Published:Updated:

"இறப்பு வரைக்கும் நாங்க ஒரே குடும்பம்தான்" - மேலவாளாடி - தெற்கு சத்திரம் கிராமத்தின் கதை!

"இறப்பு வரைக்கும் நாங்க ஒரே குடும்பம்தான்" - மேலவாளாடி - தெற்கு சத்திரம் கிராமத்தின் கதை!
"இறப்பு வரைக்கும் நாங்க ஒரே குடும்பம்தான்" - மேலவாளாடி - தெற்கு சத்திரம் கிராமத்தின் கதை!

"இறப்பு வரைக்கும் நாங்க ஒரே குடும்பம்தான்" - மேலவாளாடி - தெற்கு சத்திரம் கிராமத்தின் கதை!

ங்கு ஒரு குழந்தையின் கல்வி முதல் ஓர் உயிரின் மரணச் சான்றிதழ் வரை சாதிகளும் மதங்களும் ஒட்டிக்கொண்டு வருபவைதான். நமது சமூகத்திலும் சரி, சமூக வலைதளங்களிலும் சரி சாதியின் பெயரைச் சொல்லி மனித மனங்களில் உள்ள வன்மங்கள் வார்த்தைகளாக வந்துகொண்டேதான் இருக்கின்றன. கல்வியிலும் காதலிலும் சாதி, மதங்களின் தாக்கம் அதிகரித்துதான் உள்ளது. ஆனால், மேற்கூறியவற்றில் எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் தமிழகத்துக்கே முன்மாதிரியாகத் திகழ்கின்றனர் திருச்சி அருகிலுள்ள மேலவாளாடி கிராமத்து மக்கள்.

திருச்சியை அடுத்த மேலவாளாடி - தெற்கு சத்திரம் கிராமத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் 1,000 பேர், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 500 பேர், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த 300 பேர் எனக் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் இப்பகுதியில் ஒற்றுமையாக வசிக்கின்றனர். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் அனைத்து மதங்களில் நடக்கும் சுப மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு எந்தவித பேதமுமின்றி சொந்த வீட்டு நிகழ்வுபோல பங்கேற்கின்றனர். இவர்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்தக் கிராமத்தில் மூன்று மதத்தினரும் பயன்படுத்தும் வகையில் ஒரே மயானம் இருக்கிறது.

அந்த மயானத்துக்குச் சென்று பார்த்தபோது, இரும்புக் கேட்டிலேயே சமாதான புறா பறக்கவிட்டிருந்தனர். மேலும், அந்த முன் கேட்டில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மதங்களின் அடையாளச் சின்னங்களைப் பொறித்திருந்தனர்.

ஒரே ஒரு பொது வழியைக்கொண்ட இந்த மயானத்தில் கிறிஸ்துவ கல்லறை, இஸ்லாமிய அடக்கத் தளம், இந்து மதத்தினருக்கான தகனமேடை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ஊரின் இன்னொரு சிறப்பு ஊரின் தொடக்கத்திலேயே கோயிலும் ஊரின் நடுவே சர்ச்சும் அதையடுத்து பள்ளிவாசலும் இருக்கின்றன.

ஊருக்குள் சென்ற நம்மை சவேரியார் என்பவர் அழைத்து விசாரித்தார். அவரிடம் பேச்சுக்கொடுத்தபோது, “எங்கள் தாத்தா காலத்திலிருந்தே எங்கள் கிராமத்துக்கு ஒரே மயானம்தான். அப்போது ஊரில் இருந்த பெரியவர்கள், கிறிஸ்துவர்களுக்கு கல்லறைத் தோட்டம் வேண்டும் என்பதால் அதை மயானத்துக்கு அருகிலேயே உருவாக்கிக் கொடுத்தனர்” என்றார்.

சவேரியாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது நம்மிடம் வந்த செக்கர் பாய் (எ) யாகூப் கூறுகையில், “அந்தக் காலத்தில் இங்கு வசித்த இஸ்லாமிய சமுதாய மக்கள், இறந்தவர்களை இரண்டு மைல் தொலைவில் உள்ள தாளக்குடியில் அடக்கம் செய்தனர். அந்த வேளையில்தான் அப்போதிருந்த பெரியவர்கள் கிறிஸ்துவ மக்களின் கல்லறைக்கும் இந்து மக்களின் தகன மேடைக்கும் நடுவில் இருந்த இடத்தை எங்களுக்கு ஒதுக்கித் தந்தனர். மத ஒற்றுமையைச் சொல்லிக் கொடுத்துதான் எங்கள் பிள்ளைகளை வளர்க்கிறோம். காரணம் எங்கள் பெரியவர்கள் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தது அதுதான். எங்கள் பிள்ளைகளை மட்டுமல்ல எங்கள் கிராமத்து மக்களிடம்கூட நீங்கள் சாதி, மதம் பற்றிக் கேட்டால், "அப்படினா என்ன. எங்களுக்கு எதுவும் தெரியாதுங்களே!" என்றுதான் சொல்வார்கள் என்கிறார் பெருமையாக.

``இந்த ஊரைப் பொறுத்தவரைக்கும் சாதி, மத சண்டைகள், தீண்டாமை என்று எந்தவித பிரச்னையும் நடந்ததில்லை. ஊரில் எந்த ஒரு நல்லது கெட்டது என்றாலும் மூன்று மதத்தினரும் ஒன்றாகப் போவோம். வழிபாடு முதல் சுடுகாடு வரை நாங்கள் ஒற்றுமையாக இருப்பதால் இந்தச் சண்டை, சச்சரவு அதற்கெல்லாம் நாங்கள் இடமே கொடுப்பதில்லை” என்றார் ஜான்மணி எனும் கிராமத்துவாசி.

`இந்த மயானத்துக்குத் தற்போது ஏதாவது உதவிகள் தேவைப்படுகிறதா' என்று நாம் கேட்டபோது அவர்கள் அனைவரும் ஒரே பதிலைச் சொன்னார்கள். "முன்பு இருந்த ஊராட்சி நிர்வாகம் கான்கிரீட் சாலை வசதி செய்து கொடுத்தனர். மயானம் பராமரிப்புக்கான செலவை மூன்று மதத்தினரும் ஏற்றுக்கொள்கிறோம். இந்த மயானத்தில் தற்போது லைட் வசதி இல்லையென்றும், குடிநீர் பைப் ஒன்று அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்" எனக் கூறினார்கள். அரசு அல்லது சமூக அக்கறையுள்ள யாராவது இதைக் கவனித்தால் இவர்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். 

சாதியாலும் மதத்தாலும் நிறத்தாலும் இங்கு தினந்தினம் பலர் வேதனையில் துவண்டுவிழும் வேளையில் தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பமாக வாழ்ந்து மனிதத்தைப் பறைசாற்றிவருகிறார்கள் இந்தக் கிராமத்து மக்கள்... வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு