Published:Updated:

மாணவர்களுக்கு உணவளிக்கும் ஆதரவற்ற முதியவர்கள்! - கோவை நெகிழ்ச்சி

மாணவர்களுக்கு உணவளிக்கும் ஆதரவற்ற முதியவர்கள்! - கோவை நெகிழ்ச்சி
மாணவர்களுக்கு உணவளிக்கும் ஆதரவற்ற முதியவர்கள்! - கோவை நெகிழ்ச்சி

ந்த உலகின் நல்லது கெட்டது எல்லாம் பார்த்து அனுபவித்து சந்தோஷப்பட்டு துக்கப்பட்டு துரோகங்களையும் ஏமாற்றங்களையும் கடந்து வருகிறோம். நம்முடைய வேலைகளையும் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளவே நமக்கு நேரம் சரியாக இருக்கிறது. தினசரி வேலைக் காரணமாக ரோட்டில் போகும் மனநலம் பிறழ்ந்தவர்களை கண்டுகொள்ளாமல் நகர்ந்திருப்போம். ஆனால் கோவையை சேர்ந்த மகேந்திரன் அப்படி இல்லை. யாருமற்று ரோட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் ஆதரவற்ற வயதானவர்களையும் சில மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் அரவணைத்து அன்பு செலுத்துகிறார்.

மகேந்திரனைச் சந்திக்க கோவை ஆர்.எஸ் புரத்திலுள்ள அவரின் ஈரநெஞ்சம் அறக்கட்டளை காப்பகத்திற்கு சென்று காத்திருந்தோம் . அங்குள்ளவர்கள் ஆதரவற்றவர்களைப் போல இல்லாமல், ஒருவருக்கொருவர் ஆதரவு தெரிவித்து புன்னகை பகிர்ந்த வண்ணம் இருந்தனர். வாழ்வின் கடைசி பக்கங்களை புரட்டிக் கொண்டிருக்கும் கிட்டத்தட்ட 70 வயதையும் தாண்டிய முதியவர்கள்  தங்களின் வேலைகளைப் பிரித்து செய்து கொண்டும் குழுக்களாய் அமர்ந்து பேசிக்கொண்டுமிருந்தனர். ஆதரவற்றவர்கள் காப்பகத்திலிருந்து ஏதோவொரு கல்யாண மண்டபத்திற்குள் நுழைந்துவிட்டது போலவேதான் இருந்தது. ஒருவருக்கொருவர் அந்த அளவிற்கு அன்பை பகிர்ந்தவண்ணமிருந்தனர். சுருக்கம் நிறைந்த அந்தக் கண்களின் மகிழ்ச்சிக்குப் பின்னால்  மகேந்திரன் இருக்கிறார். மகேந்திரனின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம்தான் அவரை இந்தப் பாதைக்குத் திருப்பியது.

இருபது வருடங்களுக்கு முன்னால் மகேந்திரனின் மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி வீட்டைவிட்டு வெளியேறி கழிவுநீர் சாக்கடையில் விழுந்திருக்கிறார். பெரும்பாலானோர் கடந்துபோயிருக்க ஒரு ஆட்டோ ஓட்டுநர் மட்டும் சாக்கடையில் இறங்கி சகோதரியை சுத்தப்படுத்தி அவரின் வீட்டிற்குத் தனது ஆட்டோவில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். இந்தச் சம்பவம்தான் ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் விதை. மற்றவர்களைப் போல அந்த ஆட்டோ ஓட்டுநரும் கடந்துவிடாமல் நேரமொதுக்கி உதவியிருப்பது எத்தகைய பெரிய விஷயமென மகேந்திரனின் மனதில் ஊன்றிவிட்டது. அதுதான் அவரை ஈரநெஞ்சம் அறக்கட்டளை தொடங்க வைத்துள்ளது.

ஈரநெஞ்சம் அறக்கட்டளை ஆரம்பித்தது குறித்து மகேந்திரன் கூறுகையில்...

"அரசு இந்த அறக்கட்டளைக்கான கட்டடத்தை ஒப்படைக்கும்போது  சமையலறை, கழிப்பறை என எதுவும் இல்லை. உதவணும்ன்னு நினைத்த சில நல்ல உள்ளங்கள் இந்த அறக்கட்டளைக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய உதவினார்கள். மனநலம் பாதித்து எங்கோ தொலைந்து போனவர்களை தேடிக் கண்டுபிடித்து கவுன்சிலிங் கொடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கும் போது நன்றிக்காக அவர்கள் இது போன்ற உதவிகள் செய்வதுண்டு. அப்படி நல்லுள்ளம் படைத்தவர்களால் உருவானது இந்தக் கட்டடம்" என்றவர்,   

"முன்பெல்லாம் ஆதரவற்றவர்களைச் சாலையோரத்தில் பார்த்தால் அவர்களைச் சுத்தப்படுத்தி ஆதரவற்றவர்கள் அல்லது மனநல காப்பகத்தில் சேர்ப்பதுண்டு. பின்னாளில் அப்படிச் செய்வது மட்டும் எந்த விதத்தில் போதுமானதாக இருக்கப் போகிறது என அவர்களுடன் பேச முயற்சி செய்து கவுன்சிலிங் கொடுக்க ஆரம்பித்தேன். வேலைப் பளு, குடும்ப சூழ்நிலை, தனிமை போன்ற காரணங்களால்தான் மறதியும் மனநலக் குறைவும் ஏற்படுகிறது. அவர்களை மன நோயாளிகள் என விட்டுவிடாமல் உரையாட முயற்சி செய்வேன். அவர்களுக்கு உறுதுணையாக நான் இருக்கிறேன் என்பதைத் தெரியப்படுத்துவதே அவர்களின் நம்பிக்கையை வளர்கிறது. நம்பிக்கையின் வெளிப்பாடாக அவர்கள் கூறும் சில தகவல்களைக் கொண்டு அவர்களின் உறவினர்களிடம் சேர்ப்பேன். சிலரின் பிள்ளைகள் இவர்களை ஏற்க மறுத்து என்னிடமே விட்டுச் செல்வார்கள். பிள்ளைகள் அவர்களின் பெற்றவர்களுக்கு செய்யக்கூடிய ஒரே விஷயம் ஒன்றுதான். சிறு வயதில் பெற்றவர்கள் நமக்குக் கொடுத்த அதே பாதுகாப்பை நாமும் அவர்களின் கடைசி காலங்களில் தருவதே சிறந்தது. இந்த உலகில் எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமையுள்ளது" எனக் கனத்த இதயத்துடன் கூறினார் மகேந்திரன்.

இதுவரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனநல குறைபாடுடையவர்களை பாதுகாத்து, அவர்களின் உறவினர்களுடன் சேர்த்திருக்கிறார் மகேந்திரன். ஆதரவற்று இறக்கும் வயதானவர்களின் பிரேதத்தை எல்லா சடங்குகளுடன் அடக்கம் செய்வது, கால் இழந்தவர்களுக்கு இலவசமாகச் செயற்கை கால் பொருத்த உதவுவது என இவரின் உதவி செய்யும் பட்டியல்  நீள்கிறது. இவை மட்டுமின்றி இதுவரையில் காப்பகத்திலேயே மூன்று பிரசவம் பார்க்கப்பட்டிருக்கிறது. ஈரநெஞ்சம் அறக்கட்டளையில் அடைக்கலம் கொண்டிருக்கும் பாட்டிகள் அவர்களுக்கான உணவு மட்டுமன்றி அருகிலிருக்கும் ஒரு கார்ப்பரேஷன் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவும் சமைத்து வழங்குகின்றனர். இப்படிப் பல வேலைகள் செய்யும் மகேந்திரன் சொல்வது ஒன்றுதான்.

"உங்களைச் சுற்றியுள்ளவர்களை அன்பா பாத்துக்கங்க!"