம்பக்கத்தில் என் மானம் போகுமே’ என்று அடங்கியே வாழப் பழகினேன். அதேபோல, அவர் மனைவி, அவர் குழந்தைக்கு அம்மா என்ற ஸ்தானம் எல்லாம் எனக்கு எதுவும் கிடையாது. அவர் வீட்டில் நான் சம்பளமில்லா வேலைக்காரி... அவ்வளவுதான். அந்த வாழ்க்கை எனக்கும் பழகிப்போனது.

சமீபத்தில் அவர் புதிய போன் வாங்கியவுடன், அவரது பழைய போனை எனக்குக் கொடுத்தார். என் மகளிடம் அதில் `ஹெட்செட்’டில் பாடல்கள் கேட்கக் கற்றுக்கொண்டேன். அன்று அப்படித்தான் ஓய்வுப் பொழுதில் நீண்ட நேரமாகப் பாடல்கள் கேட்டபடி இருந்த எனக்கு காத்திருந்தது அதிர்ச்சி. அவர் சில பெண்களுடன் நெருக்கமாகப் பேசிய உரையாடல்களை போனில் பதிந்து வைத்திருந்திருக்கிறார். அதையெல்லாம் நான் கேட்கக் கேட்க... அதிர்ச்சியும் அழுகையுமாக வெடித்துப் போனேன்.

ஏற்கெனவே வாழ்க்கையில் சந்தோஷப்படுவதற்கு என்று எதுவும் இல்லாமல் இருக்கும்போது, இப்போது துயரப்பட இன்னொரு காரணமும் சேர்ந்துகொள்ள, எதுக்குத்தான் இந்த வாழ்க்கை என்று விரக்தியானது. இதைப்பற்றி அவரிடமே நேரடியாகக் கேட்டபோது, ‘அதையெல்லாம் டெலிட் செய்யாம உங்கிட்ட போனைக் கொடுத்துட்டேனா? சரி, இப்ப உன்னால என்னை என்ன செஞ்சிட முடியும்?’ என்ற ஆணாதிக்கமே என் கேள்விக்கு பதிலாக அவர் தந்தது. ‘இதையெல்லாம் வெளிய சொல்லி பிரச்னை பண்ணலாம்னு நினைச்சே, நீதான் பல ஆம்பளைங்களோட போன்ல பேசினனு நான் திருப்பிச் சொல்வேன். ஒழுங்கா அடங்கி இரு!’ என்றார். பதின்ம வயதுப் பெண் இருக்கும் வீட்டில், இந்தப் பிரச்னை வேண்டாம் என்று அடங்கிவிட்டேன்.

அவரிடம் அன்பு எனக்குக் கிடைக்கவில்லை. என் சுயமரியாதை மட்டுமல்ல, அடிப்படை உரிமைகள்கூட கிடைக்கவில்லை. அவர் செய்யும் தவற்றை தட்டிக்கேட்க முடியவில்லை. இந்த ஜென்மம் எதுக்கு என்று நினைக்கும்போது, மகள் கண் முன் வருகிறாள். வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் இருக்கிறேன். மகளின் கல்யாணத்துக்குப் பின் அவரைப் விட்டுப் பிரிய வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்துள்ளது. பன்னிரண்டாவதுதான் படித்திருக்கிறேன். வெளியில் சென்று ஒரு கொரியர்கூட அனுப்பத் தெரியாத என்னால், தனியாக வாழ்ந்துவிட முடியுமா? ஒருவேளை அந்த முடிவெடுத்து, இவர் முன் தோற்று நிற்பதைவிட, எடுத்த இந்த ஜென்மத்தை இப்படியே கழிக்கவா?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 361

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 360-ன் சுருக்கம்

“பெண் பிள்ளையான என்னை பாதுகாப்பாக வளர்ப்பதாக நினைத்து, வெளியுலகத் தொடர்பிலிருந்து விலக்கி வைத்திருந்தார்கள், என் வீட்டினர். படிப்பைத் தாண்டி, கம்ப்யூட்டர் கோர்ஸ், போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் என எதற்கும் அனுமதி இல்லை. டெக்னிக்கல் அறிவிருந்தும், வெளியுலகத் தொடர்புகள் இல்லாததால் எனக்கு ஏற்பட்ட கம்யூனிகேஷன் சிக்கல், என் ‘பழமை’ சூழ்நிலையை வெளிச்சம் போட்டுக் காட்ட... இன்டர்வியூவில் நிராகரிக்கப்பட்டேன்.

‘என்னை அடைச்சு வளர்த்து, என் எதிர்காலத்தை பாழாக்கிட்டீங்களே’ என்று வீட்டினரிடம் நான் குமுற, அவர்களோ ‘மற்றவர்களுக்கு வேலை கிடைச்சிருச்சு... நீ என்னதான் படிச்ச..?’ என்று என்னையே பழி சொல்கிறார்கள்.

ஆரம்பச் சம்பளம் 25 ஆயிரம், மெட்ரோபாலிட்டன் சிட்டியில் வேலை என இருக்கும் தோழிகளைப் பார்க்கப் பார்க்க, எனக்குள் தாழ்வு மனப்பான்மை பெருகுகிறது. இப்போதும், கூண்டில் அடைத்து கொடுமைப்படுத்துகிறது என் குடும்பம். அவர்களின் கட்டுப்பாடுகளால் கரைந்த என் கனவுகளை எப்படி மீட்பது?’’

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.100

முயற்சி செய்... வழி பிறக்கும்!

‘நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்ட உன் தோழிகளுள் ஒருத்தியை உன் வீட்டுக்கு அழைத்து, படிப்பு தவிர அவளுக்கு இருக்கும் பிற துறைகள் பற்றிய அறிவை, உன் பெற்றோர் முன்னிலையில் பேசு. அப்போது உன் பெற்றோருக்கும் உன் தோழியின் திறமைகள் தெரியவரும். பின்னர், அவள் மூலம் உன் பெற்றோருக்கு நம்பிக்கையும், தெளிவும் பிறக்கலாம். தோழியோடு அல்லது உன் பெற்றோரோடு சென்று பல்வேறு  பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வர வழிபிறக்கும். முயன்று பார்... முடியும்.

- ஜீவிதா சுதாகர், மதுரை

ஆற்றலைப் பெருக்கு!

உன்னைப் பட்டதாரியாக்கிய உன் குடும்பத்தாரை பாராட்டுவதை விட்டு, அவர்களைப்பற்றி நீ குறை சொல்வது சரியல்ல. உன் அறிவை, திறமையை முன்னிறுத்திக்கொள்ளும் ஆற்றலை கல்லூரி வளாகத்துக்குள்ளேயே நீ வளர்த்துக்கொண்டிருக்க முடியும். மற்றவர்களிடம் பழகும் முறையாலும், அறிஞர்களின் வரலாறு போன்றவற்றை படிப்பதன் மூலம் இதைப் பெற்றிருக்க முடியும். இனியாவது இந்த முறையில் நிறையக் கற்றுக்கொள். உன் தாழ்வு மனப்பான்மையை நீக்கி, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள். நிறைய சம்பளம் வாங்கும் பெரிய வேலையைத் தேட உன்னாலும் முடியும். உன் கரைந்த கனவுகள் நனவாகும்!

- என்.ஆர்.நாயகி, கோயம்புத்தூர்

நம்பிக்கை... வேலி அறுக்கும்!

பெண்கள் முன்னேறியுள்ளதாக பெருமையாக நினைத்தாலும் பெண்கள் பலரின்  கனவுகள் இதுபோன்ற கட்டுப்பாடுகளால், கரைந்து போவது உண்மையே. இதற்குக் காரணம், பெற்றோர் கொடுத்த சுதந்திரத்தை சிலர் தவறாகப் பயன்படுத்தி தவறான பாதையில் போவதுதான். இதை உன் வீட்டினருக்கு நீ புரியும்படி எடுத்துச் சொல். உன் மீது நூறு சதவிகிதம் நம்பிக்கை வரும்படி நடந்துகொள். அது நீ பொறுமையாக நடப்பதில்தான் உள்ளது. எங்கு வெளியே சென்றாலும் வீட்டில் யாரையாவது உடன் அழைத்துச் செல். உன் திறமையை வெளிக்கொண்டு வரும் ஏதாவது வகுப்பில் சேர். அங்கு போகும்போதும் உன் வீட்டாரை அழைத்துப்போ! அவர்களுக்கு உன் மீது நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால், இந்த கட்டுப்பாடு வேலி அறுந்து நிச்சயம் உன் கனவு நனவாகும்.

 - உஷா முத்துராமன், மதுரை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism