Published:Updated:

என் டைரி - 364

என் டைரி - 364

என் டைரி - 364

என் டைரி - 364

Published:Updated:

நம்பவைத்து நரகத்தில் தள்ளிய காதல்!

ன் வலது கால் சற்று வளைந்திருக்கும். திருமண வயது வந்தபோது, இந்த உடற்குறைபாட்டால், வந்த வரன்கள் எல்லாம் தட்டிப்போயின. எனக்கு அடுத்து இருந்த மூன்று தங்கைகளைக் கரைசேர்க்கும் பொறுப்பு என் அப்பாவுக்கு இருந்ததால், அவர்களுக்கு வரன் பார்க்கும்படி கூறிவிட்டு, நான் என் திருமணத்தைத் தள்ளிப்போட்டேன். இடைப்பட்ட காலத்தில், மேற்படிப்புகளை முடித்தேன்.

என் கடைசி தங்கையின் திருமணத்தின் போது, ஒரு தனியார் பள்ளியில் நல்ல சம்பளத்தில் எனக்கு ஆசிரியர் பணி கிடைத்தது. அந்த வேலைச் சூழல், என் தாழ்வுமனப்பான்மையை மறக்கும் விதத்தில் அமைந்தது. உடன் பணிபுரிந்த ஆசிரியர் ஒருவர், என்னைக் காதலிப்பதாகக் கூறினார். அதுவரை கேலி, கிண்டல்களால் ரணமாகிப் போயிருந்த என் மனதுக்கு, அது மருந்தாக இருந்தது. இரண்டு வருடக் காதலுக்குப் பிறகு என் அப்பாவிடம் அனுமதி கேட்டு நின்றேன்.

என் டைரி - 364

என் காதலருக்கு என்னைவிடக் குறைந்த சம்பாத்தியம். சொந்த வீடு, நிலம் என்று எதுவும் இல்லாத குடும்பம். ஆனாலும் என் வாழ்க்கை இனி அவர்தான் என்று உறுதியாக நான் நிற்க, மற்ற சகோதரிகளுக்கு செய்தது போலவே நகை, சீர் என்று எங்கள் பூர்வீக இடத்தை விற்று என் திருமணத்தையும் சிறப்பாக முடித்து வைத்தார் அப்பா.

கனவுகளோடும், கற்பனைகளோடும் வாழ்க்கையை எதிர்நோக்கி இருந்த எனக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. எனக்குப் போட்ட நகைகள் அனைத்தையும் திருமணமான சில நாட்களிலேயே என் மாமியார் வாங்கிக்கொண்டார். `‘இனி உன் சம்பளத்தை எங்கம்மாகிட்ட கொடுத்துடு’’ என்றார் கணவர். நாட்கள் செல்லச் செல்ல, என்னை ஒரு மனுஷியாக இல்லாமல், பணம் சம்பாதிக்கும் இயந்திரமாகவே அவர்கள் நடத்துவது புரிந்தது. கணவரிடம் வாக்குவாதம் வெடித்தது.

`‘உன் அழகுக்காக உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நினைச்சியா? `படிச்ச பொண்ணு; அவ சம்பாத்தியம் நம்ம கைக்கே வரும்; கால் ஊனமா இருக்கிறதால சம்பளம், சொத்து, வீடுனு மாப்பிள்ளை வீட்டைப் பத்தி எதுவும் டிமாண்ட் பண்ண மாட்டாங்க; பொண்ணும் நம்ம சொல்படி நடக்கும்’னு நானும் எங்கம்மாவும் யோசிச்சுதான் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்திருக்கோம்’’ என்று அவர் சொன்னபோது, இடி விழுந்ததுபோல் இருந்தது. இதுவரை நான் அனுபவித்த வேதனைகளையெல்லாம்விட பெரிய வேதனையை என் புகுந்த வீடு தர, பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

எங்கள் பிரிவைப் பற்றி அறிந்த பள்ளி முதல்வர், இருவரையும் சேர்ந்து வாழும்படி பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார். `இதுதான் விதி’ என்று ஏற்றுக்கொள்ளவா... `ஊனமாக இருந்தாலும் எனக்கும் சுயமரியாதை உண்டு’ என்று தனித்து வாழ்ந்து காட்டவா?

வழிகாட்டுங்கள் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி 363-ன் சுருக்கம்

என் டைரி - 364

``கல்லூரியில் என் சீனியரை ஒருதலையாகக் காதலித்தேன். படிப்பு முடியும்போது எதையும் பகிர்ந்துகொள்ளாமல் பிரிந்தோம். ஆனால், மிகவும் பிரயத்தனப்பட்டு அவர் பணிபுரியும் அலுவலகத்திலேயே நானும் வேலையில் சேர்ந்தேன். அங்கும் அவர் என்னைக் கண்டுகொள்ளவில்லை. என் மனதின் தவிப்பை நீண்ட மெசேஜாக டைப் செய்து அவருக்கு அனுப்பினேன். ‘என்னைவிட பெட்டரான ஒருவர் உனக்குக் கிடைப்பார்’ என்ற பதில்தான்  அவரிடமிருந்து வந்தது. இதற்கிடையே, குடும்பத்தினரின் வற்புறுத்தலால் பெண் பார்க்கும் படலத்துக்கு சம்மதித்தேன். அங்கே, வரதட்சணை, நகை என்று நீண்டது பேச்சு. இந்நிலையில், என் கல்லூரி நண்பன் ஒருவன் என்னை ஒருதலையாகக் காதலிப்பதாகவும், இப்போது நல்ல நிலையில் இருப்பதால், பிரியமான மணவாழ்க்கையை அளிப்பதாகவும் கூறுகிறான். நான் விரும்புபவனை அடையத் துடிக்கிறது மனம். என்னை நேசிப்பவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நியாயம் பேசுகிறது மூளை. இன்னொரு பக்கம், வரதட்சணையோடு என்னை மணக்கத் தயாராக இருப்பவனை, பெற்றோருக்காக ஏற்பதை நினைக்கும்போது, வெறுப்பாக இருக்கிறது. நிலையான முடிவெடுக்க உதவுங்கள்!’’

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ100

நேசிப்பவனுக்கு மாலையிடு!

`கேள்வியும் நானே... பதிலும் நானே...’ என்று இருக்கிறாய். `நான் காதலிப்பவன், என்னைக் காதலிப்பவன், வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை’ என்று குழம்பிக்கொண்டிருக்க வேண்டாம். உன்னை உயிருக்கு உயிராக நேசிப்பவனை, உன் பெற்றோரிடம் முறைப்படி கேட்டு சம்மதம் வாங்கி திருமணம் செய்துகொள்வதே உனக்கும் நல்லது... உன் குடும்பத்துக்கும் நல்லது.

- மாலா பழனிராஜ், சென்னை-127

உறவுகள்தான் பாதுகாப்பு!

நீங்கள் காதலித்தவன் உங்களை ஏற்கத் தயாராக இல்லை. உங்களை காதலிப்பவனை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள். எனவே, தாய் - தந்தை, மாமனார் - மாமியார் மற்றும் உறவினர்கள் என்ற பாதுகாப்பில் இன்பமாக வாழ, பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்கே கழுத்தை நீட்டுங்கள்.

- செ.கலைப்பிரியா, காகிதப்பட்டறை

துணிந்து முடிவு எடு!

வரதட்சணை கேட்கும் மாப்பிள்ளையும் வேண்டாம்; நீ விரும்பி ஏங்கித் தவிப்பவனும் வேண்டாம். உன்னை நேசித்து, காத்திருந்து, நல்ல முன்னேற்றமடைந்து உன்னிடம் தன் விருப்பத்தை சொன்னவன் மிக மிக உயர்ந்தவன். 100 மடங்காக அல்ல, 200 மடங்காக உனக்கு பலன் தருவான். எனவே துணிந்து அவனை ஏற்றுக்கொள்.

- ஏ.ரெஜினாமேரி, திருச்சி