Election bannerElection banner
Published:Updated:

`என்ன மிஞ்சி இருக்கோ அதை வெச்சுதான் வியாபாரம்!’ - விளையாட்டுப் பொருள் விற்கும் ஆயிஷா

`என்ன மிஞ்சி இருக்கோ அதை வெச்சுதான் வியாபாரம்!’ - விளையாட்டுப் பொருள் விற்கும் ஆயிஷா
`என்ன மிஞ்சி இருக்கோ அதை வெச்சுதான் வியாபாரம்!’ - விளையாட்டுப் பொருள் விற்கும் ஆயிஷா

`என்ன மிஞ்சி இருக்கோ அதை வெச்சுதான் வியாபாரம்!’ - விளையாட்டுப் பொருள் விற்கும் ஆயிஷா

``வாங்கம்மா வாங்க... குழந்தைங்க விளையாடத் தேவையான அத்தனை பொருளும் இங்கே இருக்கு. அதுவும் குறைஞ்ச விலையில. விதவிதமான விளையாட்டுக்குத் தேவையான அப் டு டேட் விளையாட்டுச் சாமான் அத்தனையும் இங்கே கிடைக்கும். வாங்கம்மா வாங்க...'' என உற்சாகக் குரலெடுத்துக் கூவிக்கொண்டிருந்தார் ஆயிஷா. வளரத் தொடங்கியதிலிருந்தே வறுமையை மட்டுமே வழித்துணையாகக்கொண்டு கடந்த 15 வருடங்களாக சென்னை மெரினா கடற்கரையில் குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருள்களை  விற்பனை செய்துவரும் ஆயிஷாவின் வாழ்க்கைத் தடத்தில் ஒருசில மணித்துளிகள் பயணம் செய்தேன். 

``15 வயசுல சென்னை பாரீஸ்ல நான் சாப்பாட்டுக்கடை போட்டேன். பெயின்டிங் வேலைபார்த்த அன்பான அப்பா. வீட்டையே கோயிலா பராமரிச்ச என் அம்மா. போட்டிபோட்டுப் படிக்க தம்பி இம்ரான்னு 10 வயசு வரைக்கும் வாழ்க்கை சந்தோஷமாத்தான் போச்சு. அதுக்கு அடுத்த வயசு ஏன் வந்துச்சுன்னே தெரியலை. பெயின்டிங் வேலை பார்த்துக்கிட்டுருந்த என் அப்பா சாரம் வழுக்கி பத்து அடுக்கு மாடி உசரத்துல இருந்து கீழே விழுந்து இறந்துபோயிட்டார். இதுதான் என் வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் துயரச் சம்பவம். அழுது அழுதே அமைதியாகிப்போன என் அம்மா, வாழ்க்கையை ஓட்டுறதுக்காக சாப்பாட்டுக் கடை வெச்சாங்க. எல்லாருக்கும் சாப்பாடு போடும் என் அம்மா சரியா சாப்பிடாததாலயும், ஓயாத வேலையாலயும் பலவீனமாகிட்டே போனாங்க. அப்பாவோட பிரிவு, அம்மாவை சீக்கிரத்துலயே எங்கிட்ட இருந்து பிரிச்சுடுச்சு. அப்ப எனக்கு 15 வயசு. தம்பி இம்ரானுக்கு 11 வயசு. சொந்தபந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லை. அம்மா இறந்த பிறகு எங்கே போறது, என்ன பண்றது, தம்பியை எப்படி வளர்க்கிறதுன்னு எதுவுமே புரியலை.

கிட்டத்தட்ட ஒரு வாரமா என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டு, தம்பிக்கும் சமாதானம் சொல்லிக்கிட்டு, அம்மா நடத்திய சாப்பாட்டுத் தொழிலையே நானும் நடத்த முடிவுசெஞ்சேன். இப்படியே ரெண்டு வருஷம் ஓடுச்சு. வாழ்க்கை, கொஞ்சம் பரவாயில்லைன்னு நினைக்கும்போது, `ஸ்கூல உன் தம்பி விளையாடுறப்போ கம்பியில மோதி மண்டையில அடிபட்டுட்டான். அவனை கவுர்மென்ட் ஆஸ்பத்திரிக்குத் தூக்கினு போயிருக்காங்க'னு செய்தி வந்தது. அடிச்சுப்பிடிச்சு அங்கே போனா, கண்ணங்கரேல்லு இருக்கும் என் தம்பி வெள்ள துணியில் சுத்தி வைக்கப்பட்டிருந்தான். அன்பு செலுத்தவும் ஆதரவா பேசவும் இருந்த ஒரே உறவும் வெறும் உடம்பாகிப்போச்சு.

இந்த இடமே வேணாம்னு முடிவுபண்ணி, கையில் இருந்த சொற்பப் பணத்தோடு ரயிலேறி எங்கே போறதுன்னு தெரியாமப் போயிக்கிட்டிருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சுது அது, பறக்கும் ரயில்னு.  செக்கிங் வந்தா எங்கே என்னைப் புடிச்சிப்பாங்களோன்னு பயந்துபோய், சென்னை மெரினா கடற்கரையில இறங்கிட்டேன். அங்கே பெரியவங்க சின்னவங்க, குழந்தைங்கன்னு எல்லாரும் குடும்பத்தோடு இருந்ததைப் பார்க்கும்போது என் அப்பா, அம்மா, தம்பி ஞாபகம் வந்திருச்சு. என் தம்பிக்கு ஹெலிகாப்டர்னா ரொம்பப் பிடிக்கும். அவனைப் பத்தியே யோசிச்சிட்டிருக்கும்போதுதான் குழந்தைங்க விளையாடுற பிளாஸ்டிக் பொருள்களைப் போட்டு வித்தா என்னன்னு எனக்குள்ள ஒரு யோசனை.  

ரெண்டு நாள் கழிச்சு, கையில இருந்த பணத்துல பிளாஸ்டிக் விளையாட்டுச் சாமன்களை வாங்கி பிளாட்பாரத்துல போட்டு வியாபாரம் பண்ண ஆரம்பிச்சேன்.  தனியா இருந்த எனக்கே  அந்த வியாபாரத்துல கிடைச்ச வருமானம் பத்தலை. அப்பப்போ `பிளாட்பாரத்துல எல்லாம் கடை போடக் கூடாது'னு  போலீஸ்காரங்க வேற துரத்தினாங்க. நான் எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தேன், அழுதும் பார்த்தேன். `இதெல்லாம் ஆவாத வேலை. கெளம்பு... கெளம்பு'னு என்னைத் துரத்துறதுலேயே குறியா இருந்தாங்க. அப்புறம் அக்கம்பக்கத்துல இருந்த கடைக்காரங்களோட ஆதரவுல போலீஸ்காரங்க தொந்தரவு குறைய ஆரம்பிச்சது. தனியா இருந்த எனக்குத் துணையா இவரை (இப்ராஹிமை காட்டியபடி) காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்ட எங்களை, இந்த பீச்தான் இப்போ வாழவெக்குது.''

``இந்த விளையாட்டுப் பொருள் விற்பனையில் ஒரு நாளைக்கு எவ்வளவு கிடைக்கும்?''

``சில நாள் நல்லா வியாபாரம் ஆகும். பல நாள் வியாபாரமே இருக்காது. பண்டிகை நாள், லீவு நாள்ல 1,000, 2,000 வியாபாரம் ஆகும். மத்த நாள்ல 500 ரூபாய்க்கு ஆனாலே பெரிய விஷயம். வியாபாரம் எப்படி இருந்தாலும் சாப்பாடு, போக்குவரத்து, டீசல்னு டெய்லி செலவே 300 ரூபாயைத் தாண்டும். காசு இல்லாத நேரங்கள்ல அக்கம் பக்கத்துல கடனோ கைமாத்தோ வாங்கித்தான் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருக்கோம்.''

``இந்த இடத்துல கடை போடுறதுக்கு அரசாங்கத்துக்கு ஏதாவது பணம் செலுத்தணுமா?'' என்று பீச்சில் சுண்டல் கடை வைத்து வியாபாரம் செய்துவரும் இப்ராஹிமிடம் கேட்டோம்.

``ஆண்டவன் புண்ணியத்துல அப்படி எதுவும் இதுவரைக்கும் இல்லை. ஏதோ நாங்களா ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அவங்கவங்களுக்கு என்ன வியாபாரம் செட்டாகுமோ அதைப் போட்டு நடத்திக்கிட்டு வர்றோம். தமிழ்நாடு அரசோ, சென்னை மாநகராட்சியோ, கடற்கரையோர வியாபாரிங்கங்கிற முறையில எங்களுக்கு ஒரு சங்கத்தை உருவாக்கி, எங்களுடைய நல்லது கெட்டதுகள்ல பங்கெடுத்துக்கிட்டா எங்களுக்கு ஒரு ஆதரவு கிடைச்ச மாதிரியும் இருக்கும். அவங்க மூலமா அரசாங்கத்துக்கிட்ட கடன் கேட்க ஒரு வாய்ப்பாவும் அமையும். எங்களை மாதிரி சிறு வியாபாரிங்க முன்னேறணும்னா இவங்கள்ல யாராவது மனசுவெச்சாத்தான் உண்டு'' என்றார் இப்ராஹிம்.

 ``மழை, புயல் மாதிரியான இயற்கைச் சீற்றத்தின்போது நீங்க என்ன செய்வீங்க?'' என்ற கேள்விக்கு ஆயிஷா பதில் சொல்லத் தொடங்கினார்.

``என்ன செய்றது, (கடைக்குப் பின்னால் இருக்கும் தள்ளுவண்டியைக் காண்பித்தபடி) இதோ இந்தத் தள்ளுவண்டியில்தான் எல்லா பொருள்களையும் வெச்சுப் பூட்டிட்டு, நாங்க எங்க வீட்டுலயோ இல்லை பாதுகாப்பான ஒரு இடத்துலயோ ஒண்டிக்கிட்டு இருப்போம். எல்லாம் முடிஞ்ச அப்புறம் வந்து பார்க்கும்போது என்ன மிஞ்சி இருக்கோ அதை வெச்சுதான் வியாபாரம் பண்ணுவோம். சுனாமி மாதிரியான நேரத்துல மொத்த கடையும் அடிச்சுக்கிட்டுப்போனா எங்க வாழ்க்கையை திரும்பவும் முதல்ல இருந்துதான் ஆரம்பிக்கணும்.''

``இந்த வியாபாரம் தவிர்த்து வேற ஏதாவது வேலை செய்றீங்களா?''

``ஆமாங்க, இந்தக் கடைங்களை மட்டுமே நம்பிக்கிட்டு இருந்தா எப்படிங்க வயித்தைக் கழுவ முடியும்? காலையில 6 மணிக்கு பிராட்வே, கோயம்பேடுன்னு லோடிங் வேலைக்குப் போயிடுவேன். சுண்டல் கடைக்கு வேணும்கிறதை எல்லாம் காலையிலேயே தயார்செஞ்சு வீட்டுல வெச்சுட்டு, சமையல் முடிச்சுட்டு,  பொண்ணை ஸ்கூலுக்கு அனுப்பிவெச்சுட்டு, இவங்க கடைக்கு வந்திருவாங்க. நான் லோடிங் வேலையை எல்லாம் முடிச்சுட்டு, மத்தியானம் 2 மணிக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு 3 மணிக்கு  கடைக்கு வேணுங்கிற பொருள்களை எல்லாம் எடுத்துக்கிட்டு இங்கே வந்து கடையைத் திறந்தேன்னா, நைட் 11 மணிக்குத்தான் மூடுவேன். இதான் நம்ம டெய்லி புரோகிராம்.''

`` எதிர்காலத் திட்டம் ஏதாவது?''

``எதிர்காலம் என்ன எதிர்காலம். இருக்கிற காலத்துல ஏமாற்றம் இல்லாம வாழ்ந்தாலே போதும். எங்க காலம் ஓடிடுச்சு சார். இனிமே எங்க பசங்களோட லைஃபைத்தான் பார்க்கணும். அவங்களை நல்லா படிக்கவெச்சு, அவங்க விரும்புற வாழ்க்கையை அமைச்சுத்தரணும்கிறதுதான் எங்க எண்ணம்.''

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு