Published:Updated:

என் டைரி - 362

திடீர் திருமணம்... தீயாய் சுடும் வாழ்க்கை!

என் டைரி - 362

திடீர் திருமணம்... தீயாய் சுடும் வாழ்க்கை!

Published:Updated:

சிறுவயதில் இருந்தே, என் அக்கா வேண்டாம் என்று சொல்வதை, பேனாவில் இருந்து உடை வரை நான் தயங்காமல் எடுத்துக்கொள்வேன். பிடிவாதம், பிரத்யேக விருப்பம் என்று எதுவும் இல்லாத என் குணம்தான் அதற்குக் காரணம். ஆனால், அந்தப் போக்கு இன்று என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது.

என் டைரி - 362

என்னைவிட அழகாக இருப்பாள் என் அக்கா. அவள் கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன்னரே ஏகப்பட்ட வரன்கள் வந்தன. ஆனால், படிப்பை முடித்து வேலைக்குப் போன பின்தான் திருமணம் என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள். அவள் ஆசைப்பட்டபடி வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடமாகியிருந்த நிலையில், 15 வருடங்களாகப் பேச்சுவார்த்தையே இல்லாமல் இருந்த என் அத்தை குடும்பத்திலிருந்து பெண் கேட்டு வந்தனர். என் அக்காவும் அதற்கு எதிர்ப்பு எதுவும் சொல்லாததால், திருமணம் நிச்சயமானது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமணத்துக்கு முதல் நாள் இரவு, காதலித்த பையனுடன் சென்றுவிட்டாள் அக்கா. விடிந்தால் திருமணம் என்ற நிலையில், என்னை மணப்பெண் ஆக்கினார் என் அப்பா. இரு வீட்டுக் குடும்பத்தின் மானத்தையும் கருத்தில்கொண்டு ஒப்புக்கொண்டேன். ஆனால், என் கணவரோ திருமணத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை என்னிடம் பழிதீர்த்துக்கொண்டிருக்கிறார்.

‘உன் குடும்ப மானத்தை காப்பாத்த நீ தியாகம் செய்ய வேண்டியதுதான். நான் செய்யணும்னு என்ன அவசியம் இருக்கு?’, ‘உங்க அக்கா என்னைப் பிடிக்கலைனு சொல்லி ஓடிட்டாளே... ஊரு உலகத்துல என்னை எப்படியெல்லாம் கேலி செய்றாங்க தெரியுமா?’, ‘உனக்கும் ஒரு ஆளு இருந்திருப்பான். குடும்ப மானத்தைக் காப்பாத்த நீ என்னைக் கல்யாணம் பண்ணியிருப்ப’, ‘என்னிக்கு நீயும் எவன்கூட போகப்போறியோ யார் கண்டா? உங்க குடும்பத்துக்கு என்ன இது புதுசா?’ - இப்படி வார்த்தைகளால் கொல்கிறார். இரவு நேரங்களில் என்னை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு ஜன்னலின் வெளியே நின்றுகொண்டு, வயலில் அடிக்கும் பூச்சி மருந்தை கையில் வைத்துக்கொண்டு, ‘நான் செத்துட்டா நீ அழுவியா?’ என்று சைக்கோ போல நடந்துகொள்கிறார். அடித்துத் துன்புறுத்துகிறார்.

என் வீட்டினரிடம் அனைத்தையும் சொல்லி அழுதேன். விவாகரத்து செய்துவிடு என்கிறார்கள். என் அத்தையோ, ‘அவன் அவமானத்துல இப்படி எல்லாம் நடந்துக்குறாம்மா. உண்மையில அவன் ரொம்ப நல்லவன். கொஞ்சம் பொறுமையா இரு... அவன் உன் அருமையைப் புரிஞ்சுக்குவான். ரெண்டு குடும்பமும் இப்போதான் சேர்ந்திருக்கு. மறுபடியும் பிரிய வேண்டாம்!’ என்று அழுகிறார். 

என்ன செய்யட்டும் தோழிகளே?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 362

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 361-ன் சுருக்கம்

``45 வயதைக் கடந்த எனக்கு, பதின்ம வயதில் பெண் இருக்கிறாள். எனக்கு வாய்த்த கணவர் ஆணாதிக்கமும், சந்தேகபுத்தியும் கலந்து உருவானவர்! அவரைப் பொறுத்தவரை நான் சம்பளமில்லா வேலைக்காரி மட்டுமே! சமீபத்தில் அவர் புதிய போன் வாங்கியதால், அவரது பழைய போனை தந்தார். என் மகள் மூலம் அதில் `ஹெட்செட்’டில் பாடல்கள் கேட்கக் கற்றுக்கொண்டேன். ஒருசமயம், பாடல் கேட்டபடி இருந்த எனக்கு காத்திருந்தது அதிர்ச்சி. என் கணவர் போனில் பதிந்து வைத்திருந்த... பெண்களுடன் அவர் நெருக்கமாகப் பேசிய உரையாடல்களைக் கேட்டு அதிர்ந்தேன். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‘இதை வெளியில சொல்லி பிரச்னை பண்ணலாம்னு நினைச்சே, நீதான் பல ஆம்பளைங்களோட போன்ல பேசினேனு திருப்பிச் சொல்லிருவேன்!’ என்றார். `வயசுப்பொண்ணு இருக்குற வீட்டில் பிரச்னை வேண்டாம்' என்று அடங்கிவிட்டேன். `ஏன் இந்த வாழ்க்கை?’ என்று விரக்தி அடையும்போது, கண் முன் மகள் வருகிறாள். அவள் திருமணத்துக்குப் பின் கணவரைப் விட்டுப் பிரியலாம் என்றிருக்கிறேன். பன்னிரண்டாவதுதான் படித்திருக்கிறேன். வெளியே சென்று ஒரு கொரியர்கூட அனுப்பத் தெரியாத என்னால், தனியாக வாழ முடியுமா? அப்படியொரு முடிவெடுத்து, இவர் முன் தோற்பதைவிட, இந்த ஜென்மத்தை இப்படியே கழிக்கவா? வழி சொல்லுங்கள் தோழிகளே!’’

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.100

அடிமைத்தனத்தை உதறுங்கள்!

முதலில் உங்களை அடிமைத் தனத்திலிருந்து விடுவித்துக் கொள்ளுங்கள். உங்கள் மகளிடம் மனம் விட்டு பேசுங்கள். செல்போனில் அடுத்த பெண்களுடன் கணவர் நெருக்கமாக பேசியதை, மகளுக்கு உணர்த்துங்கள். உங்களுக்கு கெட்ட பெயர் வாங்கித் தருவதாக அவர் மிரட்டுவதையும் கூறுங்கள். அவளே கொதித்தெழுவாள். அவள் மூலம் உங்கள் கணவருக்கு சாட்டையடி விழும்; நிச்சயம் திருந்துவார். உங்கள் வாழ்வில் புது வசந்தம் வரும்.

- விமலா சங்கரன், மறைமலை நகர்

பொறுமையுடன் இருங்கள்!

ஆணாதிக்கம் இல்லாத வீடுகள் மிகக்குறைவு என்றாலும், கட்டிய மனைவியின்மீது சந்தேகப்படுவதும், வீண்பழி சுமத்துவதும் பெருங்கொடுமை! ஆரம்பத்திலேயே நீங்கள் அடங்கிப் போய்விட்டதால் இப்போது ஆலமர மாக விழுது விட்டிருக்கிறது... போகட் டும்! உங்களது மகளின் படிப்பு மற்றும் எதிர்காலத்துக்காக சரியான திட்டங்களைத் தீட்டுங்கள். இதற்கு மேல் இழக்க எதுவுமில்லை என்று பொறுத்துக்கொள்ளுங்கள். இனி, உங்கள் மகளை மட்டுமே மனதில் கொண்டு செயல்படுங்கள்.

- எஸ்.திலகவதி, குரோம்பேட்டை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism