Published:Updated:

காபி குடித்தால் தலை துண்டிப்பு... துருக்கி சுல்தானின் கொடூர தண்டனை! #Throwback

காபி குடித்தால் தலை துண்டிப்பு... துருக்கி சுல்தானின் கொடூர தண்டனை! #Throwback
காபி குடித்தால் தலை துண்டிப்பு... துருக்கி சுல்தானின் கொடூர தண்டனை! #Throwback

ஓட்டோமான் பேரரசின் சுல்தான் முராத் IV, தன்  கையில் வாளோடு பொது மக்கள் போல் வேடமிட்டு கான்ஸ்டான்டிநோபில் நகரத் தெருக்களை வலம் வருவார். காபி குடித்து கொண்டிருப்பவர்களின் தலையை துண்டித்து விடுவதே அவரின் நோக்கம்.

கால்கள் தரையில்கூட படாமல் பரபரவென நகர்ந்துகொண்டிருக்கும் நாளுக்கு, 'பிரேக்' ரொம்பவே அவசியம். அப்படி பிரேக் எடுக்கும் நேரத்தில் பலருக்கு புத்துணர்ச்சியைக் கொடுப்பது காபிதான். தூங்கிக்கொண்டிருப்பவர்களையும் சுண்டி இழுக்கும் பிரத்யேகமான மணம் கொண்ட 'காபி' என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.  'காபி' சிலருக்குப் புத்துணர்ச்சி பானம், பலருக்கு தொடர் பழக்கம். நம் ஊரில் மது, சிகரெட்டுக்கு அடிமையானவர்களைத் தினமும் பார்க்கிறோம். ஆனால், காபிக்கு அடிமையானவர்களின் நகரத்தைப் பற்றிய கதை பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

16-ம் நூற்றாண்டில் துருக்கி ஓட்டோமான் பேரரசில் உள்ள கான்ஸ்டான்டிநோபில் நகரத்தில், காபி குடிக்காதவர்களைப் பார்ப்பதே அதிசயம். சந்துக்குச் சந்து காபி கடைகளை பார்க்க முடியும். தங்களிடம் பணமே இல்லையென்றாலும், கடன் வாங்கியாவது ஒரு கப் காபியை சுவைத்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு சுற்றுபவர்கள் பலர். 

இந்நிலையில்தான், அந்தப் பகுதியை ஆட்சிசெய்த அரசன் சுல்தான் முராத் IV வேற லெவல் ரூல்ஸ்களை மக்களுக்குப் பிறப்பித்தார். சுல்தான் முராத் அவரின் தந்தையான சுல்தான் அகமத்தை 5 வயதிலேயே பறிகொடுத்தான். தந்தைக்குப் பின் 6 வருடங்கள் கழித்து 11  வயதில் அரியணை ஏறினான். சிறுவனாக இருந்த காரணத்தினால் பல ஆண்டுகள் அவனுடைய அம்மாவின் ஆட்சியின் கீழ் தன்னுடைய காலத்தை செலவழித்தான். பதின்பருவம் கடந்த பிறகே, மக்களின் நிலை குறித்த விழிப்புஉணர்வு சுல்தான் முராத்துக்கு தெரிய வந்தது. 

அவ்வப்போது அமைச்சர்களிடம் ஆலோசனை கேட்பதை வழக்கமாக்கிக்கொண்டான். அப்போது, மக்கள் பிரச்னைகளில் மிகவும் முக்கியமானதாக முராத்துக்கு தோன்றியது காபிக்கு அடிமையானதுதான். இந்த போதையிலிருந்து நகரத்தை விடுவிக்கக் கடுமையான நடவடிக்கை தேவை என்பதை அறிந்து கொண்ட முராத், கடுமையான சட்டங்களைப் பிறப்பித்தான். காபி அருந்துவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பல்வேறு பிரசாரங்களையும் நடத்தினார். ஆனாலும், அனைத்து வயதினரிடமும் காபி அருந்தும் வழக்கம் அதிகரித்துக்கொண்டே இருந்ததே தவிர, குறைந்தபாடில்லை. அதற்குக் காரணம், காபியின் தனித்துவமான நறுமணம், சுவை மற்றும் தரமே.

`அட... ஒரு காபிதானே... அதனால என்னவாகிடப்போகுது’ என்ற கேள்வி எழாமலில்லை. இந்தச் சிந்தனைக்கு காரணமாக இருந்தது `The Devils Cup: A History of the World According to Coffee’ என்ற நூல்தான். “மதுவைக் குடிப்பவர்கள் போதையில் சந்தோஷமாக ஆடுவார்கள் பாடுவார்கள். ஆனால், காபி குடிப்பவர்களோ அமைதியாகவும், தெளிவாகவும் அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்" என இந்த நூலின் ஆசிரியர் ஸ்டீவர்ட் லீ ஆலென் குறிப்பிட்டுள்ளார். இதுவே காபியை சட்டத்துக்குப் புறம்பானது என ஓட்டோமான் பேரரசை அறிவிக்க வைத்த கரு. 

அரசுக்கு எதிராகப் பலர், கண்டனங்களையும் போர்க் கொடிகளையும் தூக்கினர். அரசரின் இந்தக் கட்டளைக்கு பல்வேறு பெண்கள் ஆதரவு அளித்தனர். (இந்த காலகட்டத்தில் மதுக்கடைகளை ஒழிப்பதற்குப் பெண்கள் படையெடுத்து வந்தது போல்). இதுபோன்ற எழுச்சியைத் தனது ஆட்சியின் ஆரம்பகட்டத்திலேயே ஒடுக்கிய முராத், கான்ஸ்டான்டிநோபில் நகரத்தில் உள்ள அனைத்து காபி மற்றும் ஒயின் (Wine) விடுதிகளை மூடியதோடு, புகையிலை பயன்பாட்டுக்கும் தடை விதித்தார். தடையை மீறி இந்த பானங்களை விற்பவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட்டனர்.

காபி அருந்துவதால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை அதிகரிப்பதாகக் கூறி இங்கிலாந்தில் 1674-ம் ஆண்டு (காபிக்கு எதிரான பெண்கள் மனு) ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முராத் மட்டுமல்ல, அவரைத் தொடர்ந்து வந்த அனைத்து மன்னர்களும் கண்மூடித்தனமாக முராத்தின் விதிமுறைகளைப் பின்பற்றினர். மேலும், அரசுக்கு எதிராகக் கவிதை எழுதுவதாகக் கூறி இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸ் அனைத்து காபி விடுதிகளையும் இழுத்து மூடினார். பிரெஞ்ச் புரட்சிக்குப் பின்னர் புரட்சிக்குக் காரணமானவர்கள் அடிக்கடி காபி விடுதியில் இருந்ததாகக் கூறி பல விடுதிகள் அடித்து நொறுக்கப்பட்டன. 

ஓட்டோமான் பேரரசின் சுல்தான் முராத் IV, தன்  கையில் வாளோடு பொது மக்கள் போல் வேடமிட்டு கான்ஸ்டான்டிநோபில் நகரத் தெருக்களை வலம் வருவார். காபி குடித்து கொண்டிருப்பவர்களின் தலையை துண்டித்து விடுவதே அவரின் நோக்கம். அவரின் நோக்கத்தின் படி, பலரின் தலைகளைத் துண்டித்துள்ளார். காபி அருந்திக்கொண்டிருக்கும் போதே பலரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. வெறும் காபி குடிப்பதற்காக மக்களின் தலையைத் துண்டிப்பதா! கிராதகா!!

தன் கட்டளையை மீறிச் செயல்படுபவர்களுக்கு சுல்தான் முராத் கொடுத்த சில தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. முதல்முறை தவறு செய்பவர்களுக்கு வளைந்த தடியால் அடி.  இரண்டாம் முறை தவறு செய்தவர்களைப் பிடித்தால் தோல் பையில் அடைத்து ஆற்றில் மூழ்கடித்து விடுவார்கள். 'ரிஸ்கெல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிடறதுபோல' என்ற எண்ணம்கொண்ட கான்ஸ்டான்டிநோபில் நகர மக்கள், காலையிலும் மாலையிலும் காபி குடிக்கும் பழக்கத்தை மட்டும் விட தயாராகவில்லை.  காபி அருந்துபவர்களுக்குக் கடுமையான தண்டனைகளைக் கொடுத்தாலும், பல்வேறு தலைவர்களும், மத போதகர்களும் இந்த பானத்தின் மீது அதிக விருப்பத்துடனே இருந்தார்கள். “இந்தச் சாத்தானின் பானம் எப்படி இவ்வளவு அற்புதமாக உள்ளது” என்று போப் கிளமெண்ட் VIII தனது ஆலோசகர்களிடம் கூறியதாக ஒரு வதந்தியும் உண்டு.

காபி குடிப்பவர்களுக்கு கொடுரமான தண்டனைகள், துன்புறுத்தல்கள் என்று பல்வேறு துயரங்களை மக்களுக்கு அடுக்கிய சுல்தான் முரத்தும் அதற்கு அடிமையானவர்தான்!. புகையிலை, மதுபானம் மற்றும் காபியை பொதுமக்கள் பயன்படுத்துவதற்குத் தடைவிதித்தாலும், இந்த மூன்றையும் அதிகமாக உட்கொண்டவர் முராத்தான். பிப்ரவரி 8, 1640-ம் ஆண்டு தன்னுடைய 27-வது வயதில் மது அருந்துவதால் ஏற்படும் ஈரல் அரிப்பு நோய் பாதிப்பு (கல்லீரல் பாதிப்பு) ஏற்பட்டு உயிரிழந்தார் மன்னன் சுல்தான் முராத்

அடுத்த கட்டுரைக்கு