Published:Updated:

நூறு வருட காத்திருப்புக்குப் பிறகு எடுக்கப்பட்ட `பிளாக் பேந்தர்' புகைப்படம்!

நூறு வருட காத்திருப்புக்குப் பிறகு எடுக்கப்பட்ட `பிளாக் பேந்தர்' புகைப்படம்!
நூறு வருட காத்திருப்புக்குப் பிறகு எடுக்கப்பட்ட `பிளாக் பேந்தர்' புகைப்படம்!

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தின் கதை என்ன?

டந்த வருடம் உலக அளவில் பெரும் பேசுபொருளாக இருந்த விஷயங்களில் `பிளாக் பேந்தர்' திரைப்படமும் ஒன்று. இந்தப் படத்தில் நடித்தவர்கள், பின்னணியில் வேலைபார்த்தவர்கள் எனப் பெரும்பாலானவர்கள் கறுப்பின மக்கள்தான் என்பது இதற்கு ஒரு முக்கியக் காரணம். 7 பரிந்துரைகளுடன் இந்த வருட ஆஸ்கர் விருதுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது இந்த ஆப்பிரிக்க சூப்பர்ஹீரோ படம். ஆனால், உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா? உண்மையில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் `பிளாக் பேந்தர்' இருந்ததற்கான தெளிவான ஆதாரம் கடைசியாகக் கிடைக்கப்பெற்றது 1909-ல்தானாம். ஆனால், இப்போது 100-க்கும் மேலான ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஆப்பிரிக்காவில் தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது இந்த `பிளாக் பேந்தர்'. 

இது எப்படிப் படம்பிடிக்கப்பட்டது?

கென்யாவின் லைகீபியாவின் வனப் பகுதியில் (Laikipia Wilderness Camp) ஒரு கருஞ்சிறுத்தை தென்படுவதாகக் கடந்த ஆண்டு முதல் பரவலாகப் பலரும் தெரிவித்துவந்தனர். இதை அறிந்த வில் புரார்ட் லூக்கஸ் என்னும் பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் அங்கு சென்றுள்ளார். இவர் மறைந்திருக்கும் மிருகங்களைத் தனது கேமரா ட்ராப்கள் (camera trap) மூலம் பிடிப்பதில் கெட்டிக்காரர். இவர் camtraptions என்ற ஒரு கேமரா ட்ராப்புகளுக்கான நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகிறார். இவருக்கு இந்தக் கருஞ்சிறுத்தைகள் மீதான ஆர்வமும் அதிகமாக இருந்திருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியா வந்து கர்நாடகாவின் கபினி பகுதியில் ஒரு கருஞ்சிறுத்தையைப் படம்பிடித்திருக்கிறார் இவர். இந்த பிளாக் பேந்தர் புகைப்படம் எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்து அவரிடம் மின்னஞ்சல் மூலம் பேசினோம்.

கென்யா சென்ற இவர் இவரது கேமரா ட்ராப்புகள் கொண்டு இரவில் எப்படியாவது அந்தக் கருஞ்சிறுத்தையைப் புகைப்படம் எடுத்துவிட வேண்டும் எனக் களத்தில் இறங்கியுள்ளார். கிட்டத்தட்டப் பொறிவைத்து மிருகங்கள் பிடிப்பதைப் போன்றதுதான் இவரது இந்தப் புகைப்படம் எடுக்கும் பணியும். இதற்காக வயர்லெஸ் மோஷன் சென்சார் போன்ற பல சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றை சிம்பிளாக எப்படிச் செய்யலாம் என்று வீடியோக்களும் பதிவிடுகிறார் இவர். இதற்காக வனப்பகுதி முகாமை சேர்ந்த ஸ்டீவ் மற்றும் லுயிசா அன்சிலொட்டோ ஆகிய இருவரின் உதவியோடும் கால்தடங்களை வைத்தும் வியூகமாக ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சுற்றி இந்த ட்ராப்புகள் அனைத்தையும் செட் செய்திருக்கிறார் வில். அது கருஞ்சிறுத்தையா இல்லை சாதாரண சிறுத்தையா என்பதுகூட தெரியாமல் ஒரு தோராயமாகத்தான் இதைச் செய்திருக்கிறார். பின்பு இந்த அரிய விலங்கு நம் கேமராவில் சிக்கிவிடாதா என்று காத்திருந்திருக்கிறார். முதல் மூன்று இரவுகளிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. கேமராக்களில் கழுதைப் புலிகள் தவிர வேறு எதுவும் பெரிதாகச் சிக்கவில்லை.

பின்பு 4-வது இரவிலும் பெரிதாக நம்பிக்கை எதுவுமின்றி அனைத்து கேமராக்களையும் செக் செய்தார் அவர். முதலில் பார்த்த எந்த கேமராவிலும் எதுவும் சிக்கியதாக இல்லை. சோர்ந்துபோன அவர் கடைசி கேமராவை எடுத்துப் பார்த்தார். அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக சுமார் இரண்டு வயதான ஆண் கருஞ்சிறுத்தை ஒன்று அதில் படம்பிடிக்கப்பட்டிருந்தது. அப்படியே அந்தக் கருஞ்சிறுத்தையை அடுத்த சில நாள்களும் பின்தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் பல நாள்களாக வதந்தியாக மட்டும் இருந்த இந்தச் செய்தி உண்மை என நிரூபணம் ஆகியது. இந்த வனப்பகுதியில் உள்ள சிறுத்தை ஆராய்ச்சியாளரான நிக்கோலஸ் பில்ஃபோல்ட், ``100 வருடங்களில் முதல்முறையாக ஆப்பிரிக்காவில் ஒரு கருஞ்சிறுத்தை புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.  

இவரது இந்தப் பயணத்தை விடியோவாக யூடூப்பில் பதிவிட்டுள்ளார். அது கீழே,

2013-லும் இதே போன்று ஒருவர் கருஞ்சிறுத்தையைப் புகைப்படம் எடுத்துள்ளார் என கென்ய நாளிதழ் ஒன்று பதிவிட்டிருந்ததற்கும் விளக்கம் அளித்துள்ளார் வில். ``100 வருடங்களில் முதல் புகைப்படம் என்ற தகவல் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது, நிக்கோலஸ் பில்ஃபோல் இந்த வருடங்களில் இவற்றை உறுதிப்படுத்தக் கிடைத்த தெளிவான புகைப்படம் என்றுதான் அவர் கூற முற்பட்டுள்ளார். இத்தனை ஆண்டுகளில் இந்தத் துல்லியத்துடன் எடுக்கப்பட்ட முதல் புகைப்படங்கள் இவைதான்" என்றார்.

கருஞ்சிறுத்தைகள் எப்படி உருவாகின்றன?

இது ஒரு தனி இனம் என்றே நாம் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது அப்படி இல்லை. மெலனின் என்ற நிறமிகள் கிட்டத்தட்ட அனைத்து உயிரினங்களிடமும் இருக்கும். சில பூனைகள் கறுப்பு நிறத்தில் இருப்பதற்கு இவை அதிகமாக இருப்பதே காரணம். மனிதர்களிடமும் அப்படியே. இது ஒரு குறைபாடு கிடையாது, சொல்லப்போனால் இதனால் நன்மைகளே அதிகம். இந்த நிறமியின் குறைபாட்டால்தான் அல்பினோ போன்ற நோய்கள்கூட சிலருக்கு வருகின்றன. இந்த மெலனின் அதிகமாக இருப்பதால்தான் 'பிளாக் பேந்தர்' என்னும் இந்தக் கருஞ்சிறுத்தைகளும் உருவாகின்றன. `பிளாக் பேந்தர்' என்பது பொதுவான ஒரு சொல். அந்தப் பகுதிகளில் எந்தெந்த சிறுத்தைகள் இருக்கின்றனவோ அதில் மெலனின் அதிகமாக இருக்கும் கருப்பானவற்றையே `பிளாக் பேந்தர்' என அழைக்கப்படுகின்றன. சிறுத்தைகளில் சுமார் 10% மட்டுமே இப்படிக் கருஞ்சிறுத்தைகளாக அமைகின்றன. சிறுத்தைகளைப் பார்ப்பதே அரிது அதனால் இவற்றைப் பார்ப்பது மிகவும் அரிதென ஆகிவிட்டது. அடர்ந்த காடுகளில் மறைந்திருப்பதற்காகவே இவற்றுக்கு மெலனின் அதிகமாக இருக்கிறது என ஒரு கூற்று இருக்கிறது. எனவேதான் ஆசியா கண்டத்தில் ஒரு கணிசமான அளவில் இவை காணப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் திறந்தவெளி காடுகள்தாம் அதிகம்.

வில் வைத்திருந்த கேமரா ட்ராப்பில் கருஞ்சிறுத்தையுடன் இன்னொரு சாதாரண சிறுத்தையும் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. சற்றே வயதான ஒன்றாக இது இருந்திருக்கிறது. இது கருஞ்சிறுத்தையின் தந்தையாக இருக்கலாம் எனப் பலரும் கணிக்கின்றனர். ஒரு கருஞ்சிறுத்தை பிறப்பதற்கு அதன் பெற்றோர்கள் கருஞ்சிறுத்தைகளாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. மெலனிசமிற்கான அந்த அரியவகை ஜீனை (Recessive gene) பெற்றோரில் ஏதேனும் ஒன்றுக்கு இருந்தால் போதும்.

இரவில் Infrared illumination மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சாதாரண சிறுத்தைகளுக்கு இருப்பதைப் போல இந்தக் கருஞ்சிறுத்தைக்கும் புள்ளிகளும் இருப்பதையும் இதனால் பார்க்கலாம். காலையில் இவற்றை நம்மால் பார்க்க முடியாது. இந்த அரிய புகைப்படங்கள் இப்போது உலகமெங்கும் வைரலாகி வருகின்றன. 

அடுத்த கட்டுரைக்கு