Published:Updated:

ஷாக் ஆகாதீங்க... உலகின் வலிமையான உயிரினம் எது தெரியுமா?

வரைபடம் எதுவும் இல்லாமல் எவ்வளவு பெரிய காடாக இருந்தாலும் சூரியன், சந்திர, நட்சத்திரங்கள் கொண்டு இருப்பிடத்தை மனதில் பதிய வைத்து அடைந்துவிடுகிறது இந்த உயிரினம்.

ஷாக் ஆகாதீங்க... உலகின் வலிமையான உயிரினம் எது தெரியுமா?
ஷாக் ஆகாதீங்க... உலகின் வலிமையான உயிரினம் எது தெரியுமா?

``சிலரால் உதறித் தள்ளப்படும் பொருள்கள், பலருக்கு வாழ்வாதாரமாக ஆவது போல, வேண்டாம் என்று உயிரினங்கள் பல ஒதுக்கிய சாணமே சிலவற்றுக்கு வாழ்வாதாரம். நாம் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இவற்றின் வீரமும் வாழ்க்கை முறையும், இயற்கையில் இவற்றின் பங்களிப்பும் உள்ளது. சாணங்களே இவற்றின் வீரம், இவற்றின் வாழ்வாதாரம், அடுத்த சந்ததியின் இருப்பிடம். இவை என்ன என்று கேட்கிறீர்களா? 

அவைதாம் சாண வண்டுகள் (Dung Beetles). சாணங்களை மட்டும் உண்டு வாழும் வண்டுகளே, சாண வண்டுகள். கிட்டத்தட்ட இவை 1 மிமீ அளவிலிருந்து 3  செமீ அளவு வரை வளரும்.

7,000 இனங்களுக்கு மேல் சாண வண்டுகள் உள்ளன. பெரும்பாலான சாண வண்டுகள் கறுப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. இலைகளை உண்ணும் விலங்குகளின் கழிவுகளை அதிகமாக உட்கொள்ளும். மாடு மற்றும் யானையின் சாணங்களே இவற்றுக்குப் பிடித்தமான உணவு. அன்டார்டிகாவைத் தவிர அனைத்து இடங்களிலும் சாண வண்டுகள் பரவலாகக் காணப்படுகின்றன. சாணத்தை வெட்டி எடுக்க, மண்ணைக் குடைய தலையில் மண்வெட்டி போன்ற அமைப்பு முன்னங்கால்களை விட நீண்ட பின்னங்கால்கள்,  இறக்கைகள் போன்றவை இவற்றின் உடலமைப்பு.

இவை கூட்டமாகவே வாழும் தன்மையுடையவை. நல்ல மோப்ப சக்தியும் உடையவை. எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் சரியாக மோப்பம் பிடித்துக் கூட்டமாகச் சென்று சாணத்தைத் தின்று சிதைத்து விடுகிறது. இவை கழிவுகளைச் சுத்தம் செய்வதில் கில்லாடிகள்!

சாண வண்டுகளில் நான்கு வகைகள் உண்டு:

1. (Rollers) உருட்டுபவர்கள்:    

இவ்வகை வண்டுகள் சாணங்களைக் கண்டவுடன் அவற்றை உருட்டி தன்னுடைய இருப்பிடத்துக்கு எடுத்துச் செல்கிறது. சாண உருண்டைகளை இவை உணவுக்காகவும், இனப்பெருக்கத்துக்காகவும் பயன்படுத்திக்கொள்கிறது.

2. (Tunnellers)  குடைவோர்: 

இவை சாணத்தைக் கண்டுபிடித்தால் சுரங்கப்பாதையைத் தோண்டி சாணத்தைச் சேமித்து வைக்கிறது.

3. (Dwellers) வாசிகள்: 

 உருட்டும் குடையும் வேலையை இவ்வகை வண்டுகள் விரும்புவதில்லை.  

4. (Stealers)  திருடர்கள்: 

இவை சோம்பேறி வண்டுகள், சாணங்களை உருட்டி வரும் வண்டுகளிடமிருந்து சாண உருண்டைகளைத் திருடுகிறது. இதற்காக இவை சண்டையும் போடுகிறது. 

இந்தச் சிறிய வண்டுகள் பயன்படுத்தும் ஐடியா நம்மை வியக்க வைக்கிறது. இவற்றின் பின்னங்கால்களுக்கு வலு அதிகம் என்பதால் முன்னங் கால்களை தரையில் ஊன்றி பின்னங்கால்களால் சாண உருண்டைகளை நகர்த்துகிறது. பெரிய வண்டிகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பத்தை இந்தச் சிறிய வண்டுகள் இயற்கையாகவே கொண்டிருக்கின்றன.

மேலும், சிறப்பான விஷயம் என்னவென்றால் இவை வரைபடம் எதுவுமில்லாமல் எவ்வளவு பெரிய காடாக இருந்தாலும் சூரியன், சந்திர, நட்சத்திரங்கள் கொண்டு தனது இருப்பிடத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டு சரியாக அடைந்துவிடுகிறது. இவற்றுக்கு எந்த ஒரு கூகுள் மேப்பும் தேவையில்லை. பெரும்பாலும் இவை நேர்கோட்டில் செல்வதையே விரும்புகிறது.

மழைக்காலத்தையே இனப்பெருக்கத்துக்கான சிறந்த காலமாகத் தேர்ந்தெடுக்கிறது. ஆண் வண்டுகள் தங்கள் சாணங்களை உருட்டும் முறையின் மூலமாகவே பெண் வண்டுகளை ஈர்க்க முடியும். கிராமங்களில் இளவட்டக்கல்லைத் தூக்கும் பழக்கம் இருப்பது போல, இந்த ஆண் வண்டுகள் எவ்வளவு பெரிய அளவிலான சாணங்களை உருட்டுகிறதோ அந்த அளவு பெண் வண்டுகளால் ஈர்க்கப்படுகிறது. இதன் மூலமே பெண் வண்டுகள் கவரப்பட்டு தனது இணையைத் தேர்ந்தெடுக்கிறது. ஈர்க்கப்பட்ட பெண்வண்டுகள் அந்தச் சாணத்தின் மீது ஏறிக்கொள்கிறது. 

பாதுகாப்பான இடத்தை அடைந்தவுடன் பொந்து ஒன்றைத் தோண்டி, சாண உருண்டை பொருந்தும் அளவுக்குக் குழியை உருவாக்குகிறது. இரு வண்டுகளும் அங்கேயே தங்கி சாணத்தை உண்டு வாழ்கின்றன. ஏற்ற காலத்தில் பெண் வண்டு மட்டும் சாணத்தில் வந்து முட்டையிடும். பிறகு முட்டையிட்ட இடத்தை நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்ளும். சாணத்தில் இடப்பட்ட முட்டைகள் வளர்ந்தவுடன் அந்தச் சாணத்தையே தின்று பெரிதாகிய பின் வெளியேறும். 

சில சுவாரஸ்யத் தகவல்கள்: 

  •  3.3 பவுண்டு யானை சாணம் இரண்டரை மணி நேரத்தில்16,000 வண்டுகளால் உண்ணப்பட்டுச் சிதைக்கப்படும். 
  • ஒரு சாண வண்டினால் ஒரே இரவில் தன்னை விட 250 மடங்கு கடினமான சாணத்தைத் சிதைக்க முடியும்.
  • சாண வண்டுகள் தங்களுக்குப் பிடித்தமான விலங்குகளின் மீது தொற்றிக்கொண்டு பயணம் செய்கிறது. விலங்குகள் எப்பொழுது சாணங்களை வெளியிடுகிறதோ, அப்போது கீழே குதித்து சாணங்களை உண்கிறது. சில வண்டுகள் தனது மோப்பச் சக்தியைப் பயன்படுத்தி சாணம் இருக்கும் இடத்தைச் சரியாக வந்தடைகிறது. 
  • சாண வண்டுகளின் சராசரி ஆயுட்காலம் 3 - 5 ஆண்டுகள்.
  • தாங்கள் என்ன உண்ண வேண்டும் என்பதில் கூட இவ்வகை வண்டுகள் மிகவும் தெளிவாக இருக்கும். குறிப்பிட்ட சில வகை விலங்குகளின் சாணங்களையே இவை தேர்ந்தெடுத்து உண்ணுகிறது.
  • இவை விவசாயத்துக்கும் தனது பங்கினை ஆற்றுகிறது. சாணங்களைச் சிதைத்து பூமிக்கு வளமளிக்கிறது.  
  • தனது உடல் எடையை விடக் கிட்டத்தட்ட 1141 மடங்கு எடையை இவை இழுத்துச் செல்கிறது. இது பயணிகள் நிறைந்த இரட்டை அடுக்குப் பேருந்தை தனிநபராய் இழுத்துச் செல்வதற்கு சமம்.
  • இவ்வகை சிறு வண்டுகள் இயற்கைக்கு மட்டுமல்லாமல் மனிதனுக்கும் நன்மை அளித்து வருகிறது. இவற்றின் சிறப்பினை உணர்ந்ததாலோ, என்னவோ பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எகிப்தியர்கள் சாண வண்டுகளை புனிதமாகக் கருதி வணங்கினர்.

இவற்றின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, ``இத்தனை சிறிய வண்டுக்கும் எத்தனை பெரிய மனம் இருக்கிறது என்றுதான் கூறத்தோன்றுகிறது".