Published:Updated:

என் டைரி - 368

என் டைரி - 368

புகுந்த வீட்டுக் கொடுமையில் சிக்கி பாழாய்ப் போன வாழ்க்கை, என்னுடையது! கிராமத்துப் பெண்ணான எனக்கு, டெல்லியில் மிக உயரிய பதவியில், கைநிறைய சம்பளம் வாங்கும் கணவர் கிடைத்தார். திருமணமாகி டெல்லி சென்றபோது, அந்தக் கூட்டுக்குடும்பத்தில் எனக்குக் காத்திருந்தன பல அதிர்ச்சிகள். வரதட்சணை கேட்டு கொமைப்படுத்திய மாமியார், ஏதாவது சிக்கலில் என்னை மாட்டிவிட்டுக்கொண்டே இருக்கும் மச்சினர் மனைவி, கரித்துக்கொட்டும் நாத்தனார்கள், இதையெல்லாம் கண்டுகொள்ளாத, சுயபுத்தியின்றி சொல்வார் பேச்சைக் கேட்கும் கணவர் என்று நான் படாத கஷ்டம் இல்லை.

என் டைரி - 368

வறட்சியான வாழ்க்கையில் ஒரே மகிழ்ச்சியாக, எனக்குப் பையன் பிறந்தான். ஆனால், மகனுக்கு அரிய வகை நோய் இருப்பது தெரிந்தபோது, என்னை என் அம்மா வீட்டில் விட்டுச் சென்றுவிட்டார் கணவர். எம்.பி.ஏ பட்டதாரியான நான், வேலைக்குச் சென்று, சிகிச்சை, பள்ளி என்று என் பையனை சிரமப்பட்டு வளர்த்தேன். சிகிச்சைக்காக சென்னை, டெல்லி, பெங்களூரு என்று அலைந்தேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவ்வப்போது வந்து என்னையும், பையனையும் பார்த்துவிட்டுச் செல்வார் கணவர், அவர் அம்மா வீட்டுக்குத் தெரியாமல்.! இதற்கிடையே எங்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். கணவர், என் பெயரில் பெங்களூரில் ஒரு வீடு வாங்கினார். ஒரு குடும்பமாக நாங்கள் இணைந்தோம் என்று நினைத்தபோது, திடீரென என் கணவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து நோட்டீஸ் வந்தது. வழக்கம்போல, அம்மா வீட்டின் பேச்சைக் கேட்டு அவர் எடுத்த முடிவு.

என்னை விவாகரத்துக்குச் சம்மதிக்கச் சொல்லி மாமியார், நாத்தனார், மச்சினர் மனைவி என்று அனைவரும் தொலைபேசியில் பேசும் பேச்சு கொஞ்சநஞ்சமில்லை. கைப்பாவை ஆனாலும் என் கணவர் எனக்கு வேண்டும் என்று தோணும் அதேசமயம், அவரின் சுயபுத்தி இல்லாத குணம் இம்முறை என் பொறுமை, சகிப்புத்தன்மை, அன்பு அனைத்தையும் வற்றச் செய்துவிட்டது.

பிஹெச்.டி முடித்துள்ள நான் தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றுகிறேன். ‘கேட்பார் பேச்சைக் கேட்டு இத்துடன் தொலைந்து போ’ என்று கணவரைத் தலைமுழுகவா, அவர் உறவில் இருந்து... என் பெயரில் வாங்கியிருக்கும் வீடு வரை உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கவா?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி 367-ன் சுருக்கம்

‘ஒரே மகளே வாழ்க்கை’ என்று வாழ்ந்துவரும் நானும் கணவரும்... அவள் விரும்பியதை படிக்கவைத்தும்,  அவளுடைய தேவைகளை நிறைவேற்றியும் வருகிறோம்.கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் மகளுக்கு வெளிமாநிலத்தில் வேலை கிடைத்தது.  சில மாதங்களுக்குப் பிறகு, அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ஒருவரை விரும்புவதாகச் சொன்னாள். ‘குணத்தில் பிழை உள்ளவர். திருமணத்துக்குப் பின், பெண்ணை விட்டுப் போய்விடுவார்’ என்று பையனின் ஜாதகத்தை பார்த்த ஜோசியர்கள் கூறினர். மேலும், அந்தப் பையனுக்கு, பெற்றோர் இல்லை என்ற தகவலை மகள் சொல்ல, குழப்பமானோம்.

என் டைரி - 368

அலுவலகம் மற்றும் அவன் வசிக்கும் இடங்களில் விசாரித்தபோது, சரியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. மகளோ, ‘ஜாதகத்தில் நம்பிக்கையில்லை. என் வாழ்க்கை நாசமாப் போனாலும் பரவாயில்ல, அவனைத்தான் கட்டிக்குவேன்’ என்கிறாள். `ஒருவேளை அவள் வாழ்வில் எதுவும் பிரச்னை என்றால், எங்களால் தாங்க முடியுமா’ என்று நாங்கள் தவிக்க, ‘நான் தற்கொலை பண்ணிக்கிட்டா?’ என்று மகள் மிரட்டுகிறாள். குழப்பங்களைப் புறந்தள்ளி திருமணத்தை நடத்தலாமா? மகளை கண்டித்து எங்கள் வழிக்குக் கொண்டுவரலாமா?’

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

மகள் விருப்பத்தை நிறைவேற்றுங்கள்!

என்னதான் நீங்கள் பதறினாலும், பிரித்து வைத்து தடைகள் போட்டாலும், வேறு ஒருவருக்கு கட்டிவைத்தாலும் உங்கள் பெண் மனது வைத்தால் மட்டுமே, அவள் நன்றாக வாழ வேண்டும் என்ற உங்கள் ஆசை நிறைவேறும். மேலும், வலுக்கட்டாயமாக, வேறு ஒருவருக்கு மணம் முடித்தால், இன்னொரு குடும்பமும் சோதிக்கப்படும். கடவுள் மீது பாரத்தைப்போட்டு, மகள் விரும்புபவரை மணம் முடித்து வைப்பதே நல்லது.

- என்.தாட்சாயணி, சென்னை-116

தீர விசாரியுங்கள்!

மகளுக்காக வாழ்ந்த உங்கள் பாசம் புரிகிறது. நீங்கள் இருவரும் மகள் பணியாற்றும் ஊருக்குச் சென்று தங்கி மகளுக்குத் தெரியாமல் காதலனைப் பற்றி விசாரியுங்கள். அவன், நல்லவனாக இருந்தால் மணம் முடித்துக்கொடுங்கள், பொல்லாதவன் என தெரிந்தால், பக்குவமாகப் பேசி அழைத்து வந்துவிடுங்கள்.

- செல்வ.மேகலா, பந்தநல்லூர்

கவுன்சலிங் கொடுங்கள்!

இந்தப் பிரச்னையை இப்படியே விட்டுவிடாதீர்கள். ஒரே பெண், அவள் வாழ்க்கை நல்லபடியாக இருக்க வேண்டும். எனவே, அவள் விருப்பத்துக்கேற்றபடி திருமணம் செய்துவைத்தால், வேதனை அவளுக்கும், உங்களுக்கும்தான். அதனால் உங்கள் பெண்ணிடம் அன்பாக எடுத்துக்கூறி, நல்ல ஆலோசகரிடம் கவுன்சலிங்குக்கு அழைத்துச் செல்லுங்கள். அவள் நிச்சயம் மாறுவாள் வாழ்வது ஒருமுறைதான். அதை மகிழ்ச்சியாக வாழ்வது முக்கியம்!

- பி.கீதா, ஈஞ்சம்பாக்கம்