Election bannerElection banner
Published:Updated:

செல்வி காந்திமதி அன்னை மணியம்மையாரான கதை! #ManiammaiMemories

செல்வி காந்திமதி அன்னை மணியம்மையாரான கதை!  #ManiammaiMemories
செல்வி காந்திமதி அன்னை மணியம்மையாரான கதை! #ManiammaiMemories

செல்வி காந்திமதி அன்னை மணியம்மையாரான கதை! #ManiammaiMemories

சமூகத்தில் நிலவும் பொதுவான கருத்துகள்மீது மாற்றுப்பார்வையை முன் வைப்பவர்கள் கடுமையான எதிர்வினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், தான் சொல்லும் கருத்துகள் மிகச் சரியானவை என ஒருவர் நூறு சதவிகிதம் கருதினால் மட்டுமே எதிர்ப்பாளர்களைத் துணிவோடு சந்திக்க முடியும். தமிழக நிலப்பரப்பில் மாற்றுச் சிந்தனையைப் பரப்பியவர்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். சாதி, மதம், கடவுள், மூடநம்பிக்கைகள் குறித்து அவர் கூறிய கருத்துகள் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின. ஏராளமானவர்கள் அக்கருத்துகளால் ஈர்க்கப்பட்டு அவரைப் பின் தொடர்ந்தனர்; இன்றும் தொடர்கின்றனர். பெரியாருக்கு வந்த எதிர்ப்புகளும் கொஞ்ச நஞ்மன்று. செறுப்பை விட்டெறிந்து அடித்தது உட்பட பல்வேறு தாக்குதல்கள். பெரியார் என்றதும் அவரின் கைத்தடியும் பலருக்கு நினைவுக்கு வரும். போராட்டம் மிக்க அவரின் வாழ்வின் உயிருள்ள கைத்தடியாக அவருடன் பயணித்து, உதவியாக இருந்தவர் மணியம்மையார். 

வேலூரைச் கனகசபை - பத்மாவதி தம்பதியினர் திராவிட இயக்க ஆதரவாளர்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். மூத்த மகளின் பெயர் காந்திமதி. பிறந்த ஆண்டு 1920. பெரியார் வேலூர் செல்லும்போது இவர்களின் வீட்டிற்கும் செல்வார். அதனால், காந்திமதி சிறுவயதாக இருக்கும்போதே சுயமரியாதை சிந்தனைகள் அறிமுகமாயின. அரசமரத்தெருவில் உள்ள தொடக்கப்பள்ளியிலும், ரெட்டியப்பமுதலியார் தெருவிலிருந்த இடைநிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார்.

காந்திமதியின் பெயரை அரசியல் மணி என்று தமிழறிஞரும் திராவிட இயக்கத்தலைவருமான அண்ணல் தங்கோ மாற்றினார். அரசியல் மணியின் தந்தை கனகசபை பெரியாருக்கு அடிக்கடி கடிதம் எழுதும் வழக்கம் கொண்டவர். 1943 ஆம் ஆண்டில், பெரியாரின் நலம் விசாரிக்கும் கடிதத்தை எழுதி, அனுப்பினார். அதற்கான பதில் கடிதத்தில் பெரியார்,

 'எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் கூட இருந்து உதவிசெய்ய யாருமில்லை. என்னவோ, என் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்" என்று சலிப்போடு எழுதியிருந்தார். 

இந்தக் கடிதம் கண்டதும் கனகசபை, தம் மகள் அரசியல் மணியை (காந்திமதியை) அழைத்துவந்து, 'இந்தப் பெண் இங்கேயே இருக்கட்டும்' என்றார். அடுத்த சில மாதங்களில் கனகசபை இறந்த பிறகு, 1943 செப்டம்பர் 11-ம் நாள் அரசியல் மணி பெரியாரின் தொண்டராக வந்து சேர்ந்தார். அன்றுமுதல் இயக்கப் பணிகளையும் பெரியாருக்கு உதவியாகவும் இருப்பதையே தம் முழுநேர பணியாக மாற்றிக்கொண்டார். தமிழ் வித்வான் படிப்பில் சேர்த்தார். தவிர்க்க முடியாத சூழலால் தேர்வு எழுத முடியால் போய்விட்டது. கே.அரசியல் மணி என்பதை கே.ஏ. மணி என்றழைக்க, பின் அதுவே மணியம்மை ஆனது. 

பெரியாரின் சிந்தனைகளை முழுமையாக உள்வாங்கத் தொடங்கிய மணியம்மை 'குடியரசு' இதழில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். சமூகத்தில் நிலவிய மூடப் பழக்க வழக்கங்களைச் சாடியும் பெண் விடுதலை குறித்தும் தம் எண்ணங்களைச் சிறிதும் தயங்காமல் அனல் பறக்கும் எழுத்துகளாக வடித்தார். கூடவே பெரியார் பேசிய பேச்சுகளைத் தொகுத்து பத்திரப்படுத்துவது எனும் அரிய செயலை மணியம்மை செய்தார். 

திராவிடர் கழகத்தின் மாநாடுகளில் மணியம்மை கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முன் வரிசையில் அஞ்சாமல் நின்றார் மணியம்மை. 'குடியரசு' இதழில் 'இளந்தமிழா புறப்படு போருக்கு' எனும் கட்டுரையை வெளியிட்டதற்காக அரசு அவரை ஒரு மாதம் சிறையில் அடைத்தது. அதுமட்டுமன்று, பல்வேறு காரணங்களாகப் பலமுறை சிறை சென்றிருக்கிறார் மணியம்மை. 

தனது கடமைகளில் முதன்மையானது என மணியம்மை நினைத்தது தந்தை பெரியாரின் உடல்நிலையைக் கவனித்துக்கொள்வதைத்தான். ரயிலில் செல்ல நேரும்போது, பயணத்தொகை அதிகமாகும் என்பதற்காக, பெரியார் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் செய்வார். பெரியாரின் உடல்நிலையை எடுத்துக்கூறி, அவருக்கு இரண்டாம் வகுப்பில் பயணிக்க வைத்து, தான் மூன்றாம் வகுப்பில் பயணிப்பார் மணியம்மை. பெரியார், தொடர் பயணங்களாலும் வயது மூப்பினால் ஹெர்னியா போன்ற உடல் உபாதைகளால் அவதியுறும்போது உடனிருந்து கவனித்துக்கொண்டார். குறிப்பாக, பெரியாரின் நாக்கில் புற்றுநோய் வந்திருந்த காலத்தில் இமைக்காது அவரைக் காக்கும் பணியில் ஈடுபட்டார். 

பெரியார் தம் வாரிசாக மணியம்மையாக ஏற்க முடிவெடுத்தார். அதற்காக, அப்போதைய சூழல் திருமணம் செய்துகொள்ளவே அனுமதித்தது. அதனால், 1949 ஆம் ஆண்டு பெரியாருக்கும் மணியம்மைக்கும் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் குறித்து, பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டபோது, "எனக்கு ஒரு வாரிசு ஏற்படுத்தி விட்டுப் போகவேண்டும். இந்தத் திருமணம், சட்டப்படிக்கான பெயரே தவிர, காரியப்படி, எனக்கு வாரிசுதான்." என்று குறிப்பிட்டு அறிக்கையை வெளியிட்டுக் குழப்பத்தைத் தீர்த்தார் பெரியார். 

அதன்பின், பெரியாருடன் பயணித்தும், இயக்கப் பணிகளில் ஈடுபடுவதிலுமே தன்னைக் கரைத்துக்கொண்டார். பெரியார் இறந்த பின், கழகத்தைத் தலைமையேற்று நடத்தினார். எளிமையும் நேர்மையும் தனது அடையாளமாகச் சூடிக்கொண்ட மணியம்மையார், 1974 ஆம் ஆண்டு, பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். பெரியாரின் சிந்தனைகளை மக்களிடையே பரப்புவதையும் தமிழ் மக்களுக்கு எதிரான விஷயங்களில் போராடுவதையும் தம் கடமையாகக் கொண்டார். கல்வி நிலையங்கள், குழந்தைகளைப் பாதுகாத்தல், அரசியல் களப் பணிகள்... என மிக விரிவாக எழுத வேண்டிய அளவுக்கான பணியாற்றியவர் மணியம்மையார். 1978 ஆம் ஆண்டு மார்ச் 16-ம் நாள் உயிர் நீத்தார். 

திராவிட இயக்கம் தந்த பெண் ஆளுமைகளில் முதன்மையானவரான மணியம்மையார் ஆற்றிய தொண்டு, அவரின் புகழை காலத்தால் மறைக்க இயலாததாக மாற்றியிருக்கிறது.    

நன்றி:'தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார்' நூல் (முனைவர். ந.க.மங்களமுருகேசன்)

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு