Published:Updated:

``மண்ணுக்குள்ள இருந்து திரும்பவும் தோண்டி எடுத்த உயிர் இது!'' - சுனாமி சண்முகவேலின் போராட்டம்

``மண்ணுக்குள்ள இருந்து திரும்பவும் தோண்டி எடுத்த உயிர் இது!'' - சுனாமி சண்முகவேலின் போராட்டம்
``மண்ணுக்குள்ள இருந்து திரும்பவும் தோண்டி எடுத்த உயிர் இது!'' - சுனாமி சண்முகவேலின் போராட்டம்

உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில், இறந்துவிட்டதாக நினைத்து மார்ச்சுவரிக்கு அனுப்பப்பட்டார் சண்முகவேல். அங்கே துணியால் கட்டப்பட்டிருந்தவர் மூச்சை இழுத்துவிடுவதைப் பார்த்ததும் அதிர்ச்சியாகியிருக்கிறார்கள்.

முந்தைய பாகங்கள்:

``அவ்வளவு பெரிய அலை... ஏதோ மோசமா நடக்கப்போகுதுன்னு உள்மனசு சொல்ல ஆரம்பிக்கும்போதே எல்லாம் நடந்து முடிஞ்சிப்போச்சு. பெரிய அலைங்களைப் பார்த்ததும் பெட்டியில வெச்சிருக்கிற முக்கியமான சர்ட்டிஃபிகேட், கவர்மென்ட் பேப்பர்ஸ்லாம் எடுத்துட்டு வந்துடலாம்னு என் வீட்டுக்குள்ள ஓடினேன். அடுத்து வந்த அலையில, எல்லாமே மாறிப்போச்சு. வீடு தரைமட்டமாகி, கரன்ட் கம்பத்துல நான் போய் மோதி, மண்ணுக்குள்ள புதைஞ்சு உருக்குலைஞ்சிப்போனேன். சுனாமி மீட்புப் படையினர்தான் மண்ணைத் தோண்டி என்னை வெளிய எடுத்தாங்க. பெருங்குடல், உடம்புக்கு வெளிய வந்திருச்சு! அதை எடுத்து அடைச்சுத் தூக்கிட்டுப் போனப்போ, மயக்கமாகிட்டேன். நான் உயிரோடு இருக்கிறதே, மூணு மாசத்துக்குப் பிறகுதான் எனக்குத் தெரியும்'' - 2004-ம் ஆண்டில் சுனாமி பேரலைகள் ஏற்படுத்திய கொடுமையால் ஏற்பட்ட இழப்பை ரத்தச்சாட்சியுடன் விவரிக்கிறார் சண்முகவேல்.

ஈரோட்டைச் சேர்ந்தவர் சண்முகவேல். சென்னை கானாத்தூரில் தங்கியிருந்து மீன் வியாபாரம் செய்துவந்தபோதுதான் சுனாமி அவரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில், அவர் இறந்துவிட்டதாக நினைத்து மார்ச்சுவரிக்கு அனுப்பப்பட்டார் சண்முகவேல். அங்கே துணியால் கட்டப்பட்டிருந்தவர் மூச்சை இழுத்துவிடுவதைப் பார்த்ததும் அதிர்ச்சியாகியிருக்கிறார்கள். உடனடியாக மார்ச்சுவரி அலுவலர்கள், சண்முகவேலை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அறுவைசிகிச்சைகள், மேலும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் சாத்தியங்கள் இருப்பதால், இனி கடினமான எந்த வேலையையும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு, மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையை விட்டு வெளியே வந்திருக்கிறார். ஆனால், சண்முகவேல் அமைதியாக ஓய்வெடுக்கவில்லை. தன்னைப்போல சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக  அரசு அலுவலகங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்.

அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட, சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணமான மூன்று சென்ட் இடத்துக்கும், சுனாமி நிவாரண வீட்டுக்காகவும் இப்போது வரை போராடிவருகிறார். 14 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமி பாதிப்புக்கு, மூன்று மாதங்களுக்கு முன்புதான் 25,000 ரூபாய் நிவாரணம் பெற்றிருக்கிறார்.

``எப்போ வேணாலும் இதயம் நின்னுபோயிடும்னு சொல்லிட்டாங்க. என்னைப்போல இன்னும்கூட சுனாமி நிவாரண வீடு கிடைக்காம இருக்கும் மத்தவங்களுக்காகவும் உழைக்கிறதுதான் இந்தப் பிறப்போட அர்த்தம்னு நினைக்கிறேன். சுனாமியால் ஏற்பட்ட வலியைவிட, அதுக்கான நிவாரணம் கேட்டு நடத்துற போராட்டத்தால் ஏற்படும் வலியைத்தான் என்னால தாங்க முடியலை'' - பேசும் வார்த்தைகளுக்கு இடையில் அதிசிரமப்பட்டு மூச்சை இழுத்து விடுகிறார் சண்முகவேல்.

சுனாமி நிவாரண வீட்டுக்காக மனு கொடுத்தபோது, அவரை நோக்கி அதிகாரிகள் கேட்ட கேள்விகளைப் பட்டியலிடுகிறார். `எதுக்கு அவசரப்படுற, நீங்க இன்னும் சாகலையா, காணாமப்போனவங்க லிஸ்ட்ல உங்க பேரு இருக்கு, வேல செஞ்சு பொழைக்கக் கூடாதா?' போன்ற கேள்விகளின்போது வரும் கோபத்தால் எழும் மனவலியை இப்போதும் பொறுத்துக்கொண்டுதான் வாழ்கிறார்.

``புயல், சுனாமி, வெள்ளம்னு இயற்கையால் பாதிப்படைஞ்ச இடத்துக்குப் போய் முடிஞ்ச அளவுக்குப் பேசறேன். 14 வருஷமா நிவாரண வீட்டுக்கு அலையுற அனுபவத்தால, அதுக்கான வழிமுறைகளை பாதிக்கப்பட்டவங்களுக்குச் சொல்லி உதவுறேன். நிவாரணம்னா காசு, பொருள்னுதான்  நிறையபேர் நினைக்கிறாங்க. ஆனா, அந்தக் காசையும் பொருளையும் அனுபவிக்க ஆளுங்க உயிரோடு இருக்கிறது அதைவிட ரொம்பப் பெரிய போராட்டம்னு யாரும் நினைக்கிறதில்லை. உடைமைகள், ஆளுங்கனு மொத்தமா கண்ணு முன்னாடிப் பறிகொடுத்தவங்களுக்காகப் போராடுறேன். எனக்கும் சேர்த்து'' என்கிறார் சண்முகவேல். 

ஆட்சியர் அலுவலகத்திலும், சுனாமி தாக்கிய அதே கடற்கரையிலும் சண்முகவேலை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். அங்கேயே காத்திருக்கிறார். ஆயிரமாயிரம் பிரளயக் கதைகள் சொல்வதற்கும், நீதியின் நிழலில் நிம்மதி பெருமூச்சுவிடவும்!

அடுத்த கட்டுரைக்கு