Published:Updated:

டைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்!

டைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்!
டைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்!

ஜூலியட் மேரி லூயிஸ் லஃபார்க் என்று பெயர். பிரான்ஸில் நிலவிய இனப்பிரிவினைகளை அவள் கண்டுகொள்ளவில்லை. அவள் கண்களை ஜோசப் மீதான காதல் மறைத்திருந்தது. 1908-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``டைட்டானிக்" ஜேம்ஸ் கேமரூன் அந்தப் படத்தை இயக்குவதற்கு முன்பே இந்த விஷயம் அவருக்குத் தெரிந்திருந்தால் கதை வேறுமாதிரியாகப் போயிருக்கலாம்! 

2000-ம் ஆண்டில் தெரியவந்த இந்த வரலாறு, 1997-ம் ஆண்டு வெளியான டைட்டானிக் படத்தை இயக்கிய அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால், கதாநாயகன் ஜாக் என்ற கதாபாத்திரத்தை ஒரு கறுப்பின ஆளாக வைத்திருப்பார். கதாநாயகி ரோஸுடன் அவருக்குத் திருமணமாகி அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்திருக்கும். க்ளைமாக்ஸில் கப்பல் மூழ்கும்போது தனது குடும்பத்தைக் காப்பாற்றிய ஜாக்...

ஜாக்கும் அவர்களோடு பிழைத்தாரா என்பதை க்ளைமாக்ஸிலேயே தெரிந்துகொள்வோம். அதற்குமுன் ஃப்ளாஷ்பேக்.

உண்மையான ஜாக்கின் பெயர் ஜோசப் பிலிப் லெமெர்சியர் லாரோஷே (Joseph Phillipe Lemercier Laroche). டைட்டானிக் கப்பலில் பயணித்த ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒரேயொரு பயணி. பிரெஞ்சு ராணுவப் படையின் கேப்டனாக இருந்தவருக்கும் ஹைடியக் கறுப்பினப் பெண்ணுக்கும் பிறந்தவர்தான் இந்த ஜோசப். அவரது அம்மா சுதந்திரமான ஹைடியின் (Haiti) முதல் ஆட்சியாளரான ஜான் ஜேக்கஸ் டெஸாலினெஸ் (Jean-Jacques Dessalines) என்பவரது மகள். ஹைடியில் உயர்குடிப் பிரமுகராக வளர்ந்தவர் தனது 14 வயதில் மேற்படிப்புக்காக பிரான்ஸுக்குச் சென்றார். அங்கு பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர் அந்நாட்டிலேயே பாரீஸ் மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் பணிபுரியத் தொடங்கினார்.

சில ஆண்டுகள் கழித்துத்தான் அவளைச் சந்தித்தார் ஜோசப். அவள் ஒரு வைன் (Wine) விற்பனையாளரின் மகள். ஜூலியட் மேரி லூயிஸ் லஃபார்க் (Juliette Marie Louise Lafargue) என்று பெயர். பிரான்ஸில் நிலவிய இனப்பிரிவினைகளை அவள் கண்டுகொள்ளவில்லை. அவள் கண்களை ஜோசப் மீதான காதல் மறைத்திருந்தது. 1908-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 1909-ம் ஆண்டு அவர்களுக்கு பிப்ரவரி மாதம் சிமோன் (Simmone) பிறந்தாள். 1910-ம் ஆண்டு ஜூலை மாதம் மேரி லூயிஸ் (Marie Louise) பிறந்தாள்.

ஜூலியட் ஒரு கறுப்பின மனிதரைத் திருமணம் செய்ததால் அவரையும் சமூகம் ஒதுக்கி வைக்கத் தொடங்கியது. அவர்களுக்கு யாரும் வீடு தரவில்லை. அதனால் வேறு வழியின்றி ஜூலியட்டின் தந்தை வீட்டிலேயே வாழவேண்டிய நிலை. கௌரவமாக வளர்ந்த ஜோசப்பால் இந்த அவமானங்களைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. போதாக்குறைக்கு இரண்டாவது பெண் மேரிக்குப் பிறந்ததிலிருந்தே பலவீனமான உடல்நிலை. அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுக்கொண்டேயிருந்தன. இனவேறுபாடுகள் அதிகமிருந்ததால் மெட்ரோ ரயில் கட்டுமானங்களில் அவருக்குப் போதுமான மரியாதையும் கிடைக்கவில்லை, போதுமான வருமானமும் கிடைக்கவில்லை. செலவைச் சமாளிக்க முடியாமல் ஜுலியட்டின் தந்தை தயவையே நாடவேண்டியிருந்தது. அதனால் இருவரும் 1913-ம் ஆண்டு ஜோசப்பின் சொந்த நாடான ஹைடிக்கே திரும்பிச் சென்றுவிடலாமென்று ஜோசப்-ஜூலியட் தம்பதி முடிவு செய்தார்கள்.

ஆனால், 1912-ம் ஆண்டு ஜூலியட் கர்ப்பமானார். அதற்கடுத்த ஆண்டு அவர் நிறைமாத கர்ப்பிணியாகிவிட்டால் பயணம் சாத்தியமில்லாமல் போய்விடும். அதனால் அந்த ஆண்டிலேயே கிளம்ப முடிவெடுத்தார்கள். அப்போது அவரது தாய்மாமா டெஸாலினெஸ் எம். சின்சின்னாடஸ் (Dessalines M. Cincinnatus) 1911 முதல் 1912 வரை ஹைடியின் அதிபராக இருந்தார். ஹைடியில் தனது குடும்பத்துக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு கௌரவமான வாழ்க்கை வாழ அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்குமென்று அவர் கருதினார். 

இவர்கள் கிளம்பி வருவதற்காக லா பிரான்ஸ் (La France) என்ற கப்பலில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகளை அனுப்பி வைத்தது ஹைடியிலிருந்த அவரது குடும்பம். ஆனால், அந்தக் கப்பலில் குழந்தைகள் எப்போதும் நர்சரியில்தான் இருக்கவேண்டும். அங்கிருக்கும் தாய்மார்கள் அவர்களைப் பராமரித்துக் கொள்வார்கள். முக்கியமாக அனைவரும் சாப்பிடும் டைனிங் ஹாலுக்கு அவர்களைக் கொண்டுவரக் கூடாது. இதுவே முதல் கட்டுப்பாடாக அந்தக் கப்பலுக்கான நுழைவுச்  சீட்டுகளில் போட்டிருந்தது. அதைப் பார்த்த ஜோசப் அதில் பயணிக்க விரும்பவில்லை. அவர், தன் பெண்களுக்குத் தன் கையாலேயே தினமும் ஊட்டிவிட வேண்டும். அனைவரும் ஒன்றாகவே எப்போதும் உணவருந்த வேண்டும். அது அங்கு சாத்தியமில்லை. ஆனால், எப்படியாவது ஹைடி போயாகவேண்டும். அதே சமயம் ஆர். எம். எஸ். டைட்டானிக் (R.M.S. Titanic) என்ற கப்பலின் இரண்டாம் வகுப்பில் பயணிக்க இருந்த ஒரு குடும்பம் இவர்களுக்குப் பழக்கமானது. இவர்களிடமிருந்தது லா பிரான்ஸ் கப்பலின் முதல் வகுப்பு டிக்கெட். அதைக் கொடுத்தபோது அவர்கள் மறுக்கவில்லை. இருவரும் டிக்கெட்டுகளை மாற்றிக்கொண்டார்கள்.

1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி கிராண்டே ரேட் (Grande Rade) என்ற பகுதியில் ஜோசப்-ஜூலியட் குடும்பம் கப்பலேறி ஹைடிக்குத் தன் பயணத்தைத் தொடர்ந்தது. ஜோசப் கறுப்பின மனிதர்களுக்கு எதிரான அனைத்து அவமானங்களையும் டைட்டானிக்கில் அனுபவித்தார். அனைவரும் அவர்களை வெறுப்போடு பார்த்தனர். கப்பல் பணியாளர்கள்கூட அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய மரியாதைகளையும் செய்யவேண்டிய உதவிகளையும் செய்யவில்லை. சாப்பிடும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பெரும்பாலும் ஜோசப் தன் குடும்பத்தை அவர்களின் அறையிலேயே தங்க வைத்தார். அவரைப் போலவே அவரது குடும்பமும் அவமானங்களைச் சந்திக்கக் கூடாதென்பதில் உறுதிகொண்டிருந்தார். அவர்களுக்கும் சேர்த்து அவரே அனுபவித்தார். ஒரு கறுப்பின மனிதரைத் திருமணம் செய்ததற்காக ஜூலியட்டும் போதுமான அவமதிப்புகளையும் கோபப் பார்வைகளையும் பெற்றாள். இருவரும் தங்கள் காதலை எதிர்த்த சமூகத்தைத் தைரியமாகவே எதிர்கொண்டனர்.

 1300 பயணிகளும், 900 பணியாளர்களுமாக டைட்டானிக் கப்பலில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பயணித்தனர். அவர்களில் வெள்ளையரல்லாத வேற்றினத்தவர்கள் இரண்டே பேர் தானிருந்தார்கள். மற்றொருவர் இத்தாலியரான விக்டர் கிக்லியோ (Victor Giglio). முதல் வகுப்பில் பயணித்த பெஞ்சமின் குக்கென்ஹெயிம் (Benjamin Guggenheim) என்பவரின் உதவியாள். அதனால் அவரும் முதல் வகுப்பிலேயே பயணித்தார். அதோடு விக்டர் கறுப்பினமில்லை. அவர் மாநிறத்துக்கும் கூடுதலான வெள்ளைக்குச் சற்றே குறைவான நிறம். கறுப்பினத்தைச் சேர்ந்தவர் ஜோசப் ஒருவர் மட்டுமே. இது ஏதோ தற்செயலாக நடந்ததென்று கடந்துபோக முடியவில்லை. டைட்டானிக் பயணத்துக்கு முன்பதிவு செய்யும்போதே அந்த நிறுவனம் வெறும் வெள்ளையர்களாகவே பதிவுசெய்திருக்க வேண்டும். இந்த இருவரும் பயணிப்பதுகூட கடைசி நேரத்தில் தெரிந்ததால் அவர்களால் அதைத் தவிர்க்க முடியவில்லை. இதைப் பின்னாளில் ஒப்புக்கொண்ட தி வொய்ட் ஸ்டார் லைன்(The White Star Line) கப்பல் நிறுவனம் தங்கள் கப்பலில் நடத்தப்பட்ட இனவெறிச் செயற்பாடுகளுக்குப் பகிரங்கமாக மன்னிப்பு கோரியது.

டைட்டானிக் மூழ்கிய ஏப்ரல் 14 அன்று இரவு, ஜோசப் கப்பலின் மேல்தளத்தில் புகைப்பிடித்துக்கொண்டிருந்தார். கப்பல் ஒரு பனிமலைமீது மோதியதால் ஆபத்துக்குள்ளாகிய விஷயம் தெரிந்தவுடன் தனது அறைக்கு ஓடினார். குழந்தைகளோடு ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஜூலியட்டை எழுப்பினார். கப்பல் மூழ்கத் தொடங்கியது. கூட்டம் கூட்டமாகப் பெண்களையும் குழந்தைகளையும் மட்டும் முதலில் காப்பாற்றிக்கொண்டிருந்தார்கள். படகுகளில் ஏறுவதற்கு முயன்றுகொண்டிருந்த கூட்டத்துக்கு மத்தியில் தனது குடும்பத்தைப் போராடி அழைத்துச் சென்றவர் ஒருவழியாகப் படகில் ஏற்றினார். ஜூலியட்டுக்குத் துக்கம் தாங்கவில்லை. துக்கம் வெடித்துப் பொங்கிவந்த கண்ணீரும் அவளது தேம்பலும் அந்தப் படகிலிருந்த வெள்ளையர்களுக்கு அவர்களின் காதலைப் பறைசாற்றிக்கொண்டிருந்தது. ஆனால், மேட்டுக்குடிப் போதையில் சிக்கியிருந்த அவர்களின் காதுகளுக்கு வேறுபாடுகளைத் தாண்டியவர்களின் காதல் கதறல்கள் கேட்கவில்லை.

ஜோசப்-ஜூலியட் தம்பதியின் இரண்டாவது மகள் லூயிஸ் லாரோஷே 1998-ம் ஆண்டு தனது 88 வது வயதில்...

அவர்களை அழைத்து வரும்போது தன்னிடமிருந்த பணம், நகைகளை முடிந்தமட்டும் `கோட்' பையில் போட்டுக்கொண்டுதான் கிளம்பினார். அவரைப் பிரியமுடியாமல் திணறிய காதல் மனைவிக்கு அந்தக் `கோட்'டை அணிவித்து, ``ஜூலி, நீ கவலைப்படாதே. நான் வேறு படகைப் பிடித்து நிச்சயம் வந்துவிடுவேன். நீ குழந்தைகளைப் பத்திரமாகக் கரைசேர்த்துவிடு. நாம் நியூயார்க்கில் சந்திப்போம்" என்று சமாதானம் கூறினார். குழந்தைகளோடு ஜூலியட் அமர்ந்திருந்த படகு கிளம்பியவுடன் மற்ற பெண்கள் குழந்தைகளைக் காப்பாற்ற முயன்றார் ஜோசப். தனது குடும்பத்தைப் போராடிக் காப்பாற்றிய அவரால், தன்னைக் காப்பாற்றிக்கொள்ளமுடியாமல் போனது. கப்பலோடு அவரும் மூழ்கிப்போனார். அவரது உடல்கூட கிடைக்கவில்லை.

உயிருக்குப் போராடிய அந்த நிலையிலும் ஜூலியட் மீது அவர்கள் வெறுப்பைக் கக்கினார்கள். கரைசேரும் முன்பே ஜோசப் கொடுத்த `கோட்' படகிலிருந்த ஒருவரால் பிடுங்கப்படவே வெறுங்கையோடு நின்றாள் ஜூலியட். கர்ப்பிணியான அவள் தனது இரண்டு பெண் குழந்தைகளோடு தப்பித்துக் கரைசேர்ந்தாள். இனி எங்கு செல்வதெனத் தெரியாமல் துவண்டுபோயிருந்த ஜூலியட் மீண்டும் தந்தையிடமே திரும்பினாள். ஆனால், அவரோ முதல் உலகப் போரின் விளைவால் தனது தொழிலை முற்றிலுமாக இழந்து மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தார். அனைவரும் வறுமையில் வாடினர். பிரான்ஸில் ஜூலியட்டுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. சில ஆண்டுகளில் டைட்டானிக் கப்பலின் பேரழிவால் பாதிக்கப்பட்டதற்கு நஷ்டஈடாக ஜூலியட் பெயரில் நிலம் கிடைத்தது. அதற்குப் பிறகு அதைவைத்துச் சராசரி வாழ்க்கையை மட்டுமே கடைசிவரை வாழமுடிந்தது. கடைசிவரை அவர் மறுமணமே செய்துகொள்ளவில்லை. இறுதிவரைத் தன் காதல் கணவன் நினைவிலேயே வாழ்ந்துவிட்டார்.

பொருளாதார நிலையின் இருதுருவங்களில் வாழ்பவர்களின் காதலை மையாகக்கொண்ட ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக், காலம் சொல்லும் காதல் கதை.

சமூகக் கட்டமைப்பின் இருவேறு பிரிவுகளில் வளர்ந்தும், உயர்வு தாழ்வு பாராமல் தோன்றியது ஜோசப்-ஜூலியட் காதல். இது காலம் சொல்ல மறந்த காதல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு