Published:Updated:

என் டைரி - 363

என் டைரி - 363

என் டைரி - 363

என் டைரி - 363

Published:Updated:

தவிக்குது, தயங்குது பல மனசு!

ல்லூரியில் என் சீனியர் ஒருவரை ஒருதலையாகக் காதலித்தேன். அதுபற்றி அவருக்குத் தெரிந்தாலும், கண்டுகொள்ளாதது போலவே இருந்தார். படிப்பை முடித்துச் சென்றபோதும், அவரிடம் நானோ, என்னிடம் அவரோ ஒரு வார்த்தையும் பகிர்ந்துகொள்ளாமல் பிரிந்தோம். நான் படிப்பை முடித்தபோது, பிரயத்தனப்பட்டு வெளியூரில் அவர் பணிபுரியும் அலுவலகத்திலேயே நானும் வேலையில் சேர்ந்தேன். அங்கும் அவர் என்னைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் நான் அவரை தொடர்ந்து காதலித்தேன்.

என் டைரி - 363

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், என்னைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டினர் வருவதாக, என் வீட்டில் இருந்து என்னை உடனடியாக ஊருக்கு வரச்சொல்லி அழைப்பு வந்தது. என் காதலை, மனதின் தவிப்பை, இக்கட்டான சூழலை எல்லாம் நீண்ட மெசேஜாக டைப் செய்து அவருக்கு அனுப்பிவிட்டு, அவர் பதிலுக்காகக் காத்திருந்தேன். ‘என்னைவிட பெட்டரான ஒருவர் உனக்குக் கிடைப்பார்’ என்ற பதிலை, ஒரு ஸ்மைலியுடன் அனுப்பியிருந்தார்.

இந்த நிராகரிப்புக்கு பயந்துதான் இதுவரை என் காதலை அவரிடம் வெளிப்படுத்தாமலே இருந்தேன். ஆனால், அன்று அது முடிவுக்கு வந்தபோதும் என்னால் அந்த வலியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `எனக்கு என்ன குறை, இவருக்கு எல்லா விதத்திலும் நிறைவான வாழ்க்கைத் துணையாக நான் இருப்பேனே... என்னை அவர் ஏற்றுக்கொள்ள ஏதாவது வாய்ப்பிருக்குமா?’ என்று தவித்தபடியே இருந்தது மனம்.

இடையில் வீட்டிலிருந்து இடைவிடாமல் அழைப்பு வந்துகொண்டிருக்க, பெற்றோருக்காக பெண் பார்க்கும் படலத்துக்கு சம்மதித்தேன். ஆனால், வரதட்சணை, நகை என்று நீண்டது பேச்சு.

இந்நிலையில், எங்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா வந்தது. அதில் என் கல்லூரி நண்பன் ஒருவன் பல வருடங்களாக என்னை ஒருதலையாகக் காதலிப்பதாகவும், நான் நிராகரித்துவிடுவேனோ என்ற தயக்கத்திலேயே தன் காதலை என்னிடம் வெளிப்படுத்தத் தயங்கியதாகவும் கூறினான். ‘இப்போ நான் நல்ல வேலையில் இருக்கேன். நீ என் மனைவியா கிடைச்சா, என் வாழ்க்கையே எனக்கு ஆசீர்வாதமாகிடும். உன்னை இதே பிரியத்தோட கடைசிவரை பார்த்துப்பேன்!’ என்றான் கண்ணீர் மல்க.

நான் காதலிப்பவன், என்னைக் காதலிப்பவன், வீட்டில் பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்று, சுழலில் சிக்கியதுபோல உணர்கிறேன். நான் விரும்புகிறவனை விடாமல் துரத்தி அடையத் துடிக்கிறது மனம். ஆனால், `என்னை உயிராக நேசிக்கும் ஒருவனை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு?’ என்று நியாயம் பேசுகிறது மூளை. இன்னொரு பக்கம், வரதட்சணை, நகை என்ற பட்டியலை நிறைவு செய்த பின்னரே என்னை மணக்கத் தயாராக இருக்கும் ஒருவனை, பெற்றோருக்காக கணவனாக ஏற்கும் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நினைக்கும்போது, வெறுப்பாக இருக்கிறது.

நிலையான ஒரு முடிவெடுக்க உதவுங்கள்!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 363

என் டைரி 362-ன் சுருக்கம்

``என் அக்கா கல்லூரியில் படிக்கும்போதே ஏகப்பட்ட வரன்கள் வந்தன. ஆனால், படிப்பை முடித்து வேலைக்குப் போன பிறகே திருமணம் என்றாள். அதன்படி அவள் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடமான நிலையில், பேச்சுவார்த்தையே இல்லாமல் இருந்த என் அத்தை குடும்பத்திலிருந்து பெண் கேட்டனர். அக்காவும் எதிர்ப்பு தெரிவிக்காததால் திருமணம் நிச்சயமானது. ஆனால், திருமணத்துக்கு முதல் நாள் இரவு, தன் காதலனுடன் சென்றுவிட்டாள் அக்கா. விடிந்தால் திருமணம் என்ற நிலையில், என்னை மணப்பெண் ஆக்கினார் என் அப்பா. இரு வீட்டுக் குடும்ப மானத்தை கருத்தில்கொண்டு ஒப்புக்கொண்டேன். ஆனால், என் கணவரோ தனக்கு ஏற்பட்ட அவமானத்தை என்னிடம் பழிதீர்க்கிறார். `நீயும் எவன்கூட போகப்போறியோ!’ என வார்த்தைகளால் கொல்வதோடு மட்டுமல்லாமல், இரவு நேரங்களில் என்னை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு வெளியே நின்றபடி, சைக்கோ போல் தற்கொலை மிரட்டல் விடுகிறார். சிலநேரம் அடித்துத் துன்புறுத்துகிறார். இதை, என் வீட்டினரிடம் சொன்னபோது, விவாகரத்து செய்துவிடு என்கிறார்கள். ஆனால், என் அத்தையோ, `அவமானத்துல இப்படி நடந்துக்குறான்மா. உண்மையில அவன் ரொம்ப நல்லவன். கொஞ்சம் பொறுமையா இரு... இப்போதான் நம் குடும்பம் சேர்ந்திருக்கு. மறுபடியும் பிரிய வேண்டாம்!’ என்று அழுகிறார். என்ன செய்வது தோழிகளே?!''

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 100

விலகுவதே நல்ல முடிவு!

தோழி! உடனடியாக முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. காலம் முழுவதும் கண்ணீர் சிந்தி வாழ்வதைவிட விவாகரத்து வாங்கிக்கொண்டு விலகிவிடு. அதுவே நல்ல முடிவாக இருக்கும். உனக்கு வயதும், இளமையும் இருப்பதால் கண்ணியமான ஒருவர் கிடைப்பார். வாழ்த்துகள்!

- ஆர்.கவிதா, மதுரை

அவசரம் வேண்டாம்..!

சகோதரி... உங்கள் அக்காவின் செயல் உன் கணவரின் மனதை பாதித்துள்ளது. எனவே, அவரை நல்ல டாக்டரிடம் அழைத்துச்சென்று சிகிச்சை எடுங்கள், சரியாகிவிடும். கணவரிடம் நல்ல அன்பு, பாசம் காட்டுங்கள். அவர் நிச்சயம் மாறுவார். உங்கள் மாமியார் சொல்வதில் நிறைய விஷயம் உள்ளது. அத்தை வீட்டை உறவாக்கியது உனது திருமணத்தில்தான்; எனவே, மீண்டும் அந்த உறவு தொடர கணவரை மாற்ற முயற்சி செய்யுங்கள். முடியாதபட்சத்தில் விவாகரத்து செய்யுங்கள், அவசரப்படாதீர்கள்.

- ச.லட்சுமி, கரூர்

`சைக்கோ’வோடு வாழாதே!

உன் கணவன் உண்மையிலேயே சைக்கோதான். `நீயும் உன் அக்காவைப்போல் என்னிக்கு... எவன்கூட போகப்போறியோ’ என்று கல்யாணம் ஆன பிறகு சிந்திக்கிறானே... இதை ஏன் அக்காவுக்குப் பதில் உன் கழுத்தில் தாலி கட்டும்போது அவன் சிந்திக்கவில்லை? உன்னைத் திருமணம் செய்துகொண்டு உனக்கு தொடர்ந்து மன உளைச்சல் கொடுக்க நினைப்பதைத்தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? உன்னை புரிந்துகொண்டு நடப்பான் என்ற பசப்பு வார்த்தைகளை எல்லாம் நம்பி ஒரு சைக்கோவோடு வாழாதே. உடனே அவனை விவாகரத்து செய்யும் வழியைப்பார். வீணாக காலம் கடத்த வேண்டாம்.

- பி.தேவி, ஸ்ரீரங்கம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism