Published:Updated:

`என்னைப் பைத்தியக்காரன் என்று சொன்னார்கள்; இன்று என் கதை பாடப் புத்தகத்தில்!' - முருகானந்தம்

`என்னைப் பைத்தியக்காரன் என்று சொன்னார்கள்; இன்று என் கதை பாடப் புத்தகத்தில்!' - முருகானந்தம்
`என்னைப் பைத்தியக்காரன் என்று சொன்னார்கள்; இன்று என் கதை பாடப் புத்தகத்தில்!' - முருகானந்தம்
`என்னைப் பைத்தியக்காரன் என்று சொன்னார்கள்; இன்று என் கதை பாடப் புத்தகத்தில்!' - முருகானந்தம்


 

லிவு விலையில் நாப்கின் தயார் செய்யக்கூடிய இயந்திரத்தை உருவாக்கியும், அதைக் கிராமப் பெண்களுக்குக் கொண்டுசென்றும் பிரபலமானவர் `நாப்கின்' முருகானந்தம். கோவையைச் சேர்ந்த இவரின் சாதனைக்கு பல்வேறு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட `Period. End of Sentence.’ என்ற ஆவணப் படத்துக்கு ஆஸ்கார் விருதும் கிடைத்தது. இந்த நிலையில், முருகானந்தத்துக்கு மேலும் ஓர் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தமிழக அரசின் 12-ம் வகுப்பு விலங்கியல் பாடத்தில், இவரின் வாழ்க்கை வரலாறு இடம்பிடித்திருக்கிறது. இதுகுறித்து முருகானந்தத்திடம் பேசினோம்.

``12-ம் வகுப்பு விலங்கியல் புத்தகத்தில், இனவிருத்தி தொடர்பான பாடம் உள்ளது. அதில், கருத்தரிப்பு மற்றும் மாதவிடாய் குறித்த விஷயங்களும் இடம்பிடித்திருக்கின்றன. நாப்கின் பயன்பாடு குறித்தும் கூறப்பட்டிருக்கும் நிலையில், அந்தப் பாடத்தில்தான் என் வாழ்க்கை வரலாறு இடம்பிடித்திருக்கிறது. அதை நானும் படித்தேன். பெண்களுக்கு நிகழும் முக்கியமான விஷயங்களை ஆண்களும் தெரிந்துகொள்ள வழிவகை செய்திருக்கிறார்கள். இதன் மூலம் பெண்கள் மீது ஆண்கள் அதிகபட்ச மதிப்பைக் கொடுக்க இந்தப் பாடம் உதவும். இதுவரை வெளிநாட்டு அறிஞர்களின் கண்டுபிடிப்புகள்தான் பெரும்பாலும் நம் பாடப் புத்தகத்தில் இடம்பெறும். இந்த வரிசையில் நாப்கின் கண்டுபிடிப்புக்காக என் வாழ்க்கை வரலாறும் இடம்பெற்றிருப்பதால், `நம் ஊர்க்காரர் போல நாமும் சாதனை செய்ய வேண்டும்' என்ற எண்ணம் மாணவர்களுக்கு நிச்சயம் ஏற்படும். படித்து முடித்து வேலைக்குச் செல்பவர்கள் ஒருபக்கம் இருக்க, என்னைப்போலப் பிறருக்கு வேலை கொடுக்கும் நிலைக்குப் பலர் உயர்வார்கள். அதைத்தான் என் உண்மையான வெற்றியாகப் பார்க்கிறேன்.

`என்னைப் பைத்தியக்காரன் என்று சொன்னார்கள்; இன்று என் கதை பாடப் புத்தகத்தில்!' - முருகானந்தம்

இன்று எனக்கு நிறைய அங்கீகாரம் கிடைக்கிறது. ஆனால், என் முயற்சியின் தொடக்கக் காலத்தில் நான் எதிர்கொண்ட புறக்கணிப்புகளை மறக்கவே முடியாது. கிராமத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டேன். என்னைப் பைத்தியக்காரன் என்று சொன்னார்கள். பிச்சைக்காரன் போல தோற்றமளித்தேன். `யார் எதுவேணாலும் சொல்லிவிட்டுப்போங்கள்' என்று என் நோக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எட்டரை வருட ஆராய்ச்சிக்குப் பிறகுதான், மலிவு விலை நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கினேன். 12-ம் வகுப்பு புத்தகத்தில் என் வெற்றி மட்டுமே இடம்பிடித்திருக்கிறது. ஆனால், அதற்காக நான் எதிர்கொண்ட கஷ்டங்கள் மற்றும் உழைப்பு பற்றிச் சொல்லவில்லை. அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. புத்தகத்தில் படித்ததைத் தவிர, இணையதளத்திலும் என் முழுக் கதையை மாணவர்கள் தெரிந்துகொள்வார்கள். மாணவர்கள் உட்பட எல்லோருக்கும் நான் சொல்வது, நம் நல்ல முயற்சிக்கு எளிதில் வெற்றி கிடைத்துவிடாது. விடா முயற்சியுடன் உழைத்து வெற்றி பெற்றால், அதற்குக் கிடைக்கும் அங்கீகாரம் மிகப் பெரியதாக இருக்கும்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் முருகானந்தம்.

Vikatan