Published:Updated:

பிளாக் சால்ட், புதினா... கரும்பு ஜூஸில் மூலிகை கலந்து விற்கும் ரவிக்குமார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிளாக் சால்ட், புதினா... கரும்பு ஜூஸில் மூலிகை கலந்து விற்கும் ரவிக்குமார்!
பிளாக் சால்ட், புதினா... கரும்பு ஜூஸில் மூலிகை கலந்து விற்கும் ரவிக்குமார்!

பிளாக் சால்ட், புதினா... கரும்பு ஜூஸில் மூலிகை கலந்து விற்கும் ரவிக்குமார்!

சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஆறாம் வகுப்பு வரை படித்த பிறகு படிப்பின் மீது நாட்டமில்லாமல் கொல்கத்தா சென்றவர். அங்கிருந்த ஒரு ஹோட்டலில் பாஷை தெரியாததால், ஆறேழு வருடங்களாகத் தட்டு கழுவும் வேலைபார்த்துள்ளார். இந்தி, உருது, வங்காளம் என மூன்று மொழிகளையும் கற்றுக்கொண்ட பிறகே சப்ளையர் வேலையைச் செய்துள்ளார். 

கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்தவர், திருவான்மியூரில் உள்ள பிரியாணிக் கடை ஒன்றில் ஆண்டுக்கு 500 ரூபாய்க்கு வேலைபார்த்துள்ளார். படிப்படியாக தன் கடின உழைப்பால் முதலாளியின் வலதுகரமாக இருந்தவர், 3,500 சம்பளம் வாங்கியுள்ளார். பிறகு, சொந்தமாகத் தொழில் தொடங்கவுள்ளதை முதலாளியிடம் சொன்னபோது கண்கலங்கியவாறு `சரி, போயிட்டு வா' என்றாராம்.

ப்ளஸ் டூ படித்த அவரின் தம்பி, மேற்படிப்பு படிக்க வசதியின்றி வேலைசெய்துகொண்டே பகுதி நேரமாகப் படித்துள்ளார். பிறகு இருவரும் சேர்ந்து கரும்பு ஜூஸ் கடை வைக்க முடிவெடுத்து, வட்டிக்குப் பணம் வாங்கி ஆரம்பித்த கடையை கார்ப்பரேஷன் வண்டி ரெய்டு வந்தபோது, கடையையே நசுக்கி எடுத்துப் போயுள்ளது. நொடிந்துபோய் இருந்தவரின் வாழ்வில், கடையில் வேலை செய்தவர்கள் அவர் அறையில் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டதால், செய்வதறியாது தவித்துள்ளார்.

தனக்குத் தெரிந்த ஒருவர் `ஹெல்மெட் கடையை, நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லியது, சற்று ஆறுதலாக இருந்துள்ளது. பிறகு, மீண்டும் வட்டிக்குப் பணம் வாங்கி எதிரெதிரே இரண்டு கரும்பு ஜூஸ் கடைகளை நடத்திவந்துள்ளனர். எதிரில் போட்ட கடையில் வேலை செய்த பையன், ஊரில் வீடு கட்டுவதாக 50,000 ரூபாய் வாங்கிச் சென்று மீண்டும் வராதது, பெரும்இடியாய் இறங்கியுள்ளது.  துரோகம், வலியிலிருந்து மீண்டு வந்தவரின் கடைக்கு, இரவு நேரத்தில் ஆறேழு ரௌடிகள் வந்து குடிக்கப் பணம் கேட்டு மிரட்டும்போது இல்லையென்றால், மொத்தக் கடையையும் அடித்து உடைத்து எஞ்சிய பொருள்களையும் திருடிச் சென்றுவிடுவார்களாம். போதாக்குறைக்கு காவலாளிகளிடமிருந்து வரும் தொல்லைகளை, வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவுக்குக் கொடூரமாக இருக்குமாம்.

``என்கூட வேலை செய்தவங்க எல்லாம் துபாய், சிங்கப்பூர்னு போயிட்டாங்க. அப்போ கைவேலிப் பக்கம் மாநகராட்சி கிடையாது. இது சிங்கிள் ரோடுதான். ரயில் மேம்பாலம் கட்டலை, ரெண்டு பக்கமும் மரங்கள் நிறைய இருந்தது. இந்தப் பக்கம் காலையிலும் மாலையிலும் சிமென்ட் வண்டி போகும். காலையில் பார்த்தா ஊசி... கீசி, பீங்கான், லொட்டு லொசுக்கு எல்லா அப்படியே சுத்திக்கிடக்கும். கரும்பு வண்டியைக் குப்ப மாதிரி ஆக்கிட்டுப் போயிடுவாங்க. காலையில் நாங்க வந்து சுத்தம்பண்ணிவைப்போம்" எனச் சொல்லும் ரவிக்குமாருக்கு, கல்யாணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆனால், தீபாவளி, பொங்கலுக்குத்தான் ஊருக்குச் செல்வாராம். பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் நன்றாகப் படிக்கவைத்தாலும் அவர்களோடு இல்லாதது, பெரும்துயர் நிறைந்ததாகக் கூறுகிறார். 

``வெயில் காலத்துல சக்கைபோடு போடும் ஜூஸ் கடை வியாபாரம், மழைக்காலத்துல படுத்துக்கும். அதனால, இட்லி வியாபாரம் பண்ணுவோம். கூடவே பஜ்ஜி, சுண்டல், போண்டா வியாபாரமும் பண்ணுவோம்'' என்றார்.

``ஒருநாள், ஜூஸ் சாப்பிட்ட கஸ்டமர் `புதினா போடுப்பா உடம்புக்கு நல்லது' என்றார். அன்னைக்கு ஒரு கட்டு அஞ்சு, பத்து, ஏழு ரூபாய்னு விலை இருக்கும். விற்கிற விலைவாசிக்கு எங்க வாங்குறதுன்னு விட்டுட்டேன். சரி ரொம்பப் பேரு சொல்றாங்களே போட்டுதான் பார்க்கலாம்னு போட்டுக் கொடுத்தேன். `இதென்ன வித்தியாசமா இருக்கேன்னு பாராட்டி, இனி எப்பவுமே இதே மாதிரியே போடுங்க'னு சொன்னாங்க.

ஒருவாரம் கழிச்சு டாக்டர் ஒருவர் ஜூஸ் குடிச்சுட்டு `கரும்பு, ரத்தத்துக்கு ரொம்ப நல்லது. புதினா கண்ணுக்குக் குளிர்ச்சி. இஞ்சி நெஞ்சு சளியைப் போக்கும். மருந்தைவிட இதுவே மூலிகை மாதிரி இருக்கு. இதையே தொடர்ந்து செய்யுங்க' என்றார்.

வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கஸ்டமர் எப்பப் பார்த்தாலும் பிளாக் சால்ட் வேணும்னு கேட்பார். எனக்கு பிளாக் சால்ட்னா என்னான்னே தெரியாது, ஒரு சேட்டுக்கிட்ட கேட்டேன். அவர்தான் `பாரிஸுக்குப் போங்க கிடைக்கும்' என்றார். இப்படியே கரும்போடு, கொத்தமல்லி, எலுமிச்சை, புதினா, இஞ்சி, பிளாக் சால்ட், ஒயிட் சால்ட் என கஸ்டமரின் விருப்பத்துக்கு ஏற்ப ஆரோக்கியம் நிறைந்த பொருள்களைச் சேர்க்க ஆரம்பிச்சேன். வேலை நாள்கள்ல தனிமனிதரா வர்றவங்க சனி, ஞாயிறுகள்ல குடும்பம் குடும்பமாக வந்து குடிப்பாங்க. ஒரு நாளைக்குக் குறைஞ்சது ஐம்பதுக்கு மேற்பட்டவங்க வந்து ஜூஸ் குடிப்பாங்க. சிலர், இந்த இஞ்சி, கொத்தமல்லி என ஜூஸில் கலக்கும் பொருள்கள்ல ஏதோ ஒன்றை வேண்டாம்பாங்க. அதை நானும் தவிர்த்துடுவேன். கடை திறக்கிறதுக்கு 8 மணியானாலும், காலையில 4 மணிக்கெல்லாம் எழுந்திருச்சு, தேவையான பொருள்களை வாங்க சந்தைக்குப் போயிடுவேன்'' என்று உற்சாகமாகக் கூறுகிறார்.

இப்படி மூலிகை நிறைந்த கரும்பு ஜூஸ் கடை, வேளச்சேரி - பள்ளிக்கரணை செல்லும் சாலையில், வாகைமரத்தின் நிழலில் உள்ளது. அந்த மரத்தின் வேர்களில் பத்து பீர்க்கம் விதைகளைத் தூவியுள்ளார். இப்போது அவற்றில் ஐந்து விதைகள் மரத்தின் கிளைகளில் பற்றித் தொங்குகின்றன. பறிக்க மறந்த பீர்க்கங்காய்கள் காற்றில் ஆடுகின்றன. வாகை நிழலில் இருக்கும் ரவிக்குமார், மேன்மேலும் வாகை சூட வாழ்த்துகள்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு