Published:Updated:

``ஒரு `இதய ராணி'யின் இறுதிக்காலங்கள்!" - 2 மீட்டர் தந்தம் கொண்ட யானை பார்த்திருக்கிறீர்களா?

``ஒரு `இதய ராணி'யின் இறுதிக்காலங்கள்!" - 2 மீட்டர் தந்தம் கொண்ட யானை பார்த்திருக்கிறீர்களா?
``ஒரு `இதய ராணி'யின் இறுதிக்காலங்கள்!" - 2 மீட்டர் தந்தம் கொண்ட யானை பார்த்திருக்கிறீர்களா?

F_MU1, இது ஏதோ ஒரு கணிதக் குறியீடு என யாரும் நினைத்துவிட வேண்டாம். இது கென்யாவில் வாழ்ந்த ஓர் அசாத்திய பெண் யானையின் பெயர். 60 வருடங்களாக சாவோ (Tsavo) சமவெளிகளில் சுற்றித் திரிந்த யானைகளின் ராணியான இது விஞ்சியிருக்கும் வெகு சில `சூப்பர் டஸ்கர்'-களில் ஒன்றாக இருந்தது. இது மறைவதற்கு சில நாள்களுக்குமுன் எடுக்கப்பட்ட இதன் கடைசி புகைப்படங்கள் `இப்படி ஒரு யானை உலகில் இருக்கிறதா?' என உலகமெங்கும் இருக்கும் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த அற்புதப் புகைப்படங்களை வில் புரார்ட் லூக்கஸ் என்னும் பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் படம்பிடித்திருக்கிறார்.

எல்லாம் சரி, சூப்பர் டஸ்கர் யானைகள் என்றால் என்ன?

சாதாரணமாக தந்தமுள்ள யானைகளை மக்கள் செல்லமாக `டஸ்கர்ஸ்' என அழைப்பதுண்டு. ஆனால், சூப்பர் டஸ்கர்ஸ் என அழைக்கப்படும் யானையின் தந்தம் தரையை தட்டும் அளவிற்கு மிக நீளமாக இருக்கும். ஆப்பிரிக்க யானைகள் ஏற்கெனவே பெரியதாக இருக்கும். இந்தப் பெரிய தந்தங்களுடன் பார்க்கவே அப்படி ஒரு கம்பீரத்துடன் இருக்கும் இந்த சூப்பர் டஸ்கர் யானைகள். அப்படி ஒரு கம்பீர பெண் யானைதான் F_MU1.

ஆனால் இவற்றுக்கு எமனாக அமைந்ததே இந்தக் கம்பீரம்தான். எல்லா இடங்களைப் போலவும் மனிதனின் வேட்டையாடுதலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன இந்த யானைகள். அதுவும் இவ்வளவு பெரிய தந்தத்துடன் இருப்பதால் வேட்டையாடுபவர்களின் முதல் குறியாக இவை இருக்கின்றன. இது போக ஆப்பிரிக்க கறுப்புச் சந்தையில் பெரிய தந்தத்திற்கென தனி மவுசு உண்டாம்.

2014-ல் இப்படிதான் கென்யாவின் அடையாளமாகத் திகழ்ந்த சட்டோவ் (Satao) என்னும் சூப்பர் டஸ்கர் யானை விஷ ஊசியால் சுட்டு வேட்டையாடப்பட்டது. உலகின் மிகப் பெரிய யானையாக அப்போது கருதப்பட்ட சட்டோவ்வின் தந்தங்கள் மட்டும் 2 மீட்டர்கள் நீளமுடையது.

நீளமான தந்தமுடைய யானைகள் பெரும்பாலும் இனப்பெருக்க காலத்திற்கு முன்பே வேட்டையாடிக் கொல்லப்பட்டுவிடுகின்றனவாம். இதனால் பெரிய தந்தங்களுக்கான இந்தச் சிறப்பு மரபணு என்பது அடுத்த அடுத்த தலைமுறைகளுக்குச் செல்வதே அரிதாகிவிட்டது. இன்று கைகளில் எண்ணிவிடும் அளவில்தான் இந்த சூப்பர் டஸ்கர் யானைகள் இருக்கின்றன. மேலும் பெரிய தந்தம் இல்லையென்றால் வேட்டையாடும் அபாயமும் இல்லை என்பதால் தந்தமே வேண்டாம் என்ற பரிணாம வளர்ச்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன இவை. இன்றே ஆப்பிரிக்கப் பகுதிகளில் இருக்கும் யானைகள் பல தந்தங்களின்றி பிறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இப்படியான ஆபத்தான வேட்டையாடும் சூழலில் இத்தனை பெரிய தந்தங்களுடன் இந்த F_MU1 யானை இயற்கை மரணம் அடைந்திருப்பதே ஓர் அதிசயம்தானாம். 60 ஆண்டுக்காலங்கள் எந்த ஒரு வேட்டையிலும் சிக்காமல் கெத்தாகச் சுற்றித் திரிந்திருக்கிறது இந்த யானை ராணி.

புகைப்படங்கள் உருவான கதை!

இந்தக் கடைசிப் புகைப்படங்களை எடுத்த வில் புரார்ட் லூக்கஸ், சமீபத்தில்தான் 100-க்கும் மேலான ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஆப்பிரிக்காவில் `பிளாக் பேந்தர்' ஒன்றை தெளிவாகப் படம்பிடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். மின்னஞ்சல் வழியே தொடர்புகொண்டதில் அவரது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். F_MU1 பற்றி கூறுகையில் ``முதல் பார்வையிலேயே என்னைப் பிரமிக்க வைத்தது இந்த யானை. கண்ணுக்குக் கண் பார்க்கவில்லை என்றால் இப்படி ஒரு யானை இருப்பதையே நம்பியிருக்கமாட்டேன் நான். யானைகளில் ஒரு ராணி இருந்தால், நிச்சயமாக இதுதான் அது. இந்தக் கடைசி படங்கள் எடுக்கப்பெற்றதை மிகப்பெரிய கவுரமாகக் கருதுகிறேன்" என்றார்.

ஒரு புகைப்பட தொகுப்பு புத்தகத்தை வெளியிட விரும்பிய இவருக்குச் சாவோ (Tsavo) அறக்கட்டளையும், கென்யா கானுயிர் சேவையும் உதவியுள்ளது. முதலில் இந்த யானையைக் கண்டுபிடிப்பதே மிகக் கடினமான பணியாக இவர்களுக்கு அமைந்தது. ஏனென்றால் இந்த சமவெளிகள் சுவிட்சர்லாந்து அளவுக்குப் பெரியது. இதனால் ஒரு ஹெலிகாப்டரின் உதவியுடன் வானத்திலிருந்துதான் அதைக் கண்டுபிடித்துள்ளனர். மேலிருந்த குழு நிலத்தில் இருந்த இவர்களுக்குத் தகவல் சொல்ல ஹெலிகாப்டரை பின்தொடர்ந்து இவர்கள் ஒரு வழியாக F_MU1 மற்றும் அதன் குடும்பத்தின் வழித்தடங்கள் பின்தொடர தொடங்கினர். அப்போதுதான் புதர்களிலிருந்து வெளிவந்த இந்த பிரமாண்ட யானையைப் பார்த்து வியந்து போயுள்ளார் வில்.

தோலில் சுருக்கங்களுடன், சற்றே குறைந்த பருமனுடன் அலட்டிக்கொள்ளாமல் நளினத்துடன் வறண்ட நிலங்களில் தண்ணீர் தேடிக் கொண்டிருந்தது F_MU1. இதைப் பின்தொடர்ந்து beetlecam என்று இவர் உருவாக்கிய ஒரு சாதனத்துடன் இந்தப் புகைப்படங்களை எடுத்துள்ளார். ரிமோட் காரில் கேமராவைப் பொருத்தி அனுப்புவதைப் போன்றது இந்த சாதனம். இதைப்பற்றிய வீடியோ ஒன்றைக் கீழே காணலாம்.

F_MU1 மற்றும் சில யானைகளின் புகைப்படங்களை கொண்டு `Land of Giants' என்ற புகைப்பட புத்தகத்தை இந்த மாதம் சாவோ அறக்கட்டளை சார்பாக வெளியிடவுள்ளார் இவர். இதன்மூலமாவது மீதமிருக்கும் சூப்பர் டஸ்கர்கள் மீது மக்களின் கவனம் திரும்பும் என நம்புகின்றனர். நிலை இப்படியே சென்றால் மாமோத்களை பார்த்து `உலகில் இப்படி ஒரு விலங்கு வாழ்ந்ததா?' என நாம் ஆச்சர்யப்படுவதைப் போன்றுதான் இந்த யானைகளின் புகைப்படங்களை அடுத்த தலைமுறையினர் பார்ப்பர்.

அடுத்த கட்டுரைக்கு