Published:Updated:

``56 வயசாச்சு... காத்துட்டு இருக்கேன்!’’ - குன்னூர் ரயில் டி.டி.இ வள்ளியின் நம்பிக்கை

``56 வயசாச்சு. இன்னும் சில வருஷம் இந்த ரயில்வே பணியில இருப்பேன். அதுக்குள்ள என் கனவு நிறைவேறிடுச்சுன்னா, என் வாழ்க்கையில பெரிய நம்பிக்கை மற்றும் நிறைவைக் கொடுக்கும்.’’

``56 வயசாச்சு... காத்துட்டு இருக்கேன்!’’ - குன்னூர் ரயில் டி.டி.இ வள்ளியின் நம்பிக்கை
``56 வயசாச்சு... காத்துட்டு இருக்கேன்!’’ - குன்னூர் ரயில் டி.டி.இ வள்ளியின் நம்பிக்கை

`ஊட்டி ரயிலில் உற்சாகப் பாடகி' என்ற தலைப்பில் ஜூன் 21, 2017-ம் தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் டி.டி.இ வள்ளியின் வெற்றிக் கதை வெளியாகியிருந்தது. இதன் பிறகு, இவர் தமிழ்நாடு மற்றும் வெளிமாநில ஊடகங்களிலும் பேசப்பட்டார். யார் இந்த வள்ளி. இவரின் வெற்றிக் கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட வள்ளி, பத்தாவது வரை படித்திருந்தார். ரயில்வேயில் பணியாற்றிவந்த தந்தையின் மறைவுக்கு இவருக்கு ரயில்வேயில் துப்புரவுப் பணியாளர் வேலை கிடைத்தது. பல இசைக்குழுக்களில் பாடிக்கொண்டு, பின்னணிப் பாடகி கனவுடன் இருந்தவருக்கு, அந்த வேலை பேரிடியாக அமைந்தது. பின்னர், பல ரயில்நிலையங்களில் பணியாற்றியவர், பணிக்கு இடையே ரயில்வே தேர்வுக்காக விடாமுயற்சியுடன் படித்தார். 48 வயதில் இவருக்கு டிடிஇ பணி கிடைத்திருக்கிறது. மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் டிக்கெட் பரிசோதகராகப் பணியில் சேர்ந்தார். பயணிகளைக் கனிவுடன் அணுகி, அவர்களுக்குச் சுற்றுலா வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். தன் பாடகி கனவைக் கைவிடாத வள்ளி, பணிக்கு இடையே சினிமா பாடல்களைப் பாடி பயணிகளை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக்கிக்கொண்டார். 

வள்ளியின் சிறப்பானப் பணிக்கு, ரயில்வே துறையின் `எவ்ரிடே ஹீரோ' என்ற விருது கிடைத்திருக்கிறது. இது குறித்தும், தன் தற்போதைய பணி குறித்தும் பேசுகிறார் வள்ளி.

``கடந்த கால சோதனைகளைப் புறந்தள்ளி உற்சாகமா பணியாற்றிக்கிட்டு இருந்தேன். அப்போதுதான் ஆனந்த விகடனில் என்னுடைய பேட்டி வெளியானது. பிறகு, தமிழ்நாடு மற்றும் பிற மாநில மீடியாக்களிலும் என்னைப் பத்தின செய்திகள் வெளியாச்சு. இவையெல்லாம் ரயில்வே துறை உயர் அதிகாரிகளின் பார்வைக்குப் போயிருக்கு. இந்நிலையில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி இந்திய ரயில்வே துறை சார்பில் டெல்லியில பெரிய நிகழ்ச்சி நடந்தது. அதில், ரயில்வே துறைக்குப் பெருமை சேர்த்தது மற்றும் பயணிகளின் வருகைக்குப் பெரிதும் பங்காற்றிய வகையில், சிம்லா, கல்கா, டார்ஜிலிங், மேட்டுப்பாளையம்னு நாலு ரயில்நிலைய பகுதிகளில் பணியாற்றும் டிடிஇ-களுக்கு விருது கொடுத்தாங்க. அதில் நான் மட்டுமே பெண். `எவ்ரிடே ஹீரோ' என்ற விருதை எனக்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கொடுத்தார். பிறகு, `உங்க பணிகளை அறிந்தேன். நம்ம ரயில்வே துறையில தன்னம்பிக்கை மனிதர்கள் நிறைய பேர் வேலை செய்றாங்க. அதில் நீங்க ரொம்ப முக்கியமான நபர். வாழ்த்துகள்'னு சொன்னார். தொடர்ந்து என்னை அந்நிகழ்ச்சியில ஒரு பாடல் பாடச் சொன்னாங்க. `சத்யம் சிவம் சுந்தரம்' என்ற லதா மங்கேஷ்கார் பாடின இந்திப் பாடலைப் பாடினேன். எல்லோரும் மகிழ்ச்சியாகி, பாராட்டினாங்க. பின்னர் வேலைக்குச் சென்றபோது மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் ரயில்நிலைய பணியாளர்கள் எல்லோரும் வாழ்த்தினாங்க’’ என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் வள்ளி.

தற்போதைய பணி குறித்துப் பேசுபவர், ``பழைய நினைவுகளை இப்போ நினைச்சுப் பார்க்கிறதில்லை. இந்த டிடிஇ வேலை எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. உண்மையான உழைப்புக்கு நிச்சயம் ஒருநாள் பலன் கிடைக்கும்னு சொல்வாங்க. அது என் விஷயத்துலயும் நடந்திருக்கு. தொடர்ந்து ஓய்வு நேரங்கள்ல பாடல்கள் கேட்டு, பயிற்சி எடுக்கிறேன். என் ரயில் பயண சகோதர, சகோதரிகளுக்குப் பிடிச்ச பாடல்களைப் பாடி அவங்களை உற்சாகப்படுத்துறேன். வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் பலரும் என் போன் நம்பரையும் வாங்கிக்கிறாங்க. பிறகு அடிக்கடி எனக்குப் போன் பண்ணி நலம் விசாரிக்கிறாங்க. `நீங்க பின்னணிப் பாடகியாகிட்டால், இப்படிப் பக்கத்துல உட்கார்ந்து உங்க குரலைக் கேட்க முடியாது'னு பயணிகள் சொல்றாங்க. இந்த அன்புக்கு என்ன சொல்றதுனு தெரியலை.

ஆனாலும், என் மனசு ஓரத்துல சினிமா பின்னணிப் பாடகி ஏக்கம் இன்னும் இருக்கத்தான் செய்யுது. 56 வயசாச்சு. இன்னும் சில வருஷம் இந்த ரயில்வே பணியில இருப்பேன். அதுக்குள்ள என் கனவு நிறைவேறிடுச்சுன்னா, என் வாழ்க்கையில பெரிய நம்பிக்கை மற்றும் நிறைவைக் கொடுக்கும். பாடகிக் கனவை எப்படி என்னால் சிதைச்சுக்க முடியும்? ஆனா, அந்தக் கனவு நிறைவேறணும்னு 36 வருஷமா காத்துக்கிட்டு இருக்கேன். இனியும் காத்திருப்பேன்’’ என்கிறார் நம்பிக்கையுடன்.