Published:Updated:

வாடிப்பட்டி தப்பு செட்டு ஏன் அவ்வளவு ஸ்பெஷல்... ரகிசயம் பகிரும் சதாசிவம்!

"யண்ணே, தல மீசிக் அடிண்ணே. தளபதி ஆட்டத்துக்குக் குத்துண்ணே' ன்னு ஆசையா தோரணையா கேட்டு வாங்கி ஆடிட்டே போகுங்க. எங்களுக்கும் குஷியா இருக்கும்."

வாடிப்பட்டி தப்பு செட்டு ஏன் அவ்வளவு ஸ்பெஷல்... ரகிசயம் பகிரும் சதாசிவம்!
வாடிப்பட்டி தப்பு செட்டு ஏன் அவ்வளவு ஸ்பெஷல்... ரகிசயம் பகிரும் சதாசிவம்!

"என்னதான் அடிச்சாலும் வாடிப்பட்டி அடி மாதிரி வருமாய்யா?", 
 

ழைப்பாளி மக்களின் உணர்வில் ஊறியிருக்கும் தமிழ்ப் பண்பாட்டைப் பறைசாற்றியபடி கிராமங்களில் வலம்வந்த வழக்குமொழி தான் இவை. ஒரு காலத்தில் வாடிப்பட்டி தப்பாட்டத்துக்கு ஏக மவுசு இருந்தது. இன்று, அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான்  தப்பாட்டம் இருக்கிறதே தவிர, பழைய ஆட்டம் களையிழந்துவிட்டது. நலிவடைந்த கலைஞர்களும் பிழைப்புக்காக வேறு தொழில்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றனர். சிலர் மட்டுமே இந்த கலை அழியாமல் இருக்க, விட்டு விடாமல் இழுத்து அடிக்கின்றனர், தப்பு செட்டை! 

மார்கழிப் பனிக் காற்றில் வீசிய வயல் வாசனைகளைத் தாண்டி, வாடிப்பட்டிக்குள் நுழைந்தோம். "அண்ணே, இங்க பரம்பரையா தப்புசெட்டு அடிக்கிறவங்க பக்கத்துல யாரும்...." கேள்வியை முடிப்பதற்குள், "அந்தா அங்கிட்டுப் போனா, வீடுங்க. சதாசிவம்னு பேரு. போய்ப் பாருங்க" என வழிகாட்டினர்.  விசாரித்து வீட்டை அடைந்ததும், வீட்டிற்குக் காவலாய்ப் படுத்திருந்த 'செங்கோடன்' புதுவரவென வீட்டாட்களுக்கு அறிவித்தான்.  மகன் கார்த்திக் வரவேற்க, மாடியில் இருந்துகொண்டு நம்மை அழைத்தார், சதாசிவம். மலைக்குப் போவதற்கான இருமுடித் துணிகளைத் தையல் மிஷினில் தைத்துக் கொண்டிருந்தார்.

"தாத்தா அப்பா காலத்துல இருந்து, தப்பாட்டம் தானுங்க எங்களுக்கு! அந்தக் காலத்திலேயே குழுவா டெல்லிக்குப் போயி தப்பு வாசிச்சு விருது வாங்குன திண்டுக்கல் பாடியூர் எஸ்.பி.கோவிந்தன் ஐயாதான், எனக்கும் எங்க ஆளுங்களுக்கும் ஆட்டம் கத்துக்கொடுத்தவரு. இப்போ வரைக்கும் இந்தக் கலையை நிறைய பசங்களுக்குச் சொல்லிக் கொடுத்திட்டு வர்றேன்." என, சின்ன அதிர்வுடன் கூடிய தனது கரகரப்பான குரலில் சந்தோஷமாக தன் அனுபவத்தை கூறாத தொடங்கினார் சதாசிவம். 

"உங்ககிட்ட வந்துதான் கத்துக்கிறாங்களா?"

"கத்துக்கொடுக்கிறதுக்கு எந்த எல்லையுமில்லீங்க. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, மதுரை லேடிடோக் காலேஜ் பிள்ளைகளுக்கு தப்பாட்டம் சொல்லிக்கொடுக்கப் போயிருந்தேன். இப்போல்லாம் கத்துத்தரச் சொல்லி யாரு கூப்பிடுறா?" முகம் இறுகி இருண்டுபோனது சதாசிவத்துக்கு.

சூழலை மாற்ற, அவரது டீம் போன இடங்களின் கலகலப்பான தருணங்கள் பற்றிக் கேட்டோம். 

"சடங்கு, கல்யாணம், கோயில் திருவிழா போன்ற விசேஷங்களுக்குப் போனா, அலப்பறைதான். பொண்டு பொடிசுங்க எளவட்டம்லாம் முன்னுக்க நின்னு, 'யண்ணே, தல மீசிக் அடிண்ணே. தளபதி ஆட்டத்துக்குக் குத்துண்ணே' ன்னு ஆசையா தோரணையா கேட்டு வாங்கி ஆடிட்டே போகுங்க. எங்களுக்கும் குஷியா இருக்கும்" என்றார் தெறித்தச் சிரிப்போடு. 

வாடிப்பட்டி கோட்டின் சிறப்பு:

வாத்தியத் தயாரிப்பின் பழமை மாறாத நேர்த்தியும் கலைஞர்கள் தங்களது வாசிப்பிலும் ஆட்டத்திலும் பழைய சுவை குறையாமல் இணைத்துக்கொள்ளுகின்ற புதுமைதான் வாடிப்பட்டிச் சிறப்பு! வாடிப்பட்டித் தப்புக்கு முதல் தேவை, எருமைக் கன்றின் தோல்தான். அதன் ரோமங்களை நீக்கி, நீரில் ஊறவைத்து நன்கு காய வைக்கவேண்டும். பின், தோலை வலுவாய் இழுத்துப் பிடித்து ஆணிகள் அறைந்து, தோலில் இழுவை ஏறச் செய்யவேண்டும். அடுத்து, புளியங்கொட்டை ஊறவைத்தப் பசையைத் தடவி காய விடுகின்றனர். இறுதியாய் அதை எடுத்து, வட்டவடிவத்திற்கு அறுத்து மர உருளைச் சட்டம் செய்து இறுக்கிக் கட்டுகின்றனர். இந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஒன்றிரண்டு நாள் வீதம், ஒரு தப்பினை உருவாக்க ஒரு வாரம் ஆகும். 

"இப்போ மத்த ஊருகள்ல இருக்கிற செட்டெல்லாம் ஃபைபர் டேப்புத்தான் அடிக்கிறாங்க. தப்புல கேட்கிற இயற்கை நாதம் டேப்புல கேட்காதுங்களே!" என்று தவிப்போடு பேசுகிறார். இடையிடையே கேடயம், பழைய புகைப்படங்கள் என எடுத்து வந்து கண்பித்துக் கொண்டிருந்தார். 

"மறக்க முடியாத அனுபவம்?" 

"எம்.ஜி.ஆர் உலகத் தமிழ் மாநாடு, கலைஞர் நெடும்பயணம்னு தப்பாட்டம் போன அனுபவம் நிறைய இருக்குங்க. கலை பண்பாட்டு மையத்தில உறுப்பினரா இருக்கேன். அந்த மையத்தில இருந்து, கஜா புயல்  நிவாரண நிதிக்காக மதுரையில நாங்க குழுவா நிகழ்ச்சி நடத்தி இருபத்தையாயிரம் ரூவா வசூலிச்சுக் கொடுத்தோம். மறக்கவே முடியாத நாளுங்க அதெல்லாம்!" என்றபடி நினைவுகளில் மூழ்கினார். 

இவர், தனது தினசரி வருமானத்துக்காக, வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே செருப்புக்கடை ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார்.

"உங்கக் கனவு என்ன ஐயா?"

"இப்போ எனக்கு 60 வயசாயிடுச்சு. என்னோட காலத்துக்கு அடுத்தும் தப்புக் கலை நின்னு ஜெயிக்கணும். எனக்குன்னு ஒண்ணும் யோசிக்கல. எங்குடும்பமும் ஓரளவு செட்டில் ஆகிருச்சு. பேரன் பேத்தி எடுத்திட்டேன்.  எனக்குப் பரம்பரையா நெலம், வீடு சொத்தெல்லாம் இருக்கிறதால நான் ரொம்ப நல்லா இருக்கேன். ஆனா, இந்தத் தப்பாட்டத் தொழிலை நம்பியிருக்கிற ஏழைக் குடியானவுக வயித்துப் பாட்டுக்கு ரொம்ப சிரமப்படுறாக. அவுகளைத்தான் எதுனாச்சும் செஞ்சு கரையேத்தணும்" என்கிறார் சதாசிவம்.

விடைபெறும்போது, வாலாட்டி வழியனுப்பி வைத்தான், 'செங்கோடன்'!. உண்மையோடும் அன்போடும் நெருங்கினால் உயிரும் கலையும் வசப்படும் தானே!